னித இனம் கண்டிராத அளவுக்கு பூமியில் புயல், வெள்ளம், கடும் வெப்பம், காட்டுத்தீ, வறட்சி என பெரும் நாசத்தை கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் சந்தித்து வருகிறது. ஏகாதிபத்தியங்களினால் தூண்டப்படும் உக்ரேன் போர் உள்ளிட்டவையால் நம் உலகத்தின் அழிவு மேலும் தீவிரமாகப்போவதாக ஐ.நா.வின் பொதுச்செயலாளரான அண்டோனியா குட்டெரெஸ் 77 வது பொதுச்சபை கூட்டத்தில் அறிவித்தார்.

வெள்ளத்தால் வந்துள்ள அழிவு!

பெரும் மழை வெள்ளப்பெருக்கால் இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பூமிப்பந்தில் பெரும்பான்மை பகுதிகள் அடுத்தடுத்து அழிவுக்குள்ளாகும் செய்திகள் வந்து கொண்டுள்ளது.

2022 இல் தமிழகத்தில் 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவ மழை 477 மி.மீ கொட்டியுள்ளது. சராசரி 328 மி.மீ.தான். சமீப காலமாக மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரியைப் போன்று கேரளா, கர்நாடகா மாநிலங்கள் தொடங்கி மகராஷ்ட்ரா வரை வரலாறு காணாத மழை வெள்ள சேதம் ஏற்பட்டு வருகிறது.

2022 செப்டம்பரில் டெல்டாவில் பல ஊர்களில் மழைப்பொழிவு ஒரே நாளில் 10 செ.மீ. என பதிவானது. சென்னையில் ஒரு நாளின் அதிகபட்ச மழைப்பொழிவு 9 செ.மீ.தான். ஆனால் 2015 இல் ஒரே நாளில் 41 செ.மீ. கொட்டியதும், சென்னை வெளத்தில் மிதந்ததும், ஜெயாவின் அன்றைய அதிமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி நிவாரணப்பொருள் வழங்கியதும் நமக்கு நினைவிருக்கும்.

இந்த ஆண்டு பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. 2022 ஜூனில் மட்டும் 1,600 பேர் வெள்ளத்திற்கு பலியாகினர். 3 கோடிப்பேர் இடம்பெயர்ந்துள்ளனர்; 10 லட்சம் விலங்குகளும் உயிரிழந்துள்ளன. அப்பகுதிகள் மீண்டு வர 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்சில் 160 கி.மீ. வேகத்தில் வீசிய நோரு புயலில் குடிருப்புகள் மூழ்கின. வீடுகளின் கூரைகள் பிய்த்தெறியப்பட்டது. 6 பேர் உயிரிழந்தனர். 52 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

கடந்த செப்டம்பர் 28 இல் அமெரிக்காவின் புளோரிடாவை 240 கி.மீ. வேகத்தில் தாக்கிய இயன் சூறாவளியால் கான்கிரீட் பாலங்கள் பிய்த்தெரியப்பட்டது. சில இடத்தில் 61 செ.மீ.வரை மழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் முன்கூட்டியே கணித்ததும் நடந்தது.

அதிகரிக்கும் காட்டுத்தீ
வெப்ப அலை தாக்குதல்!

இந்தியாவில் இந்த வருட கோடையில் மார்ச் மாதத்தின் வெப்ப நிலை 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வழக்கத்தை விட 5C அதிகரித்தது. இது கோதுமை விளைச்சலை பாதித்துள்ளது. டெல்லியில் 44C வெப்பம் வாட்டியெடுத்தது. ராஜஸ்தானிலுள்ள சரிஸ்கா புலிகள் சரணாலய பகுதியில் 2,000 ஹெக்டேர் வரையிலான காடு எரிந்து சாம்பலானது.

