வடக்கே இமயமலைத் தொடரிலிருந்து தெற்கே உள்ள இந்தியப் பெருங்கடல் வரை இந்தியாவின் நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
வடக்கு தெற்காக இதன் நீளம் 3214 கிலோமீட்டர்கள்.. கிழக்கு மேற்காக இதன் மிக அதிகமான அகலம் 2933 கிலோமீட்டர்கள் ஆகும். உலகின் நிலப்பரப்பில் 2.4% உள்ளடக்கியது. ஆனால் உலக மக்கள் தொகையில் 16% கொண்டுள்ளது. இந்தியா ஒரு ‘துணைக்கண்டம் ‘என்று அழைக்கப்ப்டுகிறது.
இன்று இந்த துணைக்கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நக்சல்பாரி என்ற அரசியல் அமைப்பின் தாக்கமும், முழக்கமும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
1967-ம் ஆண்டு இந்திய அரசியல் வானை சூழ்ந்து கிடந்த இருள் மேகங்களை திரை கிழித்து எழுந்தது நக்சல்பாரி பேரெழுச்சி. இன்று அதன் 58 ஆம் ஆண்டு துவக்க தினமாகும் என்பது வரலாற்றின் தேவைகளுடன் ஒத்துப் போகிறது.
உலகின் ஏழாவது பெரிய நாடாக உள்ள இந்தியா பல்வேறு தேசிய இனங்கள் கொண்டதாகவும், அந்த தேசிய இனங்களின் மொழிகள், கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பிடிப்பதாகவும் உள்ளது.
இந்தப் பன்முகத்தன்மையை அங்கீகரிக்க வேண்டும் என்ற சிந்தனை இந்தியாவை 1947 முதல் ஆண்டு வருகின்ற இந்திய ஒன்றிய அரசாங்கத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கும் சரி, ஆண்டு வருகின்ற ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சிக்கும் சரி எப்போதும் விருப்பம் இருந்ததில்லை.
பல்வேறு தேசிய இனங்களின் மீது பார்ப்பன பனியா கும்பலான தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் கூட்டாக ஒன்றிணைந்து செலுத்தும் ஒடுக்கு முறையின் கீழ் ஒரு நாடாக நீடித்து வருகிறது.
பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியாவில் நிலவுகின்ற பன்முகத்தன்மையை ஒழித்துக் கட்டி, “ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே கட்சியின் ஆட்சி” என்று ஒற்றைத் தன்மை கொண்ட பாசிச சர்வாதிகார ஆட்சி முறையை நிறுவுவதற்கு மூர்க்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த பரந்து விரிந்த துணைக்கண்டத்தின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டுள்ள கார்ப்பரேட் காவி பாசிச கும்பல் தனது அரசியல், பொருளாதார, பண்பாட்டு கொள்கைகளுக்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் மீது படிப்படியாக தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது.
இந்தத் தாக்குதலின் ஒரு அம்சம் தான் நாட்டின் பெரும்பான்மை மக்களில் ஒரு பிரிவினரான பழங்குடி மக்கள் மீதான ஆப்ரேஷன் காகர் எனும் உள்நாட்டு போர்.
இன்னொரு பிரிவினரான இஸ்லாமியருக்கு எதிராக சிஏஏ, என்ஆர்சி சட்டத்திருத்தங்கள் மற்றும் வஃக்பு சட்டத்திருத்தம் போன்றவற்றின் மூலமாக தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
பஸ்தார், தண்டக்காரன்யா பிரதேசத்தில் பழங்குடி மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அகற்றுவதற்கும், கார்பரேட்டுகள் கையில் ஒப்படைப்பதற்கும் நடத்தப்படுகின்ற ஆபரேஷன் காகர் நடவடிக்கைகளில் அரசுக்கு துணை போகின்ற டிஆர்ஜி என்று சொல்லப்படுகின்ற பழங்குடி மக்கள் அடங்கிய பிரிவினரும் மாவோயிஸ்ட் போராளிகளுடன் இணைந்து செயல்படுகின்ற பழங்குடிகளும் மோதிக் கொள்வதால் இரண்டு தரப்பிலும் பழங்குடியினர் கொல்லப்படுகின்றனர்.
“போராளிகளுடன் இணைந்து போராடுவதினால் கொல்லப்படுகின்ற பழங்குடிகளின் பிணங்கள் புழு புழுத்து அடையாளம் காண முடியாத அளவிற்கு மருத்துவமனைகளில் சிதறிக் கிடக்கின்றன.
அறியாமையின் காரணமாக ஆளும் வர்க்கத்திற்காக ஆயுதம் ஏந்தி ராணுவத்தினருடன் இணைந்து போராடுவதால் உயிரிழந்த பழங்குடிகளின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தப்படுகிறது” என்று தனது வேதனையை வெளிப்படுத்துகிறார் பழங்குடி மக்களுக்காக போராடுகின்ற சோனி சோரி.
பாட்டாளி வர்க்கத்தின் பெரும் பகுதியினரை தனது முதலாளித்துவ புகை மூட்டங்களாலும், கேடுகெட்ட சீரழிந்த கலாச்சாரங்களினாலும் தனது பிடிக்குள் வைத்துள்ள முதலாளித்துவ கொடுங்கோலர்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளை பாட்டாளி வர்க்கத்தினருக்கு புரிய வைப்பது அவ்வளவு சாதாரணமான செயல் அல்ல.
