தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் தமிழகக்களம்: மருது சகோதரர்கள், ஊமைத்துரை, சிவத்தையா

‘நானும் உழுது விதைக்கும்போது அவன்
தானும் உழவுக்கு வந்தானோ?
உழவு துறைக்கு வந்தானோ நம்மள்
உழவெருதுகள் மேய்த்தானோ?
களைமுளைகளெடுத்தானோ?
இப்போ கஞ்சித் தண்ணிக்குக் கொடுத்தானோ?
சனமோ? சாதியோ?
கும்பனியான் நம்மள்
சம்மந்தக்காரனோ கும்பனியான்
மனதுபோல நடப்பானோ? நம்மள்
மச்சானோ? தம்பி கிச்சானோ?

– ‘கட்டபொம்மு வரலாறு’ எனப்படும் கதைப் பாடலில் இருந்து.

1800-ஆம் ஆண்டு.திப்பு தோற்கடிக்கப்பட்டு, கட்டபொம்மனும் தூக்கிலேற்றப்பட்டு விட்டார். திருநெல்வேலி சீமையில் அனைத்துப் பாளையங்களும் கலைக்கப்பட்டு விட்டன. நவாபை பொம்மையாக வைத்துக் கொண்டு வெள்ளையர்களின் இராணுவம் கொடூரமான அடக்குமுறைகளின் மூலம் நாடாண்ட காலம்.

நெல்லை வீழ்ந்த போதிலும், தென்னிந்தியாவில் பரவலாக கிளர்ச்சித் தீ முன்னிலும் தீவிரமாகக் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. கன்னட மராத்தியப் பகுதியில் தூந்தாஜி வாக், மேற்கு மைசூரில் கிருஷ்ணப்பா நாயக், மலபாரில் கேரளவர்மா, கோவை வட்டாரத்தில் கானி ஜ கான் மற்றும் தீரன் சின்னமலை, திண்டுக்கல்லில் கோபால் நாயக்கர், இராமநாதபுரத்தில் மைலப்பன், சிவகங்கையில் சின்ன மருது, பாளைச்சிறையில் இருந்த ஊமைத்துரை மற்றும் சிவத்தையா ஆகிய தலைவர்கள் ஒன்றிணைந்த போராட்டத்தை துவக்கினார்கள். பழனியில் இத்தலைவர்களின் தூதர்கள் கோபால நாயக்கர் தலைமையில் கூடிப் பேசினார்கள். விருப்பாட்சியில், தெற்கத்திச் சீமையின் சுமார் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வெள்ளையர்களை விரட்டுவதற்குச் சபதம் எடுத்தார்கள். இந்த அறைகூவல் கிராமங்கள் தோறும் பனையோலை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. தீபகற்பக் கூட்டிணைவு உருவாகியது. மக்கள் திரள் பங்கேற்ற முதல் சுதந்திரப்போர் தொடங்கியது!

ஆங்கிலேயர்களின் கண்காணிப்பு அடக்குமுறையை மீறி தமிழகத்திலிருந்து தூதர்கள் பலர் மலபாருக்கும், மைசூருக்கும்,

மராத்தியத்திற்கும் சென்று வந்தார்கள். உண்மையில் அவை ஒவ்வொன்றும் வீரம் நிறைந்த சாகசப் பயணங்கள். காவிரியை மையப்படுத்தி தென்னிந்தியாவில் உருவான இந்தப் புரட்சி, தூந்தாஜி வாக் மூலம் மன்னன் சிந்தியாவையும் இணைத்துக் கொண்டு கங்கைக் கரையையும் தொட விழைந்தது. இவையெதுவும் கற்பனையோ மிகையோ அல்ல. அத்தனையும் ஆங்கிலேய இராணுவக் குறிப்புக்களில் பதிவாகி இருக்கின்றன.

தூந்தாஜி வாக்கும், சின்ன மருதுவும் போர்க்காலங்களில் வீரர்களையும், குதிரைப் படையையும் பரிமாறிக் கொள்ள முடிவு செய்கின்றனர். தூந்தாஜி வாக்கின் படையில் கணிசமான அளவு தமிழ் வீரர்கள் இருந்ததாக வெள்ளையர்களே பதிவு செய்திருக்கின்றனர். முதலில் தென்னிந்தியாவின் மையத்திலிருந்த கோயம்புத்தூர் கோட்டையை கைப்பற்றுவதெனவும், துங்கபத்திரைப் போரை முடித்துக் கொண்டு துந்தாஜி வாக் தமிழகத்தின் வட பகுதியில் வெள்ளையரைத் தாக்குவதென்றும், அதன் பிறகு எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் புரட்சியைத் தொடங்குவதெனவும் தீபகற்பக் கூட்டிணைவின் தலைவர்கள் முடிவு செய்கின்றனர்.

