பிப்-23, 24 பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போம்! கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவதை  நோக்கி முன்னேறுவோம்!!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு ஆட்சிக்கு வந்த  எட்டு ஆண்டுகளில் 70 ஆண்டு கால இந்தியாவை மொத்தமாக சீரழித்து  உழைக்கும் மக்களை வீதிக்கு தள்ளி 3 லட்சம் பேர்களை பிச்சைக்காரர்களாக்கி உள்ளது. பணமதிப்பிழப்பு, GST , NEET, EIA 2020, மின்சார சட்டத்திருத்த மசோதா, தொழிலாளர் சட்ட திருத்த மசோதா, 3 வேளாண் சட்டங்கள், சாகர்மாலா திட்டம், புதிய கல்விக் கொள்கை என அடுக்கடுக்காக மக்களுக்கு எதிரான , கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டங்களை நிறைவேற்றி மக்களை கொன்றொழித்த தொடர்ச்சியின்  அடுத்த தாக்குதலாக  ‘நிதிஆயோக்’கின் பரிந்துரைப்படி ஆகஸ்ட் 23−ம் தேதியன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தேசிய பணமாக்கல் (National Monetisation Pipeline – NMP) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  நடந்து முடிந்த குளிர்கால கூட்டத் தொடரில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை உயர்த்தி, 3 ஆண்டுகளில் மட்டும் 8 லட்சம் கோடியை உழைக்கும் மக்களிடமிருந்து வழிப்பறி செய்துள்ளதை, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர். வங்கிகளில் முதலாளிகளின் வாராக்கடனாக கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ள கார்ப்பரேட் நல அரசு உழைக்கும் மக்களுக்கு வரிவிதிப்பு செய்து ’சம(மனு)தர்ம’ கோட்பாட்டினை  நிலைநாட்டியுள்ளது. வங்கிகளில் கடன் பெற்று கடனை தள்ளுபடி செய்யக்கோரி மக்கள் முன்  அம்பலப்பட்டுப்போவதை விரும்பாத  கார்ப்பரேட்டுகள்  பொதுத்துறை வங்கிகளை தன் வசமாக்கிக் கொள்ளையடிக்கவே தனியார்மயமாக்க கோருகின்றனர். இதற்கு ஏற்ற வகையில் பாஜக அரசு சட்டதிருத்தம் செய்கிறது.  10 லட்சம் வங்கி ஊழியர்கள் இதை எதிர்த்து நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தேசிய பணமாக்கல் திட்டமும், கார்ப்பரேட் கொள்ளையும் 

நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்காக நிதி திரட்டுவதன்  மூலமாக புதிதாக பல நிறுவனங்கள் வளர்ச்சி அடையும், அதன் மூலம் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உற்பத்தி அதிகரிக்க செய்யப் போவதாக பாசிச பா.ஜ.க அரசு சொல்கிறது. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் 25 விமான நிலையங்கள், 400 ரயில் நிலையங்கள், 15 ரயில் விளையாட்டு அரங்கங்கள், 26,700 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், சுரங்கம், ஊட்டி மலை ரயில், அதிக வருவாய் ஈட்டித் தரக் கூடிய தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், நெய்வேலி என்.எல்.சி-யின் சூரிய ஒளி மின்சார நிறுவனம்,  எரிவாயுக்குழாய் உள்பட மக்கள்  உழைப்பில்  உருவான பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிட்டு மக்களிடமிருக்கும்  கோவணத்தையும் உருவுவதே இத்திட்டம்.

