‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்ற உலகப் பொதுமறை திருக்குறள் முன்வைத்துள்ள விவசாயத்தின் பின்னால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உயிரோட்டமான வாழ்க்கை நெறி, இன்று கார்ப்பரேட்டுகளால் மாற்றப்பட்டு ‘சுழன்றும் கார்ப்பரேட்டுகள் பின்னது உலகம்’ என்று மாற்றப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவசாயம் படிப்படியாக விவசாயிகள் கையிலிருந்து பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு மாறிக் கொண்டுள்ளது.
விதை முதல் விற்பனை வரை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களான வேளாண் வர்த்தக நிறுவனங்கள் பாசிச மோடி அரசின் துணையுடன் விவசாயிகளின் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறது.
தான் விளைவித்த பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள் எமது விவசாயிகள். இதன் உச்சபட்சமாக தனது உயிரையே துச்சமெனக் கருதி உண்ணா நோன்பு இருந்து அரசாங்கத்தை தனது கேள்விக்கணைகளால் துளைத்துக் கொண்டிருக்கின்றார் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜிக்ஜித் சிங் தலேவால்.
குறிப்பிட்ட சூழலில் உண்ணாவிரதப் போராட்டமும், போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்பது இந்தப் போராட்டத்தின் மூலமாக நமக்கு கிடைக்கின்ற படிப்பினையாகும்.
டெல்லியில் ஓர் ஆண்டுக்கு மேல் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு போராடிய பிறகும் விவசாயிகளின் அடிப்படை கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப் படவில்லை. மூன்று வேளாண் சட்ட திருத்தங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நாடகமாடிய பாசிச மோடி கும்பல் தொடர்ந்து அதனை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.
விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு பல்வேறு கீழ்த்தரமான முயற்சிகளை மேற்கொள்வது; விவசாயிகளின் போராட்டங்களின் மீது கொடூரமான ஒடுக்கு முறைகளை ஏவி விடுவது; அரசு பயங்கரவாதத்தின் மூலம், தனது எடுபிடி ஊடகங்களின் மூலம் போராடுகின்ற விவசாயிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பது என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகளின் போர்க்குணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.
விவசாயிகளின் கோரிக்கை என்ன?
பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, டி.ஏ.பி. உர மானியம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி “கிசான் மஸ்தூர் மோர்சா” (Kisan Mazdoor Morcha), “சம்யுக்தா கிசான் மோர்சா” (Samyukta Kisan Morcha) விவசாயச் சங்கங்களின் தலைமையின் கீழ் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி விவசாயிகள் இந்த டெல்லி முற்றுகை போராட்டத்தைத் தொடங்கிய நிலையில், பத்து மாதத்திற்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா எல்லைகளில் கடுங்குளிரிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
படிக்க: குறைந்தபட்ச ஆதார விலை: சாத்தியமில்லாத கோரிக்கையா?
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கவேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகள் மீதான பாசிச கும்பலின் அடக்குமுறைகளை எதிர்த்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் பஞ்சாப் – அரியானா எல்லையான கனவுரியில் பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் (வயது 70) கடந்த மாதம் 26-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரது உடல்நிலை மோசமடைந்த போதிலும் சிகிச்சைககு மறுத்து போராட்டத்தை தொடர்கிறார்.
இதற்கிடையே, விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான வழக்கு கடந்த 18ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது உண்ணாவிரதம் இருக்கும் தலேவாலின் உடல்நிலையை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், பஞ்சாப் அரசாங்கம் தாமதமின்றி மருத்துவ உதவிகளை வழங்கவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலேவாலுக்கு மருத்துவ உதவி வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்றாததற்காக பஞ்சாப் அரசின் தலைமைச் செயலருக்கு எதிரான அவமதிப்பு மனு தொடர்பாக பஞ்சாப் அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் அதை இரும்புக் கரம் கொண்டு சமாளிக்க வேண்டும். யாரோ ஒருவரின் உயிருக்கு ஆபத்து அதை ஏன் சீரியசாக எடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டும். மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நீங்கள் பின்பற்றவில்லை அதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த வழக்கை இன்று (சனிக்கிழமைக்கு) ஒத்திவைத்தனர். அதுமட்டுமின்றி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்குள் இந்த வழக்கில் தற்போது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கையை பஞ்சாப் அரசு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்திரவிட்டனர் .
சனிக்கிழமை அன்று நடந்த விசாரணையில், ’விவசாய சங்கத் தலைவர் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தாகியுள்ளது.. அவரை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். அவர் போராட்டக்காரர்களின் அழுத்தத்தின் கீழ் உள்ளார். அவரைக் கொண்டு செல்வதில் பஞ்சாப் அரசு தேவைப்பட்டால் மத்திய அரசின் தளவாட உதவி உட்பட பெற்றுக் கொள்ளலாம், என கடுமையாக உத்திரவிட்டும், இதனால் ஏற்படும் கலவர சூழலை தடுப்பதற்கு பொருத்தமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்றும் ’நீதியரசர்கள்’ முன்வைத்து தனது சமூகம் பற்றிய அறியாமையை வெளிக்காட்டிக் கொண்டனர்.
