
நக்சல்பாரி அரசியல் என்றவுடன் நடுநடுங்கி கொண்டிருப்பது யாரென்றால் யார் இந்த நாட்டு மக்களின் சொத்துக்களை சூறையாடி தன்னை பெரும் பணக்காரர்களாக, உலகின் முதல் தரவரிசை பட்டியலில் இடம்பெறுகின்ற மிகப்பெரும் தொழிலதிபர்களாக ஆக்கிக் கொண்டு வலம் வருகிறார்களோ அவர்கள் நடுங்குகிறார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலங்களில் வேலை செய்த போதும் அவர்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட கொடுக்காமல் அவர்களின் உழைப்பைப் பறித்துக் கொண்டும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை தனி சொத்தாக வைத்துக் கொண்டும், அவர்களின் உழைப்பு சக்தியை உறிஞ்சி மேலும் மேலும் கொழுத்துக் கொண்டிருக்கின்ற சாதி ஆதிக்க சக்திகள், பெரும் நிலப்பிரபுக்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.
ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாய்களான போலீசு, ராணுவம் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர் நக்சல்பாரி என்ற பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குகிறார்கள்.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்த துவங்குவதற்கு முன்னாள் தொழில்நுட்ப வளர்ச்சி குறைவாக இருந்ததன் காரணமாக அன்றாட செய்திகளை ஆங்கில பத்திரிகைகளிலும் மைய ஊடகங்களிலும் நக்சல்பாரி அரசியலை ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்களை பற்றி பல்வேறு கோணங்களில் அவதூறு செய்து மக்களுக்கு பீதியூட்டி வந்தனர்.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்கள் அதிகமானவுடன் மக்களின் போராட்டங்களை கண்டு நடுங்கிக் கொண்டிருக்கின்ற ஆளும் வர்க்கங்களும், அவர்களின் ஏவல் நாய்களான அதிகார வர்க்கமும் ஒன்றிணைந்து சமூக வலைதளங்களில் தனது கைக்கூலிகளைக் கொண்டு நக்சல்பாரி அரசியலுக்கு எதிராக அவதூறுகளை பரப்புகிறார்கள்.
இதில் ஒரு காணொளி, ”பத்து கோடி சம்பாதிப்பவனை நமக்கு எதிரியாக காட்டுபவர்களை நமது தலைவர்களாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். பத்து கோடி நாம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்ற வழிகாட்டுபவர்களை தான் நமது தலைவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று ஒரு அபத்த முன்மொழிவுடன் சுற்றி வந்தது.
பணக்காரர்கள் அல்லது முதலாளிகள் அவர்களின் அயராத உழைப்பின் காரணமாகவே முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய உலுத்துப்போன ஒரு கதையை முன்வைத்து மீண்டும், மீண்டும் கேடுகெட்ட முதலாளித்துவ சமூக அமைப்பின் மீது நம்பிக்கை கொள்ளும்படியும் அதை விமர்சிக்கின்ற நக்சல்பாரி அமைப்புகளை அவதூறு செய்வதும் இவர்களுக்கு முழு நேர தொழிலாகி உள்ளது.
இதோ ஒரு எடுத்துக்காட்டாக இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி சூறையாடி கொழுத்து கொண்டுள்ள தேசங்கடந்த தரகு முதலாளிகளில் ஒருவரான அம்பானி வாரிசு ஆனந்த் அம்பானிக்கு நடந்த திருமணம் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில தகவல்களை பாருங்கள்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் ஆனந்த் அம்பானிக்கு, கடந்த ஆண்டு தொழிலதிபர் விரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்துகொண்டார். பெரும் செலவில் நடைபெற்ற இந்தத் திருமணம் அம்பானியின் ஊதாரித்தனத்தை உலக மக்களுக்கு எடுத்துக் காட்டியது.
இன்றைய தேதி நிலவரப்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 103.70 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் சுமார் 9 லட்சம் கோடி ஆகும். தன்னுடைய மகனின் திருமணத்திற்காக 6,000 கோடியை அவர் செலவு செய்திருந்தாலும், ஒரு வாரத்திலேயே அதை விட பல மடங்கு வருமானத்தை அவர் பெற்றிருக்கிறார். அந்த திருமணத்திற்கு பின்பு வெளியான தகவலின் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் சேர்ந்துள்ளதாம். 2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் கூடுதலாக 1.88 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்துள்ளது.
