பிரிட்டன் காலனியாதிக்கவாதிகளின்
தயவில் வந்த அரசியல் உரிமை!!

”நம்மை ஆளுகின்ற அரசியல் சட்டம் பெரிதும் ஆங்கிலேயரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசியல் சட்டத்தை வடிவமைத்த அரசியல் சட்ட அவையானது பிரிட்டிஷ் காபினெட் மிஷன் மற்றும் வைசிராயின் மே 16 (1946) அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. காங்கிரசுத் தலைவர்களான நேரு போன்றவர்கள் பலமுறை உறுதியளித்தவாறு அரசியல் சட்ட அவையின் உறுப்பினர்கள் வயது வந்தவர்கள் அனைவரும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர். வாக்களிக்கத் தகுதியுள்ளோரை 11.5% னராகச் சுருக்கியதும், வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களைத் தனித்தனி வாக்காளர்களாக மாற்ற வழிவகை செய்ததுமான இந்திய அரசாங்கச் சட்டம், 1935 (இதை நேரு ‘அடிமைச் சாசனம்’ என்று அழைத்தார்) என்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட “பிரிட்டிஷ் இந்தியாவின்” அப்போதிருந்த மாகாணச் சட்ட அவைகள், தங்களுடைய உறுப்பினர்களை (ஐரோப்பியர்கள் அல்லாத) தனியான மற்றும் மாற்றக்கூடிய வாக்குகள் மூலம் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொண்டன. இந்தத் தேர்ந்தெடுப்பில் முசுலீம் மற்றும் முசுலீம் அல்லாதவர்கள் தனித்தனியாக வாக்களித்தனர். இந்திய ஒன்றியத்தில் மன்னராட்சிக்குட்பட்ட மாகாணங்களை இணைத்துக் கொள்வது குறித்து நேருவுக்கும் இளவரசர்கள் அவைக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி அரசியல் சட்ட அவையில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 50% இடங்கள் இளவரசர்களால் (ஆங்கிலேய அரசாங்கத்தின் எடுபிடிகளாக விளங்கியவர்கள்) நியமிக்கப்பட்டோரைக் கொண்டு நிரப்பப்பட்டது. மீதமிருந்த இடங்களே இம்மாகாண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தன.

வைசிராய் வேவல் பிரபு

அரசியல் சட்ட அவையின் முதல் அமர்வு வைசிராய் வேவல் பிரபு தலைமையில் டிசம்பர் 9, 1946 அன்று கூட்டப்பட்டது. நவம்பர், 1946-ல் நடைபெற்ற காங்கிரசு கட்சியின் மீரட் அமர்வின் போது நடந்த குழு எடுத்துக் கொண்ட பொருள்களுக்கான கூட்டத்தில் (Subject Committee Meetting) உரையாற்றிய நேரு, “நாம் விடுதலை அடையும் போது வேறொரு அரசியல் சட்ட அவையை உருவாக்குவோம்” என்றார். ஏமாற்று வித்தையே அவர்களுடைய செயல்பாணியாக இருந்தது. ஐ.சி.எஸ். உறுப்பினர்களால் அரசியல் சட்டத்தின் வரைவு நகல் உருவாக்கப்பட்டது. அவர்களில் முதன்மையானவர் சர் பெனகல் என்.ராவ்; அவர் அரசியல் சட்ட அவையின் அரசியல் சட்ட ஆலோசகராக இருந்தார். தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டதானது 1935ம் ஆண்டு இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நிர்வாக மற்றும் அரசியல் சட்டத்தை அதிகபட்சமாகத் தொடருவதற்கு உதவியது என்று குறிப்பிட்டார் காம்பெல் – ஜான்சன். 1935ம் ஆண்டு இந்தியச் சட்டத்திலிருந்து ஏறக்குறைய 250 பிரிவுகள் (மொத்தமுள்ள 395 பிரிவுகளில்) அச்சுப் பிறழாமல் அல்லது சொற்றொடர்களில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்டன;

மேலும் அடிப்படைக் கொள்கைகளில் எவ்வித மாறுதல்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று எழுதினார் மைக்கேல் ப்ரச்சர். “இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தின் (1935ம் ஆண்டு சட்டத்தின்) பெரும் பகுதிகளை நாம் நமக்காக உருவாக்கிய அரசியல் சட்டத்தில் இணைத்துள்ளோம்; இது இந்தச் சட்டத்தில் நமது எதிர்காலத் திட்டங்களுக்கான வடிவமைப்பு உள்ளதைக் காட்டுகிறது” என்று ஜி.டி.பிர்லா பெருமிதத்துடன் கூறினார். ஆங்கிலேயர்கள் சமரச நோக்குடன் உருவாக்கிய 1935 சட்டத்தின் அடிப்படையை புதிய அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்டது என்று குறிப்பிட்டார். ஆக்ஸ்போர்டு பொருளாதார நிபுணரும் சில ஆண்டுகளுக்கு பிரிட்டிஷ் அமைச்சரவை ஆலோசகராக விளங்கியவருமான தாமஸ் பாலோக்.

