தீர்ப்பு 1: பழனி முருகன் கோவிலில் கொடிமரத்தைத் தாண்டி இந்துக்கள் அல்லாதவர்களும், நாத்திகர்களும் அனுமதிக்கப்படக்கூடாது. ஒரு பதிவேட்டில் “நான் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன்” என உத்திரவாதம் கொடுத்து “உறுதிமொழி” எழுதிக் கொடுத்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கலாம்.

இந்த ஒரு தீர்ப்பு தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் என்றவாறு விவாதங்கள் நடந்துவருகின்றன. அது உண்மைதான் என்றபோதும் இத்தீர்ப்பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி முக்கியமானது. இந்த தீர்ப்பு பழனி கோவிலுக்கும் மட்டுமல்லாமல் இதைப்போன்ற பல்வேறு தரப்பினரும் வந்துசெல்லும் பிரசித்திபெற்ற கோவில்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். திருநீறு, நெற்றிப்பொட்டு, நாமம் போன்ற சில பொதுவான இந்து மத அடையாளங்களை அணியாத ஒரு சாதாரண இந்து இனிமேல் இப்படிப்பட்ட அடையாளங்களைத் தரிக்க கட்டாயப்படுத்தப்பட்டு மத இறுக்கத்துக்குள் கொண்டுவரப்படுவார். ஏற்கனவே கோவில்களை வைத்தே பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் சங்கிகள் இனி முழு சுதந்திரத்துடன் கலாச்சார காவலர்களாக அவதாரமெடுத்து கோவிலுக்கு வருபவர்களை கண்காணிக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்வர். கோவில்களுக்குள் வேண்டுமென்றே பிரச்சினைகளை ஏற்படுத்தி வேற்றுமத பக்தர்களை விரட்டியடிக்கும் செயல்களும் இனி நடைபெறும். படிப்படியாக கோவில்கள் அனைத்தும் மதவெறி சங்கிகளின் கைக்குள் ஒப்படைக்கும் அபாயத்தை இந்தத் தீர்ப்பு கொண்டுள்ளது. இத்தீர்ப்பைக் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி. சிவம் கூறியபடி, பிற மதத்தினர் எல்லாரும் எங்கள் கோவிலுக்குள் (மசூதி, தேவாலயம்) வாருங்கள், வழிபடுங்கள் என்று தங்கள் மதத்தை வளர்க்கும்போது இந்து மதவெறி சங்கிகள் எங்கள் கோவிலுக்குள் எல்லோரும் வரக்கூடாது என்று இந்து மதத்தின் அழிவுக்கு வேலை செய்கிறார்கள் என்று கூறியது மிகப் பொருத்தமே.


இதையும் படியுங்கள்: 

தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் சங்பரிவார் கும்பல்!


தீர்ப்பு 2: கியான்வாபி மசூதியின் அடிப்பகுதியில் உள்ள நிலவறையில் இந்துக்கள் பூஜை செய்துகொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் 7 நாட்களுக்குள் மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதியை இடித்துவிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவசரமாக இந்து மதவெறி பாசிஸ்டுகள் திறந்ததை அறிவோம். தங்களது பட்டியலில் அடுத்ததாக வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியின் மீது தற்போது குறிவைத்து கடப்பாறைகளைத் தீட்டத்தொடங்கியுள்ளனர். அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட இந்த மசூதியும் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து அதன்மேல் கட்டப்பட்டதாகவும் அதன் அடிப்பகுதியில் உள்ள இந்துக்கோவிலின் அறையில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று வழக்குத் தொடுத்திருந்தனர். பாபர் மசூதி விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தபின் கியான்வாபி மசூதி விவகாரத்தை தூசிதட்டி எடுத்த பாசிஸ்டுகள் தற்போது மாவட்ட நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தங்களுக்கு வேண்டியதை சாதித்துள்ளனர். 1991-ல் இயற்றப்பட்ட வழிபாட்டுத் தளங்கள் தொடர்பான சட்டத்தில் கூறியுள்ளபடி “வழிபாட்டுத் தளங்களை ஆகஸ்ட் 15, 1947-ல் இருந்தபடியே தொடரவேண்டும், அவற்றின் மதஅடையாளங்களில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யக்கூடாது என்ற சட்டத்தைக் காலில்போட்டு மிதித்து ஒவ்வொரு மசூதிக்கும் எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வருகின்றன. இத்தீர்ப்புகள் நாட்டில் மதப் பிரச்சினைகளையும், கலவரங்களையும் உருவாக்கி நாட்டில் இரத்த ஆறை ஓடவைக்கும். அதன்மூலம் நாட்டுமக்களை இந்துக்கள், இந்து அல்லாதவர்கள் என்று கூறுபோட்டு இந்துவெறி பாசிஸ்டுகளிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்கச் செய்யும்.

