தமிழ்நாட்டில் ஆட்சிபுரியும் தமிழக வெற்றிக் கழகம் தனியார்மய நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. அதிமுக, திமுக என தமிழகத்தை ஆண்ட இரண்டு கட்சிகளுமே தனியார்மய நடவடிக்கைகளில் ஈடுபட்ட கட்சிகள் தான். ஆனால் “மாற்றம்” எனக் கூவிக் கொண்டு அதிகாரத்திற்கு வந்த தவெக அரசு தனியார் மயத்தை தீவிரப்படுத்துவதை தான் மாற்றம் என்கிறது.
இந்தியாவில் மறுகாலனியாக்க நடவடிக்கை 90களில் புதிய பொருளாதார கொள்கை நடைமுறைபடுத்தப் பட்டபோதே தொடங்கி விட்டது. இந்திய ஒன்றியத்தை நெடுங்காலமாக ஆண்டுவந்த காங்கிரசின் நரசிம்மராவ் தொடங்கி மன்மோகன்சிங் வரை பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதை தொடர்ந்து 2014-ல் அட்சிக்கு வந்த மோடி அதை இன்னும் துரிதப் படுத்தினார். பொதுத்துறை நிறுவனங்க்களை செயல்படால் முடக்கி அந்த வாய்ப்பை தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவினார்.
இரயில்வேயை நேரடியாக தனியார் மயமாக்காமல் அவுட்சோர்சிங் முறையை அனைத்து வேலைகளிலும் திட்டமிட்டு நுழைத்தார்கள். சில ரயில்நிலையங்களின் பராமரிப்பு தனியாருக்கு கொடுக்கப்பட்டன. அதேபோல் சில ரயில்களும் அதானி உள்ளிட்ட தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கு தாரைவார்க்கப்பட்டது.
அதேபோல் ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்களின் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அனைத்து அரசு துறைகளிலும் தனியாரின் ஆதிக்கம் கோலோச்சி வருகிறது. பேருக்கு தான் கவர்மெண்ட் அதற்கு ஒரு பிரதமர். ஆனால் அந்த பிரதமரே கார்ப்பரேட்டுகளின் சர்வண்ட் என்கிற நிலையில் தான் இந்தியா உள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகளும் மோடியின் பார்முலாவை பாலோ செய்தன. கேரளாவை ஆள்வது இடதுசாரி அரசாங்கம் என்று சொல்லிக் கொண்டாலும் விழிஞ்சியத்தில் அதானிக்கு துறைமுகத்தை தாரை வார்த்தது. தமிழ்நாட்டில் திமுக அதனை பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் தனியார் மயத்தை அமல்படுத்தியது. சரி ‘தளபதி விஜியண்ணா’ வந்துட்டாரு இனிமேல் மாற்றம் தான் என்று அவரின் தம்பி தங்கைகள் நினைத்துக் கொண்டிருக்கையில் அதெல்லாம் ஒரு மாற்றமும் கிடையாது, மோடிஜியின் பார்முலாவை தான் நான் பாலோ செய்வேன் என்று தனியார்மய நடவடிக்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகிறார்.
படிக்க:
♦ தூய்மைப் பணி தனியார்மயம்: ‘தீய சக்தி’யின் வழியில் ‘தூய சக்தி’!
♦ தனியார் கொள்ளையர்களின் பிடியில் பள்ளி, கல்லூரிகள்! விடிவு எப்போது?
ஆட்சிக்கு வந்த அடுத்த மாதத்திலேயே திமுக ஆட்சிக் காலத்தில் டெண்டர் கோரப்பட்டு நிலுவையில் இருந்த சேலம் மாநகருக்கு தண்ணீர் சப்ளை மற்றும் பராமரிப்பு கட்டணம் வசூல் அனைத்தும் பிரான்ஸ் நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து விவரமாக நமது தளத்தில் எழுதியிருந்தோம்.
