ஜெய் பீம் VS அண்ணாத்த


சூப்பர் ஸ்டார்களின் காலம் மெல்ல முடிவுக்கு வருகிறது. இனி சூப்பர் ஸ்டார் என்கிற வழக்கு ஒழிந்துவிடும். மாறாக மக்கள் நாயகர்கள் தோன்றுவார்கள். கவனிக்கப்படுவார்கள்.

அசுரன், கர்ணன் போன்ற படங்களின் மூலம் தனுஷுக்கு கிடைத்தது வெற்றி. சார்பட்டா படம் மூலம் ஆர்யாவுக்கு கிடைத்தது வெற்றி. இப்படி மக்கள் நாயகர்கள், நடிகர்களால் அல்ல, இயக்குனர்களாலும் கதைகளாலும் உருவாக்கப்படுவார்கள்.

உலகெங்கும் நடைபெற்றுவரும் மாற்றம் இது. ஹாலிவுட் படங்களில் பெண்களும், கருப்பினத்தோரும் சூப்பர் ஹீரோக்களாக உருவாகி வருகிறார்கள்.

அடித்தட்டு மக்கள், தங்களை திருடர்களாக, பொறுக்கிகளாகக் காட்டும் சினிமாக்களுக்கு, இனியும் தங்கள் காசையழிக்கத் தயாராக இல்லை.

‘குப்பத்து பசங்க என்றாலே பொறுக்கிகள்!’ ஷங்கர் போன்றோர் உருவாக்கிய தப்பெண்ணங்களை, ரஞ்சித் அழித்தார். கபாலி என்றால் வில்லன் எனும், சமூகத்தின் மனப்பதிவை அவர் கலைத்தார்.

‘கபாலின்னா கையை கட்டிகிட்டு சொல்லுங்க எஜமான்னு நிக்குறவன்னு பார்த்தியா, கபாலிடா!’ என்கிற ஒற்றை வசனத்தில் நூற்றாண்டு தமிழ் சினிமா கட்டமைத்த சாதித் தீண்டாமை பிம்பத்தை உடைத்தெறிந்தார்.

என்னதான் ஷங்கர் சிஜே போன்ற நவீன அறிவியலை பயன்படுத்தினாலும், இந்துத்துவா கையளித்த வருணாசிரமக்குப்பையே அவர் மனமெங்கும் , படமெங்கும் நிரம்பிக்கிடந்தது.

நவீன மனிதர்கள் தம் மனதை திறந்து வைத்திருக்கிறார்கள். காட்சிகளில் மட்டுமில்லை. உள்ளடக்கத்திலும் அவர்கள் நவீனத்துவத்தைக் காண விரும்புகிறார்கள். நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான் என்கிற நீதியில், இத்தனை நாளும் கெட்டவர்களாக நாம்தான் இருந்தோம்! என்பதை பரந்துபட்ட சினிமா பார்வையாளர்கள் உணரத் தலைப்பட்டனர். ‘நல்லவர், கெட்டவர்’ என்பது மதம் உருவாக்கிய விழுமியமாக இருக்கக்கூடாது. அது மக்கள் உருவாக்கியதாக இருக்க வேண்டும் என்பதை இறுதியில்
அவர்கள் அறிந்தார்கள்.

அவர்கள் தங்கள் குப்பங்களிலிருந்து நாயகர்கள் உருவாக விழைகிறார்கள். அவர்களுக்கு மேலோர்சபையில் இடமில்லாமல் செய்தவர்களால், இணையவெளியில் அவ்வாறு செய்ய முடியவில்லை.

காலா, கபாலா ரஜினி, மீண்டும் பழைய நிலபிரபுத்துவ கதை சொல்லும் அண்ணாத்தே படத்துக்கு தாவியிருக்கிறார்.

சூர்யாவோ விளிம்புநிலை மனிதர்களின் கதையாடல்களில் கவனம் செலுத்தி ‘ஜெய் பீம்’ சொல்கிறார்.

விளைவு , தீபாவளிக்கு ரிலீசாகும் அண்ணாத்தே டீசருக்கு 7 மில்லியன் ஹிட்ஸ். அதற்குப் பின்னால் வந்த ஜெய் பீமோ 1 கோடி ஹிட்ஸை அள்ளியிருக்கிறது.

