தொழிலதிபர்கள் முதல் தெருவியாபாரிகள் வரை: இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல் அதிகரித்துவருகிறது.

20 கோடி முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயகத்தை இந்துத்துவா பேசும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் ஆபத்துக்குள்ளாக்கி வருகிறார்கள்.

கடந்த 6-ம் தேதி அன்று ID Fresh என்ற தோசைமாவு தயாரிக்கும் நிறுவனமானது ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் விலங்குகளிலிருந்து கிடைக்கப்பெற்ற பொருட்கள் பயன்படுத்துவதை மறுத்து எங்கள் நிறுவனத் தயாரிப்புகள் முற்றிலும் 100% இயற்கையான (100% vegetarian) முறையில் தயாரிக்கப்படுவதாக வலியுறுத்தியிருந்தது.

அவ்வறிக்கைக்கான காரணம் சமீப காலமாக அந்நிறுவனத்தின் தோசைமாவில் மாட்டின் எலும்புகளும், கன்றுக்குட்டியின் வயிற்று நொதிகளும் கலக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பெருமளவு பகிரப்பட்ட வதந்தியே. Whatsapp-ல் இன்னும் கூடுதலாக அந்நிறுவனம் முஸ்லிம்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துவதாகவும், அதன் தயாரிப்புகள் “ஹலால்” என்றும் பகிரப்பட்டு வந்தன.

மாடுகளுக்காக மனிதர்கள் அடித்துக்கொள்ளப்படும் நம்நாட்டில் இம்மாதிரியான வதந்திகள் உணவுப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனத்துக்கு எந்த அளவு பாதிப்பை உண்டாக்கும் என்பதை சொல்லவே வேண்டாம்.

இப்படிப்பட்ட வதந்தி ஏன் பரப்பப்பட்டது என அறிய ரொம்பவும் சிரமப்படுத்த தேவையில்லை. ஏனென்றால் என்ற அந்த நிறுவனம் முஸ்தபா மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களான அப்துல் நாசர், ஷம்சுதீன், ஜாபார், மற்றும் நௌசாத் ஆகிய முஸ்லீம் இளைஞர்களால் நடத்தப்படுவதுதான். முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தின் மீதான கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போய்விட்ட தாக்குதல்களின் சமீபத்திய உதாரணம்தான் இது, இதில் தொழிலதிபர்கள்கூட விதிவிலக்கல்ல.

From industrialists to hawkers: In India, Muslim livelihoods are coming under increased attack
PC Musthafa of ID Fresh Food (left); a Muslim bangle seller in Indore being assaulted by Hindutva supporters (right). | Musthafa (PC Musthafa via Facebook); Bangle seller (screengrab via Twitter).

தங்கள் அன்றாட வேலைக்குச் செல்லும் முஸ்லீம் உழைக்கும் மக்கள் மீதான இந்துத்துவ குண்டர்கள் நடத்தும் தாக்குதல் குறித்த வீடியோக்கள் இதற்கு முன்பு வலம் வந்தன. மத்தியபிரதேசத்தில் ஒரு முஸ்லீம் வளையல்காரர் இந்துக்கள் பகுதியில் வளையல் விற்றதற்காக தாக்கப்பட்டார். ஒரு முஸ்லீம் பழையஇரும்பு வியாபாரி “ஜெய் ஸ்ரீராம்” சொல்லச்சொல்லி தாக்கப்பட்டார். உத்திரபிரதேசத்தில் தோசை விற்கும் ஒரு முஸ்லீம் தனது கடைக்கு இந்துக்கடவுளின் பெயரை வைத்திருந்ததற்காக தாக்கப்பட்டார். லக்னோவில் ஒரு குதிரைவண்டிக்காரர் ஒரு முஸ்லீம் கட்சியின் சின்னத்தை தனது வண்டியில் வரைந்து வைத்திருந்ததாக “பாகிஸ்தான் ஒழிக” என்று சொல்லச்சொல்லி தாக்கப்பட்டார்.

தங்கள் அன்றாட பிழைப்புக்காக பாடுபடும் முஸ்லிம்களின் மீதான தொடர் தாக்குதல்களின் சமீபத்திய அலைதான் நாம் மேலே காணும் சில உதாரணங்கள்.

கடந்த சில வருடங்களாக இறைச்சி குறிப்பாக மாட்டிறைச்சியை மையப்படுத்தி தீவிரமான அரசியல் நடந்துவருகிறது. உத்திரபிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தபிறகு பா.ஜ.க. அரசு பல இறைச்சிக்கூடங்களையும், கடைகளையும் முறைகேடாக நடப்பதாக சொல்லி மூடியது. அம்மாநிலத்தில் விதிமுறைகளை மீறி நடக்கும் தொழில்கள்தான் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனபோதிலும் குறிப்பாக இறைச்சி கடைகளைமட்டும் யோகி அரசு மூடக்காரணம் அது முஸ்லிம்களால் நடத்தப்படுபவை என்பதால்தான்.

ஆகஸ்ட் 30 அன்று மதுரா நகரை புராதன நகரமாக அறிவித்து, ஒரே அடியில் இறைச்சிக்கடைகளுக்கு தடை விதித்து ஆயிரக்கணக்கான முஸ்லீம் குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்துள்ளது யோகி அரசு.

