ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலம் பெஹல்காம். கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று அங்கு சுற்றுலா சென்று இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஒரு ராணுவ தாக்குதலை நடத்தியது. பெஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மனைவிமார்களினுடைய நெற்றிப்பொட்டு அழிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் தாக்குதல் என்ற பொருள்படும்படி “ஆப்ரேஷன் சிந்தூர்” என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டதாக பாசிச பாஜக அரசு கூறியது.
இந்த ராணுவ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்குள் சென்று தீவிரவாத முகாம்களை அழித்து விட்டோம், அடித்துத் துவைத்து விட்டோம், பாகிஸ்தானியர்களை மிரட்டி விட்டோம் என்றெல்லாம் வீரவசனம் பேசிக் கொண்டிருந்த பாஜகவினரை பார்த்து பத்திரிக்கையாளர்களும் எதிர்க்கட்சியினரும் மக்களும் “இந்த தாக்குதலின் போது எத்தனை போர் விமானங்கள் சேதமடைந்தன; எத்தனை ராணுவ வீரர்கள் இறந்தனர்?” என்ற கேள்வியை கேட்டனர். இப்படி கேள்வி கேட்பவர்களை தேசவிரோதிகள் என்று பாஜகவினர் முத்திரை குத்தினர்.
பாராளுமன்றத்தில் இந்த கேள்வி எழுப்பப்பட்ட பொழுது 2025 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி அன்று மக்களவையில் “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது எந்த வீரரும் பாதிக்கப்படவில்லை என்று அதாவது ‘எந்த வீரரும் சாகவில்லை’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடித்து கூறினார்.
ஆனால் “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கை முடிந்து ஒரு ஆண்டுக்குப் பிறகு, இப்பொழுது, இந்த ராணுவ நடவடிக்கையின் போது உயிரிழந்த ஆறு ராணுவ வீரர்களின் பெயர்களை வெளியிட்டதுடன் அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னத்தையும் பாசிச பாஜக அரசு அமைத்துள்ளது.
படிக்க: ஆபரேஷன் சிந்தூர்! பொய்யையும், புனைவையும் பரப்பி உண்மையை மழுங்கடிக்கும் போலி வீடியோக்கள்!
பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்டியும் அதனால் விதவைகளாக்கப்பட்ட பெண்களின் குங்குமத்தை (சிந்தூர்) காட்டியும் கடந்த ஆண்டு நடந்த பீகார் மாநிலத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்க வேண்டும் என்பதற்காகவே ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை நாட்டு மக்களிடமிருந்து பாசிச பாஜக மறைத்தது என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களைக் காட்டி மக்களிடையே தேசிய வெறியை, இந்து மத வெறியை பரப்பி ஓட்டுப் பொறுக்குவது என்பது பாசிச பாஜகவின் வழக்கமான நடைமுறை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா என்ற இடத்தில், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “துல்லிய தாக்குதல்” (surgical strike) என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட் என்ற இடத்தில் இருந்த தீவிரவாத முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதே 2019 ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரங்களில் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட “துல்லிய தாக்குதல்” பற்றி பேசி தேசிய வெறியையும் மதவெறியையும் மக்களிடையே கிளப்பி ஓட்டுக்களை பொறுக்கி வெற்றி பெற்றது பாசிச பாஜக அரசு.
அதே பாணியை 2025 ஆம் ஆண்டு பீகார் தேர்தலிலும் பின்பற்றிய பாசிச பாஜக இப்பொழுது நாட்டு மக்களிடையே அம்பலப்பட்டு நாறிப் போய் உள்ளது.
2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட “ஆப்ரேஷன் சிந்தூர்” -ல் எந்த ராணுவ வீரரும் இறக்கவில்லை என்று பாராளுமன்றத்திலேயே பொய்யைக் கூறி இந்த நடவடிக்கையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உயிர்களை அவமதித்து இருக்கிறது பாசிச பாஜக அரசு. தனது அரசியல் ஆதாயத்திற்காக, தேர்தல் வெற்றிக்காக எத்தகைய மாபாதக செயலையும் செய்யத் துணிந்த கட்சி தான் பாசிச பாஜக என்பது இந்த விஷயத்தில் பாராளுமன்றத்தில் பொய் கூறியதன் வாயிலாக இப்பொழுது மீண்டும் ஒருமுறை அம்பலத்திற்கு வந்துள்ளது.
பாசிசம் என்பது மக்களுக்கு எதிரானது. அது மக்களிடையே பொய்களைப் பரப்பி தேச வெறியை, மத வெறியை மக்களிடையே கிளப்பி தனக்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துக் கொள்ளும். ஆர் எஸ் எஸ் – பாஜகவின் பாசிசத்தை வீழ்த்த வேண்டுமானால், அதற்கு முதல் படியாக, மக்களிடையே பாசிஸ்டுகள் பரப்பும் பொய்களை எதிர்த்து முறியடிக்க வேண்டும். இதன் மூலமாகத்தான் பாசிசத்திற்கு எதிராக, பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியில் மக்களை அணிதிரட்டி பாசிசத்தை வீழ்த்த முடியும்
– குமரன்