தீர்ப்பு 3: கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் சீனிவாசனை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு ஆழப்புழா நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட SDPI தலைவர் ஷான்

ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளால் 2021 டிசம்பர் 18-ல் படுகொலை செய்யப்பட்ட SDPI மாநில செயலாளர் K. S. ஷான்-ன் கொலைக்குப் பழிக்குப்பழியாக பா.ஜ.க.-வின் OBC பிரிவு மாநில செயலாளர் ரஞ்சித் சீனிவாசன் டிசம்பர் 19-ல் கொலைசெய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொலை குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கும் மரண தண்டனை கொடுத்துள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் ஒரு மதவெறி பாசிஸ்ட்டின் கொலைக்கு இவ்வளவு விரைவில் தண்டனை கொடுத்த நீதிமன்றம் முதலில் கொலை செய்யப்பட்ட SDPI பிரமுகரின் கொலையை இன்னும் விசாரிக்கவே இல்லை என்பதுதான். குஜராத்தில் 97 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா படுகொலையின் முதல் குற்றவாளியான பா.ஜ.க- வின் அப்போதைய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மாயா கோட்நானி விடுதலை செய்யப்பட்டார். பில்கிஸ்பானுவை கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி அவரது கண்முன் அவரது குழந்தைகள் உட்பட உறவினர்கள் 17 பேரை படுகொலை செய்த கொலைகாரர்கள் “பிராமணர்கள்” என்ற ஒரே காரணத்திற்காக விடுதலை செய்யப்பட்டு ஜாலியாக வெளியே சுற்றினார்கள் என்பதையெல்லாம் நாம் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.


இதையும் படியுங்கள்: இந்தியாவில் ஜனநாயகம் தகர்க்கப்படுவது உலகம் முழுவதையும் பாதிக்கும் -அருந்ததி ராய்


 

தீர்ப்பு 4: சாதி- மதமற்றவர் என்று சான்றிதழை வழங்குவது, சொத்துரிமை, வாரிசு உரிமை மற்றும் கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். வருவாய்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அத்தகைய சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


இதையும் படியுங்கள்: உயர்நீதிமன்ற நீதிபதியாக பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசிய செயலாளரா?


இந்திய சமூகத்தைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் சாதி, மத கட்டுகளை உடைத்தெறியும் ஒரு முகமாக ஒரு சில பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது சாதி, மதம் இல்லை என்று சேர்த்துவருகிறார்கள். தமிழக அரசாணை எண் MS205 -ன் (school education department dated July 31, 2000) படி பெற்றோர் விரும்பாவிட்டால் குழந்தைகளின் சாதி, மதத்தை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று கல்வித்துறை சுற்றறிக்கை உள்ளது. இதைப்பற்றி தெரியாத பள்ளிநிர்வாகங்கள் பெற்றோரை நிர்பந்திக்கின்றன. பெற்றோர் உறுதியாகநின்றபோதும் பள்ளி நிர்வாகமே ஒரு மதத்தை அக்குழந்தைக்கு சூட்டி, OC என்று சாதியையும் புகுத்திவருகின்றனர். இந்தநிலையில் சமூகத்தை சாதி, மத பிடியிலிருந்து விடுவித்து பேதமில்லா நிலைக்கு உயர்த்தவேண்டிய நீதிபதிகள் இன்னும் மக்களைவிடப் பிற்போக்குத்தனத்தில் மூழ்கியவர்களாக இருப்பதையே இத்தீர்ப்பு காட்டுகிறது. சாதி- மதமற்றவர் என்று சான்றிதழ் வழங்குவதன் மூலமாக எதிர்காலத்தில் சிக்கல் எழாமலிருக்கத் தேவையான முன்னெடுப்புகளை அரசு எடுக்கவேண்டும் என்றுதான் ஒரு நீதிமன்றம் சிந்திக்கவேண்டுமே தவிர, சமூகத்தை முன்னேறாமல் கட்டிப்போடும் பிற்போக்குத்தனத்தை கட்டிக்காப்பாற்ற முற்படக்கூடாது. அது சரி இந்தியாவையே 3000 வருடங்களுக்குப் பின்னோக்கி இழுத்துச்செல்லும் முனைப்புடன் உள்ள பாசிஸ்டுகள் ஆட்சியில் சாதி, மதங்களை உயர்த்திப்பிடிக்கும் இப்படிப்பட்ட தீர்ப்புகள் வருவதொன்றும் ஆச்சரியமில்லை.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here