அமெரிக்காவின் கிழக்கு பகுதியான புளோரிடா இயன் புயலால் வெள்ளக்காடாகிவரும் அதே வேளையில், அதற்கு நேர் மேற்கில் உள்ள கலிபோர்னியாவிலோ 46C வெப்ப அலையும், காட்டுத்தீயும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. ஹீமெட் நகர் வனப்பகுதியில்4,500 ஏக்கர் சாம்பலானது. இது ரிசார்ட்களையும், கிராமங்களையும் அழித்தது.  லாஸ் ஏஞ்சல்சில் 27,000 ஏக்கர் பரப்பு நெருப்பில் சாம்பலானது.

வெப்ப அலைக்கு மேற்கில் 100 பேர் பலியான நிலையில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 500 பேர் திடீர் மரணத்தை சந்தித்தனர். 121F வெப்பம் பதிவானதோடு காட்டுத்தீயில் லிட்டன் நகரின் 90% சாம்பலானது.

ஐரோப்பாவிலும் அதிகரித்த வெப்பம்!

குளிர் பிரதேசமான பிரிட்டனில் முதல்முறையாக 40C வெப்பம், லண்டனில் 43C வெப்பமும் பதிவாகியுள்ளது. அங்கு ரயில் தண்டவாளங்கள் இளகியுள்ளன. லெவல் கிராசிங்கள் சேதமாகின. அதன் சிக்னலுக்கு மேலுள்ள பிளாஸ்டிக் உருகிவிட்டுள்ளது.

பிரான்ஸில் 50,000 ஏக்கர் பரப்புள்ள காடுகள் எரிந்துசாம்பலாகிவிட்டன. போர்ச்சுகலின் பின்ஹோவில் 47C, ஸ்பெயினில் 43C பதிவானதோடு ஒரே வாரத்தில் 1,000க்கும் அதிகமானோர் வெப்ப அலைக்கு பலியாகினர்.

நடப்பாண்டில் சீனாவின் யாங்சே நதியின் வெள்ளப்படுகையான போயாங் ஏரி வறண்டு விட்டது. 60% மழை பொய்த்துவிட்டதோடு, தென்மேற்கு சீனாவில் 66 ஆறுகள் வறண்டுள்ளன. பாய்பே நகரில் 45C வெப்பத்தால் ரெட் அலர்ட் விடப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் கடும் வறட்சியை சந்திக்க உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே தெற்கு மடகாஸ்கரில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்டதால் உண்ண உணவின்றி வெட்டுக்கிளிகளை பிடித்து உண்கின்றனர் அம்மக்கள். அந்நாட்டில் கார்பன் வெளியேற்றம் இல்லை. ஆனால் புவிவெப்பமயமாதலுக்கு பலியாகும் முதல் நாடாக மாறியுள்ளது.

உருகும் பனிப்பாளங்கள்!

பூமியை வெப்ப அலைகள் தாக்காமல் காத்து நிற்கும் ஆர்டிக் துருவப்பகுதியில் 38C வெப்பம் பதிவாகியுள்ளது. இது பனிப்பாளங்களை உருக வைக்கிறது. உலக சராசரியை விட இரு மடங்காக அங்கு வெப்பம் அதிகரித்துள்ளதாக உலக வானிலை மையம் தெரிவிக்கிறது. கிரீன்லாந்து, அண்டார்டிக்கிலும் பனிப்பாளங்கள் வேகமாக உருகுகின்றன.

நிரந்தரமாக உள்ள உறைபனி உருகும்போது மீத்தேனும், கார்பன் டை ஆக்சைடும் வெளியேறும். பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றம் பூமியின் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும். இதனால் பனிப்பாளங்கள் உருகுவதும் வேகமெடுக்கும் ஒரு தொடர்விளைவாக மாறுகிறது.          இதுபோல் உலகெங்கும் உள்ள பனிமலைகளும் உருகிவருகின்றன. இது கடலில் கலந்து புதிய சிக்கலை கொண்டு  வருகிறது.

அதிகரித்துவரும் கடல்மட்டம்!

