தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வடிவமைத்த மறு பயன்பாட்டுக்கான ரூமி -1 எனும் ராக்கெட் மூன்று சிறியரக செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிறுத்திவிட்டு 9.8 நிமிடங்களில் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது என்ற செய்தி விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராக்கெட் ஏவுவதில் தனியார் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. இந்த ’சாதனையை’ ஸ்பேஸ்ஸோன் இந்தியா நிறுவனம் மற்றும் லாக் ஷீட் மார்ட்டின் என்ற அமெரிக்காவின் இராணுவ தளவாட உற்பத்தி கார்ப்பரேட் இரண்டும் இணைந்து நிகழ்த்தியுள்ளது.
இதனால் முதன்முறையாக ராக்கெட் ஒன்றை விண்ணில் ஏவி அவ்வாறு ஏவிய ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்புவது விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவுகிறது என்று இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி வந்துள்ளது. அதாவது இறங்கியுள்ளது என்ற செய்தி பெருமைபடத்தக்க ஒன்றா என்றால், விண்வெளி ஆராய்ச்சி மூலம் பல்லாயிரம் கோடி நிதிமூலதனத்தை சுருட்டி கொள்ளையடிக்க காத்திருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு இது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாகும். ஆனால் இறங்கிய ராக்கெட்டை போல் இல்லாமல் தொடர்ந்து ஏறிக்கொண்டே போகின்ற விலைவாசி உயர்வு என்பது தான் இந்தியாவின் பிரதானமான பிரச்சனையாக மாறி உள்ளது.
பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பத்தாண்டு காலத்தில் 2014 முதல் 2022 வரை 8 ஆண்டுகளில் அனைத்து உணவு பொருட்களின் விலை 70% வரை உயர்ந்துள்ளதாக விலைவாசி குறியீட்டை பற்றி ஆய்வு செய்கின்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதற்குப் பிறகான இரண்டு ஆண்டுகளில் மேலும் விலைவாசி உயர்ந்து கொண்டுள்ளது. அதாவது குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது என்பதை அரசாங்கத்தின் தரவுகளே நிரூபிக்கின்றன.
குறிப்பாக உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், தற்போது அது கடந்த 6 மாதங்களில் இல்லாத உயர்வைத் தொட்டுள்ளது. 8.7 சதவிகிதமாக இருந்த உணவுப் பொருள் பணவீக்க விகிதம், இப்போது 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இது கடந்த ஆறு மாதங்களில் மிக அதிகம் என்றும் செய்திகள் கூறுகின்றன. காய்கறிகளின் விலைகள் 29.3 சதவிகிதமும், பயறு வகைகளின் விலைகள் 16.1 சதவிகிதமும், உணவு தானியங்களின் விலைகள் 8.8 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக துவரம் பருப்பு 24 சதவிகிதம், உருளைக் கிழங்கு 56 சதவிகிதம், வெங்காயம் 67 சதவிகிதம் என விலை உயர்ந்துள்ளன.
படிக்க:
♦ ரசத்துக்கே நாதியற்றவர்களாக்கும் விலைவாசி உயர்வு!
♦ இந்தியப் பொருளாதாரம்: விலைவாசி உயர்வு / பணவீக்கம்:
பாசிச மோடி ஆட்சிக்கு வந்த அடுத்த மாதத்திலேயே காய்கறிகளின் விலைகள் 1.3 சதவிகிதம் குறைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான கணக்கீட்டில் தக்காளியின் விலை குறைவாக எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக ‘மிண்ட்’ இதழ் அப்போதே சுட்டிக்காட்டி, உண்மையில் காய்கறிகளின் விலைகள் 16.88 சதவிகிதம் உயரத்தான் செய்துள்ளது என்று அம்பலப்படுத்தியது. ஆனாலும், விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருப்பதாகக் காட்டிக்கொள்கிற வேலையையே இப்போது வரை மோடி அரசு செய்து வருகிறது. பணவீக்கத்தை 4-இல் லிருந்து 6 சதவிகிதத்திற்குள் இருக்குமாறு நிதிக் கொள்கைகளைப் பராமரிப்பது ரிசர்வ் வங்கியின் வேலை என்று 2016 மார்ச்சில் சட்டத் திருத்தமே கொண்டு வந்து, அதனை ரிசர்வ் வங்கியின் பணியாக்கியது.
