அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை அதிகாரத்தில் அமர்ந்ததில் இருந்தே டொனால்ட் டிரம்ப் பல நாடுகளின் மீதான இறக்குமதி வரியை (Tariff) உயர்த்தப் போவதாக அறிவித்தார். பல நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளுக்கு வரியை உயர்த்துவதுதான் அமெரிக்க நலனுக்கு உகந்தது எனவும் அறிவித்தார்.

அப்போதே இந்தியப் பொருட்களுக்கு 25 % வரி என்பதை அமலாக்கிய நிலையில், கடந்த ஆகஸ்ட் 27 லிருந்து இதை 50 % என்ற அளவில் அநியாயமாக உயர்த்தியுள்ளார். ரசியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா, உக்ரேன் மீதான ரசியாவின் போருக்கு துணை போகிறது என்று காரணம் காட்டி இந்தியாவை தண்டிக்கும் விதமாக இந்த வரி உயர்வை டிரம்ப் நடைமுறைப்படுத்தி உள்ளார்.

இந்த வரி உயர்வினால் ஏற்படும் பாதிப்புகள்!

அமெரிக்க அதிபராக உள்ள டேரிஃப் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு விதித்துள்ள 50 சதவீத அநியாய வரியானது, அதிக அளவில் உடல் உழைப்பு தேவைப்படும் தொழில்களில் பணி புரியும் இலட்சக்கணக்கான மக்களின் வேலையைப் பறித்து அவர்களுக்கு வாழ்வாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக ஆயத்த ஆடை, தோல் பொருட்கள், இறால் மற்றும் நகை உற்பத்தி போன்ற தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் இறக்குமதியாளர்கள் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களை நிராகரிக்கத் தொடங்கி விட்டனர். கூடுதல் விலை கொடுத்து இங்கிருந்து வாங்குவதற்கு பதிலாக வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் துவங்கி விட்டனர். விவசாய இயந்திரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழில்களும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க இழப்பை சந்தித்து வருகின்றன.

இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகள் இதனால் பெரிதாக பாதிக்கப்பட போவதில்லை. ஆனால் சிறு, குறு மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்யும் முதலாளிகளும், இலட்சக்கணக்கான தொழிலாளிகளும் தான் இதனால் பாதிக்கப்பட போகின்றனர். இந்தியா முழுவதும் திருப்பூர் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் ஆயத்த ஆடை உற்பத்தி இந்த வரி உயர்வினால் ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது. குறைந்தபட்சம் 3 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை உருவாகி உள்ளது. அவர்களில் ஒரு லட்சம் பேர் (மூன்றில் ஒரு பங்கினர்) ஆடை தயாரிப்பு தொழிலில் உள்ளனர். இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இதில் மட்டுமே அனுபவம் பெற்றுள்ளதால் வேறு தொழில்களுக்கு மாறுவது மிகவும் கடினமானது. இப்படி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்த மோடி அரசு?

டிரம்பை கொண்டாடிய சங்கிகள் இப்போது திண்டாடுகின்றனர்!

2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் முழக்கமாக ஆப்கி பார் மோடி சர்க்கார் (இந்த முறை மோடியின் ஆட்சி) என்பதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன்பிறகு 2019 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக அமெரிக்காவில் பிரச்சாரம் செய்த மோடி இதே வாசகத்தை (ஆப்கி பார் ட்ரம்ப் சர்க்கார்) டிரம்புக்கு பயன்படுத்தினார். இங்குள்ள சங்கிகள் உலகின் வல்லமை மிக்க நாடான அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய்ததை சொல்லி சொல்லி குதூகலித்தனர்.

மேலும் படிக்க:

வரி விதிப்பு: வர்த்தகப் போரை தொடங்கும் ட்ரம்ப் !

ட்ரம்ப் வரி விதிப்பால் வீழ்ச்சியுறும் பங்கு சந்தையும், மக்கள் மீதான பாதிப்புகளும்.

ஆனால் அப்படி அவர் பிரச்சாரம் செய்தது தவறு என்ற விமர்சனம் அப்போதே வைக்கப்பட்டது. இப்படியெல்லாம் நெருக்கமான நண்பர்களாக காட்டிக் கொண்ட நிலையில்தான் இப்போது மோடிக்கு ஆப்படித்து விட்டார் டிரம்ப். அவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று அமெரிக்க அதிபரானதைக் கொண்டாடிய பல இந்தியர்கள் இப்போது இந்தியாவிற்கு எதிராக அவர் சதி செய்கிறார் என புலம்புகின்றனர்.

சுதேசி முழக்கம் தீர்வைத் தருமா?

ஐம்பது சதம் அபராத வரி அமலுக்கு வரவிருந்த ஆகஸ்ட் 27க்கு ஒரு நாள் முன்னதாகப் பேசிய மோடி, “சுதேசி என்பது நமது மந்திரமாக இருக்க வேண்டும். மூலதனம் உலகில் எங்கிருந்தும் வரலாம். ஆனால் உற்பத்தி இந்தியர்களுடையதாக இருக்க வேண்டும்” என்றார். மேலும், “முதலீடு டாலரிலா, பவுண்டிலா என்பதோ, அந்தப் பணம் கருப்பா வெள்ளையா என்பதோ எனக்குக் கவலையில்லை. இந்திய உற்பத்தியும் அதில் சிந்தும் வியர்வையும் இந்தியனுடையதாக இருக்க வேண்டும் என்பதே எனக்கு முக்கியம்” என்று சென்டிமென்டாக உணர்ச்சியை தூண்டும் வகையிலான பேச்சை வழக்கம் போல உதிர்த்தார்.

