“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. அவை வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது” என்று தோழர் மாவோ கூறியதாக சில புரட்சிகர திருமணங்களில் முன் வைக்கப்படுவது உண்டு. இவை எல்லாவற்றையும் விட திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

சமீபத்தில் பஞ்சாபில் நடைபெற்ற திருமணமொன்றில் மணமகள் மீது மணமகன் குடும்பத்தினர் சுமார் 8.5 கோடி ரூபாயை பணம் மழையாக பொழிந்து வரவேற்பு கொடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பஞ்சாபில் நடந்த இந்த திருமண வரவேற்பில், 8.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை கொட்டியும், வீசி எறிந்தும் மணமகன் குடும்பத்தினர், மணமகளை வரவேற்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. பஞ்சாப் மாநிலம் டாரன் டாரன் மாவட்டத்தில் தான் இந்த நிகழ்வு அரங்கேறி உள்ளது. திருமண வரவேற்பு அரங்கில் மணமகள் நிற்க, மணமகன் பை ஒன்றில் இருந்த ரூபாய் நோட்டுகளை அவர் மீது வீசினார். அவரது குடும்பத்தினரும் அவ்வாறே ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்தனர்.

கேட்கவும், படிக்கவும் மிகவும் அருவருப்பான இந்த திருமணம் ஊடகங்களில் மிகப்பெரிய செய்தியாகவும், அதற்கு ஒரு வெட்டிக் கூட்டம் பதில் போடுவது என்று செயல்படுவது அதைவிட அநாகரீகமாகவும், அசிங்கமாகவும் உள்ளது.

கணவன், மனைவி ஆவதற்கு பொருத்தமானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் நாளை முதல் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழப் போகிறோம் என்று உலகத்திற்கு அறிவிக்கின்ற ஒரு செய்தி திருமணம் என்ற வடிவத்தின் முன் மூலம் முன்வைக்கப்படுகிறது.

எளிமையான முறையில் திருமணம் நடத்த விரும்புகின்ற சிலர் டீ, பிஸ்கட் கொடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்று முன் வைத்துவிட்டு வாழ்க்கையை துவக்கி நடத்துகின்றனர்.

பெரும்பாலானவர்கள் திருமணம் என்பதற்கு முன்பாக நிச்சயம் என்று ஒரு நிகழ்ச்சி நடத்தி அதையே ஒரு திருமணம் போல நடத்துகின்றனர் மற்றும் சிலர் திருமணம் என்பதை ஒரு நிகழ்வாகவும், வரவேற்பு என்று பெயரில் வேறொரு நிகழ்வாகவும் இரட்டை செலவு செய்கின்றனர்.

ஏன் இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்து திருமணத்தை நடத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு இப்படிப்பட்ட ஆடம்பரப் பிரியர்கள் முன்வைக்கின்ற கருத்து ஒன்றே ஒன்றுதான். வாழ்க்கையில் ஒரு முறை தான் திருமணம் செய்கின்றோம், அதை ஊர் அறிய, உலகறிய, நாடறிய நட்சத்திரங்கள் அறிய செய்வது தானே பொருத்தமானது என்று ஜம்பமடிக்கின்றனர்.

பார்ப்பனரை வைத்து திருமணம் நடத்துவது அல்லது அவர்களின் மந்திர உபதேசங்கள் அனைத்தும் போலியானது மற்றும் மணமக்களை இழிவு படுத்துவது என்று பேசிக்கொண்டே சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் நடத்தப்படுகின்ற திருமணங்கள் ஆகியவை இரண்டுமே இன்றையக் காலத்தில் எளிமை என்பதை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு பல லட்சங்களுக்கு நடத்தப்படுகின்றது.

எத்தனை பேர் திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பதைத் தாண்டி திருமணத்தில் போடும் சாப்பாடு எத்தனை ரூபாய்? ஒரு இலைக்கு எத்தனை ரூபாய்? என்று பேசுகின்ற அளவிற்கு தற்போது திருமணம் மிகப்பெரும் செலவுக் கணக்காக மாறி உள்ளது.

எங்கள் வீட்டு திருமணத்தில் போட்ட மதிய உணவு ஒரு இலை ரூபாய் 300 என்கிறார் ஒரு நண்பர். எங்கள் வீட்டில் போட்ட உணவு ஒரு இலைக்கு ரூபாய் 470 யார் மற்றொரு நண்பர். திருமணத்திற்கு வருபவர்கள் ஏதோ சோத்துக்கு செத்தவர்கள் போலவும், வகை வகையாக தின்று தீர்ப்பதற்காக இந்த திருமணங்களுக்கு செல்கின்றனர் என்பது போல இவர்களின் நடவடிக்கைகள் உள்ளது.

