ந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து அதல பாதாளத்திற்கு வீழ்ச்சி அடைந்து கொண்டுள்ளது. 2026-27 ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி அவர்களே முன் வைத்த 7.7%-லிருந்து 6.0%-மாக வீழ்ச்சியடையும் என மூடிஸ் ஆய்வு நிறுவனம் முன் வைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடு, சொந்த நாட்டு மக்களுக்கு தேவையான உண்ண உணவு; இருக்க இருப்பிடம்; உடுத்த உடை; படிப்பதற்கு கல்வி வசதி; மருத்துவம்-சுகாதாரம் உள்ளிட்ட பொருளாயத தேவைகளை ஈடு செய்ய முடியாத அளவிற்கு நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இலங்கை, லெபனான், கானா, ஜாம்பியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் வரிசையில் இந்தியாவும் சென்றுக் கொண்டுள்ளது என்பதை அதன் கட்டுப்படுத்த முடியாத கடன் நிரூபித்துக் கொண்டுள்ளது. பாசிச மோடி ஆட்சிக்கு வந்தது முதல் உள்நாட்டு உற்பத்தியானது மக்களின் தேவைக்காக நடத்தப்படுவது கைவிடப்பட்டது. கார்ப்பரேட் முதலாளிகள் அதுவும் குறிப்பாக தேசங்கடந்த தரகு முதலாளிகளான அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட பொருளாதாரம் பெரும்பான்மை மக்களை மேலும் மேலும் வறுமையிலும், தீராதக் கடனிலும் ஆழ்த்தியுள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் சில லட்சங்கள் கடன் பெறுவது; கடனுடனேயே தனது வாழ்நாளை கழிப்பது என்ற நிலையில் துவங்கி நாட்டின் பொருளாதரமே 210 லட்சம் கோடி ரூபாய் கடனுடன் உலகில் மிகப்பெரிய கடனாளி நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. பணவீக்கம் 5.6%-மாக அதிகரித்து ரிசர்வ வங்கியின் உச்சவரம்பை தொட உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.20 ரூபாயாக சரிந்துள்ளது.

இந்தியாவின் இந்த நிலைமையை பார்த்து அன்னிய முதலீடு என்று சொல்லக்கூடிய கார்ப்பரேட் முதலாளிகளின் முதலீடு மற்றும் முதலீட்டாளர்கள் என்று சொல்லக்கூடிய பங்கு சந்தை சூதாடிகள்; வர்த்தக தரகர்கள் ஆகியோர் படிப்படியாக இந்தியாவிலிருந்து தனது முதலீட்டை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள். இந்த ஆண்டு துவக்கம் முதல் இந்த தொகையானது 2.2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாகும்.

பாசிச மோடி தான் ஆட்சி பொறுப்பேற்று பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா பல பெரிய மாற்றங்களை கண்டுள்ளது. அந்த மாற்றங்களின் மையப் புள்ளியாக ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனே இருந்து வருகிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பல தசாப்தங்களாக வளர்ச்சி பலன்களை பெறாமல் விளிம்பு நிலையில் இருந்த மக்களுக்கு அனைத்து உதவிகளும் நேரடியாக கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளது.

படிக்க: வெளியேறும் அன்னிய முதலீடு! வீழ்ச்சியில் பங்குசந்தை? திவால் நிலையை நோக்கி இந்திய பொருளாதாரம்!

மாதந்தோறும் 81 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச உணவு தானியங்களை பெற்று வருகின்றனர். ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் நாலு கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ‘ஜல்ஜீவன் மிஷன்’ திட்டத்தில் கீழ் 10.5 கோடிக்கு அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 32 கோடிக்கும் அதிகமான பெண்கள் ‘ஜன் தன்’ வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளனர். சுமார் மூன்று கோடி பெண்கள் ‘லட்சாதிபதிகளாக’ மாறியுள்ளனர். அதேவேளையில் நாடு முழுவதும் சுமார் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு 91 லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழுக்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2 கோடி இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியை பெற்று வருகின்றனர். ‘முத்ரா’ கடன் திட்டத்தின் மூலம் 40 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது.