புவி வெப்பமயமாதலின் விளைவுகள் கடலிலும், கடல் நீரோட்டத்திலும், கடும் புயல்கள் உருவாவதிலும் எதிரொலிக்கிறது. எல் நினா, லா நினா என கடலில் வெப்ப மாறுபாடுகளை வகைப்படுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.

2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சென்னையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மாநகராட்சியும், சி40 கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து ஒரு செயல்திட்ட வரைவு அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின்படி 2100 இல் சென்னை மாநகராட்சியின் 426 சதுரகிலோ மீட்டர் பரப்பில் 67 ச.கி.மீ. (16%) பரப்பு கடலில் மூழ்கும். உலகெங்கும் உள்ள கடலோர நகரங்கள் அழிவை சந்திக்கும். 2050 களிலேயே மாலத்தீவு, அந்தமான் நிகோபர் போன்றவை காணாமல் முழுமையாக நீரில் மூழ்கிப் போகும். மொத்தமாக 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலம் காணாமல் போகும். 15 கோடி மக்கள் சூழலியல் அகதிகளாக்கப்படுவர் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இது எதிர்பாராத ஒன்றல்ல!

பருவநிலை மாற்றம் குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுமார் 20 ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் பற்றி எச்சரித்து வந்துள்ளனர். அதை அலட்சியப்படுத்தியதன் விளைவை உலகம் சந்தித்து வருகிறது.

இப்பொழுது 20 ஆயிரம் பூச்சியினங்கள் பற்றிய தரவுகளை சேகரித்துள்ளனர். கடும் வெப்பம், நவீன விவசாயத்தில் பயன்படுத்தும் ரசாயனங்களால் இப்பொழுது உலகின் பல பகுதிகளில் பூச்சி இனங்களில்  சரிபாதி அழிந்துவிட்டதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

”பூச்சிகளின் அழிவு சுற்றுச்சூழலை மட்டும் பாதிப்பதில்லை. மனிதர்களின் உடல்நலம், உணவு பாதுகாப்பும் அழியும். விவசாயத்தில் மகரந்த சேர்க்கைக்கு  பூச்சிகள் அவசியம்” என்கிறார் இந்த ஆய்வாளர்களுக்கு தலைவரான சார்லி. பருவநிலை மாற்றம் இயற்கையாக நடந்ததல்ல என பலரும் குற்றமும் சாட்டுகின்றனர்.

மனிதனால்’ பேரழிவை நோக்கி
தள்ளப்படும் புவிக்கோளம்!

மனிதர்களால்தான் இந்த பேரழிவு என்று பொதுமைப்படுத்தி சொல்வது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். உலகின் 80% பசுமை இல்ல வாயுக்களை வெளிவிடுவது G 20 நாடுகள்தான். குறிப்பாக ஓசோனை ஓட்டை போட்டு வருவது G8 கூட்டமைப்பில் உள்ள ஏகாதிபத்தியங்கள்தான்.

பேரழிவுகளுக்கு காரணமான ஏகாதிபத்தியங்களின் தொழிற்சாலைகளும், தொழிற்சாலைகான மின் உற்பத்திக்கு அனல்மின் நிலையங்களால் எரிக்கப்படும் நிலக்கரியும்; உலகம் முழுவதும் சுற்றிவரும் அவர்களின் மூலப்பொருட்கள் முதல் சந்தைக்கு அனுப்பப்படும் விற்பனை சரக்குள் வரையிலான வாகனங்களின் பயன்பாடும்தான் முதன்மைக்காரணம்.

”அனல் மின்நிலைய உற்பத்திக்காக நிலக்கரி எரிப்பால் 70%, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் மூலம் 30% கரியமில வாயுக்கள் வெளியிடப் படுகின்றன” என்கிறார் அண்ணா பல்கலையின் காலநிலை மாற்ற மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன்.