உலக வங்கியின் தரவுகளின்படி இந்திய மக்களில் 60 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு ரூ. 250-க்குள்ளும், 21 சதவிகிதம் பேர் ரூ. 166-க்குள்ளும் வாழ்க்கை நடத்துகின்றனர் எனும் போது, இந்த விலைவாசி உயர்வு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அச்சத்துக்குரியதாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 200-க்கு வாங்கிய அதே பொருட்களை இன்று வாங்குவதற்கு ரூ. 500 செலவாகிறது, ஆனால், கூலி மட்டும் உயரவில்லை என்று ஒரு நிலமற்ற விவசாயி சொன்னதை ஆர்ட்டிக்கிள்-14 தளம் சுட்டிக்காட்டுகிறது. மோடி ஆட்சியின் இந்த 10 ஆண்டுகளில், விவசாயத் தொழிலாளர்களின் பணவீக்கத்துக்குப் பிந்தைய உண்மையான கூலி ஆண்டுக்கு 1.3 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் உட்பட 5 முக்கிய அமைப்புகள் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை, இந்திய மக்களில் 74.1 சதவிகிதம் பேர் சத்துள்ள உணவுப் பொருட்களை வாங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுகிறது. இது உலகச் சராசரியான 42.1 சதவிகிதத்தை விட மிக அதிகமாகும்.
தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்லும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பாசிச மோடி அரசாங்கம், உலகம் முழுவதும் உள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்கள், முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் முன்வைப்பதை போல விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது என்றே துணிச்சலாக கூறுகின்றனர். இதற்கு பருவ நிலை மாற்றங்கள் காரணமாக உருவாகும் அதிக வெப்பம் மற்றும் அதிக மழை, அதிக குளிர் போன்றவை தான் விவசாய உற்பத்தி பொருட்களை நாசமாக்குவதாக சரடு திரிக்கின்றனர்.
அதேபோல சந்தையின் தேவைக்கு அதிகமாக விவசாய விளை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் விலை வீழ்ச்சியடைவதாகவும், அதற்கு நேர்மாறாக விவசாய விளைபொருள்கள் குறைவான அளவிற்கு உற்பத்தி செய்யப்படுவதால் விலையேற்றம் அடைவதாக கூறிக் கொள்கின்றனர்
இதற்கு அடிப்படையான காரணம் என்ன? நாடு முழுவதும் மொத்த உணவுப் பொருட்களின் தேவை என்ன? அது எந்தெந்த மாநிலங்களில் அல்லது எந்தெந்த மண்டலங்களில் பயிராகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் விலை கட்டுக்குள் வைக்கப்படுகிறதா அல்லது அதிகரித்துக் கொண்டே செல்கிறதா என்பதை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் இந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. அந்த வேலையை சந்தையின் தேவைக்கேற்ப லாபத்தை ஈட்டுவதற்கு தயாராக உள்ள வேளாண் கார்ப்பரேட் நிறுவனங்களை இந்திய விவசாயத்தில் இறங்கியுள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு, புளி, மிளகாய் முதல் காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், அதன் விளைச்சலையும், விற்பனையையும் கட்டுப்படுத்துகின்ற நிறுவனங்களாக வேளாண் கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
விவசாயிகளை விவசாயத்தில் இருந்து படிப்படியாக விரட்டியடித்துவிட்டு கார்ப்பரேட்டுகளின் கையில் விவசாயத்தை ஒப்படைத்துவிட்டதன் எதிர்விளைவுதான் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் ஏறிக் கொண்டே செல்கிறது என்ற உண்மையை மறைத்து பருவநிலை மற்றும் உற்பத்தி குறைவு போன்ற இரண்டாம் பட்ச, மூன்றாம் பட்ச காரணங்களை முன்வைத்து மக்களை ஏய்த்து வருகிறது கார்ப்பரேட் காவி கைக்கூலியான பாசிச பாஜக அரசாங்கம்..
விண்வெளியில் ராக்கெட்டை ஏவி இறங்கியதன் மூலம் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தி விட்டதாக இந்திய நிறுவனங்கள் மற்றும் இராணுவ கார்ப்பரேட்டுகள் பெருமையடித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு நேர் மாறாக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தனது அன்றாட உணவுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதில் விலைவாசி உயர்வு ராக்கெட்டுக்கு இணையாக ஏறிக்கொண்டே செல்வதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பதும், இந்த பாதிப்புகளை சுமந்து கொண்டு ஏன் இந்த கார்ப்பரேட் காவி பாசிச அரசு கட்டமைப்பை தூக்கி சுமக்க வேண்டும் என்பதுதான் நாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கேள்வியாகும்.
- இளங்கோ