மெரிக்காவில் வரிசையாக வங்கிகள் திவால் என கடந்த மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் செய்திகள் வரத்துவங்கின. அமெரிக்காவின் ஃபெடரல் டெபாசிட் மற்றும் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் (FDIC) தணிக்கையின் படி 2012 முதல் 563 அமெரிக்க வங்கிகள் தோல்வியடைந்துள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 4 வங்கிகளும், ஸ்ஈடனில் ஒரு வங்கியும் திவாலாகியுள்ளதன் மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  அமெரிக்காவில் இரண்டாவது மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ள பெரிய வங்கிகளான சிலிக்கான் வேலி  வங்கி, சிக்னேச்சர் வங்கி, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி, உலகின் மிகப்பெரிய வங்கிகளுள் ஒன்றான ஸ்வீடனின் கிரெடிட் சூயிஸ் குரூப், என பட்டியல் நீண்டது.  இதில் சிலிக்கான் வேலி வங்கி தரவரிசையில் 16வது இடத்தில் இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. அடுத்தடுத்து வங்கிகள் திவால் வரிசையில் காத்திருக்கின்றன..

அமெரிக்காவில் அதிகரிக்கும் பணவீக்கம்

அமெரிக்காவில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்குள் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.  கோவிட் தாக்கத்தின் போது சரியாக கையாலாத அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கிரிமினல் குற்றத்தினால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின., தொடர்ந்து நடக்கும் ரஷ்யா – உக்ரைன் போரால் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. அதே போல அடிப்படையான உணவுப் பொருள்களின் விநியோகத்திலும் தடைகள் உருவாகி, அதனால் விலைவாசியும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் இணைந்து அமெரிக்காவை கடுமையாக பாதித்துள்ளது.. இவற்றுக்கு உலக மேலாதிக்க வெறி கொண்ட அமெரிக்க பொருளாதாரக் கொள்கையே முக்கியமான காரணமாகும்.

திவாலாகும் அமெரிக்க-ஸ்வீடன் வங்கிகள் நிதி மூலதனத்தின் தோல்வி!
silicon valley bank

பணவீக்கம் 2020 மே மாதத்தில் 0.1%மும், 2022 சனவரியில் 7.5%, அதுவே 2022 ஜூனில் 9.1% என அதிகரித்துக் கொண்டே போகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருந்தது.  இதனால், சிலிக்கான் வேலி வங்கி அமெரிக்காவின் கடன் பத்திரங்களில் கணிசமாக முதலீடு செய்திருந்தது.  வட்டி விகிதத்தை உயர்த்த துவங்க, சிக்கல் துவங்கியது.

சிலிக்கான் வேலி வங்கிக்கு என்ன நடந்தது?

சிலிக்கான் வேலி வங்கி என்பது அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்த சான் பிரான்சிஸ்கோ நகரத்தை தலைமையிடமாக கொண்ட முன்னணி வங்கி.  சென்ற ஆண்டு நிலவரப்படி 209 பில்லியன் டாலர் அளவிற்கு சொத்துக்களை நிர்வகிக்கும் அமெரிக்காவின் 16 வது பெரிய வங்கியாக  இருந்தது.

இந்த வங்கி அதிகமான புதிய தொழில் முயற்சிகளுக்கு (Start up) முதலீடு வழங்கும்  நிறுவனங்களின் சொத்துக்களை நிர்வாகித்து வந்தது.  நிறுவனங்களின் வைப்பு தொகைகளை நிர்வகிப்பது, கடன் வழங்குவது மற்றும் கருவூல மேலாண்மை சேவைகளை (Treasury Management Services) அளிப்பது என மூன்று முக்கிய சேவைகளை அளித்து வந்தது.

அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிகையாக இதுவரை ஆறு தவணைகளில் கொஞ்சம் கொஞ்சமாக வட்டி விகிதத்தை ஃபெடரல் வங்கி ஏற்றியுள்ளது.  இவ்வளவு ஏற்றியும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தனிக்கதை.  இதன் காரணமாக வங்கியில் வைப்பு தொகையாக வைத்திருப்பதை காட்டிலும், கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆர்வம் காட்டத்துவங்கின.   இதன் காரணமாக தமது வைப்புத் தொகைகளை வங்கியில் இருந்து திரும்பபெறத் துவங்கினர்.

