நீட் தேர்வால் கொல்லப்பட்ட மாணவி அனிதா

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் UG தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மே 12 ஆம் தேதி  NTA தேர்வை ரத்து செய்து அறிவித்தது. மேலும் ஜூன் 21, 2026 – இன்று நாடு முழுவதும் மறுதேர்வு நடந்து முடிந்துள்ளது. இதில் சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையில், மீண்டும் நீட் தேர்வை எழுதுவது என்ற நிர்பந்தத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை இத்தேர்வு முறை சரியானது அல்ல என்றும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் போராடி வருகின்றன. ஆனால், பாசிச மோடி அரசு மக்கள் கோரிக்கையை ஏற்காமல் நீட் தேர்வை வருடந்தோறும் நடத்தி வருகிறது. இதில் முறைகேடுகள் நடைபெற்று அம்பலமாகும் பொழுது சில கிறுக்குத்தனமான நடவடிக்கைகள் மூலம் நியாயப்படுத்த முயன்று தோற்றுப்போகிறது ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல்.

நீட் தேர்வுஒரு சிறு வரலாறு!

2010 ஆம் ஆண்டு  மருத்துவப் படிப்புகளுக்கான (MBBS, BDS) நுழைவுத் தேர்வுகளை ஒருங்கிணைக்க ஒரு தேசிய அளவிலான தேர்வை நடத்தும் திட்டத்தை இந்திய மருத்துவ ஆணையம் (Medical Council of India) முன்மொழிந்தது நீட் (National Eligibility cum Entrance Test) முதன்முதலாக 2013 மே 5 அன்று நடத்தப்பட்டது. இது மருத்துவப் படிப்புகளுக்கான பல்வேறு நுழைவுத் தேர்வுகளை ஒருங்கிணைத்து ஒரு தேசியத் தேர்வாக அறிமுகப்படுத்தப்பட்டது.

2013 ஜூலை 18 அன்று, நீட் தொடர்பான அறிவிப்புகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த இந்திய உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பொன்றை வழங்கியது. பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில், இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் (DCI) வெளியிட்டிருந்த நீட் அறிவிப்புகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை (Ultra Vires) என்று அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டன.

இந்தத் தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(g), 25, 26, 29(1) மற்றும் 30 ஆகியவற்றின் கீழ் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிர்வகிக்கவும் உள்ள அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டன.

இதன் விளைவாக, தனியார் மற்றும் சிறுபான்மையினர் நிர்வகிக்கும் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை தொடர்பான சுயாட்சியில் நீட் தலையிடுவதாக நீதிமன்றம் கருதியது. எனவே, அப்போதைய சூழலில் நீட் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் மாநிலங்களும் தனியார் கல்லூரிகளும் தனித்தனி நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதிக்கப்பட்டன. ஆனால் அது இறுதியான தீர்ப்பு இல்லை என்பதை பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் தெரிந்தது.

2016 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான ஒரே பொதுநுழைவுத் தேர்வான நீட் -ஐ ரத்து செய்த தனது முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை (Review) செய்ய வேண்டும் என்று  மோடி தலைமையிலான ஒன்றிய அரசும் இந்திய மருத்துவக் கவுன்சிலும் (MCI) தாக்கல் செய்த மனுவை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒப்புக்கொண்டது.

மறுஆய்வு மனுக்கள் முதலில் 3 நீதிபதிகள் அமர்வின் முன் வைக்கப்பட்டு, 23-10-2013 அன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போது, Modern Dental College and Research Centre v. State of Madhya Pradesh மற்றும் அதனுடன் தொடர்புடைய வழக்குகள் ஏற்கனவே 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பப்பட்டிருப்பது. அந்த மறுஆய்வு அமர்வின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக, நீட் தொடர்பான மறுஆய்வு மனுவும் 5 நீதிபதிகள் அமர்வால் விசாரிக்கப்பட்டது.

