விடுதலைப் போரின் வீரமரபு – 17 

தொடர்ச்சி…

ருப்பினும், ஜூலை 10 ஆம் தேதி கிளர்ச்சி வெடித்தது. 9ஆம் தேதி இரவு அமைதியாக இருந்ததால் படை முகாமைச் சுற்றிப்பார்க்கும் பொறுப்பை வெள்ளைத் தளபதிகள் இந்திய அதிகாரிகளிடமே ஒப்படைத்தனர். வேலூர்க் கிளர்ச்சியில் சிப்பாய்கள் மட்டுமல்ல. கம்பெனிப் படையின் இந்திய அதிகாரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதக்கிடங்கைக் காவல் காத்துநின்ற வெள்ளைக்கார

வீரர்களைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றி அதிகாலை 2 மணிக்கு கிளர்ச்சியைத் தொடங்குகின்றனர் சிப்பாய்கள். பின்னர் வெள்ளையர் களின் குடியிருப்புக்களை நோக்கிச் சுடத் தொடங்குகின்றனர். அத்தகைய சூழ்நிலையிலும் பெண்கள், குழந்தைகளின் மீது சிப்பாய்களின் விரல் கூடப்படவில்லை. 14 அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்ட வெள்ளையர்கள் இந்தியச் சிப்பாய்களால் கொல்லப்பட்டனர். அவர்களில் வேலூர்க் கோட்டையின் ஆணை அதிகாரி கர்னல் பான்கோர்ட்டும், லெப்டினண்ட் கர்னல் கெராஸ்ஸூம் முக்கியமானவர்கள். மீதமிருந்த வெள்ளையர்களில் பலர் படுகாயமடைந்தனர். சிலர் கோட்டையின் தடுப்புச் சுவரருகே பதுங்கிக் கொண்டனர்.

கிளர்ச்சி திட்டமிட்டபடி தொடங்கியவுடனே, வெள்ளையர்களின் கொடி இறக்கப்பட்டு திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்படுகிறது. வீரர்கள் திப்புவின் மகனை “வாருங்கள் நவாப்! வாருங்கள், அச்சமின்றி அரியணை ஏறுங்கள்” என்று அறைகூவினர். ஆனாலும் இந்தச் சுதந்திரப் பிரகடனம் நெடுநேரம் நீடிக்கவில்லை. அதிகாலை ஆறு மணிக்கே வேலூர் கிளர்ச்சி குறித்த செய்தி அருகில் 14 மைல் தொலைவில் இருந்த ஆற்காட்டை எட்டிவிட்டது. அங்கு ஆணை அதிகாரியாக இருந்த கர்னல் கில்லெஸ் பெரும் படையுடன் காலை எட்டு மணிக்கு வேலூர் கோட்டைக்குள் நுழைந்து விட்டான். எதிர்த்தாக்குதல் இவ்வளவு சீக்கிரம் இருக்கும் என்பதை சிப்பாய்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அணிதிரண்டு தயாராவதற்குள் கில்லெஸ்பியின் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்து விட்டன.

வேலூர் கோட்டையைப் பிடித்து எட்டு நாட்கள் வைத்திருக்கத் திட்டமிட்டிருந்த சிப்பாய்கள், அதனை எட்டு மணிநேரம் கைப்பற்றி வைத்திருப்பதற்கே தங்கள் இன்னுயிரைத் தரவேண்டியிருந்தது. சில சிப்பாய்கள் தங்கள் முதன்மை நோக்கத்தை மறந்து சூறையாடலில் ஈடுபட்ட போதும், சில சிப்பாய்கள் கோட்டையை விட்டு வெளியேறிய போதும், பல சிப்பாய்கள் சுதந்திர ஆவேசத்துடன் சாகும் வரையிலும் போரிட்டனர். அவர்களைச் சுட்டுக்கொன்றும், தூக்கிலேற்றியும், பீரங்கி வாயில் வைத்துச் சிதறடித்தும் மகிழ்ந்தன வெள்ளைப் படைகள்.

அந்தக் கொடூரத்தை ஆர்தர் சி.ஃபாக்ஸ் எனும் மாஜிஸ்திரேட் குதூகலத்துடன் பின்வருமாறு விவரிக்கிறான்: “சிப்பாய்களைப் பீரங்கிகளால் சிதறடித்து மரண தண்டனையை நிறைவேற்றியது மிக ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தண்டனை நிறைவேற்றும்

இடத்திற்கு ஏராளமான பருந்துகள் வந்தன; அந்த ரத்தக் களறியான விருந்திற்காகவே ஆவலுடன் காத்திருந்தது போல் சிறகடித்துக் கிறீச்சிட்டன; பிறகு பெருத்த வெடியோசை எழுந்து அவர்களது உடல்கள் துணுக்குகளாகச் சிதற, அந்தத் துணுக்குகள் தரையைத் தொடுவதற்கு முன் பாய்ந்து கொத்திச் சென்றன, பல கழுகுகள். பணியில் இருந்த உள்நாட்டுத் துருப்புக்களும் தண்டனையைப் பார்க்கத் திரண்டிருந்த கூட்டமும் இந்தக் காட்சியைப் பார்த்துப் பீதியில் அலறினார்கள்.”

இந்து, முசுலீம், தமிழன், தெலுங்கன்,கன்னடியன், மலையாளி என்ற பேதமின்றி, ‘வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும்’ என்ற உயரிய குறிக்கோளுக்காகக் களப்பலியான சுமார் 800 சிப்பாய்களின் குருதி வேலூர் கோட்டை அகழியில் கலந்தது. விடுதலைத் தாகத்திற்காகத் தமது குருதியைத் தாரை வார்த்த அந்த வீரர்களால் வேலூர் கோட்டை அதிர்ந்து சிவந்தது.

1799-இல் கட்டபொம்மன் தூக்கில் தொடங்கி, 1800-1801-ஆம் ஆண்டுகளில் கிளர்ந்தெழுந்த தென்னிந்தியச் சுதந்திரப் போரின் இறுதி மூச்சு வேலூர்க் கோட்டையில் அடங்கியது. அணைவதற்கு முன் பிரகாசமாய் மூண்டெழுந்த அந்தத் தீ தணிந்தது. ஆயினும் அரை நூற்றாண்டுக்குப் பின் மீரட்டில் மூண்டெழுவதற்காக உள்ளே கனன்று கொண்டிருந்தது கங்கு.

• சாத்தன்

தொடரும்…

முந்தைய பதிவு:

விடுதலைப் போரின் வீரமரபு – 17 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here