இவ்வாறு நடத்தப்படுகின்ற பல திருமணங்களில் பலவிதமான ரகங்கள் என்ற பெயரில் வைக்கப்படுமே அனைத்தும் தின்பதற்கு பதிலாக, பெருமை பீற்றுவதற்கு 27 வகை, 32 வகை என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் இவை பெரும்பாலும் சாப்பிடுவதை தவிர அப்படியே உணவுப் பண்டங்களை பாழடித்து குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறது. இதனை நாய்களும், பன்றிகளும், சில இடங்களில் மாடுகளும் தின்கின்ற நிலைமைக்குச் செல்கிறது.

வேறு சில வகையான திருமணங்களில் திருமணத்திற்கு தலைவர்களை வரவேற்பது, வரவழைப்பது என்பது சம்பிரதாய திருமண முறையைவிட பல மடங்கு செலவு கொண்டதாகவும் வழிநெடுக கட்டவுட், வரவேற்புத் தோரணங்கள், கட்சிகளைச் சார்ந்தவர் என்றால் அவருக்கு பிடித்தமான பல ரகங்களில் வைக்கப்படும் டிஜிட்டல்கள், கட்சிக் கொடிகள் என அதற்கே பல ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

“வீட்டை கட்டிப்பார்! திருமணம் செய்துப் பார்” என்ற பழமொழியை முன் வைக்கின்றனர் சிலர். வீடு கட்டுவதும், திருமணம் நடத்துவதும் மிகப் பெரிய செலவிற்குரிய செயல் என்பதையே இந்தப் பழமொழி நிரூபிக்கிறது.

படிக்க:

 தேசத்தின் சொத்துக்களை சூறையாடிய  அம்பானி வீட்டு திருமணத்தை பார்த்து ஆத்திரம் கொள்!  அவனது சொத்துக்களை பறிமுதல் செய்யும்  போராட்டத்தில் இறங்கு!

 சம்யுக்தா & ரிதன்யா பெற்றோர் முன் வைக்கும் தீர்வுகள்: கேடுகெட்ட சமூகத்தின்  பிரதிபலிப்பு!

தனது திருமணத்திற்காகவும், தனது அக்கா, தங்கை திருமணத்திற்காகவும், தனது மகள் திருமணத்திற்காகவும் கடன் பெறுகின்ற ஒருவர், வாழ்நாள் முழுவதும் அந்த கடனை கட்டுகின்ற அவலத்திற்கு தள்ளப்படுவதற்கு காரணம், திருமணம் என்ற நிகழ்வு மகிழ்ச்சிக்குரிய ஒரு நிகழ்வு என்பதைத் தாண்டி ஆடம்பர மோகத்தையும், பெருமையையும், வீண் ஜம்பத்தையும் ஊராருக்கு காட்டுவதற்காக பல லட்சங்களை செலவு செய்து விட்டு வாழ்நாள் முழுவதும் கடனைக் கட்டிக் கொண்டு வாழ வைக்கிறது.

ஒரு காலத்தில், ‘வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்’ என்றெல்லாம் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. இன்னமும் அதில் சட்டத்தில் இருக்கிறதோ? இல்லையோ என்ன எழவோ தெரியவில்லை. ஆனால் சம்பிரதாயத்தை முன்வைக்கின்ற பல திருமணங்களில் மாப்பிள்ளை ஜட்டியுடன் சென்றால் போதும் அவருக்கு கோட்டு சூட்டு அணிவிப்பது, சில இடங்களில் ஷெர்வானி அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது முதல் அவருக்கு தேவையான பண்ட பாத்திரங்கள், கட்டில், மெத்தை துவங்கி தற்போது அவருக்கு பிளாட் வாங்கி கொடுப்பது, நிலம் வாங்கி கொடுப்பது என்று திருமணத்தின் வடிவங்கள் பல மடங்கு செலவு கொண்டதாக மாறியுள்ளது.