படிக்க: இளைஞர்கள் மத்தியில் பரவும் கேங்ஸ்டர் கலாச்சாரம். சமூக பாதுகாப்பிற்கு விடப்படும் சவால்!
இந்த உல்லாச ஊதாரி மகனின் ஆடம்பர வாழ்க்கைப் பற்றி சமீபத்தில் செய்தி வெளியாகியுள்ளது. “ஆனந்த் அம்பானி தனது கைகளில் ரூ.22.5 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கடிகாரத்தை அணிந்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நீல நிறத்தில் கண்ணைப் பறிக்கும் வகையில் இந்த விலை உயர்ந்த கடிகாரத்தை ஆனந்த் அம்பானி அணிந்திருக்கும் புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது.
அவர் ரிச்சர்ட் மில் ஆர்எம் 52-04 ஸ்கல் புளூ சபையர் ரக கடிகாரத்தை அணிந்துள்ளார். இது ஒரு அபூர்வமான கடிகாரம். உலகிலேயே இதுபோன்ற கடிகாரங்கள் 3 மட்டுமே உள்ளன” என்று இந்து தமிழ் திசை பணக்காரர் வீட்டு கழிப்பறை மணக்கும் என்று புதிய தத்துவத்தை உதிர்கிறது.
திருமணத்திற்கு 6 ஆயிரம் கோடியும், கையில் கட்டும் வாட்சுக்கு 22.5 கோடி என்று செலவு பண்ணுகின்ற ஒருவனையும், தனது ரத்த வியர்வை சிந்தி மூன்று வேளை சோத்துக்கு அல்லல் படுகின்ற உழைப்பாளி மக்களையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கின்ற கண்ணோட்டம் தான் முதலாளித்துவத்தின் கொடூரமான அணுகுமுறையாகும்.

அம்பானி, அதானி உள்ளிட்ட தேசங்கடந்த முதலாளிகள் தேசத்தை சூறையாடுவது பற்றி தெரிந்தாலும் அதை பற்றி ஒரு சிறிதளவும் கவலைப்படாமல் அவர்களைப் போல கொள்ளையடிப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள் அல்லது அவர்களைப் போல உயர்வதற்கு கற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுரைகளை இலவசமாக வாரி வழங்குகின்ற இப்படிப்பட்ட ’கருத்து கண்ணாயிரங்கள்’ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரிக்கையுடன் இருப்போம்.
இத்தகைய கெடுமதியாளர்கள் தான் நக்சல்பாரி அரசியலையும், புரட்சிகர கம்யூனிஸ்டுகளையும் பற்றி கீழ்த்தரமான காணொளிகளை வெளியிடுகிறார்கள்.
அதுமட்டுமல்ல! நேரடியாக பொதுவுடமை சித்தாந்தத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும் பேசினால் அம்பலமாகி நாறிப் போவார்கள் என்பதால் கம்யூனிச போர்வையிலேயே உலா வருகின்ற பலரகமான குட்டி முதலாளித்துவ கும்பலும் பல்வேறு அவதூறுகளைத் தொடுத்து வருகிறது என்பதையும் கவனமாக கையாள வேண்டும்.
பொதுவாக ஏழை, பணக்காரன், மேல் சாதி, கீழ் சாதி என்று பேசுவதை புறக்கணித்துவிட்டு உழைக்கும் மக்கள் × ஒரு சில தேசங்கடந்த தரகு முதலாளிகள், பெரும் பான்மை உழைக்கும் மக்கள் × பார்ப்பன மற்றும் ஆதிக்க சாதிகள் என்று தெளிவாக இனம் பிரித்து எதிரிகளை அடையாளம் காட்டுவதன் மூலமே உண்மையான சமத்துவத்தை உருவாக்க முடியும். இதனை பேசுகின்ற பரப்புகின்ற, எழுதுகின்ற, பாடுகின்ற, அனைத்து வடிவங்களையும் ஆதரித்து பிரச்சாரத்தைக் கொண்டு செல்வோம்.
- இரா கபிலன்.