அடுத்து அதே திமுக ஆட்சியில் தூய்மைபணியில் தனியார் மயத்தை எதிர்த்து சென்னையில் தூய்மைப்பணியாளர்கள் போராடிய போது போராட்டக்காரர்களை பனையூர் பங்களாவுக்கு அழைத்து ஆதரவு தெரிவித்த திரு ஜோசப் விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணியை தனியாருக்கு தாரை வார்க்க டெண்டர் விட்டார். தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வலுக்கவே தற்சமயம் பின்வாங்கியுள்ளார்.
அதேபோன்று மின் கட்டண கணக்கீடு பல மாவட்டங்களில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறை படுத்த உள்ளதாக Times Of India(https://timesofindia.indiatimes.com/city/chennai/tnpdcl-to-outsource-meter-assessments-to-curb-electricity-bill-discrepancies/amp_articleshow/134486874.cms?utm_source=chatgpt.com) தனது இணைய செய்தியில் பதிவிட்டுள்ளது.
படிக்க:
♦ தனியார் மயமாக்கப்படும் தண்ணீர்! கோவை மாநகராட்சியில் முன்னோட்டம் பார்க்கிறதா அரசு?
♦ சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: சேலம் மக்களின் குடிநீர் உரிமை பறிப்பு!
அரசின் ஒரு நிறுவனத்தை நேரடியாக தனியார்மயமாக்கினால் பிரச்சினை வரும் என்பதால் அதன் முக்கிய அமைப்புகளை தனியாரிடம் ஒப்படைக்கும் வேலைகளில் ஒன்றிய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. உதாரணமாக அரசு மருத்துவனையை நேரடியாக தனியார்மயப்படுத்தினால் சிக்கல் வரும் என்பதால் மருத்துவர்கள் தொடங்கி, ஸ்கேன் செய்வது, பணியாளர்களை நியமிப்பது வரை அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தான் போக்குவரத்துத் துறையிலும் தனியார்மயம் நுழைந்துள்ளது. தூய்மைப்பணி, மின்சாரத்துறை, பொதுப்பணித் துறை என அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த பணியாளர்கள் அவுட் சோர்சிங் முறையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதுவும் தனியார்மயத்தின் ஒரு பகுதிதான். ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்த கதையாக பொதுத்துறை நிறுவனங்களை விழுங்க காத்திருக்கிருக்கின்றன கார்ப்பரேட்டுகள். அதற்கு துணைபுரிகிறார்கள் ஜோசப் விஜய் போன்ற கார்ப்பரேட் அடிவருடிகள்.
விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவாளவன் கூறியது போல் ஆர்.எஸ்.எஸ்-ன் கள்ளக்குழந்தையான தவெக பாசிச மோடியின் வழியில் தனியார்மய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் வெளிப்பாடு தான் சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க மோடிக்கு எழுதிய கடிதம்.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறை சார்ந்த வேலைகள் தனியார் மயமாக்கப்படக் கூடாது. அரசுத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. படித்து வேலையில்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசினால் வேலைவாய்ப்பினை வழங்க முடியும். ஆனால் தனியார் மய நடவடிக்கையினால் அதே வேலையை வேலையில்லாத இளைஞர்கள் வெறும் 10 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைசெய்யும் அவல நிலையை அரசு உருவாக்கியுள்ளது.
நீங்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசு தான் இதை செய்கிறது என்று வேடிக்கை பார்க்காமல் இதற்காகவா உன்னை தேர்ந்தெடுத்தோம் என கேள்வி எழுப்புங்கள். எந்த அரசு அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்கள் வேலை செய்வது முதலாளிகளுக்கு தான். அந்த முதலாளிக்கு எதிராக போராடும் போது உங்களுக்காக உங்கள் அண்ணன் நிற்க மாட்டார். முதலாளிகளுக்கு ஆதரவாக அண்ணனின் போலீஸ்படை வந்து நிற்கும். இதனை உணர்ந்து சாதி, மத, கட்சி பேதங்களை தூக்கியெறிந்துவிட்டு ஓரணியில் இணைந்து நின்று தனியார்மய நடவடிக்கைகளை முறியடிப்போம்.
- நலன்