இது தவிர வரதட்சணை என்ற பெயரில் தஙக நகை போடுவது, நிலம் வாங்கித் தருவது முதல் மாப்பிள்ளையின் வேலைக்கு ஏற்ப இருசக்கர வாகனங்களில் துவங்கி நான்கு சக்கர வாகனங்கள் வரை வாங்கிக் கொடுக்கின்ற சம்பவங்களும் உள்ளது.

நாட்டையே கொள்ளையடித்து வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கும் அம்பானி குடும்பத்தின் திருமணம் 2024 ஆம் ஆண்டு நடந்தபோது 5,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என்று நாம் படித்திருக்கின்றோம். பஞ்சாப் திருமணத்தில் கூட எட்டரை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறுகின்றனர். இவற்றையெல்லாம் பார்த்து அருவருப்படைவதைக் காட்டிலும், அதேபோல அதில் பத்தில் ஒரு பங்காவது நாம் செலவு செய்து நமது திருமணத்தை ஊரறிய, உலகறிய, நாடறிய, நட்சத்திரங்களறிய நடத்த வேண்டும் என்ற ஒரே மந்திரம் அனைவருக்கும் ஓதப்படுகிறது, இதனால் திருமணம் என்ற இயல்பான உறவு மிகப்பெரிய சுமையான நிகழ்வாக மாறியுள்ளது.

கூந்தல் உள்ளவன் கொண்டை போடுகிறான். உங்களுக்கு என்ன? என்று கேள்வி கேட்பதன் மூலம் தனது ஆடம்பர மோகத்தையும், மனைவி விரும்புகிறார் என்று அவர் மீது சாக்கு போடுவது; கணவன் நான் சொல்வதைக் கேட்பதில்லை என்று அவரை கட்டிக் கொடுப்பது; மகன் எங்களுக்கு கட்டுப்படவில்லை என்று ஏய்ப்பது; மகள் விருப்பப்படி திருமணம் செய்து வைக்கின்றோம் என்று சமாளிப்பது என்று பல ரகங்களில் இத்தகைய பதில்கள் நமக்கு கொடுக்கப்பட்டாலும் விளைவு திருமணம் என்பது ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

இத்தகைய நிகழ்வுகளுக்கு மாற்றாக எளிமையான முறையில் திருமணங்களை நடத்துகின்றோம் என்ற போர்வையில் லட்சக்கணக்கான ரூபாய் மண்டபங்களை பிடித்து செலவு செய்து அதை பல்லாயிரம் பேருக்கு விளம்பரப்படுத்துகின்ற வகையில் புதிய டைப்பில் திருமணம் செய்கின்றனர் சில முற்போக்கு விளம்பரப் பிரியர்கள். திருமணத்துக்கு கடைவீதி வசூல், பிரமுகர் வசூல் என அதிரடி காட்டி அனைவரையும் கவர்ந்து, ‘திடீர் புரட்சி’ நடத்துகின்றனர். அதற்கு முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுப்போக்கு என்று ஏதோ ஒரு தலைப்பை போட்டுக் கொள்கின்றனர்.

இவற்றையெல்லாம் திருமணம் என்று அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பெரும்பான்மை சமூகம் தள்ளப்பட்டுள்ளது என்பது மட்டுமின்றி திருமணம் என்ற ஒரு இன்பகரமான நிகழ்வு கடன் நெருக்கடி, ஆடம்பரச் செலவு போன்றவற்றின் மூலம் துன்பகரமான ஒரு செயலாக, நிகழ்வாக மாறியுள்ளது என்பதுதான் தற்போதைய நிலைமை.

  • தமிழ்ச்செல்வன்.

1 COMMENT

  1. திருமணம்: ஒரு நெருக்கடியாக மாற்றப்படும் அவலம் !

    புதிய ஜனநாயகம் தினசரி கட்டுரை:

    திருமணங்களில் பலவகை உண்டு. அவை பல லட்சம் கோடி வரை செலவு செய்து ஆடம்பர திருமணம் நடத்துகிறார்கள்