ஆனால், உளவாளிகள் மற்றும் துரோகிகள் மூலம் தகவல் அறிந்த ஆங்கிலேயர்கள் கோவைத் தாக்குதலை முறியடித்து 42 போராளிகளைத் தூக்கிலேற்றுகின்றனர். வடக்கே பல்லாயிரக்கணக்கில் மக்களை அணி திரட்டிப் போராடிய தூந்தாஜி செப், 1800 போரில் கொல்லப்படுகிறார்; எனவே தமிழகத்தின் வீரர்கள் பெரிதும் எதிர்பார்த்த தூந்தாஜியின் புகழ் வாய்ந்த குதிரைப்படை தமிழகத்திற்கு வர முடியவில்லை. மலபாரில் கேரளவர்மாவின் தளபதிகள் மற்றும் ஏனைய தலைவர்களும் கொல்லப்படுகின்றனர்.

கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உடைந்து போனதாக வெள்ளையர்கள் எக்காளமிட்ட நேரம். அந்த எக்காளத்தை அடக்க சிங்கம் போல கர்ச்சித்து எழுந்தார்கள் மருது சகோதரர்கள். 1800 – 1801 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த அந்தச் சுதந்திரப் போரில்தான் வெள்ளையர்கள் அதுவரை காணாத உயிரிழப்பைச் சந்தித்தனர். 1857க்கு முந்தைய காலனியாதிக்க வரலாற்றில் இந்த அளவுக்கு வெள்ளை உயிர்கள் வேறெங்கேயும் பலியானதில்லை என்று பதிவு செய்திருக்கிறான் வெள்ளை ராணுவ அதிகாரி ஜேம்ஸ் வெல்ஷ்.

1801 பிப்ரவரி இரண்டாம் நாளன்று, பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து ஊமைத்துரையை விடுதலை செய்யும் சாகசத்திலிருந்து தொடங்குகிறது அந்த வீர வரலாறு. முழுமையான கேட்கும் திறனோ, பேசுந்திறனோ அற்ற, கட்டபொம்மனின் தம்பி குமாரசாமிக்கு மக்கள் அன்புடன் சூட்டிய பெயர் ஊமைத்துரை. ஊமைத்துரையின் வீரத்தையும் போர்த்திறனையும் மக்களைத் திரட்டும் ஆற்றலையும் மக்களிடம் அவர் பெற்றிருந்த பெருமதிப்பையும் கண்டு வெள்ளையர்களே அதிசயித்திருக் கிறார்கள். சுமார் 24 சைகைகள் மூலமே தன் வீரர்களைப் போர்க்களத்தில் வழிநடத்திய ஊமைத்துரை அடிக்கடி வைக்கோலைப் பிரித்து ஊதுவாராம். வெள்ளையர்களையும் அப்படி ஊத வேண்டுமென்பது இதன் பொருள்.

பாளையங்கோட்டை சிறையிலிருந்த ஊமைத்துரையையும் கட்டபொம்மனது மற்றொரு தம்பியான சிவத்தையாவையும் விடுவிக்க மருது சகோதரர்கள் எடுத்த முயற்சியொன்று ஏற்கெனவே தோல்வியடைந்திருந்தது. விடுவிக்க வந்த சிவகங்கை வீரர்கள் பிடிப்பட்டுத் தூக்கிலேற்றப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் திட்டமிடப்பட்ட இந்த இரண்டாவது முயற்சியோ வெள்ளையருக்குத் தரப்பட்ட கவித்துவமான பதிலடி.

முதல் பாஞ்சாலங்குறிச்சிப் போரில், எந்த திருச்செந்தூர் திருவிழாவைப் பயன்படுத்திக் கொண்டு வெள்ளையர்கள் முற்றுகையிட்டார்களோ, அதே திருச்செந்தூரின் பக்தர்களாகவும், விறகு சுமப்போராகவும் வெற்றிலை, இலை விற்போராகவும் வேடமிட்ட வீரர்கள் கோட்டையைச் சுற்றி வந்தனர். கோட்டைக்குள் இருப்பவர்கள் இறந்தோருக்கு திதி கொடுக்க வேண்டுமெனச் சொல்லி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ‘வியாபாரிகளையும்’ உள்ளே அழைக்கின்றனர். பொருள்களின் கட்டுக்குள்ளே இருந்த ஆயுதங்கள் கைமாறுகின்றன. வெள்ளையதிகாரிகளைத் தாக்கிவிட்டு இளவல்களுடன் தப்புகிறார்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள்.

ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, உழுது, எருக்கு விதைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆறே நாட்களில் அதிசயம் போல் எழுந்து நின்றது. தலித் மக்கள், மீனவர்கள் என்று எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டி ஊமைத்துரையும், சிவத்தையாவும் மக்களோடு மக்களாய் மண் சுமந்து இரவும் பகலும் அந்தக் கோட்டையைக் கட்டினார்கள். வெள்ளையனுக்கு எதிராக மக்களைத் திரட்டும் கலையில் தம்பிகள் அண்ணனை விஞ்சினார்கள். சிவத்தையா பாஞ்சாலங்குறிச்சியின் அரசனாக அறிவிக்கப்பட்டார்.

– தொடரும்…

விடுதலைப் போரின் வீரமரபு – 8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here