டந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாசிச பாஜக அரசை விமர்சனம் செய்யும் அறிவுஜீவிகள் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது சிறைக் கொட்டடியில் கொடுமையை அனுபவிக்கிறார்கள். கவிஞர் வரவரராவை சிறையிலேயே கொல்ல முயற்சி செய்தார்கள். கடைசி நிமிடங்களில் அவர் காப்பாற்றப்பட்டார். ஸ்டேன்ஸ் சாமி அவர்களை அடிப்படை வசதி கூட செய்து தராமல் சிறையிலேயே கொன்றார்கள். அந்த வரிசையில் இப்போது 90% செயல் இழந்து போயிருக்கும் பேராசிரியர் சாய்பாபா அவர்களையும் சிறையிலேயே கொல்லப் பார்க்கிறார்கள். நீதிமன்றங்கள் ஆட்சியாளர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்கின்றன. அதன் மூலம் கவர்னர் பதவிகளுக்கு காய் நகர்த்துவதும் பச்சையாகத் தெரிகிறது. நீதிமன்றங்களின் அநீதியை, அராஜகத்தை ஜனநாயக சக்திகள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தொடர்ச்சியாக எழும் போராட்டங்கள்தான் பேராசிரியர் சாய்பாபா போன்ற சமூக செயற்பாட்டாளர்களை விடுவிக்கும்!

 ***

மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் “உரிய முன் அனுமதியின்றி வழக்கு தொடர்ந்து பேராசிரியர் சாய்பாபாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட முழு நடவடிக்கைகளும் செல்லாது” எனக் கூறி அவரை சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவு வழங்கியது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அவசர கதியில் ரத்து செய்துள்ளது. இதற்கு எந்த முன்மாதிரியும் இதற்கு முன் இருந்ததில்லை. உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது சட்டவிரோதமாம். ஆனால் மாற்றுத்திறனாளியான ஒரு பேராசிரியரை எட்டு ஆண்டு காலம் பிணை கூட வழங்காமல் சிறையில் அடைத்து சித்திரவதை அனுபவிக்க வைத்தது சட்டவிரோதம் இல்லையாம்! நாட்டில் ஒரு புதிய அசாதாரண நிலை உருவாகி உள்ளதோ என நமக்கு அச்சம் எழுகிறது.

சாய்பாபா மீதான வழக்கின் பின்னணி.

பயங்கரவாத குற்றச்செயல்களில் ஈடுபட்டார் எனக்கூறி நவம்பர் 2013 – ல் அவரது வீடு சோதனையிடப் பட்டது. அந்த தேடுதல் வேட்டையில் சிடி, டிவிடி, பென்டிரைவ் மற்றும் சில காகிதங்களை போலீசு எடுத்துச் சென்றது.

அதன் பிறகு சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு திடீரென மே 2014 இல் அவர் கைது செய்யப்பட்டார். இடையில் அரசு தரப்பின் குற்றவியல் இயக்குனர், சாய்பாபா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு தொடர பரிந்துரைக்கிறார். சாய்பாபாவுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்பதால், அவரைத் தவிர்த்து மற்ற ஐந்து பேருக்குதான் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனாலும் அடுத்த நாள் சாய்பாபாவையும் சேர்த்து அனைவருக்கும் எதிராக குற்ற அறிக்கையை மாஜிஸ்திரேட் முன் காவல்துறை வைத்தது. இவர்கள் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி சட்டவிரோத தடுப்பு சட்டமான ஊபாவின் (UAPA) கீழ் குற்றம் சாட்டப்பட்டனர். ஏப்ரல் 6 2015 அன்று தான் சாய்பாபா மீது வழக்கு தொடர தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியே கிடைக்கிறது. ஆனால் இதற்கு ஒரு ஆண்டு முன்பாகவே நீதிபதி விசாரணையை மேற்கொண்டது எப்படி? 2014ல் தனக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி இல்லாமலேயே, தான் சிறைப்படுத்தப்பட்டதாக சாய்பாபா ஜாமீன் கோருகிறார். ஆனாலும் காவலர்கள் வழங்கிய குற்ற அறிக்கையின் அடிப்படையில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறார் நீதிபதி. காவலர்கள் தயாரித்த அறிக்கை எப்படி அவர் விஷயத்தில் பொருந்தும்? ஒரு செசன்ஸ் நீதிபதி ஒரு குற்றத்தை உணர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாட்சிகளை விசாரிக்க முடியுமா, அதன் அடிப்படையில் தண்டனை வழங்க முடியுமா என அடுக்கடுக்காக கேள்விகள் எழுகின்றன.

சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்றம்.

தடா (TADA) சட்டப்பிரிவு 20 – A (2), பொடா (POTA) சட்டப் பிரிவு 50 மற்றும் ஊபா (UAPA) பிரிவு 45 ஆகியவை கூறுவது என்னவெனில், உரிய காவல்துறை அதிகாரியின் அனுமதி இன்றி, எந்த குற்ற வழக்கையும் எந்த நீதிமன்றமும் எடுத்துக்கொள்ள கூடாது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையிலும், விசாரணைக்கு உரிய அதிகாரியின் முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும் என உச்ச நீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தி உள்ளதின் அடிப்படையிலும்தான் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள், “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டத்தால் வழங்கப்பட்ட ஒவ்வொரு பாதுகாப்பும் – அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் – ஆர்வத்துடன் அதை பாதுகாக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். யுஏபிஏவின் பிரிவு 45 விதிகளின்படியும் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பால் வழிநடத்தப்படுவது தான் பாதுகாப்பானது எனவும் கருதுகிறோம். எனவே குற்றம் சாட்டப்பட்டவர் IPC – யின் பிரிவு 120-B, UAPA வின் பிரிவுகள் 13, 18, 20,38 & 39 ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக 3017/2013 – ல் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்” என தெளிவாக தீர்ப்பு வழங்கினர். இதற்கு ஒரு “சபாஷ்” போடலாம்.

விடுவிப்பு மற்றும் விடுதலைக்கு இடையிலான வேறுபாடு என்ன?

சாய்பாபா மும்பை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இது விடுதலையிலிருந்து வேறுபட்டதா? குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 227 விடுவிப்பு (Discharge) குறித்து கூறுவது என்னவெனில், வழக்கின் ஆவணங்களை பரிசீலித்து குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் வழக்கறிஞர்களின் சமர்ப்பிப்புகளை பார்த்த பின்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு தொடரப் போதுமான காரணம் இல்லை என நீதிபதி கருதினால் அவர் குற்றவாளியை விடுவிப்பார். இதன் அடிப்படையில்தான் சாய்பாபாவின் வழக்கில் மிகத் தெளிவாக அவர் மீது வழக்குத் தொடர முன் அனுமதி இன்றி அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட முழு நடவடிக்கைகளும் செல்லாது என்று மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் பெஞ்ச் நீதிபதிகளான ரோஹித் தியோ மற்றும் அனில் பன்சாரி கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: பயங்கரவாதிகள் வெளியில்! தேசபக்தர்கள் சிறையில்!

குற்றவியல் சட்டப்பிரிவு 232 விடுதலை (Aquittal) குறித்து கூறுவது என்னவெனில், வழக்கு தொடுப்பதற்கான ஆதாரங்களை எடுத்து குற்றம் சாட்டப்பட்டவரை விசாரித்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரம் இல்லை என நீதிபதி கருதினால் விடுதலை உத்தரவை பிறப்பிப்பார். அதாவது பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் – வழக்கின் தகுதியின் அடிப்படையில் – விடுதலை உத்தரவை பிறப்பிக்கலாம். ஆனால் முழு நடவடிக்கைகளுமே அதிகார வரம்பை மீறி செல்லுபடி அற்றதாக இருந்தால் பதிவு செய்யப்பட்ட சாட்சியத்துக்கும் எந்தவித சட்டபூர்வ மதிப்பும் இருக்காது. அதுவும் செல்லாததாகிவிடும். எனவே விடுவிப்பு என்பது குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்வதை விட வலுவானதுதான். ஆனாலும் அது தற்காலிகமானது மட்டுமே! ஏனெனில் விடுவிக்கப்பட்டால் அவ்வழக்கில் புதிய விசாரணை நடைபெறலாம். மாறாக விடுதலை விசயத்தில் புதிய விசாரணை நடைபெறாது.