அரசு முன்னெடுப்புகள் மூலம் 10,000 மேற்பட்ட ‘ஸ்டார்ட் அப்புகள்’ அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையில் 70 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 60 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச சிகிச்சைகளை பெற்றுள்ளனர். ‘ஜன் அவுஷதி’ மையங்களின் மூலம் சுமார் 19,000 மலிவு விலை மருந்துகள் கிடைக்கின்றன. வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி அரசு தொடர்ந்து முன்னேறும்” என்று வெளியிட்டுள்ளார்.

படிக்க: நெருக்கடியை நோக்கி இந்தியப் பொருளாதாரம்!

இந்திய ஒன்றியத்தின் பிரதமர் என்ற முறையில் புள்ளி விவரங்களை அடுக்கி மக்களை ஏய்ப்பதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது என்றாலும், உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்லுகின்ற கடமையும் பொறுப்பும் எமக்கு உள்ளது.

இந்த பிரதமரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விலைவாசி உயர்வு அதிகரித்துக் கொண்டே செல்வதால், மக்கள் வாழ்வதற்கு கடும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர். உழைப்பு நேரம் 8 மணி நேரம் என்பதிலிருந்து 14 மணி நேரமாக மாறியுள்ளது. குடும்பம் குடும்பமாக வேலை செய்து என தனது அடுத்த வேலை சோத்துக்கும், வாங்கிய கடனுக்கும் உழைப்பதற்காகவே மக்கள் அலைபாய்ந்துக் கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள 3214 கிலோ மீட்டர் குறுக்களவில் வசிக்கின்ற மக்கள் தான் வாழ்வதற்கு அதாவது தனது கடன்; தனது குடும்பத்தின் தேவைகள் ஆகியவற்றை ஈடு கட்டுவதற்கு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயர்ந்து சென்று நரகத்தை விட கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படிக்க: திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! கார்ப்பரேட் காவி பாசிச கும்பலை வீழ்த்துவதே தீர்வு!

சுமார் 1 முதல் 5 சதவீதத்தில் உள்ள மேட்டுக்குடியினர் மற்றும் முதலாளிகள், தரகு முதலாளிகள்; தேசங்கடந்த தரகு முதலாளிகள்: அதிகார வர்க்கத்தினர் ஆகியோரின் தரமான வாழ்க்கையை முன்னிறுத்தி இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வருவதாகவும், முன்னேறி வருவதாகவும் தொடர்ச்சியாக பித்தலாட்டத்தை நடத்தி வருகிறது ஆளுகின்ற பாசிச பாஜக கும்பல்.

ஆர்எஸ்எஸ் பாஜக கடைபிடிக்கின்ற கார்ப்பரேட் ஆதரவுப் பொருளாதாரக் கொள்கையானது, பெரும்பான்மை மக்களின் இரத்த வேர்வையை, உழைப்புச் சக்தியை குறைந்த கூலிக்கு உறிஞ்சி கொழிப்பதுடன், அவர்கள் உயிர் வாழ்வதற்கான உத்தரவாதத்தையும் படிப்படியாக பறித்து வருகிறது. பெரும்பான்மை மக்கள் பட்டினி சாவுக்கும், வறுமை, கடன், குடும்பத்துடன் ஒன்றாக வாழ முடியாத அவல நிலை, நாடோடியாக ஊர் ஊராக திரிவது, புலம் பெயர்ந்து நாட்டிற்குள்ளேயே அலைந்து திரிவது, நாட்டிற்கு வெளியில் சட்டவிரோதமாகவும், சட்டப்பூர்வமாகவும் குடியேறுவது என்று வாழ்க்கை அவலத்தின் உச்சகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமை வெளியில் தெரியாத அளவிற்கு, ‘கோடீ மீடியா’ கொத்தடிமை ஊடகங்கள் மக்களை மூளைச் சலவை செய்து வருகின்றன, இதனால் மக்கள் சமூகத்தின் பொதுப் புத்தியில் தாங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்ததை விட முன்னேறிக் கொண்டிருப்பதாக திருப்திப் பட்டுக் கொண்டுள்ளனர். கடன் வாங்கியாவது வீடு கட்டிக் கொள்வது; நுகர்வு பொருள்களை வாங்கி அனுபவிப்பது; தேவையை அதிகரித்துக் கொண்டே செல்வது ஆகியவற்றை ஈடுகட்டுவதற்கு தனது உழைப்பு சக்தியை அதிக நேரம் விற்பது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு இருந்தாலும் இதை கண்டு திருப்தி அடைந்து விடுகின்றனர்.

