தண்டகாரண்யம்: இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரையின் இரண்டாவது படம். முதல் படத்திலே போர்கள், அணு ஆயுதங்களுக்கு எதிரான கருத்தியல் நோக்கை கொண்டும், முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் தனது கருத்தை பதிவு செய்தவர் அதியன் ஆதிரை. இரண்டாவது படத்தை, 2011-15 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போலி நக்சல் சரணடைவு நிகழ்வுகளையும், பழங்குடி மக்களின் வாழ்க்கை பிரச்சனைகளையும் அடிப்படையாகக் கொண்டு எடுத்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக, “மார்ச் 2026 ஆம் ஆண்டுக்குள் நக்சலைட்டுகளை ஒழித்து விடுவேன்” என கங்கணம் கட்டிக்கொண்டு ஒன்றிய மோடி அரசு மிகப்பெரும் நரவேட்டையை நடத்தி வரும் சூழலில் இத்திரைப்படம் எடுத்துக் கொண்ட களம் மிக முக்கியமானது.
‘தண்டகாரண்யம்’ இரத்தம் தோய்ந்த வரலாறு!
தண்டகாரண்யம் என்றதும் காடு மலைகளை பாதுகாக்க தங்கள் வாழ்வை தியாகம் செய்த பழங்குடி மக்களும் அவர்களுக்கு அரணாக நின்று போராடிய நக்சல்பாரிகளும் அவர்களின் போராட்டங்களும் தான் நினைவுக்கு வருகின்றன.
மத்திய இந்தியாவில் சட்டீஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைகளை இணைக்கும் பகுதி தான் தண்டக்காரண்ய காடு. ‘இந்திய’ பழங்குடிகளின் பூர்வீக பிரதேசம். இங்கு டோங்ரியோ, கோண்டு பழங்குடிகள் அதிகம் வாழ்கிறார்கள். இந்த பகுதி அவர்களின் பூர்வீகம் கூட. இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்பிருந்தே இவர்கள் இந்த காடுகளை சார்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் மொத்த உலகமும் இந்த காடுதான் அவர்களின் கடவுளும் காடுதான்.
ஆனால் கார்ப்பரேட் முதலாளிகளோ இதனை காடாக, மலையாக பார்ப்பதில்லை. பாக்சைட் உள்ளிட்ட கனிம வளம் குவிந்து கிடக்கும் செல்வ பூமியாக பார்க்கிறார்கள். அதனை அடைவதற்கு எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். ஆளும் அரசை பயன்படுத்திக் கொண்டு அதன் அடக்குமுறை கருவிகளை பயன்படுத்திக் கொண்டு தான் நினைத்ததை அடையத் துடிக்கிறார்கள்.
இப்படியாகத்தான் தண்டகாரண்ய காடுகளில், மலைகளில் உள்ள கனிம வளமான பாக்சைட்டை கொள்ளை அடிப்பதற்கு வேதாந்தா எஸ்ஸார் போன்ற பெருநிறுவனங்கள் வேட்டையாட முனைந்தன. இதற்கு அன்று அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் மலைகளை காக்க போராடிய பழங்குடி மக்களின் மீது போலீஸ், ராணுவம் போன்ற அடக்குமுறை கருவிகளை ஏவியது. பழங்குடி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களை பிடுங்கியது. மக்களுக்கு பள்ளிக்கூடம், மருத்துவமனை சாலை வசதி, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மறுத்தனர்.
ஆனால் பழங்குடி மக்களோ உயிருக்கு அஞ்சாமல் வீரத்துடன் எதிர்த்து சமர் புரிந்தனர். ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க மாவோயிஸ்டுகள் ஆயுதம் ஏந்தி களத்தில் நின்றனர். இப்படி மக்களுக்காக போராடுகிறவர்களை “இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு ‘அச்சுறுத்தலான சக்தி’ என வர்ணிக்கிறார்கள் பிரதமர்கள். தண்டகாரண்ய காட்டில் நடப்பதை வெறுமனே கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கையாக மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. அங்கு நடப்பது போர். உள்நாட்டு போர். சொந்த மக்களை வதைத்து பட்டினியில் வாடும் ஏழை பழங்குடி மக்களை கொன்று மலையின் வளங்களை பெருமுதலாளிகளின் காலடியில் சமர்ப்பிப்பதற்காக இந்திய அரசு ‘‘இந்தியாவின் இதயத்தின் மீது தொடுத்துள்ள போர்” என்றார் எழுத்தாளர் அருந்ததி ராய்.
மேலும் படிக்க:
மாவோயிஸ்டுகள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்: உண்மை நோக்கம் என்ன?
மாவோயிஸ்டுகள்- பழங்குடிகள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! ஜூன் 5 பொதுக்கூட்டம்
’பசுமை வேட்டை’ முதல் ஆபரேஷன் காகர் வரை!
