குஜராத்  மாநிலம், மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 140-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நேற்று மாலையில் இந்த விபத்து நடந்தது. பாலம் புனரமைத்து 4 நாட்களே ஆன நிலையில் பாலம் இடிந்துள்ளது.

மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் பழுதுபார்ப்பதற்காக ஏழு மாதங்களாக மூடப்பட்டது. குடிமை அதிகாரிகளிடமிருந்து தகுதிச் சான்றிதழ் இல்லாமல், குஜராத்தி புத்தாண்டான அக்டோபர் 26 அன்று இது மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

இந்த பாலம் 1.25 மீட்டர் (4 அடி) அகலமும், 233 மீட்டர் நீளமும் கொண்டது, தர்பார்கத் அரண்மனை பாரம்பரிய ஹோட்டலையும் நகரத்தையும் இணைக்கிறது. இது 1877 இல் இந்தியா பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது கட்டப்பட்டது.

பாலம் இடிந்து விழுந்ததால் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். வீடியோக்கள் பாலத்தின் இடிந்த முனைகளில் பலர் அவநம்பிக்கையுடன் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காட்டியது, சிலர் பாதுகாப்பாக நீந்துவதைக் காண முடிந்தது.

இந்த பாலத்தை புனரமைக்க குஜராத்தின் மோர்பி மாநகராட்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஓரேவா தனியார் நிறுவனம் 2 கோடி செலவில் 8 முதல் 12 மாதங்கள் நடைபெற வேண்டிய வேலைகளை  5 மாதங்களிலேயே முடித்திருக்கிறது. மேலும் நகராட்சியியின் அனுமதி இல்லாமலேயே பாலத்தை அவசர அவசரமாக திறந்திருக்கிறார்கள்.

அஜந்தா கடிகாரங்களுக்கு பெயர் பெற்ற குஜராத்தைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான ஓரேவா குழுமம், 15 ஆண்டுகளாக பாலத்தை பராமரிக்கும் பொறுப்பில் உள்ளது என்று மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் ஜாலா தெரிவித்தார்.

விபத்து நடந்த அன்று பொதுமக்களிடம் கட்டணங்களை பெற்றுக் கொண்டு அனுமதித்திருக்கிறார்கள். 25 பேர் மட்டுமே செல்லக் கூடிய பாலத்தில் 500 பேருக்கு மேல் அனுமதித்திருக்கிறார்கள். பாலத்தில் உள்ளவர்கள் பாலத்தின் கம்பிகளை பிடித்து ஆட்டியதால் தொங்கு பாலத்தின் கம்பிகள் அறுந்து பாலம் சரிந்ததாக சொல்லப்படுகிறது, காணொளியிலும் அப்படியே தெரிகிறது.

இது தான் காரனம் என்று மக்களின் மீது பலி சொல்லிவிட்டு தப்பிவிட முடியாது. பாலத்தை சீரமைத்த தனியார் நிறுவனம் எப்படி அரசிடம் அனுமதி வாங்காமல் பாலத்தை திறந்திருப்பார்கள். நிச்சயம் இதில் அந்த நகராட்சி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கும்.

இது தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குற்றமட்ட கொலை குற்றச்சாட்டின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 304 (கொலை அல்லாத குற்றமான கொலைக்கான தண்டனை) மற்றும் 308 (குற்றமிழைக்க முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலம் திறக்கப்பட்டு நான்கு நாட்களாகியும் அனுமதி வாங்காமல் அவசர கதியில் திறக்கப்பட்ட பாலத்தை பற்றி அதிகாரிகளுக்கு தெரியாதா? தெரியாது என்று சொன்னால் நிச்சயம் யாரும் நம்பமாட்டார்கள்.  அதிகாரிகளுக்கும்  அனுமதியில்லாமல் பாலம் திறந்ததில் தொடர்பிருக்கும். அவர்களை ஏன் குஜராத் அரசு கைது செய்யவில்லை  பாலம் விபத்தில் கொல்லப்பட்டவர்களில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர்.

கடந்த 2016 ஆம் ஆண்டில், மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக விவேகானந்தா சாலை மேம்பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை குறிவைத்து, இது “மோசடி செயல்” என்று கூறினார்.

மேற்குவங்க தேர்தல் ஆதாயத்திற்காக அப்போது பாலம் இடிந்ததை அரசியலாக்கினார் பிரதமர் மோடி. இன்று தனது சொந்த மாநிலத்தில் நடந்த விபத்தை குஜராத்தில் இருந்தும் இன்னும் பார்வையிடாமல் இருக்கிறார்.

இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரசின் தலைவரும்  ராஜ்யசபா எம்பியுமான சுகேந்து சேகர் ராய், “கொல்கத்தா மேம்பாலம் இடிந்து விழுந்ததில் மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி கிண்டல் செய்கிறார். குஜராத்தில் நேற்று புதிதாக புதுப்பிக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் இறந்ததற்கு சில துளிகள் கண்ணீர் வரட்டும் மோடிஜி” என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவுள்ள நிலையில் தொங்கு பாலம் விபத்து ஓட்டுவங்கியை பாதித்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. எங்கு தனது கட்சியை குற்றம் சுமத்தி விடுவார்களோ என்ற அச்சமும் இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை.

இந்த பாலம் விபத்து அரசின் அலட்சியத்தாலும், அக்கறையின்மையினாலும் ஒரேவா தனியார் நிறுவனத்தின் லாப நோக்கத்தாலும் நடந்ததே. விபத்து நடந்த உடனேயே இழப்பீட்டை அறிவித்து மக்களின் கோபத்தை குறைக்க நினைக்கிறார்களேயொழிய  இறந்தவர்கள் குறித்து சிறிதும் அக்கறையில்லாதவர்கள் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்.

பாலத்தை திறக்க எங்களிடம் அனுமதி வாங்கவில்லை என கூறும் மாநகராட்சி அதிகாரி 4 நாட்கள் ஆகியும் ஏன் தடுக்கவில்லை என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது. மக்கள் மீது அக்கறையில்லாத  அரசின் அலட்சியத்தால் நடந்ததே இந்த விபத்து. இதற்கு குஜராத் பாஜக அரசே முதன்மை பொறுப்பு.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here