வடமாநிலங்களிலும் இன்ன பிற மாநிலங்களிலும் கால் பதிக்க முடிந்த ஆர் எஸ் எஸ் – பாஜக – இந்துத்துவ பாசிசக் காவிக் கூட்டம் அரசியல் ரீதியில் எத்தனையோ குட்டிக்கரணம் அடித்துப் பார்த்தும், தமிழ்நாட்டில் கால் பதிக்கவே முடியவில்லை.
மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்தது, தேசியவாத காங்கிரசிலிருந்து அஜித் பாவரை இழுத்துப்போட்டு பாஜக ஆட்சியை குறுக்கு வழியில் அமைத்துக் கொண்டது இந்த பாசிசக் காவிக் கும்பல்.
இதே போல ஒரிசாவில் நவீன் பட்நாயக்கை தனிமைப்படுத்தி பாஜக ஆட்சியை நிறுவிக் கொண்டது. மேலும் ராஜஸ்தானில், அரியானாவில், பீகாரில், மேகாலயாவில் இன்னும் பிற மாநிலங்களில் இடத்திற்கேற்றவாறு புதுப்புது யுக்திகளை அமைத்து ஆட்சியை அமைத்துக் கொண்டும் கூட்டணி ஆட்சி அமைத்துக் கொண்டும் அராஜக வழியில் ‘ஜனநாயகத்தை’ நிலைநாட்டிக் கொண்டுள்ளனர்.
நீதித்துறை – தேர்தல் ஆணையம் – ED,IT,CBI – அனைத்துமே காவி மயம்!
முடிந்த வரை பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி பண்ணுவது; தோல்வியடைந்தால் கட்சிகளைப் பிளவுபடுத்துவது; அல்லது அமலாக்கத்துறை, வருமானத்துறையினரை எதிர்க்கட்சியினர் மீது ஏவி விட்டு காலில் விழச் செய்வது; அப்படி விலை போனவர்கள் பாஜக-வில் சங்கமமானவுடன் அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்குவது; அல்லது ரத்து செய்வது; அதாவது மம்தா பானர்ஜி கூறியது போல பாஜக என்ற வாஷிங் மெஷின் பல்லாயிரம் கோடி ஊழல் செய்தவர்களையுங்கூட தூய்மையானவர்களாக்கி விடுகிறது! இதற்குப் பெயர் ‘ஜனநாயகம்’!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூட தற்போது கூறியுள்ளார்.
‘இந்தியாவின் பிரதமர் மோடி மிகவும் புத்திசாலித்தனமானவர்; எனது மிக நெருங்கிய இனிய நண்பர்; அண்மையில் அவர் வாஷிங்டன் வந்திருந்த பொழுது இரு நாட்டு உறவுகள் குறித்து மிகவும் இணக்கமாக பேசி நல்ல முடிவுகளை எடுத்துள்ளோம்’…. என்றெல்லாம் புகழ் மாலை சூட்டியுள்ளார்.
என்றைக்கு அமெரிக்க அதிபர், ஒரு நபரின் மீது நற்சான்றிதழ் வழங்கி உச்சி முகர்ந்து அறிக்கை விடுகிறரோ அப்பொழுதே சம்பந்தப்பட்ட இருவரின் தரத்தையும் நாம் உள்வாங்கிக் கொள்ள முடியும். இப்படி இந்திய பிரதமர் மோடியைப் பற்றி இவ்விதம் சான்று கொடுத்த ட்ரம்ப் தான் அண்மையில் நூற்றுக்கணக்கான இந்தியர்களை கையில் விலங்கிட்டு விமானத்தில் ஏற்றி இந்தியாவில் தரையிறங்கச் செய்ய வைத்தார். இதைத தட்டிக் கேட்பதற்கு கூட மோடிக்கோ, சங்பரிவார் கூட்டத்திற்கோ துளி அளவும் துணிச்சல் இல்லை. அவ்வாறு இருக்கும் பொழுது எந்த லாபத்தில் ட்ரம்ப், மோடிக்கு இப்படி ஒரு நற்சான்றிதழ் வழங்க முன் வந்திருப்பார் என்பது யூகிக்க முடியாத விடயம் அல்ல!