இராணுவ அமைப்பு முறைகளைப் பொறுத்தமட்டில் பழைய அமைப்பு முறையே முன்பு போல தொடர்ந்தது. அதிகார மாற்றம் நடந்தேறிய உடனேயே இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக விளங்கிய க்லாட் ஆக்சின்லெக் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவப் படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்திய முப்படைகளான இராணுவ, கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதிகளாக ஆங்கிலேயர்களே நியமிக்கப்பட்டனர். 50களின் இறுதி வரை ஆங்கிலேயர்கள் தான் இந்தியக் கடற்படையின் தளபதிகளாக விளங்கினர். என்.டி.தாஸ் எழுதியது போல: மே 1961 வரை கடற்படைத் தலைமையகத்தின் கடற்படை ஆயுதத் தளவாட ஆய்வுத் துறையின் இயக்குனர் பதவியை ஆங்கிலேய அதிகாரிதான் வகித்தார். கடற்படை விமானப் பிரிவின் தலைவர் பதவியையும் ராயல் நேவியைச் சார்ந்த அதிகாரியே வகித்தார்.”

இந்தியாவின் ஆயுதப் படைகளில் பணிபுரியும் ஆங்கிலேய அதிகாரிகளும் பிற ஆங்கிலேய ஊழியர்களும் தங்களுடைய பணிகளில் தொடருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. “பிற நிலைகளில்” பணிபுரியும் ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்படும் ‘இந்தியப் படிகள்’ 50% அதிகரிக்கப்பட்டது. 49% ஆங்கிலேய அதிகாரிகளும் 94% “பிற நிலைகளில்” உள்ள வீரர்களும் ”சுதந்திர” இந்தியாவின் ஆயுதப் படைகளில் பணிகளைத் தொடர்ந்தனர். ஆனால் ஐ.என்.ஏ.வை சார்ந்த அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் இந்திய இராணுவத்தில் இடம் வழங்கப்படவில்லை. (இவர்களைத் தான் 1945 மற்றும் 1946ம் ஆண்டுகளில் நேரு “இந்திய இராணுவத்தின் தன்னிகரற்றவர்கள்” என்றும், “அருமையானவர்கள்” என்றும் “வீரம், நெஞ்சுறுதி, திறமை மற்றும் அரசியல் கூர்மை வாய்ந்தவர்கள்” என்றும் “அவர்களுடைய போரிடும் திறம் மிக உயர்ந்தது” என்றும் “சுதந்திர இந்தியாவின் எதிர்கால இராணுவத்திற்கு அவர்கள் ஏற்புடையவர்களாக இருப்பார்கள்” என்றும் வர்ணித்தார்.)

பிப்ரவரி 1946 – ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கலகம் புரிந்த கடற்படை வீரர்களும், போரின் முடிவில் தங்களுடைய நாட்டை மீண்டும் கைப்பற்ற முயற்சித்த டச்சு ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான இந்தோனேசியர்களின் போராட்டத்தில் அவர்களோடு இணைந்து போராடிய இந்திய வீரர்களும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டதால் பணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படவில்லை.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் கூட்டுப் பாதுகாப்புக் குழுவானது மவுண்ட்பேட்டன், ஆச்சின்லெக், பல்தேவ் சிங், லியாகத் அலி, இரண்டு ஆங்கிலேயர்கள், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு தலா ஒருவர் ஆகியோரைக் உறுப்பினராகக் கொண்டும் மவுண்ட்பேட்டனைத் தலைவராகக் கொண்டும் உருவாக்கப்பட்டது. “ஒட்டு மொத்தக் காமன்வெல்த் பாதுகாப்பு ஏற்பாடுகள்” பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆலோசனையை நேருவும் ஜின்னாவும் “முழு மனதுடன் வரவேற்றனர்.” இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் சார்பாகப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்குக் கூட்டு பாதுகாப்புக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 8, 1947 என்ற தேதியிடப்பட்டு இலண்டனுக்கு அனுப்பப்பட்ட மவுண்ட்பேட்டனின் தகவலை மேற்கோள் காட்டுவோமெனில் “15 ஆகஸ்டுக்குப் பிறகும் நானே கூட்டுப் பாதுகாப்புக் குழுவின் தலைவராகத் தொடருவேன் என்பதால் இந்தப் பேச்சுவார்த்தைகளை ஒழுங்கமைக்க முடியும் என்றும் (ஒட்டு மொத்தக் காமன்வெல்த் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முடிவெடுப்பதற்காகப் பிரிட்டிஷ் இராணுவப் பிரதிநிதிகள் குழுவுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பேச்சுவார்த்தைகள்), விரும்பிய இலக்குகள் எட்டப்பட முடியும் என்றும் நம்புகிறேன்.”