அடுத்து இல்லம்தோறும் “சுதேசி” என்பதை பறைசாற்றும் பலகையை வீடுகளில் பொருத்துமாறு ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளிடம் கூற வேண்டும் என்றும், தங்கள் கடையில் விற்பனையாவது “சுதேசி தயாரிப்பு” என்ற அறிவிப்பை ஒவ்வொரு விற்பனையாளரும் பெருமிதத்துடன் அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் முழங்கினார்.

2024 – 25 ஏப்ரல் முதல் மார்ச் வரை இந்தியாவின் மொத்த இறக்குமதி 915 பில்லியன் டாலர்கள் (சுமார் 80 லட்சம் கோடிகள்) ஆகும். இது கடந்த ஆண்டை விட 6.85% அதிகமாகும். இவ்வளவு அதிகமாக இறக்குமதி செய்யும் நிலையில், பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் உள்ளூர் தயாரிப்புகளாக இல்லாத நிலையில், இல்லம் தோறும் சுதேசி பலகையை எப்படி மாட்ட முடியும்? இப்படி எதையாவது சவடாலாகப் பேசி தேசிய வெறியை கிளப்புவதுதான் சங்கிகளின் வாடிக்கை.

உள்நாட்டு சந்தைகள் கட்டுப்படியாகும் விலைகளை வழங்க முடிவதில்லை என்பதால் தான் ஏற்றுமதிகள் அவசியமாகிறது. அனைத்துப் பொருட்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய வாய்ப்பில்லை என்பதால் தான் இறக்குமதியும் தேவைப்படுகிறது. உண்மை இவ்வாறு இருக்க சுயசார்பு மற்றும் சுதேசி என முழங்குவது வெற்றுக் கூச்சல்தானே அன்றி வேறல்ல!

உள்நாட்டில் எழுந்துள்ள தீவிரமான நெருக்கடி சூழலை சமாளிக்கத்தான் மோடி சுதேசி நாடகம் போட்டு அரசின் மீதான அதிருப்தியை திசைதிருப்ப முயல்கிறார். தீவிரமான உலகமயச் சுழலில் சுதேசி முழக்கம் என்பது எத்தகைய கேலிக்குரியது என்பது சாமானிய மக்களுக்கு புரியவா போகிறது என்று ஏய்க்க நினைக்கிறார் மோடி.

கார்ப்பரேட் காவிப் பாசிச அரசிடம் தீர்வு உள்ளதா?

ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த உடனேயே சீனா மீதும் இதே போன்ற கூடுதல் வரிவிதிப்பை டிரம்ப் அறிவித்தார். ஆனால் அதற்கு பதிலடியாக சீனாவும் கூடுதல் வரியை அமெரிக்கா மீது விதித்தது. இப்போது இந்தியாவுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. சீனா செய்ததைப் போல அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலுக்கு பதில் கூடுதல் வரியை விதிக்கலாம் அல்லது ஆக்கபூர்வமான பேச்சு வார்த்தை நடத்தி ஒரு உடன்பாட்டை எட்டலாம் அல்லது அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தலாம்.

கச்சா எண்ணெய் இறக்குமதியால் லாபமடைவது இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் என்ற நிலையில் இந்திய மக்களுக்கு இதில் எந்த லாபமும் இல்லை. இந்த மூன்றில் ஒன்றை செய்யாமல் புடின் மற்றும் ஜி ஜின்பிங்குடன் கூட்டணி அமைப்பது இறக்குமதி வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஒருபோதும் தீர்வைத் தராது.

பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் யார் உண்மையில் லாபம் ஈட்டுகிறார்களோ, அதில் ஒரு பகுதியை இப்போது இறக்குமதி வரிகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்கிறார். இந்த ஆக்கபூர்வமான ஆலோசனையை மோடி அரசு ஒருபோதும் அமல்படுத்தாது.

இந்தியாவில் இருந்து அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்த பொருட்கள் தேங்கியுள்ள நிலையில், மாற்று சந்தைகளை தேடிப் பிடிப்பது நீண்ட காலம் எடுக்கும் என்பதால் தற்போதைய நெருக்கடிக்கு உள்ளான பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதாந்திர செலவுகளுக்கான தொகையை வழங்குவது தற்காலிகத் தீர்வாக இருக்கும்.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் லட்சக்கணக்கான கோடிகளை தள்ளுபடி செய்யும் பாசிச மோடி அரசு பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு இத்தகைய உதவிகளை செய்யப் போவதில்லை. ஏனெனில் இது மக்கள் நல அரசாக இல்லாமல் கார்ப்பரேட் காவிப் பாசிச அரசாக விளங்குகிறது.

உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்கின் உதவியுடன் இரண்டாவது முறையாக அதிபர் பதவியில் அமர்ந்துள்ள பாசிச டிரம்ப்பும், ஓட்டுத் திருட்டின் மூலம் மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் உள்ள பாசிச மோடியும் நாட்டு மக்களை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல், தன்னலம் மற்றும் கார்ப்பரேட் நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இப்போது அமெரிக்காவும் இந்தியாவும் வர்த்தக உடன்பாடு காண்பதற்காக பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளன. இவ்விரு பாசிச கோமாளிகளுக்கும் இடையே சமரசத் தீர்வு எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மக்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் மூலம் தான் இவர்களை வழிக்கு கொண்டுவர முடியும்.

குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here