பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தின் அலிகர் மாவட்டத்தில் உள்ள புலக் கார்கி கிராமத்தில் உள்ள இந்து கோயில்களின் சுவற்றில் “ஐ லவ் முகமது” என்று
எழுதியுள்ள புகைப்படங்கள், வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை சங்கிகள் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இந்து கோவில்களில் “ஐ லவ் முகமது” என்ற வாசகத்தை எழுதியது ஜிசாந்த் குமார், அபிஷேக், ஆகாஷ் மற்றும் திலீப் என்ற இந்து இளைஞர்கள் தான் என்பது இப்பொழுது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களில் ஆகாசை தவிர மற்ற மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகாஷ் என்ற நபர் தலைமறைவாகிவிட்டார்.
ராகுல்-க்கும் குல் முகமது என்ற முஸ்லிம் நபருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை மற்றும் ஜிசாந்து குமாருக்கும் முஸ்தாகிம் என்ற முஸ்லிம் நபருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த இரு இஸ்லாமியர்களையும் போலீசில் மாட்ட வைக்க வேண்டும் என்பதற்காக, கோவில் சுவற்றில், “ஐ லவ் முகமது” என்று இந்து இளைஞர்களே எழுதி வைத்துள்ளனர் என்ற விவரம் இப்பொழுது வெளியில் வந்து நாறிக் கொண்டிருக்கிறது.
இந்த வாசகங்கள் எழுதப்பட்டிருந்தவை குறித்த வீடியோக்களும் போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
அப்படிப்பட்ட ஒரு பதிவில் கோயிலை இஸ்லாமியர்கள் இழிவு படுத்தியதாக கூறியதுடன் “இஸ்லாமியர்களின் மக்கள் தொகை வளர்வதைப் போலவே, இஸ்லாமியர்களின் பயங்கரவாத செயல்களும் வளரும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு நபரின் பதிவில், ஜிகாதிகள் தான் இந்த சம்பவத்தை செய்ததாக குற்றம் சாட்டுவதுடன் கலவரத்தை தூண்டுவதற்காக தான் இது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவை இதுவரை கிட்டத்தட்ட 53 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளதுடன் கிட்டத்தட்ட 2,000 பேருக்கும் மேல் இந்த பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.
இந்துக்களே இந்துக்களின் கோவில்களில் அயோக்கியத்தனமாக எழுதி வைத்துவிட்டு அதை இஸ்லாமியர்கள் தான் செய்ததாக சமூக ஊடகங்களிலும் நேரடியாகவும் சங்கிகள் எப்படி விஷம் பரப்பி கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு துலக்கமான ஆதாரம்.
ஏற்கனவே இந்தியாவின் பல இடங்களில், பல நேரங்களில் இப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களை இஸ்லாமியர்களின் பெயர்களில் சங்கிகளே செய்து மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதை நாட்டு நடப்பை தொடர்ந்து அவதானித்து வரும் அனைவரும் அறிவர்.
படிக்க:
♦ “ஐ லவ் முகமது” என்று சங்கிகளை கதறவிடும் வட மாநில மக்கள்!
♦ மத நல்லிணக்கத்திற்கு துணை நிற்போம்! பார்ப்பன மதவெறி க்கு கொள்ளி வைப்போம்!
ஆனால் அப்படிப்பட்ட அவதானிப்பு, கண்ணோட்டம் இல்லாத சாதாரண பாமர மக்கள் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் செய்து வரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பலியாகின்றனர். அப்படி பலியாபவர்களில் சிலர் நேரடியாக களத்தில் இறங்கி இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். அதேசமயம் இந்தப் பொய் பிரச்சாரத்திற்கு பலியானவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளை மௌனமாக இருந்து ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர்.
மக்களிடையே மத வெறுப்பை பரப்பி மதக் கலவரத்தை தூண்டுவதற்கு சங்கிகள் செய்யும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனில் சங்கிகளின் மதவெறிப் பிரச்சாரத்திற்கு மக்கள் பலியாகாமல் தடுக்க வேண்டும்.
பார்ப்பனர்களை மேலாதிக்கத்தில் வைக்கும் சாதிய தீண்டாமை – ஏற்றத்தாழ்வு மிக்க இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆர்எஸ்எஸ் பாஜகவினர் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அதற்காக மக்களிடையே பொய்களை பரப்பி மக்களை மதரீதியாக பிரித்து மோத விட்டு வருகின்றனர். இந்த உண்மைகளை மக்கள் அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும்.
இது, சங்கிகளின் ஆரிய பார்ப்பன சாம்ராஜ்ய கனவை – இந்துராஷ்டிரக் கனவை, ஆர் எஸ் எஸ் பாஜகவின் பாசிசத்தை முறியடிக்க விரும்புகின்ற, சமூக மாற்றத்தை விரும்புகின்ற, ஜனநாயகத்தை நேசிக்கின்ற அனைவரின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
– குமரன்