சீரழிக்கப்பட்ட தொழிலாளர் வாழ்வும், சிறு குறு தொழிலும்

கருப்பு பணத்தை ஒழித்து,  நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வதாக அறிவித்து நடைமுறைப்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், சுமார் 400 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். நாட்டின் சிறு, குறு தொழில் செய்பவர்களை சீரழித்ததுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2% அளவிற்கு வீழச்செய்தது. ஒரே நாடு ஒரே வரி பெயரில் நாட்டின் வரி வருவாயை, அதிகரிக்கப் போவதாக கொண்டுவரப்பட்ட GST வரி விதிப்பு மூலம் கார்ப்பரேட்டுகளின் சட்டப்பூர்வ பகற் கொள்ளைக்கு வழிவகுத்தது. GST வரிவிதிப்பின் மூலம் மட்டும் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 1.25 லட்சம் கோடி வரை மறைமுக வரியாகவும், நேர்முக வரியின் மூலம் 10 லட்சம் கோடி வரை ஒன்றிய அரசு வரியாக ஈட்டுகிறது. இவையனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்க் கப்படுகிறது. GST வரிகட்டும் மக்கள் அன்றாட சோற்றுக்கே அல்லாடுகின்றனர்.

இந்தியாவின் டெக்ஸ்டைல் நகரம்  பானிபட் மற்றும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவையிலும் உள்ள ஆடை நெய்யும் தொழிற்சாலைகள் சிறு,குறு நிறுவனங்கள் GST க்குப் பிறகு சிலவற்றை தவிர அனைத்தும் மூடப்பட்டது. 111 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கியும், பொருளாதாரத்தில் 32% பங்கு வகிக்கும் 6.3 கோடி சிறு குறு தொழில்களில் ஐந்தில் ஒரு பங்கு தொழில்களில் லாபம் 20% குறைந்துள்ளதாக ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இத்தொழிலை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை சீரழித்தது.

பறிக்கப்பட்ட தொழிலாளர் உரிமையும், அழித்தொழிக்கப்பட்ட தொழிலாளர் சட்டமும்

உயிர்த்தியாகம் செய்து போராடிப் பெற்ற உரிமைகளை  தொழிலாளர் சட்டத்திருத்த மசோதா பெயரில் 44 சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றி, மாநிலங்கள் வாரியாக அமல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் பெரிய தொழில் நகரங்களான  சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் தனியார் தொழிற்சாலைகளில்  8 மணி   நேர வேலை அறவே ஒழிக்கப்பட்ட நிலையில், இந்த மசோதா 8 மனி நேர வேலை குறித்த எந்த வரையறையும்  செய்யாமல் குழப்பத்துடன் விட்டு செல்கிறது. 20 பேர் வேலை செய்தால் தொழிற்சாலை என இருந்ததை 40 ஆக மாற்றியமைத்து, தொழிற்சாலை வரம்புக்குள் இருந்தவற்றை விடுவித்து விடுகிறது. குறைந்தபட்ச பணிப்பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் ஆகிய சட்டப்பூர்வ பாதுகாப்பை  இல்லாதொழித்து விடுகிறது.

பாசிச பாஜக கொண்டு வந்த தொழிலாளர் சட்டதிருத்தமானது 16 முதல் 40 வயதுவரை ஒருவர் NEEM திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் தொழிலாளியாக  இருக்கலாம். அதாவது திறம்பட உழைக்கும் காலம் முழுவதும் அற்ப கூலிக்கு உழைத்து முதலாளி கொள்ளை லாபம் அடிக்க  பயிற்சி பெறும் தொழிலாளியாகவே நீடிக்கலாம். குறிப்பிட்ட கால வேலை முறை என்கிற FTE திட்டத்தின் மூலம் சட்டபூர்வமாகவே நிரந்தர தொழிலாளி இல்லை. 300 தொழிலாளர்கள் வரை இருக்கும் நிறுவனம் நிலையாணைகள் பின்பற்றத் தேவையில்லை. தொழில் நிறுத்தம், ஆட்குறைப்பு மற்றும் ஆலைமூடல் ஆகியவற்றிற்கு உரிய காரணங்களை கூறி அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை. தொழிலாளர்களுக்கான வேலை நிறுத்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே இருந்து வந்த எந்த சட்டத்தையும் மயிரளவும் மதிக்காத  முதலாளிகளுக்கு ஏற்ற வகையில் சட்டதிருத்தத்தை செய்து கார்ப்பரேட்டுகளுக்கான  கரசேவையை தீவிரப்படுத்தியுள்ளது.