ஜெய் பீமில் பேசப்படும் வசனங்கள் வைரலாகி வருகிறது.

‘பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி அவங்களுக்கு நடந்த அநீதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’,

‘இந்த சாதில இருக்கவங்க திருட்டு கேஸில் கன்வெர்ட் ஆகுறது ரொம்ப சகஜம் சார்!’

‘திருடன் இல்லாத சாதி இருக்கா நட்ராஜ்! உங்க சாதி என் சாதின்னு எல்லா சாதிலும் பெரிய பெரிய திருடன் இருக்காங்க’

இவை அன்றாடம் ஒடுக்கப்பட்ட மக்களிடையே சமூகநீதி அரசியல் செய்யும் மனித உரிமைப் போராளிகள் பேசுகிற வசனம்தான். ஆனால் திரையைத் தொட இவ்வளவு நாட்களாகியிருக்கின்றன.

ஜெய் பீம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றுப் பெருமிதம். மகாராஷ்ட்டிராவில் மிகப்பெரும் பலம் கொண்டிரு பேஷ்வா படை, ஆதிக்கசாதிகளின் நலம் பேணுவது. விளிம்பு நிலையினரான மகர்களை ஒடுக்குவது.

மகர்கள் தேசபக்தி என்கிற பெயரில் பேஷ்வாக்களோடு நிற்கவில்லை. தங்கள்மீது சாதி இழிவைத் திணித்த பேஷ்வாக்களை எதிர்க்க, கிழக்கிந்தியப் படையோடு இணைந்து வீரம் செறிந்த யுத்தத்தை நிகழ்த்தினார்கள்.

பேஷ்வா படையில் 25,000 படை வீரர்கள். கிழக்கிந்தியப் படையிலோ ஐந்தாயிரம் அளவில்தான். பீமா-கோரேகான் கிராமத்தில் நடந்த யுத்தத்தில் மகர்கள் , பேஷ்வாக்களின் செறுக்கை அடக்கினார்கள்.

யுத்தம் முடிந்து பீமா நதி வழியாக திரும்பும்போது அவர்கள் ‘ஜெய் பீம்!’
என முழக்கமிட்டார்கள்.

இந்திய புராணத்தில் ஒரு நதி ஓடியது. அது சரஸ்வதி நதி. அதில் தலித்துகள் தலைமூழ்கினால் தீட்டு என்றார்கள். வெகு மக்கள் ஞாபகங்களில் ஒரு நதி ஓடுகிறது. அது பீமா நதி. ஆதிக்கசாதிகளின் அகங்காரங்களை நொறுக்கி வெற்றிக் களிப்பில் மகர்கள் நீராடிய நதி!

அதனால்தான் இந்திய வரலாற்றில் ஜெய் பீம் ஒரு மந்திரச் சொல்லாகியது.

சூர்யாவுக்கு விளிம்பு நிலைத் தமிழரிடம் அக்கறை இருக்கிறது. நீட்டுக்கு எதிராக, புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் இதை வெளிப்படுத்துகின்றன. அவரது ‘அகரம்’ முயற்சி மரியாதைக்குரியது!

இனி, மதம், நிலவுடமை, தனியார்மயம் போன்றவை உருவாக்கிய நீதியைப் பேசாமல், மக்கள் நீதியை முன்னெடுக்கிற படங்களே வெல்லும். இதைத்தான் ஜெய் பீம் , அண்ணாத்தேயை முந்தியிருப்பது காட்டுகிறது.

திரைத்துரை நண்பர்களே!
இனி புதிய கதைகளை அடித்தட்டு மக்களிடமிருந்து உருவாக்குங்கள். பெண்களிடம், திருநங்கைகளிடம், திருடர்களிடம், எய்ட்ஸ் நோயாளிகளிடம், மீனவக் குப்பங்களிடம், தலித்துகள் வாழும் புறஞ்சேரிகளிடம், பழங்குடிகளிடம், மலைவாழ் மக்களிடம், சிறுபான்மை முஸ்லீம்களிடம் கேட்கப்படாத புதிய கதைகள் உள்ளன.

அவர்கள் கதவை நீங்கள் தட்டக்கூடத் தேவையில்லை. அவை திறந்தே கிடக்கின்றன!

  • கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here