“ஒட்டு மொத்த காமன்வெல்த்” இராணுவப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இந்தியா ஒரு துணை நாடாக மாறியது. இவையல்லாது, எல்.நடராசன் குறிப்பிட்டதைப் போல, “ மார்ச் 1951 ல் பரஸ்பர பாதுகாப்பு உதவித் திட்டத்தின் அடிப்படையில் இந்தியா தனது முதல் இராணுவ ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் ஏற்படுத்தியது.” இந்த இராணுவ ஒப்பந்தங்கள் சம அளவில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டவை அல்ல; மாறாகப் பகாசூரர்களுக்கும் நோஞ்சான்களுக்கும் இடையே ஏற்பட்டவை. உலகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் வல்லமை மிக்க ஒரு நாடு உள்ளிட்ட வலிமை வாய்ந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ‘அரை நிர்வாண,’ ‘அரைப் பட்டினி’ மக்கள் நிறைந்த வளர்ச்சி பெறாத நாடான இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்தாம் இவை. “இவ்வாறாக இந்தியாவில் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சி முடிவுக்கு வந்தது” என்று பின்னாளில் எழுதினார் அட்லீ. இவ்வனைத்து உண்மைகளும் அதிகார மாற்றத்திற்குப் பிறகு இந்தியா ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடாக மாறியது என்பதைக் குறிக்கின்றனவா?

“உண்மை என்னவெனில் தோற்றத்தில் காலனியம் நீக்கப்பட்டிருந்தாலும் காலனிய அரசு நீக்கப்படவில்லை” என்று எழுதினார் ராபின் டி.ஜி.கெல்லி. தாமஸ் பாலோக் கூறியதைப் போல இன்றைய ஏகாதிபத்தியத்திற்குத் தன்னுடைய ஆட்சியை நிலைநாட்ட வெளிப்படையான அரசியல் ஆதிக்கம் தேவையில்லை. சார்பு நாட்டை நேரடியாக நிர்வாகம் செய்வதற்குப் பதிலாக அது உள்ளூர் எடுபிடிகளின் மூலமாக மூலதனம் (நேரடி முதலீடு மற்றும் கடன் – மூலதனத்தின் மாற்றுப் பெயரான “உதவி” ஆகிய இவையிரண்டும்), தொழில் நுட்பம், இராணுவத் தளவாடம் உள்ளிட்ட தூண்டில்களைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துகிறது. இவை மட்டுமல்லாது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்முனைப்போடு உருவாக்கப்பட்ட உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் ஏகாதிபத்தியத்தின் விதிகளை நடைமுறைப்படுத்திக் காலனிய நிர்வாகத்தின் பங்கை ஆற்றுகின்றன. சார்பு நாட்டின் பொருளாதாரம், அரசியல், இராணுவத் தந்திரவுத்தி ஆகியவற்றை ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய தந்திரவுத்திக்குக் கீழ்ப்பணிய வைப்பதில்தான் நவகாலனியம் அல்லது அரைகாலனியத்தின் சாரம் அடங்கியுள்ளது.

இந்தியா விடுதலை அடையவில்லையெனினும் ஒரு முக்கிய மாற்றம் நடந்தேறியது. காலனிய நாடாக இருந்த இந்தியா அரைக்காலனிய நாடாக மாறியது. பிரிட்டனின் மீது இந்தியாவுக்கு இருந்த சார்புநிலை பல்வேறு ஏகாதிபத்திய சக்திகளின் மீதான சார்பு நிலைக்குத் தள்ளியது. அவற்றுள் முதன்மையான நாடு அமெரிக்கா. ஒரு அரைக்காலனிய நாடு தோற்றத்தில் சுதந்திர நாடாக இருப்பினும் யதார்த்தத்தில் அது பல்வேறு ஏகாதிபத்திய சக்திகளை சார்ந்து நிற்கிறது. இந்த “அரைச் சார்பு நாட்டில்” உள்ளூர் ஆளும் வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவோராக இருப்பர். எனினும் ஏகாதிபத்திய சக்திகளின் மீதான அடிப்படை சார்பு நிலை என்ற வரம்புக்குள்ளாகத் தான் அதைப் பயன்படுத்த முடியும். உலக முதலாளித்துவ – ஏகாதிபத்திய அமைப்பின் ஒரு பாகமாக விளங்குகின்ற இவர்கள் இந்தச் சார்பு நிலையிலிருந்து விடுபட இயலாது. ஏனெனில் அவர்கள் முன்பு செய்ததைப் போலவே மக்களின் கொடுந்துயரையும் ஏழ்மையையும் விலையாகக் கொடுத்து, ஏகாதிபத்திய ஏகபோக மூலதனத்துடன் ஒத்துழைத்து, அதற்குச் சேவகம் புரிவதன் மூலமாகத்தான் அவர்கள் உயிர் பிழைக்கவும் வளரவும் முடியும்.

தொடரும்
இளஞ்செழியன்

பகுதி 1 படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்!

பகுதி 2 படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்! பகுதி 2

ஆதார நூல்கள்;

  • புதிய ஜனநாயகம்.
  • வினவு, கீற்று கட்டுரைகள்.
  • நக்சல்பரி முன்பும் பின்பும், தோழர் சுனிதிகுமார் கோஷ்.
  • சாதியம் பிரச்சனைக்கு தீர்வு புத்தர் போதாது,
    அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசிய தேவை -ரங்கநாயக்கம்மா.
  • அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
  • காந்தியும் காங்கிரசும் துரோக வரலாறு. பு.மா.இ.மு வெளியீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here