2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை..
இப்போதும் பொருந்தி வருகிறது

சோம்பேறித்தனம் வளர அனுமதிக்கலாமா?

கையில் இருக்கும் ரிமோட்டில் ஒரு பட்டனை அழுத்தினால் டிவி முன் உள்ள திரை விலகுகிறது. இன்னொரு பட்டனை அழுத்தினால் உங்களுக்கு விருப்பமான அலைவரிசை கிடைக்கிறது.. திரையில் காட்சிகள் ஓடத் தொடங்குகின்றன. அல்லது உங்கள் கையில் உள்ள அதிநவீன கைபேசியில் பட்டன்களை மாற்றிமாற்றி அழுத்தி நேரத்தைச் செலவிடலாம். பாப்கார்ன் பாக்கெட் கொண்டுவரச் சொல்லி ஒரு ரோபாட்டிற்கு நீங்கள் ஆணையிடலாம். படுக்கையில் படுத்தவாறே இருக்கும் உங்களுக்கு ரிமோட் எப்போதும் உடனிருக்கும் துணைவன் அல்லது துணைவி. நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உங்களுக்கு வேண்டிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உங்கள் முன்னாலே கொணர்ந்து சமர்ப்பிக்கும் நவீன கருவிகள் உங்கள் கைவசம் இருக்கும் அலாவுதீனின் அற்புத விளக்குகள்.

“உடற்பயிற்சியா.. அதற்கெல்லாம் ஏது நேரம்?” என்றதொரு மனநிலை வளர்ந்துவிட்டதால் உலகெங்கும் கடந்த இருபது ஆண்டுகளில் உடற்பருமன் குறைபாடு வேகமாக வளர்ந்திருக்கிறது. 1980-லிருந்து 2015 வரை 195 நாடுகளில் ஆய்வு நடந்தபிறகு தி நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை உலகம் முழுவதிலும் குழந்தைகளும் பெரியவர்களுமாக 2.2 பில்லியன் ( 220 கோடி) மக்கள் உடற்பருமன் குறைபாடுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரிவிக்கிறது. உடற்பருமன் உள்ள 60 கோடி மக்களில் 7.94 கோடி பேர் அமெரிக்காவிலும் அதற்கடுத்து 5.73 கோடி பேர் சீனாவிலும் உள்ளனராம். ஆனால் குழந்தைகளை எடுத்துக் கொண்டால், 1.53 கோடி உடற்பருமன் குழந்தைகளுடன் சீனா முதல் இடத்தைப் பிடிக்கிறது. 1.44 கோடி உடற்பருமன் குழந்தைகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடிப்பது இந்தியாதான்.

உடல் நலனுக்கு உதவாத துரித உணவும் தேவைக்கதிகமாக உட்கொள்ளும் உணவும் உடற்பருமன் அதிகரிப்பதில் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. மரபணு அம்சங்களும் கூட சிலரது உடற்பருமனுக்குக் காரணமாக இருக்கின்றன. வரவர அதிகரித்துக் கொண்டே இருக்கும் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையும் கூட உடற்பருமன் கூடுவதற்குக் காரணமாக அமைகிறது. உடற்பயிற்சியினால் விளையும் நன்மைகள் பற்றி ஆய்வுகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் நமது ஆழ்மனது சோம்பேறித்தனத்தின் மீது ஈர்க்கப்பட்டிருக்கிறதோ? ஆம் என்கிறது அண்மையில் நடத்தப்பட்டதோர் ஆராய்ச்சி. எழுந்திருப்பதா அல்லது படுத்திருப்பதா என்ற கேள்வி வரும்போது பிந்தையதே பெரும்பாலும் வெற்றி பெறுகிறது என்கிறது பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாத்யூ போய்ஸ்காண்டியர் நடத்திய ஆய்வு. சோம்பேறித்தனத்தைத் தவிர்ப்பதற்கு நமது மூளையை கடுமையான முறையில் மறுகட்டமைப்பு செய்தாலே இயலும் என மாத்யூவும் அவரது குழுவினரும் பரிசோதனைகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

வேகமாகச் செய்யப்படும் உடற்பயிற்சிக் காட்சிகளையும் சோம்பேறித்தனமாக மனிதர்கள் இருக்கும் காட்சிகளையும் அசைவூட்டப்படங்களாகக் (animation pictures) காண்பித்து பரிசோதனையில் பங்கேற்பவர்கள் அவற்றை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என ஆய்வு செய்யப்பட்டது. செயலூக்கமுள்ள காட்சிகளின் பக்கம் அவர்கள் வேகமாக ஈர்க்கப்பட்டார்கள். ஆனால் அதற்கு மூளை கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அதாவது, சுறுசுறுப்பான வாழ்வியல் முறைக்கு நாம் மாற வேண்டுமானால் நமது மூளையின் வளங்களை மேலும் அதிகமாக ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது. இயல்பாகவே சோம்பேறித்தனமான நடைமுறைகளுக்கு மூளை ஈர்க்கப்பட்டுள்ளதால் அவற்றை மாற்றியமைக்க நாம் கடுமையானதொரு மனப்போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.

“வேற வேலைவெட்டியில்லாம இதுக்குப் போய் ஆய்வு செஞ்சாக்களாக்கும்? அதான் நமக்குத் தெரியுமே?” என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.

என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியமானது. சோபாவிலோ படுக்கையிலோ படுத்து சோம்பல் வாழ்க்கையே போதும் என இருக்கப் போகிறோமா? அல்லது மூளை தரும் உள்ளுணர்வை வென்று சுறுசுறுப்பான வாழ்வை நோக்கிப் புறப்படப் போகிறோமா?

நன்றி:
கே. ராஜு.
புதிய ஆசிரியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here