’அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்!’ தேசத்தின் முழக்கமாகட்டும்!

அதானி மின் உற்பத்தி நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யப் போவதாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட பங்களாதேஷ் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

தேசங்கடந்த தரகு முதலாளியான அதானி குழுமத்துக்கு அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நீர் மின் சக்தி திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 10 கிகா வாட் மின்சாரம் தயாரிக்கும் அளவு அதில் மூலதனம் போட்டுள்ளார்.

அதுபோல வியட்நாமில் இரண்டு விமான நிலைய விரிவாக்க திட்டங்கள் மற்றும் மரபுசாரா எரிசக்தி பயன்படுத்துவது ஆகியவற்றிற்கு அதானி குழுமம் அங்கீகாரம் பெற்றுள்ளது.

ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் உள்ள டார் ஏஸ் சலாம் துறைமுகம் 30 ஆண்டுகளுக்கு குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ கொள்கலன்களை உருவாக்குகின்ற முனையத்திற்கு அதானி குழுமம் ஒப்பந்தம் பெற்றுள்ளது.

இதைத் தவிர மோடியின் பாசிச கூட்டாளியான இஸ்ரேலுடன் சமீபத்தில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு இஸ்ரேலின் ஹைஃப்பா துறைமுகம் அதானியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

ஆஸ்திரேலியா அரசும் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அதானி குழுமத்துக்கு உலகின் மிகப் பெரிய கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது. இதற்கு எதிராக அந்நாட்டு பூர்வகுடிமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். தற்போது அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கலகக் குரல்கள் ஆஸ்திரேலியாவில் வெடித்திருக்கின்றன. மேலும் அதானி குழுமம் தற்போது இனவெறி, நிறவெறி குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலியாவில் எதிர்கொண்டிருக்கிறது.

இலங்கையில் அதானி குழுமத்துக்கு மன்னார் காற்றாலைத் திட்டத்தை மத்திய அரசுதான் போராடிப் பெற்றுக் கொடுத்தது. இது தொடர்பாக ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சேவுக்கு நெருக்கடி தந்தார் பிரதமர் மோடி என இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகவே குற்றம்சாட்டப்பட்டது. இலங்கை ஜனாதிபதியான அனுர குமார திசநாயக்க, தமது தேர்தல் வாக்குறுதியாக அதானியை வீட்டுக்கு அனுப்புவோம்; மன்னார் திட்டத்தை ரத்து செய்வோம் என உறுதியளித்திருந்தார். சமீபத்தில் இந்தியா வந்து சென்றுள்ளார்.

அதானி மற்றும் அவரது சாகாக்கள் 7 பேர் மிது ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் கொடுப்பது ஊழல் செய்வது போன்ற கிரிமினல் மற்றும் பொருளாதார மோசடிக் குற்றங்களுக்காக அமெரிக்க நீதிமன்றத்தினா பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட செய்திகள் வெளியான நிலையில் அதானி குழுமத்துடனான கென்யாவின் நைரோபி விமான நிலைய ஒப்பந்தம், எரிசக்தி துறை ஒப்பந்தம் அனைத்தையும் அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ ரத்து செய்துவிட்டார். அதானி குழுமத்தின் இந்த ஒப்பந்தங்களை ஏற்கனவே கென்யா நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களால் இந்த ஒப்பந்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது கைவிடப்பட்டுவிட்டன.

அதானி மின் உற்பத்தி நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யப் போவதாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட பங்களாதேஷ் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருக்கிறது.


படிக்க: இஸ்ரேலுடன் இணைந்து மரண வியாபாரியாக மாறிய அதானி!


”முன்னாள் அதிபரான பாசிச ஷேக் ஹசீனா அரசு போட்ட ஒப்பந்தம் டெண்டர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை அதானி நிறுவனத்தை விட தற்போது குறைந்த விலையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களால் மின்சாரம் தர முடிகிறது. அதானியிடமிருந்து மின்சாரம் வாங்காமலேயே தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் நிலையை பங்களாதேஷ் எட்டி விட்டதாக” புதிய அரசாங்கம் சொல்கிறது

அதுமட்டுமல்ல 2017 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி, இந்திய அரசிடமிருந்து அதானி மின் நிறுவனத்துக்கு வரிச்சலுகை கிடைக்கும் பட்சத்தில் அச்சலுகைத் தொகையை பங்களாதேஷ் அரசுக்கு முழுவதும் மாற்றி தர வேண்டும் என்கிற சரத்து இருக்கிறது. ஆனால் அதானி வரிச் சலுகையை அவரே சுருட்டிக் கொண்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.


படிக்க: வங்கதேசத்தை வஞ்சித்த அதானி  மோடி கும்பல்!


பங்களாதேஷ் அரசு அதானிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறது. திருப்பித் தருமா என்பதும் கேள்விக்குறிதான். அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட கிரிமினல் வழக்கை பங்களாதேஷ் அரசாங்கம் சுட்டிக்காட்டி ஒப்பந்தங்களை ரத்து செய்கிறது

அமெரிக்க மேல்நிலை வல்லரசு தனது அரியணையில் பயங்கரவாதியான ட்ரம்பை ஆட்சியில் அமர்த்தியுள்ளது.

ஏற்கனவே ஹிண்டன் பார்க் அறிக்கையை சமாதி கட்டி மூடுவதற்கு செபியை பயன்படுத்திய அதானி மற்றும் அவரது கூட்டாளியான பாசிச மோடி தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதானியை காப்பாற்றுவதற்கு எந்த உச்ச கட்டத்திற்கும் செல்வார் என்பது வெளிப்படையானது.

ஆனால் சர்வதேச அரங்கில் இந்திய முதலாளி ஒருவர் பல்வேறு நாடுகளுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தங்கள் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் விளைவாக ரத்து செய்யப்படுகின்றன என்பது அம்பலமாகி நாறும் நிலையில் அதானி என்ற முதலாளிக்கு ஏற்பட்டுள்ள அவமானம் இந்தியாவுக்கு அல்ல என்று நிரூபிக்க வேண்டுமானால் நாம் வீதியில் இறங்கி அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய் என்று போராட வேண்டும்.

அதுமட்டுமல்ல, ’அதானி குழுமம் தமிழகத்தில் போட்டுள்ள முதலீடுகளை நட்ட ஈடு இன்றி பறிமுதல் செய்! ஒப்பந்தங்களை ரத்து செய்’ என்று அதானியை எதிர்ப்பதாக நாடகமாடும் இந்தியா கூட்டணியில் உள்ள திமுகவிற்கு எதிராகவும் குரல் எழுப்ப வேண்டும்.

  • முகம்மது அலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here