IPL பெங்களூரு மரணங்களுக்குக் காரணம் என்ன?

கல்விக் கொள்ளையர்களிடம் சிக்கிய கல்லூரி மாணவர்களாகவும் , படித்து முடித்துவிட்டு நிரந்தர வேலை கிடைக்காமல் அலைபவர்களாகவும், கல்விக் கடனை கட்ட முடியாமல் தவிப்பவர்களாகவும் இருக்கும் மிகப்பெரும் பட்டாளத்தையே தமது வாழ்க்கை பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப IPL ஆல் முடிகிறது.

0
கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

2025 IPL சீசனில் கோப்பையை வென்று விட்டு கொண்டாட்டத்தில் 11 உயிரையும் பறிகொடுத்து நிற்கின்றது கர்நாடக கிரிக்கெட் ரசிகர் பட்டாளம்.

ஐபிஎல் தொடங்கி 17ஆண்டுகளுக்குப் பிறகு 18-வது ஆண்டில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு ஆதரவாக அந்த அணி ரசிகர்கள் மிகையாகவே கொண்டாட தொடங்கிவிட்டார்கள். பல பள்ளி, கல்லூரிகள் விடுமுறையே அறிவித்தன. கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் உடனடியாக வாழ்த்து தெரிவித்தனர். பெங்களூர் சாலைகளில் நேற்று இரவு முதலே கொண்டாட்டங்கள் வரம்பு மீறத் தொடங்கிவிட்டன. அதன் உச்சமாக வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

பரப்பப்படும் வெறித்தனம்! பறிபோன உயிர்கள்!

ஐபிஎல் தொடர்களில் நல்ல அம்சம் உள்ளது என்று சொல்லப்படுவது பல்வேறு நாடுகளின் ஆட்டக்காரர்களையும் கலந்து கட்டி ஒவ்வொரு மாநிலத்தின் பெயரில் அல்லது தலைநகரத்தின் பெயரில் அணிகள் உருவாக்கப்பட்டன என்பதுதான். அதிலும் கூட
பாஜகவின் தேசியவெறி பிரச்சாரத்துக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

இந்திய ஆளும் வர்க்கங்களின் சுரண்டல் பகற்கொள்ளைகளிலிருந்து இந்திய மக்களை திசை திருப்பவும், தேசிய வெறியூட்டவும், பாகிஸ்தானை எதிரி நாடாகவே தொடர்ந்து பராமரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அதையே தான் இந்திய கிரிக்கெட் வாரியமும் பின்பற்றுகிறது. தற்போது IPL ஐ நடத்தும் பிசிசிஐ ஜெய் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தன்னாட்டு ஆட்டக்காரர்களை மட்டுமே ரசிப்போம் என்று தேசிய வெறியூட்டப்பட்ட தன்மையில் இருந்து மாறி, உலக அளவிலான ஆட்டக்காரர்களையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
தேசிய வெறி இதில் வெளிப்படவில்லை தான். ஆனால், தேசியவெறியைவிட அபாயகரமாக மாநில அல்லது பிராந்திய வெறி ஊட்டப்படுகிறது. கூடுதலாக தோனி, சச்சின், விராட் கோலி என்று தனி ஒரு ஆட்டக்காரரை கொண்டாடும் ரசிக பட்டாளமாகவும் மாறிக் கொள்கிறார்கள்; தமக்குள் அடித்தும், சட்டைகளை கிழித்தும் கொள்கிறார்கள்.

ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணி இம்முறை 2025 சீசனில் கோப்பையை கைப்பற்றியதால் அதன் ரசிகர்கள், குறிப்பாக விராட் கோலியின் ரசிகர்கள் உற்சாகத்தில் எல்லை மீறவும் ஆரம்பித்தனர்.

ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடி (மோதி) ஜெயித்த போதெல்லாம் சிஎஸ்கே ரசிகர்களுடன் மோதுவதை வழக்கமாக வைத்திருந்தனர் பெங்களூர் ரசிகர்கள். இம்முறை சிஎஸ்கே அணியின் பனியனை கிழித்து சாலையில் போட்டு அதன் மீது வாகனங்களை வரிசையாக ஏற்றி தமது வக்கிர புத்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது, பெங்களூரு சின்னசாமி மைதானம் முன்பு கட்டுக்கடங்காமல் ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்துள்ளனர். 33 பேர் கவலைக்கிடமாகவும் உள்ளனர். இந்த நெரிசல் மரணச் செய்தி வந்த போதும் மைதானத்துக்கு உள்ளே விழா நிறுத்தப்படவில்லை.

மரணங்களுக்குக் காரணம் என்ன?

இறந்து போன ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடும், வெறி பிடித்து கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டத்தை முறைப்படுத்த தவறிய கர்நாடக அரசை விமர்சிப்பதோடும் இதனை முடித்துக்கொள்ள முடியாது. இலக்கை தவற விடக்கூடாது. இந்த மரணங்களுக்கான அடிப்படையை கண்டறிந்து களைய வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளில் கால்பந்தாட்ட ரசிகர்கள் மூர்க்கத்தனத்துடனும், வெறித்தனமாகவும் தாக்கிக் கொள்வது (கொல்வது) வழக்கமானதாகவே மாறி விட்டுள்ளது. ஐபிஎல் ஏற்பாட்டாளர்களும், அரசும் அத்தகைய மூர்க்கத்தனமான பண்பைத்தான் இந்தியாவில் கிரிக்கெட்டு ரசிகர்களிடம் திட்டமிட்டு வளர்த்து வருகிறார்கள். தமது ரசிகர்கள் அடித்துக் கொண்டு சாவதை பற்றி நட்சத்திர விளையாட்டு வீரர்கள் துளியளவும் அக்கறை கொள்வதும் இல்லை.