2005 – 2011 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்ட அரசால் உருவாக்கப்பட்ட கூலிப்படை தான் சல்வா ஜூடும். சத்தீஸ்கர் மாநில பிஜேபி முதல்வர் ராமன் சிங் தலைமையிலான அரசு இதை ஆதரித்து பழங்குடி இளைஞர்களை Special police officers(SPOs) ஆயுதப்படையில் சேர்த்தது. இந்தக் கூலிப்படை மூலம் பழங்குடி மக்களை தங்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டி அடித்தது. 700க்கும் மேற்பட்ட கிராமங்களை தீயிட்டு கொளுத்தியது. 3 லட்சம் வீடுகள் எரிந்தன. 300க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பல லட்சம் மக்கள் காடுகளில் இருந்து துரத்தப்பட்டனர். இந்த அரச கூலிப்படையை உருவாக்கியவர் அந்த பகுதியின் காங்கிரஸ் பிரமுகரான மகேந்திர கர்மா. இவர் பின்னாளில் மாவோயிஸ்டு நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். சல்வா ஜுடுமுக்கு சம்பளம் தந்தது டாடா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள். 2011 உச்சநீதிமன்ற தீர்ப்பு சல்வாஜூடும் சட்டவிரோதம் என்று அறிவித்தது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சல்வாஜூவிடும் கலைக்கப்பட்டது. தண்டகாரண்யம் படம் சல்வா ஜுடும் போன்றே உருவாக்கப்பட்ட ஆயுதப்படை பற்றியும் பேசுகிறது.
இந்த காலகட்டத்தில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தலைமையில் மாவோயிஸ்டுகளையும், போராடும் பழங்குடிகளையும் ஒடுக்க நடந்த மிகப்பெரிய ஆயுதப்படை தாக்குதலை தான் பசுமை வேட்டை என்கிறோம். சல்வா ஜூடும் என்ற பெயரில் மக்களை கூலிப்படையாக மாற்றிய அரசு, அது தடைசெய்யப்பட்ட பின் முன்னிலும் தீவிரமாக, நேரடியாக அரசு படைகளை களத்தில் இறக்கி மக்களை வேட்டையாடியது. இந்த தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த மக்கள் திரள் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு ’பசுமை வேட்டை’ சற்றே தணிந்தது.
2014 ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து மாவோயிஸ்டுகள் மீதான போர் என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல் முன்பை விட தீவிர படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பரேஷன் காகர் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் ஒரு மிக மோசமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் பாசிச கொடுங்கொன்மையை நிறுவி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 250க்கும் மேற்பட்டவர்களை மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் போலி மோதல் படுகொலை செய்துள்ளது. இத்தகைய படுகொலைகளை எதிர்க்கும் அறிவு ஜீவிகளை ஜனநாயக சக்திகளை அர்பன் நக்சல்கள் என்று முத்திரை குத்தி, தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என்ற பெயரில் உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து வதைத்து வருகிறது ஒன்றிய மோடி அரசு. பேச்சுவார்த்தைக்கு தயார் என்று மாவோயிஸ்ட் கட்சி அறிவித்த பிறகும் அதன் செயலாளர் உட்பட பல முன்னணித் தலைவர்களை கொன்று குவித்து வருகிறது. இந்த ஆப்ரேஷன் காகரை எதிர்த்த போராட்டங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இத்தகைய அழுத்தமான போராட்ட களத்தின் பெயரை தலைப்பாக கொண்டுவந்துள்ளது இப்படம். குறிப்பாக, ‘நக்சல் சரணடைவு’ என்ற பெயரில் 2013 காலகட்டத்தில் நடந்த மிகப்பெரும் ஊழல் நடவடிக்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தண்டகாரண்யம்– அலைந்து திரியும் திரைக்கதை!
தண்டகாரண்யம் எனும் அழுத்தமான தலைப்பை கொண்டு, பல தணிக்கை சவால்களை கடந்து வந்துள்ளது இப்படம். இப்படத்தில் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மலை பிரதேசத்தில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் எப்படி ஒரு போலி நக்சல் சரணடைவு சதியில் மாட்டுகிறான். அதில் இருந்து அவன் மீள்கிறானா என்ற கதைக்கருவை வைத்துக் கொண்டு நகர்ந்துள்ளது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த முருகன், வன பாதுகாவலனாக பல ஆண்டுகளாக வேலை செய்தும் பணிநிரந்தரம் கிடைக்காமல், அதற்காக காத்திருப்பவர். அவரது அண்ணன் சடையன் ஒரு என்.ஜி.ஓ உடன் இணைந்து மலைப்பகுதி பொருட்களை வியாபாரம் செய்யக்கூடிய ஒருவர். அவர் பழங்குடிகளாகிய தங்கள் ஊர் மக்கள் மீது வன பாதுகாப்பு அதிகாரிகளும், உள்ளூர் பணக்கார ரவுடிகளும் இணைந்து நடத்தும் அடக்குமுறையை எதிர்த்தும், சுரண்டலை எதிர்த்தும் கேள்வி கேட்கக்கூடிய ஒருவராக இருக்கிறார். இதனாலேயே அவரது தம்பியான முருகன் வனப் பாதுகாப்பு பணியில் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு, அப்பணியில் இருந்தே நீக்கப்படுகிறார்.