“மக்கள் பெருந்திரளினரிடையே சென்று அவர்களின் மீதான அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியான அடக்குமுறைகளை புரிய வைத்து அவர்களை அமைப்பாக்குகின்ற பணியானது ஒரு மாபெரும் இமாலய பணி” என்கின்றார் கதீப் அன்சாரி.
மன்மோகன் காலத்திலிருந்து அமித் ஷா காலம் வரை இந்தியாவின் அச்சுறுத்தல் என்று சித்தரிக்கப்படுகின்ற நக்சல்பாரி இயக்கங்கள் மக்களின் அரசியல் பொருளாதாரம் பண்பாடுகளின் மீது திணிக்கப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராக இத்தகைய இமாலய பணியை செய்து கொண்டே போராடுகிறது.
70-களில் இந்தியாவின் சமுதாய பொருளாதார படிவத்தை ஆய்வு செய்து நக்சல்பாரி பாதையை முன்வைத்து செயல்பட துவங்கியதன் மூலம், “வசந்தத்தின் இடிமுழக்கம்” என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியினாலும், தோழர் மாவோவினாலும் அங்கீகரிக்கப்பட்டது நக்சல்பாரி.
ஏனென்றால் ஆசிய, ஆப்பிரிக்க, லக்கின அமெரிக்க நாடுகளில் பூகோள ரீதியாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவில் நடைபெறுகின்ற புரட்சிகர எழுச்சியானது உலகம் முழுவதும் உள்ள காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு கலங்கரை விளக்கமாக அமையும் என்று அவதானிப்புகளுடன் வரவேற்றனர்.
இந்திய சமூக அமைப்பிற்கு பொருத்தமான கட்சி திட்டம் ஒன்றை முன்வைத்து செயல்பட துவங்கிய நக்சல்பாரி இயக்கம் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு பொருத்தமான போர்த் தந்திரங்களையும், செயல் தந்திரங்களையும் உருவாக்குவதில் ஒத்த புரிதல் இன்றி இன்று வரை செயல்பட்டு வருகிறது.
படிக்க:
பரந்துபட்ட நிலப்பரப்பையும், மக்கள் தொகையையும், பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட, ஏற்றத்தாழ்வான பொருளாதார வளர்ச்சி கொண்ட இந்தியா போன்ற அரைக் காலனிய சமூக அமைப்பில் மக்களை நிலவுகின்ற அரசியல் பொருளாதாரம் மற்றும் அதனை வழிநடத்துகின்ற அரசியல் கட்சிகள் ஆகியவற்றுக்கு உள்ள உறவுகளை புரிய வைத்து, அவர்கள் யாருக்கு சேவை செய்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு எதிராக மக்களுக்கு சேவை செய்கின்ற அதாவது மக்களுக்கு அதிகாரத்தை தருகின்ற அரசியலை முன் வைப்பதும் மிக மிக அவசியமாகின்றது.
இந்த அரசியலை முன் வைக்கும் போது அவர்களது பொருளாதார கோரிக்கைகளில் மட்டுமே மூழ்கடிப்பதை காட்டிலும், அவர்களின் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து வளர்த்தெடுப்பதில் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளும் தொடர்ந்து போராடுகின்றன.
இத்தகைய அமைப்புகள் தேர்வு செய்து வேலை செய்கின்ற நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய அடிப்படை உழைக்கும் மக்களான விவசாயிகளோ, தொழிலாளர்களோ, பழங்குடியினரோ, மீனவர்களோ எந்த காலத்திலும் அவ்வளவு விரைவாக தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்வதில்லை அல்லது ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகின்ற அமைப்புகளில் இருந்து வெளியேறி ஓடுவதில்லை.
ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்களின் கலகக்குரல் கற்றுத் தேர்ந்த, ‘சங்கீதவான்களின் ராக ஆலாபனைகளுடன் கூடிய கீர்த்தனைகளாக’ வெளிப்படுவது இல்லை என்பதால் முகநூல் பக்கங்களிலோ, எக்ஸ் தளங்களிலோ அது வெளியில் தெரிவதில்லை.
பஸ்தார் காடுகளில் போராடுகின்ற பழங்குடி மக்கள் ஆனாலும் சரி, கொல்கத்தா வீதிகளில் திரண்டு போராடுகின்ற விவசாய தொழிலாளர்களாலும் சரி, நீலகிரி, கோத்தகிரி மலைப்பகுதிகளில் உறுதியுடன் செயல்படுகின்ற அனைத்து பிரிவு உழைக்கும் மக்களானாலும் சரி, தங்களின் லட்சியத்தில் இருந்து பின் வாங்குவதில்லை.
கொள்கையையும், லட்சியத்தையும், தனது வாழ்க்கை தேவைகளுக்கும் மேலாக கருதுகின்ற இத்தகைய உழைக்கும் மக்களின் நம்பிக்கையும், இலட்சியத்தின் மீதான அசைக்க முடியாத பற்றும் நக்சல்பாரி எழுச்சிகளை மீண்டும் உருவாக்குவதில் முன்னிலை வகிக்கின்றது.
நாட்டின் பொது எதிரியாக மாறி அனைத்து மக்களின் மீதும் கொடூரமான தாக்குதல்களை தொடுத்து கொண்டிருக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற வலிமையையும், அரசியல் பார்வையையும் நக்சல்பாரியின் பாரம்பரியத்திலிருந்து கற்றுக் கொண்டு உயர்த்திப் பிடிப்போம்.
கணேசன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