உச்ச நீதிமன்றம் செய்தது என்ன?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வழக்கை சனிக்கிழமையன்று பட்டியலிட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அது விடுமுறை நாளாகும். இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கு திங்கள்கிழமை எடுத்துக் கொள்ளப்படும் என பெஞ்ச் அறிவிக்கிறது. ஆனால் அதைப் புறக்கணித்து நீதிமன்ற பதிவுத்துறையானது, வழக்கை சனிக்கிழமையன்று பட்டியல் இடுகிறது. இப்படி பதிவிடும் அதிகாரி அதற்கு தேவையான உத்தரவை தலைமை நீதிபதியிடம் பெற்றிருக்க வேண்டும். அப்படி நடந்ததாகத் தெரியவில்லை.

 

இப்படித்தான் மும்பை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் சனிக்கிழமையன்று விசாரித்தது. கற்றறிந்த வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டு மூன்று முக்கியமான கேள்விகள் பரிசீலிக்க வேண்டியுள்ளது என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால் இதில் முதல் கேள்வி சாய்பாபா விசயம் குறித்தானதாக இல்லை. அடுத்த இரண்டு கேள்விகளில் ஒன்று: விசாரணை நீதிமன்றத்தின் விசாரணையின் போது பொருத்தமான விண்ணப்பத்தின் மூலம் முன் அனுமதி குறித்த ஆட்சேபனை எழுப்பப்படாததால், மேலும் விசாரணை தொடர அனுமதிக்க பட்டது. எனவே விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை, பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் குற்றவாளி என தீர்ப்பளித்து தண்டித்தது. அதன் பின்னர் மேல் முறையீட்டு நீதிமன்றம், அனுமதி பெறவில்லை அல்லது ஒழுங்கற்ற அனுமதி எனக்கூறி, அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்வது நியாயமானதா?

இரண்டாவது கேள்வி: பிரிவு 313 CrPC – யின் கீழ், வாக்கு மூலத்தை பதிவு செய்யும் கட்டத்தில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், விசாரணையின் போது அனுமதி தொடர்பான சர்ச்சையை எழுப்பாமல் அதன் பிறகு விசாரணை நீதிமன்றத்தை மேலும் தொடர அனுமதித்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?

இந்த இரு கேள்விகளுக்குமான பதில் மிகவும் எளிதானது. தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாப்பது விசாரணை நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களின் கடமையாகும். குற்றம் சாட்டப்பட்டவர் என்ன சொல்கிறார், எதை செய்கிறார் என்பதை பொறுத்தது அல்ல. எனினும் உச்சநீதிமன்றம் அளித்த இடைநிறுத்த உத்தரவு மிகவும் ஆச்சரியமானது. இதன் விளைவாக விசாரணை நீதிமன்றத்தின் தண்டனை புத்துயிர் பெற்றதால் சாய்பாபா தொடர்ந்து தண்டனைக் கைதியாகவே சிறைக்குள் இருக்கிறார்.

சாய்பாபா விடுவிக்கப்படாதது ஏன்?

