தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 25 சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. கட்டண உயர்வு 5% முதல் 7% வரை உயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம் உயர வேண்டிய கட்டணம் கடந்த ஜூன் மாதம் 36 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக தற்போது கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு ரூ.5 முதல் ரூ.150 வரை இருக்கும் எனத் தெரிகிறது.
வாகனங்கள் வாங்கும் போதும் சாலை வரி செலுத்துகிறோம். பஸ், லாரி போன்ற சாலை போக்குவரத்து வாகனங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரிச் செலுத்தி வருகின்றனர். வாகனங்கள் பதிவு வரி காலாண்டு வரி மற்றும் நிரந்தர வரி என ஓராண்டுக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 7000 கோடி வரி ஒன்றிய அரசிற்கு கிடைக்கிறது.
இவையெல்லாம் போதாதென்று தான் சுங்கசாவடிகள்(TollGate) அமைத்து பகல் கொள்ளை அடிக்கிறார்கள். இதில் நிரந்தரமாக அதிக சம்பளம் வாங்கக் கூடிய உயர் அதிகாரிகளான காவல்துறை, நீதித்துறையை சார்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதால் இந்த பிரச்சினை குறித்து இந்த வர்க்கத்திற்கு கவலை ஏதும் இல்லை.
ஆனால் வாடகை ஓட்டுநர்கள் அதாவது லாரி, கார், ஆம்னி பஸ் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் கட்டணங்கள் நேரடியாக் சாமானிய மக்களை பாதிக்கிறது. டோல்கேட் கட்டணம் உயரும் பொழுது லாரி வாடகை கட்டணமும் உயருகிறது. லாரி வாடகை உயர்வதினால் லாரிகளில் வரும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயருகிறது.
இதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஒன்றிய அரசு கட்டண உயர்வை அமல்படுத்துகிறது. இதுபோக பல சுங்கச்சாவடிகள் தங்களது ஒப்பந்தம் முடிந்தும் கட்டணக் கொள்ளையை தொடர்வதாக தமிழக அரசு அறிவித்தும் கண்டுக் கொள்ளாமல் மவுனமாக உள்ளது ஒன்றிய அரசு.
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளார்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்டதாகவும் காலாவதியான சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-23 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 57 சுங்கச்சாவடிகளில் ரூ.16,638.99 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மட்டும் ரூ.1386 கோடி வசூல் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மட்டும் ரூ.360 கோடி சுங்கக்கட்டணம் செலுத்துகிறது. இந்த செலவுகளையும் சேர்த்து தான் பேருந்து கட்டணமாக மக்களிடமிருந்து வசூலிக்கிறது தமிழக அரசு.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சாலையை பராமரிப்பதற்கும், பயணம் மேற்கொள்பவர்களுக்கு சுங்கச்சாவடிகளில் கழிவறை மற்றும் ஓய்வறை ஏற்படுத்துவற்கும் தான். ஆனால் இன்றும் பல நெடுஞ்சாலைகள் பராமரிப்பில்லாமல் பள்ளம் மேடாக இருப்பதினால் அதிகமான சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. சுங்கசாவடிகளில் ஓட்டுநர்களுக்கு போதிய வசதிகள் இல்லாத நிலையே உள்ளது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 855 சுங்கச்சாவடி உள்ளன. இதில் 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.64,809.86 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் அதிகம். அப்படியிருந்தும் பல தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பில்லாமல் வைத்துக் கொண்டு வாகன ஓட்டுநர்களிடம் கட்டணக் கொள்ளையை நடத்துகிறது ஒன்றிய பாஜக அரசு.
ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நடப்பு நிதியாண்டில் 5000 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலைகளில் செயற்கைகோள் உதவியுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் கூடுதலாக 10,000 கோடி வசூலிக்கப்படும் என்று டிஜிட்டல் கட்டணக் கொள்ளையை ஊக்குவிக்கிறார். ஏற்கனவே பாஸ்டேக் மூலம் நடக்கும் கொள்ளை போதாதென்று அடுத்து நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளும் முறையை கொண்டு வருகிறார்கள்.
60 கி.மீட்டருக்கு 1 சுங்கச்சாவடி என அறிவித்து சில ஆண்டுகள் கடந்தும் அதனை அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போட்டுவிட்டு சேட்டிலைட் மூலம் கட்டண வசூலை அமல்படுத்துவது எதனால்? மக்களுக்கு தெரியாமலேயே அவர்களது வங்கிக் கணக்கில் எடுத்துக் கொள்வது நவீன வழிப்பறியாக தெரியவில்லையா? எல்லா வகையிலும் வரிக் கொள்கையின் மூலம் மக்களிடம் இருந்து சுரண்டி பிழைக்கும் இந்த அரசு தேவைதானா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
படிக்க:
♦ பெட்ரோல், டீசல், எரிவாயு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு பிஜேபியின் தேர்தல் பரிசு!
♦ சுங்கச் சாவடி கட்டண உயர்வு: விலைவாசி மேலும் உயர வாய்ப்பு!
தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிக்கள் தங்கள் ஒப்பந்தம் முடிந்தும் வசூல் செய்கிறதென்றால் மாநில அரசு அனுமதிக்கக் கூடாது. ஆனால் அவர்களோ ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறுகிறார்கள். ஒன்றியத்தில் இருக்கும் பாசிச பாஜக அவ்வளவு நியாயவான்களோ?
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுங்கச்சாவடிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் கப்பலூர் டோல்கேட்டிற்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராடினார்கள். நாம் செலுத்தும் வரியை முறையாக பயன்படுத்தாமல் கார்ப்பரேட் நலனுக்காக மோடி அரசு வாரி வழங்குகிறது.
சாலைகளும் முதலாளிகளின் உற்பத்தி பண்டங்கள் தங்குதடையின்றி செல்வதற்கே 6 வழிச் சாலை, 8 வழிச் சாலை, எக்ஸ்பிரஸ் வே என அமைக்கப்படுகிறது. அவற்றையே முன்னேற்றத்தின் அடையாளங்களாக பீற்றிக்கொள்கிறார்கள். நம்மிடம் சுங்கவரி சுரண்டும் சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை முற்றுகையிட வேண்டும். அதுவே சாலைகளை உண்மையிலேயே நமதாக்கும்
- நந்தன்