பார்ப்பன- சனாதன – இந்து மத – ஆன்மீகவெறி பரப்பி சிறுபான்மை இன மக்களை குறிப்பாக இஸ்லாமிய மக்களை கருவறுத்துத் தனிமைப்படுத்தி இந்திய நாட்டு மக்களுக்கு அவர்களால்தான் வளர்ச்சியை அளிக்க இயலவில்லை என்பதான பூச்சாண்டியைக் காண்பித்து தேர்தல் அறுவடையை செய்து கொண்டிருக்கிறது சங்பரிவார் பாசிச காவிக் கூட்டம். சாதி – மதக் கலவரம், கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் வயிற்றில் இருக்கும் குழந்தையை சூலாயுதம் கொண்டு கிழித்து வெளியே இழுத்து கொலை செய்தல், இளம் பெண்களை நிர்வாணப் படுத்தி ஊர்வலம் விடுதல், மாட்டுக்கறி வைத்ததற்காகவே கொலை செய்தல், மாட்டு மூத்திரம் குடிக்கச் சொல்லுதல், மாட்டுச் சாணத்தை உண்ணச் சொல்லுதல், ஆலயங்களை- மசூதிகளை இடித்து தரைமட்டமாக்குதல், சிறுபான்மையினரின் வீடுகளையும் புல்டோசர் கொண்டு தரைமட்டம் ஆக்குதல்….
இப்படி கணக்கில் அடங்கா கொடுமைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கக் கூடிய ஆர்எஸ்எஸ் பாஜக கூட்டத்தின் தளபதிகளாக இருக்கக்கூடிய மோகன் பகவத்-மோடி கும்பல் இந்தியாவையே சின்னாபின்னமாகி வருகிறது… இதைப் பற்றி எல்லாம் கூட அறிவியல் ரீதியாக உச்சநிலையை அடைந்து விட்டதாக தம்பட்டம் அடிக்கும் நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்புக்கு துளியளவும் அக்கறையில்லை என்றால் இந்த அதிபரின் அறிவாற்றலை என்னவென்று புகழ்வது? அல்லது இகழ்வது?
இப்படிப்பட்ட காவிக் கூட்டத்தின் அருவருக்கத்தக்க இழிந்த செயற்பாடுகளுக்கு தமிழகம் இதுவரை தலை தாழவே இல்லை.
காவிக் கூட்டத்தால், தமிழி(இந்தியி)சை,பொன்னார், சி பி ஆர், அண்ணாமலை, அர்ஜுன் சம்பத், கரு நாகராஜன், எச். ராஜா, வானதி, கே.டி. ராகவன், பாம்பே நாராயணன், கேசவமூர்த்தி… இது போன்ற எண்ணற்ற கழிசடைகள் களமிறக்கப்பட்டும் தமிழ்நாட்டில் அவர்களால் காலூன்ற முடியவில்லை.
பின்பு ‘ஆமைக்கறி புகழ்’ அப்பட்டமான பிழைப்புவாதி- பாலியல் பொறுக்கி சீமானைக் களம் இறக்கி பார்த்தது; தற்போது திரைப்படத் துறையில் ஓய்வு பெற்று அரசியலில் தடம் பதித்து படங் காட்டி முதல்வராகத் துடிக்கும் கூத்தாடி விஜய்-யையும் மறைமுகமாக இழுத்துப் போட்டு பார்க்கிறது காவிக் கூட்டம்!
இவையெல்லாம் போதாது என்று ஒன்றிய உளவுத்துறையின் கருத்தறிந்து திமுக கூட்டணியின் செல்வாக்கை உணர்ந்து, அதிமுகவை இழுத்துப் போட முனைந்து விட்டது மோடி அமித்ஷா காவிக் கூட்டம். அதன் முதல் ஏற்பாடு தான் எடப்பாடியின் சம்மந்தி ஈரோடு ராமலிங்கம் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்கத்துறை ரெய்டு மற்றும் ஆவணங்கள் பறிமுதல்; அதனைத் தொடர்ந்து எடப்பாடி தமது பரிவாரங்களுடன் அமித்ஷாவை மார்ச் 25 அன்று அவரது இல்லத்திலேயே சந்தித்து சரண்டர் ஆனது;
இதுவும் போதாது என்று 29ஆம் தேதி செங்கோட்டையன் டெல்லி வரவழைக்கப்பட்டு நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது! இப்படியாக மாறி மாறி பல்வேறு அரங்கேற்றங்களைச் செய்து 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணி 117 : 117 என்ற விதாச்சாரத்தில் பேரம் படிந்துள்ளதாக தகவல். எடப்பாடி, ‘கூட்டணி பற்றி பேசப்படவே இல்லை’ என்று புளுகிக் கொண்டிருக்கும் பொழுது, அமித்ஷாவோ அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது என்றும், 2026 இல் தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி உறுதியாக அமையும் என்றும் இரு முறை பேட்டி அளித்து விட்டார். எக்ஸ்தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
அமித்ஷாவின் இக்கனவு நிறைவேற முடியாததா?