ஸ்டார்ட் அப் மற்றும் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களிடமிருந்து வைப்புத்தொகையை பெற்ற இந்த வங்கியானது இதனை கருவூல மேலாண்மை சேவை மூலம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தது.  இது போன்ற நடைமுறையை அமெரிக்காவில் பல வங்கிகளும் மேற்கொண்டுள்ளனர்.  பொதுவாக கடன் பத்திரங்கள் அதிக முதலீட்டு காலத்தை கொண்டதாக இருக்கும்.  இதன் காரணமாக இந்த வங்கி வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவதற்கு முன்பு முதலீடு செய்திருந்த பத்திரங்களின் வருமானம் குறைவாகவே இருந்தது.

அமெரிக்காவில் ஒரு வங்கி நிதி நெருக்கடி காரணமாக திவாலாகும் பட்சத்தில் அதில் செய்யப்பட்டிருக்கும் வைப்புத்தொகைகளுக்கு காப்பீடு மூலம் ஒவ்வொருவரும் இரண்டரை லட்சம் டாலரை மட்டுமே திரும்ப பெற முடியும்.  நம்மூரில் ஐந்து லட்சம் என்கிறார்கள்.  ஆனால் இந்த வங்கி நிர்வகிக்கும் 29 பில்லியன் டாலர் சொத்துக்களில் 89% வைப்புத்தொகைகள் இரண்டரை லட்சம் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்திருந்தனர்.

இதன் காரணமாக இந்த வங்கி திவால் ஆகும் பட்சத்தில் வைப்புத்தொகை செய்யப்பட்டிருக்கும் பணம் திரும்ப கிடைக்காத சூழ்நிலை ஏற்படும்.  ஆகையால் நிலைமையை சமாளிக்க தமது கடன் பத்திரங்களில் 1.75 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்யயிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.  இதனால் அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பெரும்பாலோர் தாம் முதலீடு செய்திருந்த வைப்புத்தொகைகளை திரும்ப எடுக்க முயற்சித்ததால், வங்கி கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

இப்பொழுதுள்ள வங்கி நடைமுறையில் ஒரே நேரத்தில் அதில் வைப்புத்தொகை வைத்திருந்தவர்கள் பெரும்பாலோர் திரும்ப கேட்டால், எந்த வங்கியும் திவாலாகும் என்பதும் தான் எதார்த்தநிலை. விளைவு இந்த வங்கியின் பங்குகள் பங்குச்சந்தையில் 60%க்கும் மேல் சரிந்து சூழ்நிலை இன்னும் சிக்கலானது.  பிறகு காப்பாற்ற முடியாமல் திவால் நிலைக்கு போய்விட்டது.

சில்வர்கேட் கேபிடல் கார்ப்பரேசன்

இந்த வங்கி தான் முதலில் திவாலான வங்கி.  அவர்களுக்கு கிரிப்டோ கரன்சியில் இருந்த முதலீடுகள் காரணமாகவே பிரச்சனையில் சிக்கியது.  வங்கி திவாலாவதை தடுக்க அமெரிக்க பெடரல் வங்கி  முயன்றது.  இருப்பினும் கட்டுப்பாட்டாளர்கள் ஆய்வு, நீதித்துறையின் குற்றவியல் விசாரணை ஆகியவற்றுக்கு மத்தியில் நிறுவனத்தால் சமாளிக்க முடியவில்லை.  அதன் வாடிக்கையாளர்கள் உடனடியாக நிதியை கேட்க, வங்கி நஷ்டத்தில் பங்குகளை விற்க வேண்டியிருந்தது.   ஒரு கட்டத்தில் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் போகவே மார்ச் 8ம் தேதி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது.

சிக்னேச்சர் வங்கி

மூன்றாவது பெரிய வங்கி திவலாக இந்த வங்கி மாறியது. திடீரென வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் பணத்தை எடுப்பது 20% வரை அதிகரித்ததே பிரச்சனைக்கு காரணமாக இருந்தது.  கிரிப்டோவில் இவர்களின் முதலீடு மிக குறைவாகவே இருந்தாலும், வங்கி கட்டுப்பாட்டாளர்கள் வங்கியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. மக்கள் உடனடியாக தங்கள் வைப்புத்தொகையை எடுக்க முயல், வங்கி திவாலாகும் சூழலுக்குத் தள்ளப்பட்டது.

கிரெடிட் சூயிஸ் குரூப்

இந்த வங்கியும் சிக்கலுக்குள்ளானது.  166 ஆண்டு பழமையான வங்கி இது. இருப்பினும் வங்கி பல முறைகேடுகளில் சிக்கியது. ஆகையால், வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படுவதை தடுக்க முடியவில்லை.

