வங்க மொழி பேசும் மக்களை சித்திரவதை செய்து நாட்டை விட்டு விரட்டும் பாஜக அரசுகள்!

2
வங்க மொழி பேசும் மக்களை சித்திரவதை செய்து நாட்டை விட்டு விரட்டும் பாஜக அரசுகள்!
நன்றி: தி வயர் இணையதளம்

பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை செய்து வரும் வங்காள மொழி பேசும் மக்களை இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று குற்றம் சாட்டி, அடித்து உதைத்து, சித்தரவதை செய்வதுடன் அவர்களை இந்தியாவிற்கு வெளியே பங்களாதேஷ் நாட்டிற்குள் விரட்டி விடும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறது பாசிச பாஜக.

மேற்குவங்க மாநிலத்தில் இருந்து அடித்தட்டு மக்கள்  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இப்படி வேலை செய்து வரும் வங்காள மொழி பேசும் மக்களிடம், குறிப்பாக வங்காள மொழி பேசும் இஸ்லாமிய மக்களிடம்  ஆவணங்களை கேட்டு மிரட்டுவது, அடிப்பது மட்டுமின்றி அவர்களிடம் உள்ள பணத்தையும் செல்போனையும் பிடுங்கிக் கொள்வதை தனது வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது பாஜக ஆளும் மாநில காவல்துறையும் எல்லை பாதுகாப்பு படையும்.

உழைக்கும் மக்களிடம் கொள்ளை அடிக்கும் அரசு படைகள்!

அந்த உழைக்கும் மக்கள் தங்கள் ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்ற ஆவணங்களை காவல்துறையினரிடம் காட்டி தாங்கள் இந்தியாவின் ஒரு மாநிலமான மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிய பிறகும் அவர்களை பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்று கேவலமாக பேசி சித்தரவதை செய்வது, பிறகு பங்களாதேஷின் எல்லைக்கு கொண்டு சென்று அவர்களை பங்களாதேஷிற்குள் விரட்டி அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

நிஜாமுதீன் மண்டல் என்ற தொழிலாளி மும்பையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரும் இவரைப் போன்ற பலரும் மேலே கூறியுள்ளதைப் போல பலவாறு அடித்து துன்புறுத்தப்பட்டதுடன் பங்களாதேஷிற்குள் விரட்டியடிக்கப்படுள்ளனர்.

மும்பையில் வேலை செய்து வந்தவரான நிஜாமுதீன் மண்டல்,   தான் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இந்திய குடிமகன் தான் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்த பிறகும் அவை போலியாக தயாரிக்கப்பட்டது என்று கூறி மும்பை காவல்துறையினர் நிராகரித்தருள்ளனர். மேலும் அவர் உழைத்து சேர்த்து வைத்திருந்த 7000 ரூபாயையும் பிடுங்கிக் கொண்டனர்.

இது குறித்து நிஜாமுதீன் மண்டல் மேலும் கூறும்பொழுது “எங்களை பலவாறு சித்திரவதை செய்த பிறகு மும்பையில் இருந்து பங்களாதேஷின் எல்லைக்கு எங்களை கொண்டு சென்றனர். எல்லை காவல் படையினர் (BSF) எங்களை நிர்வாணமாக்கி அடித்தார்கள். எனது தோள்களிலும் மணிக்கட்டுகளிலும் கால்களிலும் இன்னும் கூட வலி நிற்கவில்லை. எங்களை அடித்து துவைத்த பிறகு பங்களாதேஷிற்குள் எங்களை  எறிந்தார்கள்” இன்று வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

மேலும் “பங்களாதேஷை சேர்ந்த எல்லை காவல் படையினர் (Border Guard Bangladesh) எங்களின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் தெளிவாக எங்களை பற்றி கூறிய பிறகு அவர்கள் மேற்குவங்க காவல்துறையுடன் பேசி எங்களை மேற்குவங்க மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர்” என்று குறிப்பிடுகிறார் நிஜாமுதீன் மண்டல்.

படிக்க: கோரமண்டல் ரயில் விபத்தும், மேற்கு வங்க உழைக்கும் மக்களும்!

இது ஒரு வகை மாதிரி மட்டுமே. இது போன்று நூற்றுக்கணக்கானோரை அடித்து துவைத்து அவர்களிடம் உள்ள பணத்தை பிடுங்கிக் கொண்டு இந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்குள் விரட்டியடித்திருக்கிறது பாசிச மோடியின் – விஸ்வ குரு மோடியின் எல்லை காவல் படையும் பாஜக ஆளும் அரசுகளின் மாநில காவல் துறையும்.

இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து பாஜக ஆளும் மாநில அரசுகளை கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு மாபெரும் கண்டன ஊர்வலத்தை ஜூன் 16ஆம் தேதி அன்று நடத்தியுள்ளார்.

பாஜக அரசு இஸ்லாமியர்களை ஏன் நாடு கடத்துகிறது?

இந்தக் கேள்வியும் இந்தக் கேள்விக்கான பதிலும் மிகவும் முக்கியமானது. இதற்கான பதிலை பார்ப்போம்.