கடந்த பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பாசிச காவிக் கூட்டம் எத்தகைய நடைமுறைகளை பின்பற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது என்பதனை நாடே அறியும்!
படிக்க:
♦ அமித்ஷா – எடப்பாடி திடீர் சந்திப்பும் – ஆபாச அரசியல் அரங்கேற்றமும்!
♦ அமித் ஷா வின் ‘நல்ல’வாயும் -‘நாற’வாயும்!
ஏன், உலகமே அறியும்! எதிர்க்கட்சியினர் மீது மட்டும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினரை ஏவி விட்டு அவர்களது கவனத்தைச் சிதறடிப்பது; மாநில முதல்வர்கள் உட்பட சிலரைக் கைது செய்வது; வாக்காளர் பட்டியல் தயாரிப்பில், தேர்தல் ஆணையத்தின் முழு ஒத்துழைப்போடு -தற்போது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டுவது போல்- பல்வேறு விதமான குளறுபடிகளை செய்வது; EVM வாக்கு இயந்திரம், VVPAT ஒப்புகைச் சீட்டு இயந்திரம், Control Machines இயந்திரம் அனைத்திலும் பல்வேறு தில்லுமுல்லுகளை தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு முன்கூட்டியே திட்டமிட்டு சரி படுத்தி வைத்துக் கொள்வது; உதாரணத்திற்கு உதயசூரியனுக்கு வாக்களித்தால் தாமரைக்கோ, இரட்டை இலைக்கோ வாக்கு சென்றடையும் வண்ணம் செட்டப் செய்வது… இதுபோன்ற எண்ணற்ற தில்லுமுல்லுகள் அரங்கேற்றப்பட்டே பாஜக தொடர்ந்து வென்று வருகிறது.
அப்படியானால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40-க்கு 40-ஐ எப்படி வெற்றிவாகை சூடி இருக்க முடியும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.
தமிழகத்தின் விழிப்புணர்ச்சி சற்று கூடுதலான அளவில் இருப்பதை காவிக் கூட்டமும் உணர்ந்தே வைத்துள்ளது. எனினும் எந்த ஒரு தீர்க்கப்படாத பிரச்சனைகளையும் எக்காலத்திலும் நீடித்து நிலைத்து நிற்க பாசிஸ்டுகள் அனுமதிப்பதில்லை. அந்த வகையில் அமித்ஷாவின் அறிக்கையை நாம் எளிதில் கடந்து சென்று விட முடியாது.
ஒவ்வொரு தொகுதியிலும் பாஜகவின் வெற்றிக்கு சாதகத்தை உண்டு செய்யும் வகையில் பதிவான வாக்குகளை விட கூடுதலான பல்லாயிரக்கணக்கான வாக்குகள் எண்ணப்படத்தக்க வழிமுறைகளை செய்தல்; சில தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட பல்லாயிரக்கணக்கான வாக்குகள் குறைவாக எண்ணப்பட வழி வகை செய்தல், போன்றவற்றை தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு பாஜக நிறைவேற்றத் தான் போகிறது.
அதற்கு நீதித்துறையும் ஒத்திசைவு வழங்கத்தான் போகிறது. அக்கட்சி முற்றிலும் ஜனநாயக விரோதமான கட்சி. ஒரு விடயத்தில் வைராக்கியமான முடிவினை எடுத்து விட்டால் கூச்சநாச்சமின்றி எவ்வளவு இழிநிலைக்குப் போனாலும் நடத்தியே காண்பிப்பது என்ற அருவருக்கத் தக்க முடிவினை நடைமுறைப்படுத்தியே தீரும்.
(தொடரும்…)
- எழில்மாறன்