இந்தியா ஒரு விவசாய நாடு என்றாலும் விவசாயம் செய்கின்ற விவசாயிகள் மற்றும் விவசாயத்தில் உழைக்கின்ற கூலி விவசாயிகள் நாடு தழுவிய அளவில் ஒரு சங்கத்தின் கீழ் அல்லது ஒரே அணியின் கீழ் இல்லை என்பதால் இந்த பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு விவசாயிகளின் உயிரை துச்சமாக நடத்தி வருகிறது பாசிச மோடி அரசு.
தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை பிரதான செய்தியாக மாற்றியுள்ள ஊடகங்கள் கடந்த ஒன்றரை மாதமாக போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி ஏதோ ஒரு மூலையில் எழுதுவதை ஒரு போக்காகவே கொண்டுள்ளது.
பிரிட்டன் காலனியாதிக்கத்தின்போது இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வழிகாட்டியாக நின்று தூக்குமரத்தில் தொங்கிய பகத்சிங்கை போல இன்றைய மறுகாலனியாக்க காலகட்டத்தில் விவசாயத்தை முற்றாக அழித்து கார்ப்பரேட்டுகள் காலடியில் கிடத்துவதற்கு துடித்துக் கொண்டுள்ள பாசிச மோடி அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக உண்ணா நோன்பு இருந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் வகையில் போராடி வருகிறார் விவசாய சங்கத் தலைவர் ஜிக்ஜித் சிங் தலேவால்..
இது விவசாயிகள் பிரச்சனை என்று பிற வர்க்கங்கள் ஒதுங்குகின்ற ஒவ்வொரு நொடியும் அவரது உயிரைப் பறிக்கின்ற பாசிச பயங்கரவாதத்தின் அணுகுமுறைக்கு வலுசேர்ப்பதாக அமைந்து விடக்கூடாது.
’சுழன்றும் கார்ப்பரேட் பின்னது உலகம்’ என்ற கார்ப்பரேட்டுகளின் சதிகளை முறியடிப்போம். ”விவசாயிகளை வாழ விடு, விவசாயத்தின் அழிவு சமூகத்தின் பேரழிவு” என்ற முழக்கத்தை நாடு முழுவதும் கொண்டு சென்று போராடும் விவசாயிகளின் துணை நிற்போம்.
விவசாயிகளின் வாழ்க்கையை அழித்து அவர்களின் அரைகுறை உடைமைகளையும் உழைப்பு சக்தியையும் சூறையாடி வருகின்ற கார்ப்பரேட் விவசாயக் கொள்கையை கிழித்தெறி என்றும், தேசங்கடந்த வேளாண் வர்த்தக நிறுவனங்களை தடை செய்! என்றும் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து கொடு என்றும், விவசாயிகள் முன் வைக்கின்ற 13 அம்ச கோரிக்கையை உடனே நிறைவேற்று என்றும் போராடுவோம்.
இதன் மூலம் அவரும் விவசாய சங்கங்களும் முன் வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி உண்ணா நோன்பை முடித்து வைப்போம்.
- மாசாணம்.
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதையே வாழ்நாள் லட்சியமாக வைத்திருக்கும் மோடிக்கு, விவசாயிகளின் கஷ்டம், அவருடைய போராட்டம் எங்கு தெரியப் போகிறது.
இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, சோறு துன்னும் அனைவருடைய பிரச்சனையும் தான், ஆகவே இந்தப் போராட்டத்தை ஆதரித்து அனைவரும் குரல் கொடுப்போம்.
மருத்துவ சோதனைகள்
அதன் வகையில் வடிகட்டல்கள் புதிய மருந்து கண்டுபிடிப்புக போட்டி முதலாளித்துவ பாசிச காலகட்டத்தில் ரஷ்யாவின் முன்னெடுப்பு புற்றுநோய்க்கான மருந்து சோதனை குறிப்பாக மக்களுக்கு இலவசமாக வழங்க போகிறோம் என்ற முடிவு வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் கொரோனா காலகட்டத்தில் மக்களுடைய வேதனையில் வருமானம் பார்த்த அமெரிக்கா முதலாளிகளுக்கு இந்த முன்னெடுப்பு எரியும்
குறிப்பாக இந்தியாவில் புற்று நோய்க்கு சரியான மருந்து இல்லாத பல லட்சக்கணக்கான ஏழை மக்கள் துன்புற்று இருக்கின்றனர் இறக்கின்றனர் எமது கிராமத்திலே இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனார் இளைஞன் புற்றுநோயால் இறந்து போன எனது நண்பன்.
மருத்துவ சோதனைகள்
அதன் வகையில் வடிகட்டல்கள் புதிய மருந்து கண்டுபிடிப்புக போட்டி முதலாளித்துவ பாசிச காலகட்டத்தில் ரஷ்யாவின் முன்னெடுப்பு புற்றுநோய்க்கான மருந்து சோதனை குறிப்பாக மக்களுக்கு இலவசமாக வழங்க போகிறோம் என்ற முடிவு வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் கொரோனா காலகட்டத்தில் மக்களுடைய வேதனையில் வருமானம் பார்த்த அமெரிக்கா முதலாளிகளுக்கு இந்த முன்னெடுப்பு எரியும்
குறிப்பாக இந்தியாவில் புற்று நோய்க்கு சரியான மருந்து இல்லாத பல லட்சக்கணக்கான ஏழை மக்கள் துன்புற்று இருக்கின்றனர் இறக்கின்றனர் எமது கிராமத்திலே இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனார் இளைஞன் புற்றுநோயால் இறந்து போன எனது நண்பன்.