இந்த 5 நீதிபதிகள் அமர்வு, Christian Medical College, Vellore (2013) தீர்ப்பை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதாகக் கருதியது. மேலும், அந்த வழக்கில் வழங்கப்பட்ட பெரும்பான்மை தீர்ப்பு, ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கியிருந்த கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணத் தீர்ப்புகளை (Binding Precedents) கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது என்றும், அந்த 3 நீதிபதிகள் அமர்வில் தீர்ப்புக்கு முன் நீதிபதிகளுக்கிடையே போதுமான விவாதம் நடைபெற்றதற்கான சான்றுகள் இல்லை என்றும் குறிப்பிட்டது.

இதன் அடிப்படையில், 2013-ல் நீட் -ஐ ரத்து செய்த தீர்ப்பு மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் இதுவே நீட் மீண்டும் அமலுக்கு வருவதற்கான முக்கிய சட்ட அடித்தளமாக அமைந்தது.இடைக்கால உத்தரவு மூலம் 2016 முதல் நீட் தேர்வு மீண்டும் நடைமுறைக்கு வந்து மாணவர்களை கொன்று குவிக்கிறது. நீட் தேர்வு- அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்ற மூல வழக்கு உச்சநீதிமன்றத்தில் உறங்குகிறது.

தமிழ்நாட்டில் நீட்டிற்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றது 2017 செப்டம்பர் மாதத்தில் தான். மருத்துவ கனவுடன் 12 ஆம் வகுப்புத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவிக்கு மருத்துவப் படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண்  200க்கு 196 க்கும் மேல் இருந்தது. +2 மதிப்பெண் அடிப்படையிலான பழைய முறையில் இருந்தால் அனிதாவுக்கு மருத்துவ இடம் கிடைத்திருக்கும். ஆனால் நீட் -UG 2017 தேர்வில் அவர் 720க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். இதற்கு எதிராக சட்டப் போராட்டங்கள் நடத்திப் பார்த்தும் பலனில்லாமல் போகவே வேறு வழியின்றி 1, செப்டம்பர், 2017 அன்று தற்கொலை செய்துக் கொண்டார்.

மேலும் படிக்க: நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் கொடு!  ஆர்ப்பாட்டம்.

அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி பெரும் போராட்டங்கள் வெடித்தது. பல நூறு மாணவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் NEET தொடர்பான விவாதங்கள், போராட்டங்கள், சட்டமன்ற தீர்மானங்கள் மற்றும் அரசியல் பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அதேபோன்று நீட் தேர்வின் தோல்வி காரணமாகவும், பயம் மற்றும் இரண்டு அல்லது மூன்று முறை முயற்சி செய்தும் தோல்வியடைந்ததன் காரணமாகவும் ஏராளமான மாணவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டனர். இந்நாள் வரை இந்த நீட்டால் நடத்தப்படும் கொலைகள் நின்ற பாடில்லை. இன்று தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி கடும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீட் ஆதரவாளர்களின் கூற்றும், உண்மை நிலவரமும்

மருத்துவப்படிப்புக்கு மாணவர்களை தேர்வுச் செய்ய ஒரு அளவுகோல் தேவை. அதற்காக நீட் அவசியம் என்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் மற்றும் நன்கொடை (capitation fee) மூலம் சேர்க்கை நடந்ததாக கூறப்பட்டது. NEET அதை கட்டுப்படுத்த உதவியதாக ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். மருத்துவம் போன்ற துறைகளில் தேசிய அளவிலான திறன் மதிப்பீடு அவசியம் என்றும், ஒரு மாநில மாணவர் மற்றொரு மாநில மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பை நீட் உருவாக்குகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் மற்றும் நன்கொடை வசூலிப்பது தெரிந்திருந்தும் பெரும் படைபலத்தை கொண்ட அதிகார வர்க்கத்தால் ‘ஊழலை ஒழிக்க வந்த மோடி அரசு’ கார்ப்பரேட் கல்விக் கொள்ளையர்களை கேட்கவோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ துணிவில்லாமல் இன்று வரை அவர்களது கல்விக் கொள்ளைக்கு சாமரம் வீசுகிறது. நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் ஒரு மருத்துவ மாணவருக்கு பல கோடி ரூபாய் கட்டணம் வாங்கும் நடைமுறையை மருத்துவ கல்லூரி மாஃபியாக்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு

அனிதாவின் மரணமே அதற்கு சாட்சி. சாதாரண குடும்பத்தில் பிறந்து முதல் தலைமுறை பட்டதாரியாக வரவேண்டியவரை நீட் தேர்வு கொன்றிருக்கிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களின் பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு போதுமான கல்வி சார்ந்த கட்டமைப்புகள் கிடைப்பதில்ல்லை. குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்து படிக்கும் மாணவர்களின் கல்வியறிவும், நகரத்தில் மெட்ரிக்  பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வியறிவும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஆனால் இவர்கள் இருவரும் சிபிஎஸ்இ எனப்படும் NCERT( தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு) மத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில் படிக்கும் மாணவர்களுடன் போட்டியிட்டு தேர்வாக வேண்டும். நீட் தேர்வுக்கு கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் CBSE-யின் NCERT (11 மற்றும் 12ஆம் வகுப்பு) பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டவை.

மேலும் படிக்க: நீட் போன்ற போட்டி தேர்வுகள், பயிற்சி மையங்கள், தற்கொலைகள்!

மற்றொரு பெரிய பிரச்சினை என்னவென்றால் நீட் தேர்வை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட நீட் பயிற்சி மையங்கள். இதனை தமிழ்நாட்டில் பெரிய கல்வி நிறுவனங்கள்  தங்கள் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு சேர்ந்த உடனேயே நீட்டிற்கான பயிற்சியையும் தனிக்கட்டணத்தில் தொடங்கி விடுகிறார்கள். பள்ளிகளுக்கு வெளியில் புற்றீசல் போல பல நீட் பயிற்சி மையங்கள் முளைத்து விட்டன. அனைத்தும் பல லட்சம் கட்டணத்தில் பயிற்சி அளிக்கின்றன. ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் லட்சம் செலவு செய்து படிக்க வாய்ப்பில்லாத போது அவர்களால் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்த மாணவர்களுடன் எவ்வாறு போட்டியிட்டு வெல்ல முடியும்.

இந்தியாவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு மாணவர்களின் கல்வியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முறையான கல்வி உபகரணங்கள் இல்லாமல் அவர்களால் எவ்வாறு போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள முடியும் என்பதே நம்முடைய கேள்வி. அதனாலேயே நீட் தேர்வானது உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த மாணவர்களின்  மருத்துவக் கனவை பறிப்பதோடு அவர்களை கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி தற்கொலைக்கும் தள்ளுகிறது. இப்படியான நுழைவுத் தேர்வுகள் தேவையா?

நீட் தேர்வில் முறைகேடு! நீட்டே முறைகேடு!

நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் எந்தளவுக்கு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்களோ அதே போல் நீட் தேர்வு அன்று  தேர்வு மையத்தில் நுழையும் மாணவர்களை மனஅழுத்தத்தை ஏற்படுத்தியே உள்ளே அனுப்புகிறார்கள். மாணவர்களின் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்படுகிறது. மாணவிகளின் நிலையோ மிக மோசம். இதே பரிசோதனையை நாட்டின் பாதுகாப்பிற்கு வழங்கியிருந்தால் இந்தியாவில் தீவிரவாதிகள் ஒருவர்கூட நுழைந்திருக்க முடியாது.