போராடி வாழ்வதா? போராடாமல் சாவதா?

பொது சொத்துக்கள் தனியார்மயமாவதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை, அவர்களின் குடும்பங்களை முற்றாக பாதிக்கின்ற  பேருந்து, ரயில், விமானம், மின்சாரம், என அனைத்து கட்டணங்களும் நடப்பில் இருப்பதைவிட  மேலும்  உயரும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விலை தொடங்கி அனைத்தும் உயர்ந்து மக்களின் கழுத்தை நெரித்து மூச்சுவிடக் கூடமுடியாத நிலையில் குற்றுயிரும், குலையுயிருமாக இருக்கும் நிலையில், வேலையிழப்பும், கூலி குறைப்பும், வேலை உத்தரவாதமற்ற நிலையும் மேலும் மேலும் அதிகரிக்கும்.  லாபம் எனும் அச்சாணியில்தான் முதலாளித்துவ சக்கரம் சுழல்கிறது என்ற ஊரறிந்த ரகசியத்திற்கு பின்னரும் பொதுச் சொத்துக்களை குத்தகை பெயரில் விற்பது  நாட்டைக் காக்கவே என ’தேசபக்தர்’களான மோடி கும்பல் சத்தியம் செய்கிறது. “குடியிருக்கும் வீட்டை விற்பதே சுகபோகமாய் வாழ்வதற்குதான்” என்பதன் பொருள் மக்களை பலி கொடுப்பதுதான். தேச வளர்ச்சி, தேசபக்தி காலணி கொண்டு மக்களின் கழுத்தை நசுக்கி மாய்ப்பதுதான் மோடி அரசின்  திட்டம்.

இந்த நாட்டின் வளங்களும் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், சிறுதொழில் முனைவோர், நெசவாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர், ஊழியர் என்று நாட்டின் பெரும்பான்மை மக்கள் கார்ப்பரேட் நலன்களுக்காக தொடர்ந்து சூறையாடப்படுகின்றனர். இவ்வாறு சூறையாடப்படும் மக்கள் தனது உரிமைக்காக போராடுவதை நசுக்குவதோடு, கொடூரமான முறையில் ஒடுக்குவது கார்ப்பரேட்- காவி பாசிசம். கார்ப்பரேட் காவி பாசிசத்தின் இருளில் இருந்து விடுதலை பெற தனித்தனி போராட்டங்கள் போதாது. ஒன்றிணைந்த ஐக்கிய, மக்கள் முன்னணி படையை கட்டியமைத்து போராடுவதுதான் ஒரே வழி.

பாசிச பாஜக கொண்டு வந்த வேளாண் சட்டத்திருத்தத்திற்கு எதிராக, ’போராடிப் பலனில்லை’ என்றவர்களின் முகத்தில் கரியைப்பூசி, ’போராடி வெற்றி பெற முடியும்’ என நிரூபித்த    விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய நம்பிக்கையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. அந்த வகையில் வரும் பிப்ரவரி 23,24 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் பங்கெடுக்கவேண்டும். கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தும் வரலாற்றுக் கடமை தொழிலாள வர்க்கத்திற்கு உண்டென உணர்ந்து   வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்போம். கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கி முன்னேறுவோம்.

# கார்ப்பரேட் நலன்களுக்காக சொந்த நாட்டு மக்களையே கொல்லும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!

# மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்! பாசிச பாஜக-வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவோம்!

# ஐக்கிய முன்னணி – மக்கள் முன்னணியை உருவாக்கி ஜனநாயக கூட்டரசு நிறுவுவோம்! புதிய ஜனநாயக இந்தியாவை படைப்போம்! 

 

   

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here