ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு நினைவு நாணயம், தபால்தலை வெளியீடு: சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நேர்ந்த அவமானம்!
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழாவையொட்டி மத்திய அரசின் சார்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பை பெருமைப்படுத்தும் வகையில் நினைவு நாணயமும் நினைவு தபால் தலையும் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று பிரதமர் மோடியால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நாணயத்தில் மடிசார் கட்டிய ‘பாரதமாதா’ கொடியுடன் நின்றிருப்பது போலவும் பின்புறத்தில் சிங்கம் இருப்பது போலவும் மூன்று ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் பாரதமாதா முன்பாக அணிவகுத்து நிற்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்து கடவுளைப் போல ‘பாரத மாதா’வை உருவகப்படுத்தியதன் மூலம் இந்தியா இந்துக்களின் நாடு. இது இந்து ராஷ்டிரம்தான். இதில் மாற்று மதத்தினருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை நிலைநாட்டும் திசையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விரைந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை வெளியுலகுக்கு பாஜக அறிவித்துள்ளது.
தபால் தலையில் 1963 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டர்கள் கலந்து கொண்ட காட்சி அச்சிடப்பட்டுள்ளது.

இந்திய மக்களை அடக்கி, ஒடுக்கி மக்களின் உழைப்பையும் நாட்டின் வளத்தையும் 200 ஆண்டு காலம் சுரண்டி வந்த வெள்ளையர்களை எதிர்த்து ஒரு சிறு துறும்பையும் அசைக்காத அமைப்புதான் ஆர் எஸ் எஸ் அமைப்பு.
அத்தகைய ஆர்.எஸ்.எஸ் -ஐ புனிதப்படுத்தும் வகையில், இந்திய நாட்டிற்காக – இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு பல தியாகங்களை செய்துள்ளது போல போலியாக சித்தரிக்கும் முயற்சியில் இருக்கும் பாஜக அரசு தற்பொழுது இந்த நினைவு நாணயத்தையும் நினைவு தபால் தலையையும் வெளியிட்டுள்ளது.
இந்த தபால் தலை வெளியிடுவதற்கு முன்பாக, அதாவது, பாசிசம் மோடி தனது சுதந்திரதின உரையில் (ஆகஸ்ட் 15, 2025) ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நூறாண்டு காலமாக தேச சேவையில் ஈடுபட்டு வருவதாக பாராட்டி பேசி இருந்தார்.
சாவர்க்கர் தியாகியா, துரோகியா?
சங்கிகள் “வீரசாவர்கர்” என்று சொல்லும் பொழுதெல்லாம் இந்திய வரலாற்றை அறிந்த மக்கள் மனங்களில் “ஷூ நக்கி சாவர்க்கர்” என்ற வாசகம் தான் மனதில் எழுகிறது. வெள்ளையர்களை எதிர்த்ததற்காக அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சாவர்க்கர் ‘இனிமேல் பிரிட்டிஷருக்கு எதிராக எவ்வித செயலிலும் ஈடுபடமாட்டேன் என்னை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று பலமுறை மன்னிப்பு கேட்டு பிரிட்டிஷ் அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக் கொண்ட பிரிட்டிஷ் அரசு அவரை விடுவித்ததுடன் அவரது வாழ்நாள் முழுக்க அவருக்கு பென்சன் தொகையும் கொடுத்து வந்திருக்கிறது.
பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடாமல் இருப்பதற்காக பிரிட்டிசாரிடமே வாழ்நாள் முழுக்க கூலி வாங்கிக் கொண்டிருந்த ஒரு துரோகியை, தியாகி என்று ஆர் எஸ் எஸ் பாஜகவினர் கொண்டாடுகின்றனர்.
ஒன்றிய அரசின், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சமூக வலைதளத்தில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி வெளியிடப்பட்ட ஒரு படத்தில் காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங் ஆகியோரின் படங்களுக்கு மேலாக சாவர்க்கரின் படம் இடம்பெற்று இருந்தது. இதன் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்த மூவரையும் விட சாவர்க்கரின் பங்களிப்புதான் முதன்மையானது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாசிச பாஜக அரசு காட்ட முயற்சிக்கிறது.
கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர். காந்தியை கொலை செய்யப் போவதற்கு முன்பாக சாவர்கரை சந்தித்து பேசிவிட்டுத்தான் காந்தியை கொல்ல கோட்சே புறப்பட்டு இருக்கிறார். இந்த அளவிற்கு காந்தியை கொன்ற கோட்சேயுடன் நேரடியாக தொடர்பு கொண்டு இருந்தவர் சாவர்க்கர். இந்த விவரங்களை கோட்சேவின் அண்ணன் கோபால் கோட்சே நாட்டு மக்களுக்கு தெளிவாக கூறியுள்ளார். இதிலிருந்து, தேசத் தந்தை என்று கூறப்படும் காந்தி கொலையில் தொடர்புடைய சாவர்க்கரின் புகைப்படத்தை காந்தியின் படத்திற்கு மேலாக ஒன்றிய அமைச்சகமே வெளியிட்டுள்ளது நாட்டு மக்களுக்கு எவ்வளவு பெரிய வெட்கக்கேடான விசயம் என்பதை அனைவரும் உணர முடியும்.
இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான முயற்சிகளின் தொடர்ச்சியாகத் தான் இப்பொழுது இந்த நினைவு நாணயமும் தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்–ன் பங்கு?!
வெள்ளையர்களின் ஆட்சியை இந்தியாவிலிருந்து விரட்ட வேண்டும் என்று விரும்பிய மக்கள் காந்தி காங்கிரசின் வழிகாட்டுதலை ஏற்று அகிம்சை வழியில் போராடி தடியடிபட்டு சிறையில் வதைபட்டுக் கொண்டிருந்தனர். மறுபுறம் அகிம்சை வழியில் நம்பிக்கை அற்ற புரட்சிகர சக்திகள் வெள்ளை ஆதிக்கத்தை நாட்டிலிருந்து விரட்டிவிட வேண்டும் என்று ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது இன்னுயிரை தியாகம் செய்து கொண்டிருந்தனர்.
இப்படி வெள்ளையர் ஆதிக்கத்தை நாட்டில் இருந்து விரட்டிவிட வேண்டும் என்று பலரும் பல வழிகளில் போராடி சொல்லணா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பொழுது இந்த ஆர்எஸ்எஸ் காரர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? முழங்கால் வரை உள்ள அரைக்கால் சட்டையை அணிந்து கொண்டு மைதானங்களில் உடற்பயிற்சி செய்து கொண்டும் சுதந்திரத்திற்காக போராடும் மக்களின் மீது பிரிட்டிஷார் நடத்திய வன்முறையை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தனர்.
பிரிட்டிஷாரின் ஆவண காப்பகங்களில் உள்ள ஆவணங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பு பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்று தெளிவாக கூறுகின்றன. உதாரணமாக, (வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது) “ஆர் எஸ் எஸ் தன்னை சட்டத்தின் எல்லைக்குள் கவனமாக வைத்திருக்கிறது. குறிப்பாக ஆகஸ்ட் 1942 ல் வெடித்த போராட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்தது” என்று பம்பாயின் உள்துறைச் செயலாளர் ஐயங்கார் -ஆல் பிப்ரவரி 16, 1944 அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி வெள்ளையர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இருந்து கவனமாக விலகி இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பை, சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட அமைப்பாக சித்தரிக்க பாசிச பாஜக முயற்சிக்கிறது.
உண்மை இப்படி இருக்கும் பொழுது நாணயத்தை வெளியிட்டுப் பேசிய பாசிச மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவார் உட்பட பல ஆர்எஸ்எஸ் காரர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு பல கொடுமைகளை அனுபவித்ததாக பொய்யை அளந்து விட்டு இருக்கிறார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது ஹெட்கேவார் பிறந்த தினத்தை முன்னிட்டு மார்ச் 18, 1999 ல் ஒரு நினைவு தபால் தலையை வெளியிட்டார் அப்பொழுது ஹெட்கேவார்-ஐ “ஒரு குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராட்ட வீரர், தேச பக்தர்” என்று வாஜ்பாயி புகழ்ந்து பேசினார்.
ஆர் எஸ் எஸ் அமைப்பையும் அதன் தலைவர்களையும் மக்களின் மனங்களில் புனிதர்களாக தியாகிகளாக பதிய வைப்பதற்காக தங்களது பதவிக்காலத்தை பாசிச பாஜகவினர் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வருவதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஹெட்கேவார் சிறை சென்றது வெள்ளையர்களை விரட்டுவதற்காகவா?
ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்பாக ஹெட்கேவார் காங்கிரசில் இருந்தார். அவர் காங்கிரஸ்காரராக இருந்த பொழுது 1920 – 21 ஆம் ஆண்டில் கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக ஹெட்கேவார் கைது செய்யப்பட்டார். அந்த இயக்கத்தின் பொழுது கைது செய்யப்பட்டால் யாரும் வழக்கறிஞர் வைத்து வாதாட கூடாது என்று காந்தியும் காங்கிரசும் மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர். அதை மீறி தனது விடுதலைக்காக வழக்கறிஞரை வைத்து ஹெட்கேவார் வாதாடினார்.
பிறகு, செப்டம்பர் 27, 1925ல் ஆர் எஸ் எஸ் அமைப்பை ஹெட்கேவார் உருவாக்கினார். இதன் பிறகு 1930 ஆம் ஆண்டில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தின் போது “சங்கம் இந்த சத்தியாகிரகத்தில் ஈடுபடாது ஆனால் தனிப்பட்ட முறையில் பங்கேற்க விரும்பும் நபர்கள் பங்கேற்கலாம்”அறிவித்ததாக ஹெட்கேவார் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.
