வேள்பாரி யும், தக் லைஃப் முத்தமழை பாடலும்!

வேள்பாரி நாவலில் வருகின்ற தமிழ் பெயர்கள் ஏறக்குறைய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் சூட்டப்பட்டுள்ளன என்பதெல்லாம் சமகாலத்தில் நடக்கின்ற வரலாற்று திரிப்புகளுக்கும், மோசடிகளுக்கும் எதிரான ஆரோக்கியமான நிகழ்வுகள் ஆகும்.

வேள்பாரி யும்,  தக் லைஃப் முத்தமழை பாடலும்!

புதிய ஜனநாயகம் தினசரி துவங்கிய நாள் முதல் பல்வேறு அரசியல், பொருளாதாரக் கட்டுரைகளை எழுதி வருகிறோம் என்ற போதிலும் அந்த அரசியல், பொருளாதாரத்தின் உருட்டி திரட்டப்பட்ட வடிவமாக திகழ்கின்ற பண்பாட்டுத்தளத்தில் வெளிப்படுகின்ற சிக்கல்களைப் பற்றி பெரும்பாலும் எழுதியதில்லை.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பறம்பு மலை பாரியை பற்றி வெளிவந்துள்ள வேள்பாரி நாவல் தமிழகத்தின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு லட்சம் பிரதிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

சாகித்ய அகாடெமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்துடனும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியான `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் 11- 7- 2025 அன்று வெற்றிப் பெருவிழா’ நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய எழுத்தாளர் சு.வெங்கடேசன், “இந்த விழா `வேள்பாரி’ என்ற நூலின் வெற்றி விழா மட்டுமல்ல. ஒரு நவீன கணினி யுகத்தில் திறன்பேசிகளுக்குள் சமூகம் மூழ்கிவிட்டது என்று நம்புகிற ஒரு யுகத்தில், `திறன்பேசிகளுக்குள் மூழ்கவில்லை… சரியான ஒரு நூலைக் கொடுத்ததால் கொண்டாடுகிற வாசகர்கள் இத்தனை லட்சம் பேர் இருக்கிறோம்’ என்று உலகத்துக்கு உரக்கச் சொல்லுகின்ற ஒரு விழா.

அறத்தின் விழுமியங்களை மதிப்பவர்கள் யாரும் இல்லை, போற்றுபவர்கள் யாரும் இல்லை, லட்சியவாதமெல்லாம் தகர்ந்து விட்டன என்று பேசிக்கொண்டிருக்கின்ற சூழலில், `அறம்தான் தமிழ்ச் சமூகத்தின் ஆற்றலும் உயிரும்’ என்று உலகத்துக்கு உரக்கச் சொல்லுகின்ற ஒரு நாவலைக் கொண்டாடுகிற விழா.”என்று தமிழ் சமூகத்தின் எதார்த்த நிலையை உணர்த்தும் வகையில் பேசியுள்ளார்.

இதே காலகட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக எழுத்துலக பொறுக்கி கும்பலின் தலைவரான சாரு நிவேதிதா, தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த புத்தகத்தை கொண்டு வருவதற்கு தேவையான தொகையை வாசகர்கள் கடனாக கொடுத்து உதவுமாறு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.

படிக்க:

 கரிகாலனை கொன்றது யார்? நந்தினியா? மணிரத்னமா? கல்கியா? | வீடியோ
 சாரு நிவேதிதாவின் ’சாவும்’ இதர இலக்கிய பிழைப்புவாதிகளின் ’வாழ்வும்’!

அதுமட்டுமின்றி, “தமிழகத்தில் புத்தகங்களை படிக்கின்ற அளவிற்கு நிலைமை இல்லை என்றும், ஜப்பானிலும், பிற நாடுகளிலும் புத்தகங்கள் விற்பனையாகின்ற அளவிற்கு தமிழகத்தில் விற்பனை நடப்பதில்லை. அந்த அளவிற்கு அறிவு மட்டம் குறைந்தவர்களாக தமிழர்கள் உள்ளார்கள்” என்பதைப் போல தனது வெறுப்பை வார்த்தைகளாக கொட்டி தீர்த்து இருந்தார்.

சாரு நிவேதிதா போன்ற கழிசடைகள், இன்ன பிற ரெக்ரூட் எழுத்தாளர்கள் வார்த்தைகளை குழைத்து, எழுத்து வர்ணஜாலத்தில் வாசகர்களை திகைப்படையச் செய்கின்ற எழுத்துக்களை தமிழ் சமூகம் வரவேற்பது இல்லை என்பது உண்மைதான்.

வேள்பாரி நாவல் தமிழகத்தின் வாசகர்களின் அறிவு மட்டத்தை ஒரு படி உயர்த்தி உள்ளது என்பது மட்டுமின்றி, வேள்பாரி நாவலில் வருகின்ற தமிழ் பெயர்கள் ஏறக்குறைய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் சூட்டப்பட்டுள்ளன என்பதெல்லாம் சமகாலத்தில் நடக்கின்ற வரலாற்று திரிப்புகளுக்கும், மோசடிகளுக்கும் எதிரான ஆரோக்கியமான நிகழ்வுகள் ஆகும்.

