அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டுமுதல் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பணிபுரியும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், திமுக 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அகில இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கல்வியின் தரம் மற்றும் ஆசிரியர்களின் பணி நியமனம், பள்ளி கல்வித்துறைக்கு மாநிலங்கள் கொடுக்கின்ற முன்னுரிமை ஆகியவற்றை ஒப்பீடு செய்து தமிழகம் முன்னிலையில் இருப்பதாக தொடர்ந்து முன்வைத்து வருகிறது தமிழகத்தை ஆளுகின்ற திமுக அரசு.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடந்த எட்டாம் தேதி முதல் தினமும் போராடி வருகின்றனர். தேர்தல் சமயத்தில் வாக்குறுதியாக முன்வைக்கப்பட்ட பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடுகின்ற இந்த ஆசிரியர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.

ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்ற சூழலில் திமுகவை ஆதரிக்கின்ற ஆசிரியர் சங்கங்கள் இத்தகைய போராட்டங்களை நிராகரிக்கின்றன என்பது மட்டுமின்றி போராடுகின்ற ஆசிரியர்கள் அதனை ஆதரிக்கின்றவர்கள் அனைவரையும் ‘ ‘தேசத்துரோகிகள்’ என்பதைப்போல சித்தரித்து பிரச்சாரம் செய்கின்றனர்.
தொடர்ச்சியாக போராடி வருகின்ற இந்த ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பு மீது கைது நடவடிக்கைகள் முதல் தாக்குதல்கள் வரை அனைத்தும் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு இத்தகைய ஆசிரியர்களின் ஓட்டுகளை பெறுவதற்கு, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம்” என்று வாக்குறுதி கொடுத்த திமுக அதற்கு நேர் எதிராக போராடுகின்ற உரிமையை நசுக்குகின்றது.
“பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை என்ன? என்று கேட்கும்” கதையைப் போல ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கையை முன் வைக்கப்படும் போதெல்லாம் மத்திய அரசு அதாவது ஒன்றிய அரசு எங்களுக்கு நிதியை ஒதுக்கவில்லை என்று கூறுவதும், கல்வித் துறைக்கு அதிகமாக ஒதுக்கி விட்டோம் என்று கணக்கு காட்டுவதும் தான் வாடிக்கையாக உள்ளது.
ஒரு நாட்டில் அரசாங்கம் செய்ய வேண்டிய முதன்மையான பணிகளில் ஒன்று அனைவருக்கும் கல்வி அளிக்கின்ற அடிப்படையான பணியாகும். இந்த கல்வித் துறைக்கு ஒதுக்குகின்ற நிதி நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சியை உருவாக்குவது; மக்களிடம் மூடநம்பிக்கைகளை ஒழித்து அறிவியல் பூர்வமாக சிந்திப்பதற்கும், உழைத்து வாழ்வதற்கான அடிப்படையை உருவாக்குவது ஆகியவை அனைத்தையும் ஒன்றிணைத்து இளைய சமுதாயத்தின் அறிவு மேம்பாட்டை உருவாக்குகின்ற மகத்தான செயல்பாட்டுடன் இணைந்தது தான் கல்வி.
படிக்க: தமிழக கல்வித்துறையை மேம்படுத்த ஆசிரியர் நியமனம் உடனடித் தேவை
இத்தகைய கல்வியை போதிக்கின்ற ஆசிரியர்கள். அவர்களை பணி நிரந்தர படுத்துவது மட்டுமின்றி அவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்குவது; வேலையை உத்தரவாதப்படுத்துவது; அரசு பள்ளி தரத்தை மேம்படுத்துவது; உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது; அருகமை பள்ளிகளை உருவாக்கி மாணவர்களை தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி பயில்வதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பது; தாய் மொழியில் கல்வியை பயிற்றுவிப்பது; தாய் மொழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது என்று அடுக்கடுக்கான தொடர் முயற்சிகளின் மூலம் தான் சமுதாயத்தை முன்னுக்கு கொண்டுச் செல்ல முடியும்.
இவற்றை கல்வி வியாபாரிகளின் தயவினால் ஆட்சியை நடத்த வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக அரசினால் புரிந்துக் கொள்ள முடியாது.
எனவே அதிகார வர்க்கத்திற்கும், திமுக அரசாங்கத்திற்கும் புரிகின்ற வகையில் ஆசிரியர்களின் போராட்டத்தை பரவலாக்குவோம். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஆதரித்து பொதுமக்களும் ஒன்றிணைகின்ற வகையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அறைகூவல் விடுப்போம்.
◾மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







போராட்டம் வெல்லட்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்