1850 க்கு பின்னர்தான், தொழிற்புரட்சி தீவிரமானதற்கு ஏற்ப புவியும் வெப்பமாக தொடங்கியது. எந்த அளவு கச்சா எண்ணை, நிலக்கரியை வெட்டியெடுத்து உபயோகித்தார்களோ அதற்கேற்ப வெப்பமும் அதிகரித்தது. முதலாளித்துவ வளர்ச்சியின் உடன்விளைவு இது.

நம் உலகத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலநிலையுடன் ஒப்பிடும்போது அதிகரித்து வரும் வெப்பத்தை 1.5C யில் வைத்திருக்க வேண்டும் என 2018 இல் அறிக்கை வெளியிட்டது ஐபிசிசி. இது 1988 இல் தொடங்கப்பட்டு 6 ஆண்டுக்கு ஒருமுறை பரவநிலை குறித்து அறிக்கை அளிக்கும் சர்வதேச அமைப்பாகும்.

அதிகரித்து வரும் காடழிப்பும்
கச்சா எண்ணை அகழ்வும்!

ஐ.நா, ஐபிசிசி சொல்வதை ஏகாதிபத்திய நாட்டின் எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகள், நிதி மூலதன கும்பல்களின் காதில் கொஞ்சம்கூட ஏறவில்லை. இன்றும்கூட எண்ணைக்கிணறு, மீத்தேன், பாறை அடுக்கிலுள்ள ஷேல் கேஸ் என்று நாக்கில் எச்சில் ஊற உலகை வலம்வருகின்றன.

காவிரி டெல்டாவில் கிணறு தோண்டி எதை வேண்டுமானாலும் உறிஞ்சிக்கொள் என வேதாந்தாவுக்கு அனுமதி தந்துள்ளது ஒன்றிய அரசு. நெய்வேலி உட்பட நாடு முழுவதுமுள்ள நிலக்கரி அடுக்குகளை வெளியே எடுக்க புதிய சுரங்கங்களை தோண்ட மோடி அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமே அனுமதிப்பதும் தீவிரமெடுத்துள்ளது. கார்ப்பரேட் கொள்ளைக்காக மலைகளும், காடுகளும், காட்டுவாழ் உயிரினங்களும் நேரடியாக அழிக்கப்படுகின்றன.

ஆசியாவின் நுரையீரல் என பாதுகாக்கப்படவேண்டிய போர்னியோ காடு அழிக்கப்பட்டு பாமாயில் உற்பத்திக்கான செம்பனை தோட்டங்கள் முளைத்து பரவுகிறது. இப்படி ஏகாதிபத்தியங்களின் லாபவெறிக்கு இலக்கான இந்தோனேசியாவோ இன்று புயல் வெள்ளத்தால் மிதக்கிறது.

உலகின் நுரையீரலே பற்றி எரிகிறது!

உலகின் நுரையீரல் என புகழப்படும் அமேசான் பள்ளத்தாக்கும், காடுகளும் தப்பவில்லை. மரங்களால் கிடைக்கும் வருவாய் ஒரு புறம்; அதன்பின் அமைக்கப்படும் சோயா தோட்டங்களால் கிடைக்கும் வருவாய் மறுபுறம் என டாலரில் குளிக்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள். மேலும் அங்கும் கச்சா எண்ணையும் கிடைக்கிறது. இத்திட்டங்களுக்கு தடையாக நிற்கும் அமேசானின் பழங்குடிகளோ ஈவிரக்கமின்றி சுட்டுத்தள்ளப்படுகிறார்கள்.

இப்பொழுது அமேசானே மிக மோசமாக காட்டுத்தீயால் கருகுகிறது. பிரேசிலில் 1.7 கோடி உயிரினங்கள் சாம்பலாகின. இங்கு 2020 இல் உலகின் மிகப்பெரிய நீர்நிலையான பண்டானல் பகுதியின் 30% அழிந்தது. 1,60,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள பல்லுயிர் வாழிடம் கார்பரேட்டுகளால் படிப்படியாக விழுங்கப்படுகிறது. இதையெல்லாம் எதிர்க்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆட்சியாளர்கள் கொல்லப்படுகிரார்கள். மாற்றாக நிதிமூலதன கும்பலை ஆதரிக்கும் பாசிஸ்ட்டுகள் அதிகாரத்தில் அமர்த்தப்படுகிறார்கள்.