தமிழகத்தில் கிடைத்துள்ள கீழடி ஆய்வு முடிவுகளின் படி முன்னேறிய வரலாற்று நாகரீகம் என்பது மட்டுமின்றி, எழுத்து வடிவில் இலக்கியங்களையும், நூல்களையும் கற்றுத் தேர்ந்த அறிவார்ந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருந்தது என்பதை நிலைநாட்டுகின்ற முயற்சியில் தொடர்ந்து தமிழகம் போராடி வருகிறது.

வரலாற்றின் வேர்களில் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டு சம்பந்தமில்லாத மொழிக் கலப்பு மற்றும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட தமிழில் பெயர் சூட்டுகின்ற அல்லது எழுதுகின்ற பேசுகின்ற பார்ப்பன மேட்டுக்குடி கலாச்சாரம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் வேள்பாரியின் வெற்றி குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் சமீபத்தில் வெளிவந்த மணிரத்தினத்தின் திரைப்படமான தக் லைஃப் என்ற திரைப்படத்தில் பாடகி சின்மயி மற்றும் பாடகி தீ ஆகிய இருவரும்  பாடிய, ‘ முத்த மழை கொட்டி தீராதா’  என்ற பாடல் பற்றிய ‘ இலக்கிய திறனாய்வுகள்’ சமூக வலைதளங்களில் கொடி கட்டி பறந்துக் கொண்டுள்ளது.

பாடலின் உள்ளடக்கம் படு ஆபாசமாகவும், அருவருப்பாகவும் உள்ளது என்ற போதிலும், அதனை அந்த பாடலின் தரத்திற்கு ஏற்ப தனது குரலில் பாடிய சின்மயி மிகப்பெரிய பாடகி என்பதைப் போல இசையுலக ரெக் ரூட்டுகள் இணையதளங்களில் பல்வேறு காணொளிகளை வெளியிட்டு தமிழ் சமூகத்தை சீரழித்து வருகின்றனர்.

வேள்பாரியின் வெற்றியைக் கொண்டாடுகின்ற அதே தருணத்தில் முத்த மழை பாடல் பற்றிய திறனாய்வுகள் பரவிக் கொண்டிருப்பதை கண்டு வெட்கித் தலை குனிவோம்.

பார்ப்பன கழிசடை கும்பல் தனது சீரழிந்த கலாச்சார பண்பாட்டு நடவடிக்கைகளை பெரும்பான்மை மக்களின் மீது சுமத்துகின்ற இழிவுகளுக்கு எதிராக போராடுகின்ற வகையில் தமிழ் சமூகத்தை தயார்படுத்துவோம்.

  • மாசாணம்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

2 COMMENTS

  1. வேள்பாரி நாவல் புத்தகம் தோழர் சு வெங்கடேசன் எழுதிய அந்த நாவல் பிரபலமாக பேசப்பட்டது ஆயிரம் பிரதிகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது என்ற செய்தியும் அதே சமயத்தில் இந்த வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுத்து பாடல் பாடி எப்படி ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஒரு நாவல் என்பது வரலாற்று ரீதியாக ஒரு சமூகத்தை குறிக்கக்கூடிய அந்த சமூகத்தினுடைய மேம்பாட்டுக்காக அது பயன்படும் அது மக்களுக்காக செயலாற்ற வேண்டும் என்ற இந்த நாவலின் ஆசிரியர் மிகவும் அற்புதமாக விவரித்துள்ளார் புதிய ஜனநாயக கட்டுரையின் ஆசிரியர் தோழர் மாசாணம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  2. வேள்பாரி நாவல் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய இந்த நாவல் ஒரு லட்சம் பிரதிகளை விற்பனையாகி உள்ளது இந்த நாவல் 5 ஆயிரம் தமிழ் பெயர்களை சூட்டி சமூகத்தில் தமிழ் வளர்ச்சிக்காகவும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளது நாவல் அதேபோல் இந்த நாவலை படமாக தயாரித்து அதில் வரும் பாடலை ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த நாவலின் சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறி தமிழ் சமூகத்திற்கு பறைசாற்றும் விதமாக பல உதாரணங்களை ஒப்பிட்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது இந்த நாவலை திருத்தி புரட்டி பார்ப்பன பண்பாட்டு சீரழிவை திணித்துக் தமிழ் சமூகத்திற்கு பேராபத்து ஏற்படுத்துகிறது பார்ப்பனிய பண்பாடு என புதிய ஜனநாயக கட்டுரையில் சிறப்பாக எழுதியுள்ள ஆசிரியர் தோழர் மாசாணம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here