படிக்க: சாவர்க்கர் எனும் தேசத்துரோகி!
இப்படி அறிவித்த ஹெட்கேவார், தானே உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொள்வதற்கு வசதியாக ஆர் எஸ் எஸ் -ல் தான் வகித்து வந்த தலைவர் பதவியை விட்டு விலகினார்.
இப்படி சிறைக்கு செல்வதன் மூலமாக காங்கிரஸில் வீரியத்துடன் செயல்படும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடன் உரையாடி அவர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு வென்றெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு இருக்கிறார். அவர் திட்டமிட்டு இருந்தபடியே காங்கிரசில் இருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதுடன் எதிர்காலத்தில் ஆர்எஸ்எஸ் உடன் ஒத்துழைப்பது குறித்தும் அவர்களிடம் உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டு வந்துள்ளார்.
ஆக, இவர் சிறை சென்றது என்பது வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, ஆர்எஸ்எஸ் அமைப்பை வளர்க்க காங்கிரஸிலிருந்து ஆள் பிடிக்க வேண்டும் வேண்டும் என்பதற்காகத்தான் இவர் சிறைக்குச் சென்றுள்ளார்.
காங்கிரஸ்காரர்களை வென்றெடுப்பதற்கு இப்படியான முயற்சிகள் நடைபெறுவதை அறிந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, 1934 ஆம் ஆண்டில், காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர் எஸ் எஸ், இந்து மகாசபை, முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகளில் சேர தடை விதித்தது.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் கலந்து கொண்டதா?
1942 ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பு கலந்து கொண்டதாக இந்துமத வெறியர்கள் தற்பொழுது தொடர்ந்து கதை அளந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆர் எஸ் எஸ் -ன் தலைவர்களில் ஒருவரான கோல்வால்கர், “1942 இல் கூட தன்னார்வலர்களின் மனதில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆனால் ஆர்எஸ்எஸ் எந்த நேரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறுவதுடன் (இப்படி ஈடுபடாமல் இருந்ததால்) “வெளி ஆட்கள் மட்டுமல்ல எங்கள் சுயம்சேவுக்குகளில் பலரும் கூட ஆர்எஸ்எஸ் செயலற்ற தனி நபர்களின் அமைப்பு என்று கூறத் தொடங்கினர், அந்த வார்த்தைகளில் பொருள் இல்லை” என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
படிக்க: சாவர்க்கரும் ஆர்.எஸ்.எஸ்-சும் –விடுதலைப் போராட்ட துரோக வரலாறு!
நாமும் கூட ஆர்எஸ்எஸ் என்பது செயலற்ற தனிநபர்களின் அமைப்பு என்று கருதவில்லை. இந்திய மக்களை மதரீதியாக பிளவு படுத்தி, மோதவிட்டு பார்ப்பன மேலாதிக்கம் கொண்ட இந்துராஸ்டிரத்தை அமைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் அமைப்பு. இந்த நோக்கத்திற்காகவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான் நமது கருத்து.
இந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளாத சுயம்சேவக்குகள் தான் “ஆர்.எஸ்.எஸ் செயலற்ற தனி நபர்களைக் கொண்ட அமைப்பு” என்று கூறியிருக்கின்றனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
1925 முதல் 1947 வரை ஆர்எஸ்எஸ் செய்த போராட்டங்கள் எவை?
ஆர் எஸ் எஸ் தொடங்கப்பட்ட 1925 ஆம் ஆண்டு முதல் வெள்ளையர்கள் ‘வெளியேறிய’ 1947 ஆண்டு வரை வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து எந்த ஒரு போராட்டத்திலும் இந்த அமைப்பு கலந்து கொண்டதே இல்லை. இப்படிப்பட்ட அமைப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தியாகிகள் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் பாசிச பாஜக அரசு ஆர் எஸ் எஸ் -ன் நூற்றாண்டு நினைவு நாணயத்தையும் தபால் தலையையும் வெளியிட்டுள்ளது.
இது வரலாற்றை, உண்மைக்கு மாறாக, மாற்றி எழுதும் முயற்சி மட்டுமல்ல. இதன் மூலம் நாட்டு மக்களின் மனங்களில் ஆர் எஸ் எஸ் -ஐ புனித அமைப்பாக காட்டி பார்ப்பன மேலாதிக்கம் கொண்ட இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கான ஆதரவை மக்களிடையே உருவாக்குவதற்கான முயற்சி என்பதை அனைவரும் அறிந்து கொண்டு இதை முறியடிக்க வேண்டும்.
– குமரன்
செய்திஆதாரம்: Thewire