தமது காதலியை கரம்பிடிக்க குறைந்தபட்சம் ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்ற நிலையில் இருக்கும் முருகனை துணை ராணுவப் படையில் சேர்த்துவிட பயிற்சி அளிப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஒரு தரகர் அபகரிக்கிறான். தன் பூர்வீக நிலத்தை விற்று அந்த பணத்தை கொடுக்கும் தந்தையின் வேதனை, தனது வேலை, வாகனம் ஆகியவற்றை இழந்து நிற்கும் அண்ணன் சடையனின் வாழ்க்கைப்பாடு ஆகியவற்றை தோளில் சுமந்து பயிற்சிக்கு செல்லும் முருகன் அப்பயிற்சியில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கிறான்.
பழங்குடி மக்கள் சந்திக்கும் பிரச்சினை,மனிதத் தன்மையற்ற பயிற்சி கூடம், போலி நக்சல் சரணடைவு- போலி மோதல் கொலை என பல களங்களில் நிகழும் சம்பவங்களை இணைக்க இயக்குனர் முயற்சி செய்துள்ளார். அது ஒவ்வொன்றும் அடர்த்தியான காட்சிகளையும் அதற்கான நேரத்தையும் கோருகிறது. திரைக்கதை அதை நிறைவேற்றவில்லை. மாறாக, அனைத்தையும் மேலோட்டமாக தொட்டுச் சொல்கிறது. கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதமும் மேம்போக்காக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, முதல் சில காட்சிகளில் சிறப்பான அரசியல் வசனங்கள் பேசும் சடையன் கதாபாத்திரம் தனது தம்பியின் வேலைக்கு யாரோ ஒரு தரகரை வெள்ளந்தியாக நம்புகிறது. நிலத்தை விற்று பணம் கொடுத்து ஏமாறுகிறது. சில காலம் ஏமாற்றப்பட்டதே தெரியாமல் நம்பிக்கையுடன் இருக்கிறது. திடீரென ஓரிரவில் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நக்சல்பாரியாக மாறுகிறது.
இதேபோல் தான் கதாநாயகன் முருகன் கதாபாத்திரமும், அமிதாப் என்ற முக்கிய கதாப்பாத்திரங்களும் ஆழமின்றி எழுதப்பட்டுள்ளது. காத்திரமான வசனங்களைப் பேசும் கதாபத்திரங்கள் செயல் அதற்கு பொருந்தாமல் இருப்பது முரண்பாடாக உள்ளது. மேலும் பயிற்சிக்கூட சித்திரவதைகளும் “டாணாக்காரன்” போன்ற படங்களில் கொடுத்த உணர்ச்சியைத் தரவில்லை. புலிகள் சரணாலயம், பாதுகாக்கப்பட்ட காடுகள் என்ற பெயரில் பழங்குடி மக்களின் வாழ்க்கை பறிக்கப்படுவதே தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை. அதையும் பார்வையாளர்க்கு முழுமையாக கடத்தவில்லை. தனித்தனியே சில காட்சிகள் ஈர்த்தாலும் ஒரு திரைப்படம் என்ற வகையில் முழுமையாக உணர்வு பூர்வமாக இணைப்பதில் வெற்றியடையவில்லை.
மேலும் படிக்க:
சினிமா: பாசிசத்தின் கீழ் கலைஞன் சோதிக்கப்படுகிறான் !
விடுதலை பாகம் 2: வெற்றிமாறனின் தெளிவும் வாத்தியாரின் தெளிவின்மையும்!
படம் எடுத்துக் கொண்ட கதை களத்திற்காகவும் இயக்குனரின் தைரியமான முயற்சிக்காகவும் பொதுவாக ஜனநாயக சக்திகளாலும் இயக்கங்களாலும் பாராட்டப்படுகிறது. அது தேவையானதும் கூட. நாமும் பாராட்டுகிறோம். எனினும், திரைப்படம் எனும் ஒரு கலை வடிவத்தின் முழு விச்சை இத்திரைப்படம் எட்ட முனையவில்லை என்பதை விமர்சனமாகவும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.
படம் இப்படி எடுத்திருக்க வேண்டும் என போதிப்பது நமது நோக்கமல்ல. அது சரியானதுமல்ல. அதில் குறைபாடுகளாக தோன்றுவதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகிறது. சமூகப்பற்றும் ஜனநாயக உணர்வும் கொண்ட கலைஞர்கள் மிகவும் சொற்பமாக இருக்கும் ஒரு காலத்தில், அத்தகைய கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை அதன் முழு வீச்சில் பயன்படுத்துவதே இந்த சமூகத்திற்கு அவர்கள் ஆற்றும் பெரும் பணியாகும். பொதுவான பாராட்டுகளில் மட்டும் திளைத்து நின்று விடாமல் தோழர் அதியன் ஆதிரை போன்ற சமூகத்திற்கு தேவையான கலைஞர் தமது படைப்பில் சுட்டிக்காட்டப்படும் விமர்சனங்களையும் பரிசீலித்து மேலும் சிறப்பான படைப்புகளை இந்திய சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்பதே நமது அவா.
மக்கள் அதிகாரம்
ஆசிரியர் குழு