சமீப காலங்களில் காவல் விவகாரங்கள் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளன. காவலில் இருக்கக் கூடாதவர்களுக்கு/ தேவையில்லாதவர்களுக்கு விடுதலை மறுக்கப்படுகிறது. சிலர் சிறையிலேயே இறந்தும் போகிறார்கள். உண்மையிலேயே காவலில் இருக்க வேண்டியவர்கள் எந்தக் காரணமும் இன்றி அல்லது அற்பக் காரணத்தை கூறி விடுவிக்கப்படுகின்றனர்.

“வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் போது சரோஜினி நாயுடு, புனேவின் ஆகா கான் அரண்மனையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஓரளவு இரக்கம் இருந்ததைத்தான் இது காட்டுகிறது. இங்கு சாய்பாபா 90 சதவிகித ஊனமுற்ற நிலையில் சக்கர நாற்காலியில் பரிதாப நிலையில் தான் உள்ளார்.

கடந்த ஜூன் 21 அன்று சில அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் “போலியோவால் ஊனமுற்ற அவர் உயர் ரத்த அழுத்தம், சுவாசக் கோளாறுகள், இதய பாதிப்புகள், மூளையில் நீர்க்கட்டி மற்றும் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நரம்பு பாதிப்பின் காரணமான இடது கை செயலிழப்பு, வீக்கம் காரணமாக வலது கையையும் பயன்படுத்தி எதையும் செய்ய முடியாத நிலையில் உள்ள அவருக்கு நீர் அருந்த, உணவருந்த, கழிப்பறை செல்ல அனைத்திற்குமே இரண்டு பேரின் உதவி தேவைப்படும் நிலை உள்ளது” என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையின் உள்ளடக்கத்தை சரிபார்க்க தனியாக, சுதந்திரமான குழுவையே நபரையோ இதுவரை அமைக்கவில்லை. ஆனால் அவர் 90% ஊனமுற்றவர் என்பதை ஏற்கனவே உறுதி செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: பேராசிரியர் சாய்பாபாவை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்!

மே 2014 – ல் இருந்து எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அவருக்கு நீதி வழங்கப்படாதது ஏன், இரக்கம் காட்டப்படாதது ஏன்? சாய்பாபா பயங்கரவாத குற்றங்களுக்காக செஷன்ஸ் நீதிபதியால் தண்டிக்கப்பட்டாலும், பம்பாய் உயர் நீதிமன்றம் அவர் மீதான விசாரணையே செல்லாது என கண்டறிந்து அவர் குற்றவாளி அல்ல என விடுவிக்கிறது. அப்படியே எந்த பயங்கரவாத குற்றமாக இருப்பினும் அவரது உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் அவர் ஏன் சிறையில் தொடர வேண்டும்? அவரது முழு இயலாமை காரணமாக அவரால் எந்த ஆபத்தையும் ஏற்படுத்த முடியாது. விசாரணையும் முழுமையாக முடிந்து விட்ட நிலையில் இனி அவர் எந்த சாட்சிகளையும் கலைக்க முடியாது. பிறகு ஏன் இன்னும் அவர் சிறையில் அடைபட்டு இருக்க வேண்டும்?

தனிநபர் சுதந்திரம் என்பது தொழில்நுட்பம் சார்ந்த விசயமல்ல. அது அரசியலமைப்பின் 21 வது பிரிவினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதிகாரம் இருப்பதாலேயே எல்லா சூழலிலும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல! எந்த ஒரு குற்றத்துக்கும் சட்டபூர்வமான தண்டனை வழங்கப்படாத ஒரு தனி நபரின், தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பானது என்பதால் இத்தகைய அதிகாரம் மிக அரிதாகவே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த சூழலில் ஸ்பைடர் மேன் புகழ் மாமா பென் ( Uncle Ben) கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்துவது சரியானதாக இருக்கும்.

“நினைவில் கொள்ளுங்கள் – பெரும் அதிகாரம் என்பது பெரிய பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்”

– உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோக்கூர்.

கட்டுரை மூலம்:

https://thewire.in/law/supreme-court-gn-saibaba-discharges-suspend-new-abnormal

தமிழில் ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here