மருது சகோதரர்கள், ஊமைத்துரை, சிவத்தையா
தொடர்ச்சி…
கோட்டை கட்டி முடிக்கப்பட்ட மறுகணமே வெள்ளையர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்யப்பட்டது. நெல்லைச் சீமையில் வெள்ளையர்களின் நேரடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாளையங்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் மீண்டும் கைப்பற்றப் பட்டன. தூத்துக்குடி துறைமுகமும் கைப்பற்றப்படுகிறது. அங்கிருந்த வெள்ளை அதிகாரி மேஜர் பானர்ட்டின் மனைவி உயிர்ப்பிச்சை கேட்டதால் யாரையும் கொலை செய்யாமல் மன்னித்து அனுப்புகிறார் ஊமைத்துரை. கிளர்ச்சியாளர்களின் குடிவழியையே அழித்து வந்த வெள்ளையர்களிடம் எக்காலத்திலும் காணக் கிடைக்காத பண்பு இது. கர்னல் மெக்காலே தலைமையில் பாஞ்சாலங்குறிச்சியை அழிக்க வந்த படையை குலசேகரநல்லூரில் மறித்துத் தாக்கி ஓட வைத்தார் ஊமைத்துரை. 50 நாட்கள் கழித்து கர்னல் அக்னியூ தலைமையில் பெரும் படையும், பீரங்கிகளும் வந்த பிறகே அந்தக் கோட்டை தன் இறுதி மூச்சை விட நேர்ந்தது. கோட்டைக்குள்ளேயும் வெளியேயும் வேல் கம்பையும் வாளையும், துப்பாக்கியையும் பிடித்தவாறு 1500 பிணங்கள் கிடந்ததாகவும், பிணக்குவியலுக்குள்ளே இருந்தும் பாஞ்சை வீரர்கள் தங்களை வாட்களுடன் தாக்கியதாகவும் வெள்ளையர்கள் அச்சத்துடன் குறிப்பிடுகின்றனர்.
குற்றுயிராய் தப்பிய ஊமைத்துரையை மக்கள் காப்பாற்றுகின்றனர். எஞ்சிய வீரர்களுடன் ஊமைத்துரையும், சிவத்தையாவும் மே 28ஆம் தேதி கமுதிக்கு வந்து சேருகிறார்கள். சின்ன மருதுவும், பெரும் திரளான மக்களும் அவர்களை வரவேற்று சிறுவயலுக்கு அழைத்துச் செல்கின்றனர். ”ஐரோப்பியர்களைக் கண்ட இடத்தில் அழித்து விடுங்கள்” என்று மக்களுக்கும், ஆங்கில இராணுவத்தின் இந்தியச் சிப்பாய்களுக்கும் பின்னாளில் பகிரங்கமான பிரகடனத்தை வெளியிடும் சின்ன மருது ஊமைத்துரையை வரவேற்கிறார். இதன் விளைவாக வெள்ளையரோடு ஏற்பட இருக்கும் போரையும் மிகுந்த அலட்சியத்துடன் வரவேற்கிறார். மருதிருவரின் இந்த வீரத்திற்கு நீண்ட பாரம்பரியமே இருக்கிறது.
மருதிருவர் என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள் பரம்பரை ஆட்சியுரிமை பெற்ற பாளையக்காரர்கள் அல்லர். அவர்கள் திறமையாலும், உழைப்பாலும், போராட்டத்தாலும், மக்களின் அன்பினாலும் உருவெடுத்த உண்மையான மக்கள் தலைவர்கள். இராமநாதபுரம், நரிக்குடிக்கு அருகே முக்குளம் எனும் கிராமத்தில் மொக்க பழனியப்பன் சேர்வை எனும் சாதாரணப் படைவீரனுக்கும் பொன்னாத்தாள் எனும் எளிய பெண்மணிக்கும் பிறந்த மருது
சகோதரர்களை அவர்களுடைய தந்தை, சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஆரம்பத்தில் மன்னனது குதிரைகளையும், வேட்டை நாய்களையும் பராமரிக்கும் எளிய வேலைகளை மருதிருவர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கட்டாய வரி வசூல் கொள்ளை நடத்தி வந்த ஆடம்பர சுகபோகியான ஆற்காட்டு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களது இராணுவத்தைப் பயன்படுத்துகிறான். கொள்ளையில் தங்கள் பங்கை அதிகரிப்பதற்காக கிழக்கிந்தியக் கம்பெனிக்கான வரி பல இடங்களில் 100 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
இப்படித்தான் ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றுகிறது. அடுத்து சிவகங்கை. வெள்ளையன் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் கொல்லப்படுகிறார். சிவகங்கைச் சீமையின் வீர வரலாற்றில் முதல் களப்பலியாகிறார். அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதிருவரும் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்கின்றனர்.