“வங்க மொழி பேசுபவர்கள் என்பதற்காக நாங்கள் ஏன் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறோம்? வங்க மொழி பேசுபவர்கள் என்பதற்காக, லுங்கி அணிபவர்கள் என்பதற்காக, மீன் சாப்பிடுபவர்கள் என்பதற்காக நாங்கள் ஏன் தாக்கப்படுகிறோம்?” என்று கேட்கிறார் மும்பையில் தங்கி வேலை செய்து வந்த சிராஜுல் இஸ்லாம். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹரிஹரபரா கிராமத்தைச் சேர்ந்தவர்.

இந்த நிகழ்வுகளை எல்லாம் கண்டு பயந்து போய் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாவட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த பல நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் அந்த வேலையை விட்டுவிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து விட்டனர்.

இந்த நிகழ்வுகள் ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன. மதரீதியாக இந்துக்கள் – முஸ்லிம்கள் என்று மக்களை இரண்டு பிரிவாக பிளந்து, எதிரெதிராக நிறுத்தி விட வேண்டும் என்பதில் வெறிகொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறது பாசிச பாஜக அரசு.

படிக்க: பாஜக வெற்றிக்காக உழைக்கும் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையம்! தடுக்காத உச்சநீதிமன்றம்!

இந்திய நாட்டில் இருக்கும் அரைகுறை ஜனநாயகத்தையும் குழி தோண்டி புதைப்பதற்கான முன்னேற்பாடாகத்தான் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை நாம் பார்க்க வேண்டும்.

வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள், மீன் உண்ணும் இஸ்லாமியர்கள், லுங்கி அணியும் இஸ்லாமியர்கள்  வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு அரசு படைகளால் நாட்டை விட்டே விரட்டப்படுகிறார்கள்.

மறுபுறம் பீகாரில் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் வாக்குரிமையை பிடுங்கி அவர்களை இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என்று முத்திரை குத்தும் வேலையை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. இதே போன்ற வேலையை மேற்கு வங்கத்திலும் இன்னபிற மாநிலங்களிலும் செய்திட தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது.

மற்றொருபுறம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாசிச பாஜக அரசின் அயோக்கியத்தனங்களுக்கு எதிராக செயல்படும் நபர்களின் வீடுகள் புல்டோசர்களால் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன.

“இஸ்லாமியர்கள் மாட்டுக்கறி வைத்திருந்தார்கள், பசுவை கொன்றார்கள்” என்று காரணம் கூறி அவர்களை அடிப்பதையும் கொல்வதையும் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் காவி பாசிஸ்டுகளின் தொண்டர் படை பாஜக அரசின் இந்த “நாடு கடத்தும் செயல்பாடுகள்” மாபெரும் உத்வேகமும் உற்சாகமும் பெற்றும். இப்படி உத்வேகமும் அடையும் பாஜக ஆர் எஸ் எஸ் பாசிச படை கண்ணில் படும் இஸ்லாமியர்களுக்கு எதிராக எம்மாதிரியான கொடூர செயல்களில் ஈடுபடும் என்பதை அனைவராலும் உணர முடியும்.

இம்மாதிரியான பாசிச வெறியர்கள் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு ஆபத்தான நிலையில் இந்தியா இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இந்த பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க விடுவது என்பது அபாயகரமானது மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் மாபெரும் அவமானமாகும்.

குமரன்

செய்தி ஆதாரம்: Thewire

2 COMMENTS

  1. பாசிச ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ சங்க பரிவார் காவி கூட்டத்தின் அட்டகாசங்கள் நாடு முழுமைக்கும் தாங்க முடியாத அளவிற்கு பல்வேறு வகைகளிலும் ஊடுருவி புதை குழியில் தள்ளிக் கொண்டு இருக்கின்றன. அவற்றின் குறிப்பான அம்சங்களை கட்டுரையில் தோழர் குமரன் அவர்கள் தெளிவுபடுத்தி இருப்பதும், இந்தக் காவி கூட்டத்தினை புதைகுழி தோண்டி புதைக்காமல் உழைக்கும் மக்களாம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின அருதிப் பெரும்பான்மை மக்களுக்கு விடியல் இல்லை என்பதனை கட்டுரையாளர் சிறப்பாகவே எடுத்துரைத்துள்ளார். ஆனாலும் பாராளுமன்றத் தேர்தல் முறையில் இவர்கள் கையாளுகின்ற பல்வேறு மோசடிகள், வாக்கு இயந்திரங்கள், காவிமயமாக்கப்பட்ட அதிகாரவர்க்கம் இவற்றைப் பற்றியும் சற்று கூடுதலாக விளக்கி இருக்கலாம். எனினும் தோழருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

  2. பாசிச பிஜேபி ஆளும் மாநிலங்களில் அட அடியாள்படியான காவல்துற வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களை மேற்குவங்கம் ராஜஸ்தான் உபி பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள இஸ்லாமியர்களை வங்கதேசத்திற்கு கட்டாயமாக அவர்களின் ஆவணங்களையும் பணம் பொருள் அனைத்தையும் பறித்துக் கொண்டு அவர்களை துன்புறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றுவது மக்கள் விரோத செயல் என்பதை ஆர்எஸ்எஸ் பிஜேபி காவிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் அதற்காக இஸ்லாமியர்கள் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் தொழிலாளர்கள் மாணவர்கள் என அனைவரும் ஓர் அணியில் திரண்டு பாசத்தை விடுத்த களத்தில் இறங்குவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here