இனி ஐபிஎல்-ஐ வெறும் விளையாட்டு அல்லது கோடிக்கணக்கில் பணம் புழங்கும் சூதாட்டம் என்று மட்டும் சுருக்கி பார்க்கக் கூடாது. அது மாநில அல்லது பிராந்திய வெறியேற்றி ரசிகர்களை மோதவிடும் ஓர் ஆயுதம். ஒரு குறிப்பிட்ட விளையாட்டு வீரரை ரசிப்பதை ஏற்கலாம்; அந்த வீரரை, அவரின் ஆட்டத்திறமையை உயர்த்தி பிடித்து கொண்டாடுவதையும் ஏற்கலாம். அதற்காக மற்றொரு வீரரையோ, அணிகளையோ வெறுப்பதை ஏற்க முடியாது.

படிக்க:

🔰 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒழிப்பது எப்போது?

🔰 T 20: இந்தியா வெற்றி! கார்ப்பரேட்டுகள் கல்லா கொட்டுகிறது!  உங்கள் மூளை காலியாகிறது! 

அந்த வெறுப்பு இல்லாமல் ஐபிஎல் வியாபாரம் கிடையாது. ரசிகர்களுக்கு
எவ்வளவு வெறி ஏறுகிறதோ, அவ்வளவு பணம் என்ற IPLன் அடிப்படையே இந்த மரணங்களுக்கு முதற்காரணம். இதனை ரசிகர்களுக்கு வெறியூட்டுவதன் மூலம் கோடிகளில் புரளும் சினிமா நட்சத்திரங்களுடனும், பக்தி போதையில் சாதாரண மக்களை மூழ்க செய்து கும்பல் கூட்டும் மகா கும்ப மேளா போன்ற நிகழ்வுகளுடன் ஒப்பிடலாம்.

களவு போகும் வாழ்வுரிமை! கண்ணை மறைக்கும் IPL புழுதி!

“நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு எது நடந்தால் எனக்கென்ன? காவி பாசிஸ்ட்டுகள் கொத்துக்கொத்தாக முஸ்லிம்களை கொன்றாலும், பழங்குடியின மக்களை கொன்றாலும் அதைப்பற்றி எனக்கென்ன அக்கறை? நான் ஐபிஎல் மேட்ச் பார்க்க வேண்டும்”

என இளைஞர் பட்டாளத்தையே திசை திருப்பவும், தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளவும், மிதிப்பட்டு சாகடிக்கவும் முடிகிறதே இதுதான் பேராபத்து.

கல்விக் கொள்ளையர்களிடம் சிக்கிய கல்லூரி மாணவர்களாகவும் , படித்து முடித்துவிட்டு நிரந்தர வேலை கிடைக்காமல் அலைபவர்களாகவும், கல்விக் கடனை கட்ட முடியாமல் தவிப்பவர்களாகவும் இருக்கும் மிகப்பெரும் பட்டாளத்தையே தமது வாழ்க்கை பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப IPL ஆல் முடிகிறது. 12 மணி நேர வேலையை செய்து விட்டு பேருந்து ரயில்களில் நின்றபடியே வீடு திரும்புபவர்களும் கூட செல்போனில் ஐபிஎல் மேட்ச் பார்க்கின்றனர். இப்படி IPL நேரலையை ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 62 கோடிகளைத் தாண்டி சாதனை படைத்ததாக பெருமைப் படிகின்றனர். இதைச் சார்ந்த ட்ரீம்11 போன்ற இணைய சூதாட்டத்தில் பல்லாயிரம் கோடிகள் புரள்கிறது.கிரிக்கெட் வாரியத்தின் வருமானமும் பல்கிப் பெருகி வருகிறது. 2024-2025 ஆண்டுக்கான டிஜிட்டல் ஊடக உரிமை மட்டும் 48,000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

20 ஓவர்களே வீசப்படும் இந்த போட்டியானது உழைக்கும் வர்க்கத்தையும் கூட ஈர்க்கிறது. இப்படி இந்தியாவைப் பொறுத்தவரை கோடிக்கணக்கான மக்களை ஐபிஎல் மடை மாற்றவே செய்கிறது.

நம் விரலைக் கொண்டு நம் கண்ணை குத்த வைப்பதில் ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் கிரிக்கெட் வாரியமும் தொடர்ந்து வெற்றி பெற்றே வருகிறது.. நாம் நம் விக்கெட்டையும் பறிகொடுத்து விட்டு, எதிரணியின் வெற்றியை கொண்டாடிக் கொண்டுள்ளோம். இந்த கேடுகெட்ட நிலைமையை மாற்றியமைப்பதே பலியான உயிர்களுக்கு உண்மையான அஞ்சலி ஆக இருக்கும்.

  • இளமாறன்

பின்குறிப்பு: ஐபிஎல்லின் வளர்ச்சியை புரிந்து கொள்ள இந்த சுட்டியில் உள்ள கட்டுரையைப் பார்க்கவும்

The Meteoric Rise of IPL: Year-Wise Revenue Growth (2008–2025)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here