இந்தியாவில் என்ன பாதிப்புகளை உருவாக்கும்?

இப்பொழுது அமெரிக்க வங்கி, இந்திய வங்கி என்பது எல்லாமே உலக சங்கிலியில் ஒன்றிணைத்து தான் கட்டப்பட்டுள்ளது.  அங்கு வங்கிகள் திவாலானதும் இந்திய பங்குச்சந்தையிலும் சரிவுகள் இருந்தன என்பதில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முடியும். சிலிக்கான் வேலி வங்கி பல புதிய (Start up) தொழில் முயற்சி செய்யும் நிறுவனங்களுக்கு நிதி அளித்துள்ள வங்கி என்பதை ஏற்கனவேப் பார்த்தோம்.  அமெரிக்காவில் மட்டுமல்ல! இந்தியாவில் உள்ள பல புதிய நிறுவனங்களுக்கும் அமெரிக்காவில் இருந்து தான் நிதி வந்துகொண்டிருக்கின்றன.  இப்பொழுது சிலிக்கான் வேலி வங்கி திவாலானதால்,  இந்தியாவிலும் அதன் பாதிப்பு கடுமையாக எதிரொலிக்கும். பல நிறுவனங்களின் இயக்கம் படுத்துக்கொள்ளும்.  அதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.

இந்திய வங்கிகளின் நிலை

அமெரிக்காவைப் போலவே இந்தியாவிலும் எரிபொருள்களின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது.  அத்தியாவசிய உணவுப்பொருட்களின்  விலையும் ஏறிக்கொண்டே செல்கிறது. பணவீக்கமும் கவலைக்குள்ளாகும் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக,  சமீபத்தில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் வட்டியான ரெப்போ வட்டியை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சில தனியார் வங்கிகளை  தவிர அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கித்தான் கட்டுப்படுத்துகிறது. ஆகையால்,  வங்கிகள் கடுமையான கண்காணிப்புகளுக்குள் தான் இருக்கின்றன. அமெரிக்காவை போல குறிப்பிட்ட துறைகளை மட்டுமே வங்கிகள் கையாள்வதில்லை. பல துறை சார்ந்து கையாள்கின்றன. ஆகையால்  வங்கிகள் திவாலாகிவிடும் என பயப்படத்தேவையில்லை என்பதை சில முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களும், இந்திய ஆட்சியாளர்களும் கிளிப்பிள்ளைப் போல திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.    ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொதுத்துறை வங்கிகளில் இரண்டில் அரசின் பங்குகளை விலக்கிக்கொண்டு, தனியார்மயமாக்கப்போகிறோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கடுமையாக எதிர்த்து போராடின. ஆகையால், மேற்கொண்டு காய்களை நகர்த்தாமல் அமைதி காக்கிறார்கள்.

இதே வேளையில் தான் வங்கிகளின் வராக்கடன் கடுமையாக அதிகரித்துள்ளது. வங்கிகளின் நிலை குறித்து இந்திய வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் கவலையுடன் தெரிவித்துள்ளது

மோடி ஆட்சிக்கு வந்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் வங்கிகளில் இத்தனை கோளாறுகள் நடந்த பிறகும்  இன்னும் பொதுத்துறை வங்கிகள் தாக்குப்பிடித்து நிற்பதற்கு காரணம் நாட்டின் பொதுமக்கள் வங்கிகளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே ஆகும்.  இந்த அபாய நிலையில், வங்கிகள் தனியார் வசமாக்கப்பட்டால் வங்கிகளின் மீதான அரசின் கட்டுப்பாடு விலகும்.  இதனால் வங்கிகளின் மீதான மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்துபோகும்.  வங்கிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகும்.   ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் எரிமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டிருக்கும் வங்கிகள் நொறுங்கிவிழும்.  வங்கிகள் வீழும் பொழுது. பணப் பதுக்கல்கள் அதிகமாகும். பொருளாதாரத்திலும் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்கிறார் பேராசிரியர் பிரபாத் பட்நாயக்.

அமெரிக்கா நிலைமையைப் போலவே இந்திய நிலைமைகளும் ஒத்துப்போவதை பார்க்கலாம்.  ஆனால் ஆளும் மோடி கார்ப்பரேட் கும்பல் வங்கிகளை கவனமாக கையாளாமல், சூறையாடுவதில் மிகவும் கவனமாயிருக்கிறார்கள்.  அமெரிக்காவைப் போல இந்தியாவிலும் வருங்காலத்தில் ஒரு வங்கி திவாலானால் கூட மக்கள் பயந்து போய் தங்கள் வைப்புத்தொகைகளை எடுக்க துவங்கினால், மளமளவென ஆரோக்கியமாய் இயங்கிவரும் வங்கிகள் கூட மிகவும் சிக்கலாகிவிடும். மீள முடியாத அளவிற்கு நிலைமை கைமீறிப் போய்விடும்.

