ஒரே நாடு, ஒரே வரி முறை என்ற முழக்கத்துடனும், இந்தியப் பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கும் என்ற வாக்குறுதியுடனும் ஜூலை 1, 2017 அன்று ஜிஎஸ்டி என்ற வரி விதிக்கும் முறையை பாஜக அரசாங்கம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. நாட்டை ஒன்றிணைக்கும் விதமாக இது இருக்கப் போவதால், இந்தியாவுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்திருப்பதாக சங்கிகள் புளகாங்கிதம் அடைந்தனர்.
பாலாறும் தேனாறும் ஓடும் என்பதைப் போல வாக்குறுதிகள்!
ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு 8 ஆண்டுகள் முடிந்த நிலையில் அதன் விளைவுகளை மதிப்பிட வேண்டியுள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விகிதம் இருப்பதால் வணிகம் செய்வது எளிதாக இருக்கும் என்றும் பல்வேறு மறைமுக வரிகள் தவிர்க்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. இதன் விளைவாக வரிகள் குறையும் என்பதால் பணவீக்கமும் குறையும் என்றார்கள்.மேலும் முக்கியமாக கருப்புப் பணம், கள்ள மார்க்கெட் ஒழிக்கப்படும் என்றும் எனவே இது சமூக வளர்ச்சிக்கு வித்திடும் என்றும் நாட்டின் வளர்ச்சி துரிதப்படும் என்றும் கட்டியம் கூறினார்கள்.
குறைந்த வருவாய் ஈட்டும் மாநிலங்கள் பயன்பெறும் வகையில் நிதிப் பகிர்வு நிகழும் என்பதால், மாநிலங்களிடையே சமத்துவமின்மை மறையும். தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள் வசதி படைத்த மாநிலங்களை விட விகிதாச்சார ரீதியாக குறைவாக உற்பத்தி செய்வதால், உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பு குறைவாக இருக்கும். எனினும் அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகமாக இருக்கும் என்பதால் மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் குறையும் என்பதாகவும் கூறப்பட்டது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற பொருளுற்பத்தி அதிகம் செய்யும் மாநிலங்கள் இந்தப் புதிய வரிவிதிப்பு முறையால் தங்களது வரி வருவாயை இழக்க நேரிடுமோ என அஞ்சின. இத்தகைய மாநிலங்களை சமாதானம் செய்வதற்காக, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் முதல் வருடத்தில் அடிப்படை ஆண்டு வருவாயை விட 14 சதம் வரி வருவாய் கூடுதலாக வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
மேலும் பெட்ரோல் மற்றும் மதுபானங்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படாமல் மாநில அரசுகள் தேவைக்கேற்ப வரி விதித்து கொள்ளலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டது. கோவிட் தொற்றுக்காலத்தில் மற்ற வரிவருவாய் குறைந்த போது, இதில் வரியைக் கூட்டி வசூல் வேட்டை நடந்ததை நாம் பார்த்தோம். ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு அனைத்து மாநிலங்களையும் ஒப்புக்கொள்ள வைப்பதற்கு மேற்கண்டவாறு பல்வேறு வாக்குறுதிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டன.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப் பட்டபின் ஏற்பட்ட விளைவுகள்!
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது 8 ஆண்டுகள் கடந்த நிலையில், ஜிஎஸ்டி அதன் இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்பதே ஆய்வின் மூலம் தெரிய வரும் உண்மையாக உள்ளது. புள்ளி விபரங்களின்படி பார்க்கும்போது 2017 – 18 ன் நான்காம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. கோவிட் தொற்று தாக்குவதற்கு சற்று முன்பாக 2019-20 ன் 4 ஆம் காலாண்டில் 3.1 % ஆக வெகுவாகக் குறைந்து விட்டது.
தொற்றுக் காலம் முடிந்த பிறகு அதிக வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2024-25 ஆம் ஆண்டிலும் கூட 6.5% என்ற அளவில் விகிதம் குறைவாகவே உள்ளது. மேலும் ஜிஎஸ்டி கணிசமாக ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கவே செய்துள்ளது. நம் நாட்டில் அமைப்புசாரா துறை என்பது 48 சதவீத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, அதன் மூலம் 30 சதம் உற்பத்தியை தருகிறது.
இந்தத் துறை ஜிஎஸ்டி வலைக்குள் வரவில்லை என்ற போதும் இத்துறையை ஜிஎஸ்டி மோசமாக பாதித்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்கு (Organised Sector) கிடைக்கும் உள்ளீட்டுக் கடன் அமைப்புசாரா துறைக்குக் கிடைப்பதில்லை. உற்பத்தியில் பின்தங்கிய மாநிலங்கள் அமைப்பு சாரா துறையின் பங்களிப்பை அதிகம் பெற்றுள்ளன. எனவே இத்துறையின் சரிவு இம்மாநிலங்களை கடுமையாக பாதிக்கிறது. ஒழுங்கமைக்கப்பட்ட துறையிலும் இயந்திர மயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பம் காரணமாக வேலையின்மை அதிகரிக்கிறது.