படிக்க: ஜி எஸ் டி ஏற்றம் : பொருளாதாரம், ஏழை வீட்டை எரிக்குது மோடிவரி!

வாழ்க்கை என்றால் கஷ்டங்கள் இருந்துதான் தீரும்; இப்போது நாம் படுகின்ற துன்ப, துயரங்கள் ஆகியவை அனைத்தும் சென்ற ஜென்மத்தில், போன பிறவியில் நாம் செய்த பாவங்கள், புண்ணியங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நமது தலைவிதியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய மவுடீக, ஆன்மீகக் கருத்துகள் பார்ப்பன இந்து மதத்தின் மூலமாக தொடர்ந்து மூளைக்குள் வண்டி வண்டியாக செலுத்தப்படுவதால் நிகழ்காலத்தில் அனுபவிக்கின்ற கொடுமைகளுக்கு எதிராக போராடுகின்ற மனப்பான்மையை விட சமரசமாகி செல்கின்ற, சகித்துக் கொண்டு வாழ்கின்ற மனநிலைக்கு செல்கின்றனர் பெரும்பான்மை உழைப்பாளி மக்கள்.

மனித குலம் போராடி பெற்ற 8 மணி நேர வேலை; 8 மணி நேர ஓய்வு; 8 மணி நேர உறக்கம் என்ற அடிப்படைக் கொள்கையை நிலைநாட்டுவதற்கு பதில் நேரம்-காலம் பார்க்காமல் வேலை செய்வது; வயிறு பசிக்கும்போது எதையாவது தின்று கட்டுப்படுத்திக் கொள்வது; நிரந்தரமாக நோய் நொடிகளுடன் மருத்துவமனைகளுக்கு அலைவது; தனது கஷ்டங்களை தீர்ப்பதற்கு கோவில் கோவிலாக சென்று வழிபடுவது என்ற முறையிலேயே தனது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்று கருதுகின்றனர். இவையெல்லாம் தற்காலிகமாக சில மாற்றங்களை கொடுத்தாலும் இத்தகைய அவலங்கள் நிறைந்த வாழ்க்கைக்கு யார் காரணம்? உண்மையான அடிப்படை என்ன? என்பதை புரிய வைக்க வேண்டிய கடமை மார்க்சிய லெனினிய இயக்கத்திற்கும், புதிய ஜனநாயகம் இதழுக்கும் உள்ளது.

உண்மையில் தனது வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை பொருளாயத தேவைகளை பெறுவதற்கும், சுதந்திரமான வாழ்க்கை, உத்தரவாதமான வேலை பெறுவதற்கும் வர்க்க உணர்வுடன் ஒன்று சேர்ந்து போராடுவதற்கு தடையாக உள்ள அனைத்து அம்சங்களையும் எதிர்த்து முறியடிக்க வேண்டும். அத்தகைய பார்வையையும், கண்ணோட்டத்தையும் கொடுப்பது மார்க்சிய லெனினிய சித்தாந்தமும் அதன் அடிப்படையில் செயல்படுகின்ற புரட்சிகர அமைப்புகளும் தான் என்பதை பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம் அதாவது பாட்டாளி வர்க்கத்திடம் கொண்டு சேர்ப்பது தான் இன்றைய காலகட்டத்தில் அவசர, அவசியமான பணியாக மாறியுள்ளது.

புதிய ஜனநாயகம்

மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்

ஜூன் 2026 | தலையங்கம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here