ஆனால் இவ்வளவு பரிசோதனை செய்தும் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்தின் மூலம் பலர் சிக்கியிருக்கிறார்கள். பலர் தப்பியிருக்கிறார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், சில மாணவர்களுக்குப் பதிலாக வேறு நபர்கள் NEET எழுதியதாக கண்டறியப்பட்டது. குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த பிறகு அடையாளச் சரிபார்ப்பில் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்தன. இவையெல்லாம் தேர்வுகளை நடத்தும் அதிகார வர்க்கத்திற்கு தெரியாமால் இருக்க வாய்ப்பில்லை. பல மாணவர்கள், பெற்றோர் மற்றும் இடைத்தரகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2024 நீட் தேர்வு  மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. நீட் 2024 சர்ச்சையில், பீகாரில் செயல்பட்டதாகக் கூறப்பட்ட “சால்வர் கும்பல்” குறித்து காவல்துறை மற்றும் பின்னர் CBI விசாரணைகள் நடத்தின. பொதுவாக இத்தகைய கும்பல்கள் மாணவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் வசூலிக்கின்றன. தேர்வுக்கு முன்பே கேள்வித்தாளைப் பெற (அதிகார வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து) முயற்சிக்கின்றன. திறமையான மாணவர்கள் அல்லது மருத்துவ மாணவர்களை பயன்படுத்தி விடைகளைத் தயாரிக்கின்றன. சில நேரங்களில் உண்மையான மாணவருக்குப் பதிலாக வேறு நபரை தேர்வு எழுத அனுப்புகின்றன . பாட்னா காவல்துறையின் ஆரம்ப விசாரணையில், ஒரு மாணவரிடமிருந்து சுமார் ₹5 லட்சம் அல்லது அதற்கு மேல் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சில ஊடக அறிக்கைகளில் இன்னும் அதிக தொகைகளும் குறிப்பிடப்பட்டன. இவ்வழக்கில் 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அடுத்து 2024-ல் கிரேஸ் மார்க் பித்தலாட்டம் அம்பலமானது. நீட் 2024 முடிவுகள் வெளியானபோது சில மாணவர்கள் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். NEET மதிப்பெண் கணக்கீட்டு முறையில் (+4, -1, 0) இந்த மதிப்பெண்கள் இயல்பாக வர முடியாது என்பதால் சந்தேகம் எழுந்தது. பின்னர் NTA, சில மாணவர்களுக்கு “Compensatory Marks” (ஈடுசெய்யும் மதிப்பெண்கள்) அல்லது கிரேஸ் மார்க் வழங்கியிருப்பதை ஒப்புக்கொண்டது. சில மாணவர்களுக்கு முழுமையான தேர்வு நேரம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வழங்கப்படவில்லை என்பதால் கிரேஸ் மார்க் வழங்கப்பட்டதாக சமாளித்தது நீட் தேர்வு முகமை. அடுத்து ஏன் 1,563 மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. இப்படி பல்வேறு தகிடுதத்தங்கள் அம்பலமானதால் குறிப்பிட்ட 1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கிரேஸ் மதிப்பெண்ணை ரத்து செய்வதாக அறிவித்த உச்சநீதிமன்றம் அவர்கள் மறு தேர்வு எழுதும் வாய்ப்பையும் வழங்கியது. ஆனால் மொத்த நீட் தேர்வும் ரத்து செய்யப்படவில்லை.

2026 ஆம் ஆண்டான இந்த வருடம் நடந்த முறைகேட்டினால் மொத்த நீட் தேர்வையும் ரத்து செய்துவிட்டு அம்பலப்பட்டு நிற்கிறது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இது நீட் தேர்வு வரலாற்றில் மிகப்பெரிய முறைக்கேடாகப் பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் நடைப்பெற்ற நீட் தேர்வில் 222.79 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வுக்கு முன்பே சில WhatsApp மற்றும் Telegram குழுக்களில் பரவியிருந்த PDF ஆவணங்களில் உள்ள கேள்விகள், உண்மையான NEET வினாத்தாளுடன் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்திருந்ததாக தகவல்கள் வெளியானது. சில விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் இந்த வினாத்தாள் தேர்வுக்கு பலநாட்களுக்கு முன்பே பரவியிருக்கலாம் எனவும் தெரியவந்தது. சிபிஐ பல மாநிலங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியது. முடிவில்  மே 12, 2026  NTA மற்றும் ஒன்றிய அரசு முழு NEET-UG 2026 தேர்வையும் ரத்து செய்தன.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் அவர்கள் கூறிய காரணம் தேர்வின் நேர்மையும் நம்பகத்தன்மையும் (integrity) பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வு முடிவுகளை வெளியிடுவது நியாயமாக இருக்காது. அதனால் தேர்வை ரத்து செய்தார்களாம். இப்போதும் நீட் தேர்வை பாதுகாத்து குறிப்பிட்ட வர்க்கத்திற்கு சேவை செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து ஜூன் 21, 2026 அன்று நீட் மறுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சூர்யகாந்த், வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களை சுட்டிக்காட்டி உதித்த முத்தான வார்த்தைகளின் காரணமாக உருவான கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் பெரும் போராட்டத்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து நாட்டின் பல நகரங்களிலும் போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகிறார்கள். இது ஒன்றிய பாசிச மோடி அரசிற்கு தலைவலியாக மாறியுள்ளது.