புவிக்கோளத்தின் முக்கிய வில்லனான அமெரிக்கா!

அமெரிக்காவின் மேலே உள்ள ஓசோனில்தான் ஓட்டை விழுந்துள்ளது. ஆனால் அமெரிக்காவோ இந்தியர்கள் வீட்டில் சமைக்க விறகை எரிப்பதால்தான் கார்பன் உமிழ்வு அதிகமாகிறது என கூசாமல் புழுகியது. ”இது வளரும் நாடுகளுக்குதான் சாதகமாக உள்ளது” என பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்தும் வெளியேறியது அமெரிக்கா. தன் நாட்டின் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆலைகளிலிருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வைக் குறைக்க முடியாது என 2017 இல் அறிவித்தார் அன்றைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

2022 இல் தான் தனிமைப்படுவதை தவிர்க்க, பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் தன் நட்டை இணைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இன்று மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் அழிவை சந்திக்கும் மக்களை நினைத்து மீடியாக்களின் முன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். வெற்று அறிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

இன்று பால்டிக் கடலில் ரஷ்யாவின் நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு பைப்லைனில் கசிவு ஏற்பட்டு மீத்தேன் நேரடியாக வளிமண்டலத்துக்கு செல்கிறது. கடலுக்கடியில் உள்ள பைப்பிலிருந்து வெளியேறும் வாயு போர்ன்ஹோல்ம் தீவுக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் விட்டம் கொண்ட சுழலாக கடலின் மேற்புறத்தில் வெளியேறுவதை ஆய்வாளர்கள் கவலையுடன் பார்க்கிறார்கள். கரியமில வாயுவைவிட ஆபத்தானது மீத்தேன்.

இதுதான் பூமியின் இறுதிக்காலம் என்று சூழலியல் விஞ்ஞானிகள் எச்சரித்து விட்டனர். பூமியின் கனிம வளங்களை கொள்ளையிட்டு சூறையாடும் குறைந்த எண்ணிக்கை கொண்ட ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் கார்ப்பரேட் கும்பல், பூமிக்கு அழிவு ஏற்பட்டால் வேறு கிரகத்திற்கு சென்றுவிடலாமா? அங்கு தண்ணீர் கிடைக்கிறதா என்ற ஆய்வில் இறங்கிவிட்டனர். ஆனால் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு மரணம்தான் சாத்தியம்.

இதற்கு மேலும் இந்த பூமியை காக்க வேண்டும் என்றால் 1.5C அளவுக்கு வெப்பம் அதிகரிக்காமல் தடுக்க இன்றே களமிறங்க வேண்டும்; தவறினால் இனி நம்மால் சரிசெய்யவே முடியாதபடி வெப்பப்பெருக்கம் ஒரு தொடர் சுழற்சியாக நிலைபெற்றுவிடும் என காலக்கெடு விதிக்கப்பட்டு விட்டது. கார்ப்பரேட்களின் லாப வெறியோ பாசிஸ்ட்டுகளை அதிகாரத்தில் அமர்த்தி சுற்றுச்சூழலை அழிப்பதில் மேலும் மூர்க்கமாக இறங்கியுள்ளது. பூமியைக்காக உலக மக்கள் கார்ப்பரேட்களையும், அவர்களின் அடியாள்படையான பாசிஸ்ட்டுகளையும் ஈவிரக்கம் காட்டாமல் தாக்கி வீழ்த்துதும் மீண்டு எழாமல் ஆழமாக குழி தோண்டி புதைப்பதும்தான் ஒரே தீர்வு.

கரிகாலன்

புதிய ஜனநாயகம் (மா.லெ)

அக்டோபர் 2022 மாத இதழ்

படியுங்கள்
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here