ரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு, இந்தியாவில் இருக்கின்ற அரைகுறை ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்டும் வேலையை வெகுவேகமாக செய்து வருவதை உலகில் உள்ள பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் ஆய்வறிக்கையை வெளியிட்டு அம்பலப்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

இதனால் ஆர்எஸ்எஸ், பிஜேபியின் மானம் உலக அளவில் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது என்பது சங்கிகளும் நன்கு அறிந்ததே. இந்த ஆய்வறிக்கைகளில் மோடி ஆட்சியின் அவலங்களைப் பற்றி எடுத்துரைக்கும் புள்ளி விவரங்களை எதிர்த்து முறியடிப்பதற்கு ஏற்ற வகையில் தமக்கான புள்ளி விவர ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக அரசு விரும்புகிறது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஜனவரி 2021 ஆம் ஆண்டில், தனது துறைக்குள் எழுதிய ஒரு குறிப்பில் (இந்தியாவின் ஜனநாயக மதிப்பீடுகள் பற்றி எழுதும் பொழுது) “விரிவான அளவீடுகள் அடிப்படையில் அதன் சொந்த உலகளாவிய ஜனநாயக அறிக்கையை உருவாக்குவதற்கு ஒரு இந்திய சிந்தனை குழாமை ஊக்குவிக்கலாம்”என்று குறிப்பிட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் ஜனநாயகம் ஓஹோ என்று வளர்ந்து இருப்பதாக காட்டிக் கொள்வதற்காகன முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது பாஜக அரசு.

தனது பாசிச நடவடிக்கைகளால் இந்தியாவில் ஜனநாயகம் சிதைக்கப்பட்டுக் கொண்டு இருப்பதை மறைக்கும் விதமாக புதிய முறையில் (அதாவது மக்களை ஏமாற்றும் வகையில்) ஜனநாயக மதிப்பீட்டு குறியீட்டை (Democracy Ratings Index)
உருவாக்குவதற்காக இந்தியாவில் உள்ள ஒரு பெரிய சிந்தனைக் குழாமை (Think tank) அணுகியுள்ளது.

பல விஷயங்களில் இந்திய அரசுடன் நெருக்கமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (Observer Research Foundation) என்ற நிறுவனம் ஜனநாயகத்தை மதிப்பிடுவதற்கான புதிய வரையறையை தயாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த புதிய வரையறை ஒரு சில வாரங்களுக்குள் வெளியிடப்படலாம் என்று அரசு வட்டாரங்களில் பேசப்படுகிறது.

உலகில் உள்ள ஆய்வு நிறுவனங்களால் வெளியிடப்பட்டு, சங்கிகளைக் கதற வைத்த ஆய்வறிக்கைகள் சிலவற்றில் உள்ள ஒரு சில விவரங்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

பாசிச பிஜேபியின் ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் கிழிந்து தொங்கி கொண்டிருப்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும் உலக அளவிலான ஆய்வறிக்கைகளில் சிலவற்றையாவது நாம் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட, லாப நோக்கமற்ற நிறுவனம் என்று அறியப்படும் ஃப்ரீடம் ஹவுஸ் என்ற நிறுவனம் 2021 இல் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தியாவை “சுதந்திரமானது” என்பதிலிருந்து “அரைகுறை சுதந்திரமானது” என்று தரம் இறக்கியது.

பிஜேபியின் அரசை விமர்சிக்கும் ஊடகங்கள், கல்வியாளர்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மீதான பிஜேபி அரசின் ஒடுக்குமுறையே தரமிறக்கப்படுவதற்குக் காரணம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் “2019ல் இந்து தேசியவாதிகளால் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்தியாவிலும் ஜம்மு காஷ்மீரிலும் ஜனநாயக உரிமைகளை பாதித்துள்ளது” என்று குறிப்பிடுகிறது.

ஸ்வீடனை தளமாகக் கொண்ட V-Dem Institute என்ற நிறுவனம் 2021 இல் இந்தியாவை “தேர்தல் எதேச்சதிகாரம்” உள்ள நாடு என்று வகைப்படுத்தியது.
அதன் 2023 அறிக்கையில், அது இந்தியாவை மேலும் தரமிறக்கி,
“கடந்த 10 ஆண்டுகளில் மிகமோசமான எதேச்சதிகார நாடுகளில் ஒன்றாக ” வகைப்படுத்தியது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு,  ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தைக் குறைப்பது போன்ற காரணிகளை மேற்கோள் காட்டி, எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அதன் 2020 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஜனநாயகக் குறியீட்டில் இந்தியாவிற்கு 53 வது இடத்தைக் கொடுத்து இந்தியாவை “குறைபாடுள்ள ஜனநாயகம்” என்று முத்திரை குத்தியது.

உலக சுதந்திர இதழியலுக்கான தரவரிசை பட்டியலில் 2022 ஆம் ஆண்டில் 150வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டில் 162 வது இடத்திற்கு சென்று விட்டது. அந்தப் பட்டியலில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கையை 180 தான் என்கிற பொழுது இந்தியாவின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

இதையும் படியுங்கள்: 

உலக அளவிலான இந்த ஆய்வறிக்கைகளின் காரணமாக இந்திய நாட்டில் உள்ள மக்கள் உண்மையை உணர்ந்து, கொதிப்படைந்து தமக்கு எதிராக கிளர்ந்து எழுந்து விடக் கூடாது என்பதும் பாஜக-வினரின் கவலையாக உள்ளது.

எனவே தங்களது சொந்த ஆய்வறிக்கையை (அதாவது சொந்தப் புழுகு மூட்டையை) பாசிச பிஜேபி அரசு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு முன்பாக வெளியிடவும் வாய்ப்புள்ளது.

ஆதாரங்களுடன் அம்பலப்பட்டு நாறிக் கொண்டிருக்கும் பொழுதும் கூட,
வெட்கம் மானம் இன்றி, ஒரு சிறிதும் கூச்சப்படாமல், பொய் சொல்வதில் வல்லவர்களான பாசிச பிஜேபி–யினர் தங்களின் சொந்த ஏற்பாட்டில் தயாரித்த இந்திய ஜனநாயகம் குறித்த மோசடியான ஆய்வு அறிக்கை வைத்துக் கொண்டு இந்திய மக்களின் மூளையை சலவை செய்ய முயற்சிப்பார்கள் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

பாசிச பிஜேபி-யின் மோசடி அறிக்கையை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் நாரடிப்பதற்கு நாமும் தயாராவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here