    திருமண நாள் ஒன்று வரவேற்பு நாள் ஒன்று, நீங்கள் கூறியது சரியே

    நான் ஒரு கார் டிரைவர் சமீபத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமண வீட்டிற்கு கார் ஓட்டுனராக சென்றேன் மணமகன் மணமகள் இருவரையும் பியூட்டி பார்லர் அழைத்துச் செல்வது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வது போன்ற வேலையை செய்தேன் திருமண வரவேற்பு (ரமடா பிளாசா ) நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பிரம்மாண்டமான அலங்கார நிகழ்ச்சிகள் செய்யப்பட்டிருந்தது உறவினர்கள் மணமகன் மணமகளுடைய வரவேற்பு நிகழ்ச்சி பார்ப்பதற்கு பிரம்மாண்டமான எல்இடி பெரிய திரை அமைக்கப்பட்டு இருந்தது மணமேடை மனம் மெய்சிலிர்க்கும் அளவிற்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தது உணவு வகைகள் (பஃவே சிஸ்டம்) பலவிதங்களில் வரிசை கட்டி வைத்திருந்தனர் பீங்கான் பிளேட் அடுக்கடுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தது ஒரு பக்கம் ஐஸ்கிரீம் வகைகள் ஒரு பக்கம் குளிர்பானங்கள் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் தங்கள் விருப்பம் போல் சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது வரவேற்பு நிகழ்ச்சி இரவு 11 .30 ஆகிவிட்டது மணமகன் தாயாரிடம் வரவேற்பு நிகழ்ச்சிக்கான செலவு எவ்வளவு என்று கேட்கிறேன் அவர் அரங்கிற்கு எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் உணவுக்கு ஒரு பிளேட்டுக்கு ரூபாய் 2500 300 பிளேட் ஆர்டர் கொடுத்தோம் 361 பிளேட் ஆனதாக கூறுகிறார்கள் என்று என்னிடம் கூறினார் நட்சத்திர ஹோட்டல் அலுவலகத்தில் மணமகனும் அவருடைய அப்பாவும் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
    நான் கார் ஓட்டும் பணியிலிருந்து விடுவிக்க மணகன் இடம் கோருகிறேன் அவரும் சரி என்கின்றார் உங்களுக்கான டிரைவர் பேட்டா எவ்வளவு என்று கேட்கிறார் நான் 12 மணி நேரம் ஆனது ரூபாய் 1400 என்று சொல்கிறேன் அதற்கு மணமகன் அதிர்ச்சி உடனே மணமகன் இந்த ஓட்டலில் வந்த உடனே உங்களை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் யோசித்து இருந்தோம் ஆனால் இந்த நிகழ்ச்சியில் நாங்கள் மறந்து விட்டோம் என்று என்னிடம் கூறுகிறார் மணமகன் அவருடைய அப்பா அம்மாவிடம் டிரைவருக்கு 1400 ஆகிவிட்டது என்று கூறுகிறார் அவர்களும் சரி என்கின்றார்கள்
    இதில் என்ன கேலி கூத்து என்றால்
    உன்னுடைய சுய கௌரவத்திற்காக லட்சங்களில் கொட்டி செலவு செய்து ஒரு பிளேட் உணவு 2500 ரூபாய்க்கு ஆர்டர் செய்து தன்னுடைய கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் மணமகன் தன்னுடைய நலனுக்காக கார் ஓட்டிய டிரைவருக்கு டேட்டா கொடுப்பதில் மனம் ஒப்புக் கொள்ளவில்லை அவர் மனம் கொதிக்கிறது
    நீங்கள் இந்த கட்டுரையை எழுதியவுடன் நான் அனுபவித்த இந்த துயரம் நினைவுக்கு வந்தது அந்த அடிப்படையில் பல வகையான திருமணங்கள் கடலுக்கு அடியில் நடக்கிறது வானத்திற்கு மேலே விமானத்தில் திருமணம் நடக்கிறது பாராசூட்டில் திருமணம் நடக்கிறது ஆகாயத்தில் விருந்து நடைபெறுகிறது இவை எல்லாமே சுய கௌரவத்திற்காக நடத்தப்படும் திருமணங்களாக இருக்கிறது ஆனால் கூலி வேலை செய்யும் வீட்டில் பத்து பாத்திரம் துலக்கும் வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதில் மனம் ஒப்புக் கொள்வதில்லை
    இதுபோல திருமணங்களால்தான் இந்த சமூகமே சீரழிந்து கொண்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் சாதாரண மக்களையும் தூண்டும் விதமாக இப்படிப்பட்ட ஆடம்பர திருமணங்கள் வகை செய்கிறது ஆகவே தங்களுடைய கட்டுரை என்பது மிகவும் அருமையான சிந்திக்க கூடிய ஒரு கட்டுரையாக இது அமைந்துள்ளது .

    கட்டுரையாசிரியர்
    தோழர்: தமிழ்ச்செல்வன்
    அவர்களுக்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here