இதைவிட மோசமானது என்னவென்றால், வடஇந்தியாவிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மாடு விற்பனையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீதான கும்பல் தாக்குதல்கள். 2017-ல் பெஹ்லுகான் என்ற ராஜஸ்தான் பால் வியாபாரி மாடுகளை லாரியில் ஏற்றிச்சென்றதற்காக அடித்தே கொல்லப்பட்டார். அக்கொலையாளிகள் 2019-ல் எந்தவித தண்டனையும் விதிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார்கள். மாடுகளை வண்டிகளில் கொண்டுசெல்லும் முஸ்லிம்களின்மீதான தாக்குதல் என்பது இன்றைக்கு ஒரு அன்றாட செய்தியாகிவிட்டது.

மிகவும் கவலைதருவது என்னவென்றால், இந்திய மக்களின் ரத்தத்தில் ஊறியிருக்கும் சாதி/மத ரீதியிலான உணர்வைப் பயன்படுத்தி கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்றைக்கூட முஸ்லிம்களை தாக்கும் ஆயுதமாக இந்துத்துவா குண்டர்கள் மாற்றிவிட்டதுதான். கோவிட் முதல் அலையில் கைவண்டியில் பழங்களை விற்கும் முஸ்லிம்கள்தான் நோயைப் பரப்புகிறார்கள் என்ற அவதூறான மதவெறியூட்டப்பட்ட வதந்திகளை நாடு கண்டது. உத்திரபிரதேசத்தில் மஹோபா மாவட்டத்தில் இந்துத்துவ காலிகள் கும்பலாகச் சேர்ந்து முஸ்லீம் வியாபாரிகளை துரத்தி துரத்தி அடித்தனர்.


இந்தியாவில் முஸ்லிம்கள் பொருளாதாரரீதியாக ஓரம்கட்டப்படுவது ஒன்றும் புதிது இல்லை. 2005-ல் சச்சார் (Sachar) கமிட்டி முஸ்லிம்களின் பொருளாதார நிலை ஒருசில அளவுகோல்களின்படி தாழ்த்தப்பட்டவர்களைவிட மோசமாக உள்ளதாக கூறியது.

2018 ஆம் ஆண்டு ஆய்வின்படி நாட்டிலேயே தற்கால முஸ்லிம்களின் சமூக இடப்பெயர்வுதான் அவர்களின் பெற்றோரைவிட மிகக்குறைவாக உள்ளதாகத் தெரிவிக்கிறது.

மத அடிப்படையில் நிரந்தர வேலை, ஊதியம் உள்ள வேலைகளில் முஸ்லிம்கள்தான் மிகக்குறைந்த அளவில் அதாவது மூன்றாம் இடத்தில் உள்ளதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு (National Sample Survey) 2009-10 கூறுகிறது. பெரும்பாலான முஸ்லிம்கள் நிரந்தரமற்ற வேலை மற்றும் குறைந்த கூலியைத் தரும் வேலைகளில்தான் உள்ளனர்.

முரண்நகையாக, பல அரசியல்வாதிகளும் முஸ்லிம்களை கைதூக்கிவிடுவதற்குப் பதிலாக அவர்களை இன்னும் கீழே தள்ளி விட்டுத்தான் வந்துள்ளார்கள். முஸ்லிம்களுக்கு பல சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கடந்த பத்து வருடங்களாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப்பார்த்தால் இது முற்றிலும் பொய்யே என்றபோதும் இப்பிரச்சாரம் முஸ்லிம்களை பெரும்பான்மை சமூகத்திடமிருந்து ஓரம்கட்டவே தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.

இவையெல்லாம் சேர்த்து அப்பாவி முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் ஒரு இயல்பான விசயமாகவே பார்க்கப்படுகிறது.

2014ஆம் ஆண்டுக்கு பிறகான பாஜகவின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குடியுரிமைச் சட்டங்கள் முஸ்லிம்களை மதரீதியாக சோதனைக்குட்படுத்தி அவர்களை ஒரு இரண்டாம்தர குடிமக்களாக்குவதையே நோக்கமாகக்கொண்டுள்ளது. அச்சட்டங்கள் தற்காலிகமாக பல தடைகளை சந்தித்தாலும் மற்றொருபுறத்தில் பொருளாதார ரீதியில் முஸ்லிம்களை ஓரங்கட்டுவதன் மூலம் அவர்கள் தங்களின் வாழும் உரிமையை விட்டுத்தரும் வகையில் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இந்திய ஜனநாயகம் கடந்த 70 ஆண்டுகளாக பல சோதனைகளைச் சந்தித்து வந்தாலும், அதன் 20 கோடி முஸ்லிம்களையும் தங்களின் வாழ்க்கைக்கான எந்த உத்திரவாதமும், நம்பிக்கையும் இன்றி இரண்டாம்தர குடிமக்களாக்க மாற்றும் முயற்சிகள்தான் இந்திய ஜனநாயகத்துக்கு மிக மோசமான சோதனையாக இருக்கப்போகிறது.

-Shoaib Daniyal

தமிழில்: செந்தழல்

நன்றி: scroll.in

https://scroll.in/article/1005133/from-industrialists-to-hawkers-in-india-muslim-livelihoods-are-coming-under-increased-attack

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here