மனுதர்மத்தை தனது சட்டப் புத்தகமாக ஏற்றுக் கொண்டு, சாதி ரீதியான பாகுபாடுகள் நீடிக்க வேண்டும் என்பதையும்; அனைத்து சாதிகளையும் பார்ப்பன கும்பல் ஆதிக்கம் செய்கின்ற வர்ண அமைப்பு முறையை நீட்டிக்க வேண்டும் என்பதையும் ஆர்எஸ்எஸ் பாஜக ஒரு நூற்றாண்டு காலமாக பேசி வருகிறது என்பதை அறிவோம்.
வரலாறு நெடுக பார்ப்பன (இந்து) மதத்தை சமரசமின்றி அம்பலப்படுத்தி போராடியவர்களில் நவீன காலத்தில் முதன்மையான பங்களிப்பை செலுத்தியவர் டாக்டர் அம்பேத்கர்.
பார்ப்பன (இந்து) மதத்தின் கொடுங்கோன்மையை விவரித்து இந்துயிசத்தின் தத்துவம் என்ற நூல் முதல் இராமாயணம், மகாபாரதம் போன்ற கட்டுக்கதைகளையும் ராமன், கிருஷ்ணன் போன்ற பார்ப்பன கடவுளர்களையும் விமர்சித்து எழுதியுள்ள மகத்தான சிந்தனையாளர்.
நாட்டின் பூர்வ குடி மக்களான பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடிகளின் வாழ்க்கையில் நீண்ட காலமாக நிலவி வந்த கொடூரமான சாதி தீண்டாமை கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சட்டரீதியாக சில வாய்ப்புகளை உருவாக்கியவரும் டாக்டர் அம்பேத்கர் தான்.
அதேபோல, ‘ஒரு இந்துவாக பிறந்தேன். ஆனால் ஒரு இந்துவாக சாகமாட்டேன்’ என்று கலக குரல் எழுப்பி பார்ப்பன (இந்து) மதத்தின் அவலங்களையும், அடக்குமுறைகளையும் அம்பலப்படுத்தியவர் டாக்டர் அம்பேத்கர்.
2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை பார்ப்பன (இந்து) ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு அம்பேத்கரின் பெயர் மட்டுமல்ல. அவர் முன்வைத்த அரசியலமைப்புச் சட்டமும் சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறது.
இதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அம்பேத்கரை இழிவு படுத்துவது, கொச்சைப்படுத்துவது அல்லது அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் ஐ ஆதரித்தார் என்று அண்ட புளுகை அவிழ்த்து விடுவது என்றெல்லாம் பலவிதமான ‘அவதாரங்களை’ எடுத்து வந்த ஆர்எஸ்எஸ் கும்பலின் பிரதிநிதியான திருவாளர் அமித்ஷா நேற்று பாராளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியுள்ளார்.
அவரது உடல் மொழியும் குரல் மொழியும் நக்கலும், நையாண்டியும் நிறைந்த வகையில் அம்பேத்கரின் மீதான அவர்களின் வெறுப்புணர்ச்சியை வெளிக்காட்டியது.
அமித் ஷா தனது உரையின்போது, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மரபு குறித்துப் பேசினார். அப்போது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது” என்று அமித்ஷா கூறினார்.
படிக்க: டாக்டர் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன் ?
“இது இப்போது ஃபேஷனாகிவிட்டது. அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இந்த அளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம்” என்று அமித் ஷா பாராளுமன்றத்தில் முன் வைத்துள்ளார்.
இந்தக் கேடுகெட்ட அபத்தமான பேச்சுக்கு எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தற்போது ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவை குரலை மாற்றிக்கொண்டு அம்பேத்கரை காங்கிரஸ் இழிவுபடுத்தி விட்டது என்று பேசத் துவங்கியுள்ளனர்.
நாட்டின் பிரதமரும், கார்ப்பரேட் கைக்கூலியுமான பாசிச மோடி, ‘அம்பேத்கரை பற்றி இருந்த இருண்ட பக்கங்களை அமித்ஷா அம்பலப்படுத்தியுள்ளார்’ என்று திமிர்த்தனமாக பேசியுள்ளார்.
அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்நேரம் அமித்ஷாவின் உருவப் படத்தையும், கொடும்பாவியையும் கொளுத்தி இருக்க வேண்டும் ஆர்எஸ்எஸ் இன் அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் ஆர்எஸ்எஸ் எதிர்பார்த்ததைப் போலவே கருப்பு பார்ப்பனர்களும், பதிலி பார்ப்பனர்களும் அம்பேத்கருக்கு எதிராகவும் அமித் ஷாவின் உரையை ஆதரித்தும் காவடி தூக்க துவங்கி விட்டனர் என்பதால் ஒரிஜினல் பார்ப்பனர்கள் தைரியமாக நடமாடி வருகின்றனர். இது வெட்கக்கேடானதாகும்.
- பார்த்தசாரதி.







சிறப்பான கட்டுரை. மோடி அமித்ஷா காவி கூட்டத்தை நன்றாகவே கட்டுரையாளர் அம்பலப்படுத்தி உள்ளார். இதைத் தவிர அவர்களிடம் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? இந்திய நாட்டின் இந்தியா கூட்டணி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும், புரட்சிகர ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு போராடி இந்த ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ காவி கூட்டத்தின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும்! கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போல நமது கருப்பு பார்ப்பனர்கள் ஒருவகையில் இதை மகிழ்ச்சிகரமாக ஏற்கத்தான் செய்வார்கள்! அவர்களுக்கும் சேர்த்தே அடி கொடுக்கக் கூடிய வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்!
அதே வேளையில் ஆர் எஸ் எஸ் -ன் நூற்றாண்டு 2025 என்பதாலும், அதற்குள் இந்திய நாட்டை (பார்ப்பன) இந்து ராஸ்ட்ராவாக மாற்றி காண்பிக்கிறோம் என்று அவர்களது ஆசானுபாவான் மோகன் பாகவத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிலைநாட்ட மோடி அமிஷா கும்பல் முனைப்பு கட்டியே தீரும். அதற்கு ஒத்திசைவு நடவடிக்கைதான் “ஒரே நாடு! ஒரே தேர்தல் !” (ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி) என்ற ஒற்றை சர்வாதிகார மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிகழ்வாகும். நாம் அச்சப்பட வேண்டியது இதில் யாதெனில், அந்த மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்ற மற்றும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்! இரு அவைகளுமே காவி கூட்டத்திற்கு அப்படிப்பட்டதொரு பெரும்பான்மை இல்லை.
எனவே கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் போன்ற முக்கிய பிரச்சனைகளுக்காக வெளி நடப்பு செய்த பொழுது மக்கள் விரோத பல்வேறு சட்டங்களை இந்த பாசிச கும்பல் நிறைவேற்றிக் கொண்டது போல, அம்பேத்கர் பிரச்சனையை அவிழ்த்துவிட்டு உறுப்பினர்களின் கவனத்தை மடைமாற்றிவிட்டு அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் சந்தடி சாக்கில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற – ஒருமுகப்படுத்தப்பட்ட எதிர்க்கட்சிகள் இடம் அளித்து விடாமல் மிகவும் எச்சரிக்கையாக இருந்து அந்த மசோதா நிறைவேற அனுமதிக்கப்படாமல் முறியடிக்கப் படல் வேண்டும் என்பதே எமது அவா!