மக்கள் நலனை மையமாக கொண்ட பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி மீது அக்கறை இல்லாத, வெறுப்பு அரசியலையும், பொதுச் சொத்தை சூறையாடுவதிலேயே கவனமாக இருக்கும் கார்ப்பரேட் – காவி கும்பலை ஆட்சியில் இருந்து வீழ்த்தாமல், மக்கள் சொத்துக்கள் எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது.

நிதி மூலதன வேட்டைக்கு
பலியாகும் வங்கிகள்!

பொதுவாக வங்கிகளில் சேமிக்கப்படும் தொகை முழுமையாக முதலீடு செய்பவர்களுக்கு திரும்ப கொடுக்கப்படுவதில்லை. வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தொகை என்று ஒரு தொகையை கையில் வைத்துக் கொள்கிறது. இந்தத் தொகையையும்,  சேமிப்பு தொகையையும் சேர்த்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடனாக அள்ளிக் கொடுக்கின்றன. மற்றொருபுறம் பங்கு சந்தையில் பங்குகளை விற்பது மற்றும் வாங்குவது என்ற ஊக பேர சூதாட்டத்தில் முதலீடு செய்கிறார்கள்.

இதைப் பற்றி எல்லாம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பதில்லை.  வங்கிகள் லாபத்தில் இயங்குகின்றன என்பதற்கு காரணம் என்னவென்றால் இந்த வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கின்ற தொகையை வைத்துக் கொண்டு அவர்கள் கனிம வளங்களை கொள்ளையடிப்பது, லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை வாங்குவது, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதில் வரும் இலாபத்தை வங்கிகளுக்கு தருவதுதான். இந்த கார்ப்பரேட்டுகள் முறையாக திருப்பி செலுத்தினால் தான் வங்கிகள் லாபத்தில் இயங்கும். இதுவே உலகம் முழுவதும் உள்ள நிலைமை.

ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்தபட்ச வங்கி கடனை கூட நேர்மையாக திருப்பி செலுத்துவதில்லை. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் வங்கிகள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கொடுக்கும் தொகையைப் பற்றி திருப்பி செலுத்த வேண்டும் நெருக்கடி கொடுக்கக் கூடாது என்பதை கொள்கை முடிவாகவே அறிவித்தார்.

இந்த வங்கிகளில் வாங்கிய பணத்தை திருப்பித் தராத கார்ப்பரேட் முதலாளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை அவர்களிடம் பணத்தைக் கேட்பதற்கு கூட தயாராக இல்லாத கார்ப்பரேட் கைக்கூலியான மோடி அரசு விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் கடன் கட்டாத போது கழுத்தை நெரிக்கின்றனர்..

வங்கி மூலதனமும் தொழில் மூலதனமும் இணைந்து தான் நிதி மூலதனமாக உருவெடுக்கிறது. இந்த நிதி மூலதனத்தை வைத்துக்கொண்டு உலகை சூறையாடுகின்ற கார்ப்பரேட்டுகள் மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்களோ, மக்களின் சேமிப்பு தொகை பற்றி நேர்மையாக பரிசீலிப்பவர்களோ அல்ல. லாபவெறி கொண்ட இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் தான் வங்கிகளின் தலைவிதி உள்ளது.

வங்கிகள் திவாலான பிறகு தான் நமக்கு செய்திகள் வெளியாகிறது ஆனால் வங்கிகளில் நடக்கின்ற மோசடிகள், அவர்களின் முதலீட்டுத் தொகை எங்கே கடத்தப்படுகிறது, அதில் லாப உத்தரவாதம் உள்ளதா இல்லையா போன்ற அனைத்து விவரங்களும் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு தெளிவாக தெரியும்.

நேர்மையான சில வங்கித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த சதி தேவை அம்பலப்படுத்துவதன் காரணமாகவே வங்கியில் திவால் நிலைமை வெளிவருகிறது. எனவே வங்கிகளை கையாள்வது பற்றிய ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை அடியோடு ஒழிக்காத வரை வங்கிகளின் சேமிப்புகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை..

  • தமிழ்ச்செல்வன்

புதிய ஜனநாயகம் (ஏப்ரல் 2023)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here