வரி ஏய்ப்பு குறைந்தால், நேரடி வரி அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இங்கு மறைமுக வரிகள் மிக அதிக அளவில் விதிக்கப்படுவதால் வெகுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அடிப்படைப் பொருட்களுக்கான வரியை ரத்து செய்ய வேண்டும் அல்லது மிகக் குறைந்த அளவில் இருக்க வேண்டும். “பென்ஸ் காருக்கும், ஹவாய் செருப்புக்கும் ஒரே அளவில் வரி விதிக்க முடியாது” என்று புகழ்வாய்ந்த சொல்லாடல் ஒன்று உள்ளது.
சொன்னது என்ன? நடப்பது என்ன?
ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கண்டறியப்படுவதாக ஒன்றிய அரசு கூறுகிறது. அரசு சொல்வதே இவ்வளவு என்றால் நிச்சயம் இதைவிட அதிகமாகத்தான் இருக்கக்கூடும். வரி ஏய்ப்பே நடக்காது என்றவர்கள், இப்போது சிறிதும் வெட்கமின்றி இதைக் கூறுகின்றனர். வரி ஏய்ப்பு செய்பவர்களுடன் வரிவிதிப்பு அதிகாரிகள் கள்ளக் கூட்டு வைத்திருப்பதால்தான் இப்படி நடக்கிறது.
படிக்க:
♦ ஜிஎஸ்டி வரி பயங்கரவாதத்தின் மூலம் மக்களை கொள்ளையடிக்கும் பாசிச பாஜக.
♦ ஜிஎஸ்டி வரியை ரத்து செய்! கார்ப்பரேட்டுகளுக்கு அதிக வரி விதித்து பொருளாதாரத்தை ஈட்டு!
மின்வழி பில்களில் (E way bills) மோசடிகளும், வாகனப் போக்குவரத்தின் போது கையூட்டு பெறுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே ஜிஎஸ்டி அறிமுகமான பின்பும் வரி ஏய்ப்பை தடுக்க முடியவில்லை என்பதே நடைமுறை உண்மை. வரி ஏய்ப்பு குறைந்திருந்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்திருக்க வேண்டும். 2014-15 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 11 சதவீதமாக இருந்தது. ஆனால் 2024-25 ல் அது வெறும் 6.5 சதவீதமாக குறைந்துவிட்டது.
தற்போதைய வடிவத்தில் ஜிஎஸ்டி இந்தியாவுக்கு நிச்சயம் பொருந்தாது. ஏனெனில் நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது. மேலும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டத் தன்மையானது மிகவும் சிக்கலானது. அடுத்து முதலாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் முக்கூட்டு மூலம் பரவலாக ஊழல் பெருமளவில் அரங்கேறுகிறது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கட்டமைப்பு ரீதியாக குறைபாடுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையானது, ஒரு புறம் தோல்வியைத் தழுவியுள்ளது. மறுபுறம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்களை ஓட்டாண்டியாக்கி உள்ளது. உரிய காலத்திற்குள் வரி தாக்கல் செய்யவில்லை எனில் அபராதம் மற்றும் கூடுதல் வட்டி என கசக்கிப் பிழியப்படுகின்றனர். மிகவும் சிக்கலான இந்த ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தியதில் இருந்து நூற்றுக்கணக்கான திருத்தங்கள் இதுவரை செய்து விட்டனர்.
மேலும் அதன் மீது எண்ணற்ற வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்கு ஓரளவுக்கு பலனளித்த போதிலும், அமைப்புசாராத் துறையும், சிறு, குறு வணிகர்களும் இதனால் இழப்பைத்தான் சந்திக்கின்றனர். மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமையைப் பறித்ததால் கூட்டாட்சித் தத்துவமே கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பையே குலைக்கும் விதமாகவும் இது உள்ளது.
சுருக்கமாக சொன்னால் பாசிச பாஜக அரசு கூறியதைப் போல ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையானது வளர்ச்சியை சாதிக்கவில்லை. மாறாக பொருளாதார வீழ்ச்சியை தான் ஏற்படுத்தி உள்ளது. தவறாக அல்லது அவசர கதியில் செயல்படுத்தப் பட்டதால்தான் பலன் அளிக்கவில்லை என சிலர் வாதிடுகின்றனர். ஆனால் காரணம் அதுவல்ல. அது கட்டமைப்பு ரீதியாகவே குறைபாடு உடையது என்பதால்தான் தோல்வி அடைந்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் போல இதுவும் வெகுமக்களை பாதிக்கும் ஒரு நடவடிக்கை தான் என்பதில் ஐயமில்லை. தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகளையும், மோசடிகளையும் அரங்கேற்றி மூன்றாவது முறையாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இந்தப் பாசிசக் கும்பலை ஆட்சியிலிருந்து அகற்றுவது ஒன்றுதான் நாட்டுக்கும், மக்களுக்கும் விடிவாக அமையும்.
- குரு