“#CancelNEET”, “#JusticeForStudents”, “#NEETScam” போன்ற ஹாஷ்டேக்குகளின் கீழ் மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன. நீட்டிற்கு எதிராக மீண்டும் விவாதங்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக நீட் தேர்வினால் மாணவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும், தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் பரவலான விவாதங்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக ஒன்றிய அரசிற்கு ஏற்பட்ட நெருக்கடியால் மறுதேர்வுக்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.

வினாத்தாள்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. “கண்ணாடிய திருப்புனா எப்படி சார் ஆட்டோ ஓடும்” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஓடும் என்று நிறுவ பார்க்கிறது பாசிச பாஜக. இன்னும் கேலிக்கூத்தாக வினாத்தாள் பரவ காரணமாக இருந்ததாக டெலிகிராம் ஆப்பை வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி வரை முடக்கியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புடன் நீதிமன்றத்தையும் அணுகியுள்ளது டெலிகிராம் நிறுவனம். மேலும் அதன் நிறுவனர் பாவல் துரோவ் “இந்தத் தடை எதையும் தடுத்து நிறுத்தவில்லை, கசிவுகள் மற்ற செயலிகளுக்கு நகர்ந்துவிட்டன,” என்று கூறினார்.

மேலும் படிக்க: நீட் தேர்வில் முறைகேடு! ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வு முறையை ஒழிப்பதே தீர்வு!!

இந்தியாவில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு புற்றீசல்போல நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தோன்றியுள்ளன. நகரங்களில் உள்ள பயிற்சி மையங்கள் அதிகபட்சமாக 3 லட்சம் வரை வசூலிக்கின்றன. இவையல்லாமல் ஆன்லைன் பயிற்சி நிறுவனங்களும் செயல்படுகின்றன. கல்வி கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் கல்வி நிறுவங்களில் 11 ஆம் வகுப்பிலிருந்தே நீட் பயிற்சி என்று மாணவர்களிடம் சில லட்சங்களை கறப்பதோடு அவர்களின் நேரத்தையும் சுரண்டுகிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலோடும், சோர்வோடும் மாணவர்கள் வாடுகிறார்கள்.

12 ஆம் வகுப்பு முடித்த பின்னரும் கூட இந்த சித்ரவதை தொடர்கிறது.  கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தம் பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தம் அவர்களை கொடூரமான முடிவை நோக்கித் தள்ளுகிறது. மறுபுறம் ஏழை மாணவர்கள் தங்களுக்கான மருத்துவர் வாய்ப்பு மறுக்கப்படுவதால் அதே முடிவை எடுக்கிறார்கள். விஜய் போன்ற தற்குறிகள் கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் மருத்துவம் தான் படிக்க வேண்டுமா வேறு படிப்பை தேர்ந்தெடுங்கள் என சமூகநீதி மறுக்கப்படுவதை மக்கள் உணராதவாறு பார்த்துக் கொள்கிறார்கள்.ஆட்சிக்கு வந்த பிறகு, நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டே, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த போலீசை ஏவிவிடுகிறார்.

ஆனால் தமிழ்நாடு அப்படியல்ல. என்னதான் ஆட்சியில்  பாசிசக் கோமாளி அமர்ந்திருந்தாலும், அவரை ஓட்டு போட்டு மக்கள் தேர்ந்தெடுத்திருந்தாலும் நீட் எனும் ஆட்கொல்லி தேர்விற்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது இந்தியா முழுவதும் ஒலிக்க வேண்டும். அதற்கு நீட் முறைக்கேட்டிற்கு எதிராக போராடுவதோடு நின்று விடாமல்  நீட் ஒழிப்பிற்கான போராட்டமாக பரிணமிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தொடங்கிய நீட் எதிர்ப்புப் போராட்டம் இந்தியா முழுவதும் கார்ப்பரேட் கல்விக் கொள்ளையர்களுக்கும் அவரது அடியாளான மோடி அரசிற்கும் எதிரான போராட்டமாக கட்டியமைக்கப்பட வேண்டும். அதற்கு மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்களையும் ஒன்றிணைப்பது அவசியம்.

நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here