குடியரசு தலைவர் பதவி எதற்கு?
தமிழக அரசின் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் கொடு அல்லது பதவி விலகு !
தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

நாள் 26-10-2021

அன்பார்ந்த பெரியோர்களே!
நாடு முழுவதும் தரமான மருத்துவர்களை உருவாக்குவது என்ற பெயரில் மோடி அரசு நடைமுறைப் படுத்தும் நீட் தேர்வு முழுக்க ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களை மருத்துவக் கல்வியிலும்,சேவையிலும் நுழைய விடாமல் தடுக்கும் சதித்தனமாகும். இது அப்பட்டமான நவீன மனுதர்மம் ஆகும்.

இந்தியா அடிப்படையிலேயே சமூக, பொருளாதார, கல்வி, பண்பாட்டுக் கூறுகளில் பெரும் ஏற்றத்தாழ்வைக் கொண்ட நாடு. சாதிரீதியாக பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுத்த நாடு. அதனால்தான் பள்ளி, கல்லுாரி தேர்வுகளில் தேர்ச்சிபெற ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு மதிப்பெண், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு ஒரு மதிப்பெண், மற்றவர்களுக்கு ஒரு மதிப்பெண் என்ற முறை சமூக நீதிக் கண்ணோட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது. இதனால்தான் ஓட்டப்பந்தயத்தில் கடைபிடிப்பது போல அனைவருக்கும் சமமான ஓடுகளம் கொடுக்கப்படுவதில்லை.

அதுபோல் சி பி எஸ் இ, மெட்ரிக், மாநில பாடத் திட்டங்கள் என பல்வேறு பாடதிட்டங்களில் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால் நீட் தேர்வு இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் நாடு முழுமைக்கும் ஒரே தேர்வு என்று சிபிஎஸ்சி பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த நரித் தனத்தால், நீட் தேர்வானது ஆங்கில வழியில் பயிலும் மேல்சாதி, மேட்டுக்குடி மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கி மற்றவர்களை வெளியேற்றும் சூழ்ச்சி கொண்டது.

நீட்தேர்வு தரமான மருத்துவர்களை உருவாக்கும் என்பது அப்பட்டமான பித்தலாட்டம் ஆகும். ஏனெனில் நீட் தேர்வில் கட் ஆப் மதிப்பெண் முறையில் 15 சத மதிப்பெண் பெற்றாலே காக இருப்பவனுக்கு தனியார் மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்து விடும். ஆனால் அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்க வேண்டுமானால் 55 சத மதிப்பெண் பெற வேண்டும் இந்த மதிப்பெண்ணை கிராமப்புற, ஏழை மாணவர்களான தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களால் எட்டவே முடியாது. பல லட்சம் செலவழித்து இரண்டு மூன்று ஆண்டுகள் கோச்சிங் செண்டரில் பயிற்சிபெற்றால் ஒருசிலருக்குக் கிடைக்கலாம். அதுவும் ஒடுக்கப்பட்ட சாதியில் உள்ள மேல்தட்டு வர்க்கத்தினருக்கே சாத்தியம்.

NEET

 

எனவே நீட் தேர்வு முறை என்பது, நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களை கொள்ளையடிக்கவும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேவையான பணக்கார மாணவர்களை ஆள் பிடிக்கவும், அரசு மருத்துவக் கல்லுாரிகளையும் மேட்டுக்குடி பணக்காரர்கள் கைப்பற்றவும் கொண்டு வரப்பட்ட அயோக்கியத்தனமான சதிகார திட்டம். அதுமட்டுமின்றி இந்த நீட் தேர்வானது ஊழல் முறைகேடுகள் நிறைந்தது.
தமிழக அரசு நியமித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிவியல் பூர்வமாக நடத்திய ஆய்வினடிப்படையில் நீட் தேர்வு எந்த அளவு அநீதியானது என்பதை அனைவரும் ஏற்கின்ற வகையில் இருபது காரணங்களைப் பட்டியலிட்டு நிரூபித்துள்ளது.
மருத்துவக் கல்விக்கு முன்னேறிய எல்லா நாடுகளிலும் பள்ளி இறுதித்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள்தான், அதாவது இயற்பியல், வேதியல்,உயிரியல் பாட மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஆர் எஸ் எஸ்- மோடி கும்பல் கொண்டுவந்துள்ள நீட் தேர்வு இதை சூழ்ச்சியாக நீக்கிவிடுகிறது.
இந்த நீட் தேர்வு என்ற சதித் திட்டத்தை எம் பி பி எஸ் மட்டுமின்றி, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ போன்ற பிற மருத்துவப்படிப்புகளுக்கும் விரிவு படுத்தி மருத்துவக்கல்வியை மேல்சாதியினர் மற்றும் மேட்டுக்குடி பணக்காரர்களின் தனி உரிமையாக்கிவிட்டது.

மோடி அரசு. பொறியியல் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை விரிவுபடுத்தி தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட,பழங்குடி மக்களின் கல்வி உரிமையை முற்றாக ஒழிக்கவும் திட்டம் தீட்டிவருகிறது பாசிச மோடி அரசு.
தமிழ்நாடு பின்பற்றும் +2 மதிப்பெண் அடிப்டையிலான மருத்துவக்கல்லுாரி அனுமதி முறைதான் ஒப்பீட்டளவில் சிறந்த முறை. இந்த முறையில் பயின்ற மருத்துவர்களைக் கொண்டுதான் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கி, இந்தியாவின் மருத்துவத் தலைநகராக உயர்ந்துள்ளது. உலகில் எங்குமில்லாத வகையில் 250 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை தமிழ் நாட்டில் மட்டுமே நிலவுகிறது. உயர் சிறப்பு மருத்துவர்களையும் தமிழ் நாட்டில் தான் அதிகம். தமிழ் நாட்டில் மட்டும்தான் மிக அதிக அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒழித்துக் கட்ட வைக்கப்படும் அடிக் கொள்ளிதான் நீட்தேர்வு.

இது மட்டுமல்ல எதிர்காலத்தில் நமது அடிப்படைக் கல்வி உரிமைக்கே வேட்டு வைக்கும் அபாயம் கொண்டது இந்த நீட் தேர்வு முறை. எனவே நீட் தேர்வை ஒழித்தே தீர வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் தமிழக மாணவர்களை நுழைய விடாமல் தடுக்கும் சதிச் செயலை முறியடிக்க வேண்டும்!
தமிழக அரசு நிறைவேற்றியுள்ள நீட் நிரந்தர விலக்குச் சட்டம் தமிழக மாணவர்களின் உரிமையை நிலை நாட்டும் சட்டம். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்டத்தை மறுக்கவோ, முடக்கவோ மத்திய அரசுக்கோ, குடியரசுத்தலைவருக்கோ எந்த உரிமையும் இல்லை. ஏழு தமிழர்கள் விடுதலையிலும் இது வரை ஒப்புதல் தராமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

பெரும்பான்மை மக்களுக்கு எதிரான நீட் தேர்வு எனும் அநீதியை ஒழிப்போம்! அனைவருக்குமான கல்வி உரிமையை மீட்போம்!
மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கும் ஒன்றிய அரசை இனியும் அனுமதிக்க முடியாது.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here