விருப்பாட்சியை உள்ளடக்கிய திண்டுக்கல் பகுதி அப்போது ஹைதர் அலியின் ஆட்சியில் இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் சிவகங்கையை மீட்பதற்கு ஹைதரிடம் உதவி கோருகிறார். சிவகங்கை மட்டுமல்ல ஏனைய பாளையங்களையும் விடுதலை செய்வதாக ஹைதரும் உறுதியளிக்கிறார். இதனிடையில் அமைச்சர் மரணமடைய பாளையத்தை மீட்கும் பொறுப்பு மருது சகோதரர்களிடம் வருகின்றது. இந்தப் போராட்டத்தினூடாகத்தான் இவர்கள் காலனியாதிக்க எதிர்ப்பில் உறுதியடைகின்றனர். நவாப்பின் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்ய சிவகங்கை மக்களைத் திரட்டுகிறார் சின்ன மருது.
இராமநாதபுரம், சிவகங்கை மக்கள் கிளர்ச்சி செய்கின்றனர். மருதிருவரின் தலைமை, போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறது. இதே காலகட்டத்தில், 1780ஆம் ஆண்டு வெள்ளையர்கள் மீது படையெடுக்கிறார் ஹைதர். ஹைதரின் திண்டுக்கல் படைத்தளபதி சையத் சாகிபு அளித்த சிறு படையின் உதவியுடன் மருதிருவரும் சிவகங்கையை மீட்க போர் தொடுக்கின்றனர். சிவகங்கை மீட்கப் படுகிறது. வெள்ளச்சி அரசியாகவும், பெரிய மருது தளபதியாகவும், சின்ன மருது அமைச்சராகவும் பதவியேற்கின்றனர். மருதிருவரின் வீரம் மக்களிடையே புகழாகவும் செல்வாக்காகவும் பரவத் தொடங்குகிறது.
ஆத்திரம் கொண்ட நவாப், கம்பெனியின் உதவியுடன் சிவகங்கை மீது படையெடுக்கிறான். 1783-இல் கர்னல் புல்லர்டன் தலைமையிலும், 1789இல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் தலைமையிலும் கம்பெனிப் படைகள் சிவகங்கையை ஆக்கிரமிக்க முயன்றன. இத்தாக்குதல்களின் போது தற்காலிகமாகப் பின்வாங்கிய மருதிருவர் கம்பெனிப் படைகள் அகன்றதும் தமது பாளையத்தை மீண்டும் கைப்பற்றுகின்றனர். இறந்து போன மன்னர் முத்துவடுக நாதரது மகள் வெள்ளச்சியை, அவளது தந்தை வழி உறவினரான வெங்கம் பெரிய உடையத் தேவருக்கு மணம் செய்து கொடுத்து, அவரையே சிவகங்கையின் அரசராகவும் ஆக்குகின்றனர்.
இக்காலகட்டத்தில் மாவீரன் திப்புவை ஒழிப்பதற்குக் கவனம் செலுத்தி வந்த கம்பெனி சிவகங்கையோடு முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. மருதிருவரிடம் ஒத்துப் போகுமாறு நவாபையும் அறிவுறுத்தியது. இப்படி வெள்ளையர்கள் மற்றும் ஆற்காட்டு நவாபின் சூழ்ச்சிகள், படையெடுப்புக்களை முறியடித்து சிவகங்கையைக் காப்பாற்றிய மருதிருவர் 1790 முதல் அமைதியாக ஆட்சி புரிந்தனர்.
“சின்னமருது எளியவர்; செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர்; அனைவரிடமும் வேறுபாடின்றி பழகும் இயல்பினர்; அவரது தலையசைப்பையே சட்டமாகக் கருதி அதற்குக் கீழ்ப்படிய மக்கள் தயாராக இருந்தனர்; தனக்கென ஒரு மெய்க்காப்பாளனைக் கூட வைத்துக் கொள்ளாத அவரை 1795 இல் அவரது சிறுவயல் அரண்மனையில் சந்திக்கச் சென்றேன். எளிதில் மக்கள் சென்று வரும் வகையில் அமைந்திருந்தது அவ்வரண்மனை. அவருக்குக் கடவுளின் அருள் கிட்ட வேண்டும் என மக்கள் வேண்டியதையும் கேட்டறிந்தேன்… மருதிருவர் நினைத்திருந்தால் வெள்ளையர்களுடன் சமரசமாப்போயிருக்கலாம். அவர்களுக்கு நாங்கள் எந்தக்குறையும் வைக்கவில்லை. எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை” என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் தனது நூலில் குறிப்பிடுகின்றான்.
தொடரும்…