மார்க்சிய-லெனினியத்தை ஓரளவு பபுரிந்தவர்கள்கூட ‘ரஷ்யா சீனா போன்றே பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உட்பட “புரட்சிகள்” வெற்றிகரமாக நடந்த பின்னர், மேலும் சமூகம் முந்நோக்கி நகர்வதற்குப் பதில் எப்படி பின்னோக்கிக் கவிழ்ந்தன? இது மார்க்சிய- லெனினிய இயக்கவியல்-வரலாற்றியல் பொருள் முதல் வாத விஞ்ஞான பார்வைக்கு – பரிணாம வளர்ச்சித் தத்துவத்திற்கு மாறுபட்ட தில்லையா’…. என்றவாறு விவாதத்தை எழுப்புகின்றனர்.
ஆசான் லெனின் எப்படி இறந்தார்?
மார்க்ஸ், மார்க்சிய சமூக விஞ்ஞான தத்துவத்தைக் கண்டு பிடித்து அதனை நடைமுறைப்படுத்த முயன்ற பொழுது அவர் தனிப்பட்ட முறையிலும், குடும்ப ரீதியிலும் சொல்லொண்ணாத் துயரங்களையும், வறுமையையும், குழந்தைகள் இறப்புக்களையும் சந்தித்தார்; சகித்துக் கொண்டு கொள்கை கோட்பாடுகளை நிறைவேற்றுவதற்கு தமது ஆருயிர் நண்பன் ஆசான் எங்கெல்ஸின் உறு துணையுடன், தனது பேரன்பு மிக்க வாழ்க்கை இணையர் ஜென்னியின் பேராதரவுடன் மேலும் மேலும் முன்னேறினார்.
மார்க்ஸைப் போன்றே அவரைவிட இளவயதில் சமூகம் மீது அக்கறை கொண்டவராய் மட்டுமல்ல; 16-வது வயதில் தந்தை உல்யானவ், 17-வது வயதில் தனக்கு ஆரம்ப அரசியல் புகட்டிய அண்ணன் அலெக்சாந்தர், 18-வது வயதில் தமது அருமைத் தங்கை வோல்கா முதலானோரின் இறப்புக்களைச் சந்தித்துத் துவண்டு போனார் லெனின்.
எல்லாவற்றையும் விட இந்தத் துயரங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு
குறைந்தபட்ச பென்ஷன் வருமானத்தை வைத்து-குடும்பத்தையும் பராமரித்து, பிள்ளைகளையும் பராமரித்து, ஒரு சிலரைத் தவிர இக்குடும்பத்திற்கு ஏற்பட்ட அவப்பெயரால் (ஜார் மன்னனுக்கு எதிராக கிளர்ச்சி செய்து மரண தண்டனை ஏற்ற அலெக்ஸாந்தரின் தாய் என்பதனால்) புறக்கணிக்கப்பட்டு வாழ்விடத்தைக் காலி செய்து கொண்டு குடும்பத்தை மாஸ்கோவிற்கு சோகத்துடன் கொண்டு சென்ற நரைத்த தலையனராய் ஆகிவிட்ட தமது தாய் மரீயாவை எண்ணி பெரிதுமே கண் கலங்கினார் லெனின்.
அனைத்து தடைகளையும் தகர்த்துக் கொண்டு மார்க்சியத்தை முதன்முதலாக மாபெரும் சோசலிசப் புரட்சியை பாட்டாளி மக்களைத் திரட்டி சோவியத் மண்ணில் 1917 நவம்பர் 7-ல் நிகழ்த்திக் காண்பித்தார் ஆசான் லெனின்.
புரட்சி நடந்த சுமார் 9 1/2 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் 1918 ஆகஸ்ட் 30-ல் மாஸ்கோவிலுள்ள பெரிய தொழிற்சாலை ஒன்றில் நடந்த கூட்டத்தில் உரை நிகழ்த்திவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கையில் ஃபேனி கபளான் (Fanny Kaplan)(பெண்) என்றொரு எதிர்ப் புரட்சிக்காரியால் மூன்று ரவுண்டு துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆசான் லெனினின் கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் மூன்று குண்டுகள் பாய்ந்து பெருத்தக் காயங்கள் ஏற்பட்டன. உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து அத்தருணத்தில் மட்டுமே உயிர் பிழைத்தார். (துப்பாக்கியால் சுட்டவள் 03-09-1918-ல் சுட்டுக் கொல்லப்பட்டாள்) மருத்துவ சிகிச்சையிலிருந்து லெனின் மீண்டிருந்தாலும், உடல் பெரிதும் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழும் காலம் வரை, அவரது சோசலிசஆட்சித் தலைமையில் தன்னால் எவ்வளவு அரும்பாடு பட்டு உழைக்க முடியுமோ அவ்வளவு பாடுபட்டார்.

ஆனாலும் குண்டடிபட்டதன் விளைவு, இளமைப் பிராயம் முதல் புரட்சிகர நடவடிக்கைகளில் தம்மை முழுமையாகத் தகவமைத்துக் கொண்டு தியாகத்துடனான அரும்பாடுபட்டதன் விளைவு, எல்லாமுமாகச் சேர்ந்து அவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு படுக்கையாகி விட்டார். மூளைப் பாதிப்பும் சேர்ந்து கொண்டது. மன அழுத்தம் ஏற்படக்கூடிய எந்த ஒரு செய்தியையும் லெனின் பார்வைக்கு எவரும் கொண்டு செல்லக்கூடாது என்ற மருத்துவரின் கண்டிப்பு கலந்த ஆலோசனையை நிறைவேற்றுவதற்கான தலைமை பொறுப்பு மத்திய கமிட்டியால், ஆசான் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனாலும் மருத்துவரின் ஆலோசனைகளை மிகுதியும் மீறிய ஒரே நபர் லெனின் இணையர் குருப்ஸ்கயா அவர்களே ஆவார். அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பல்வேறு விதமான முரண்பட்ட போக்குகள் இவை குறித்து எல்லாம் ஏற்கனவே நமது இதே தளத்தில் வெளியிட்டிருக்கிறோம். பின்னர் ஸ்டாலினும் குரூப் ஸ்கயாவும் ராசியாகிக்கொண்ட செய்தியையும், இறுதிக்காலம் வரை லெனின் தனக்கு அடுத்த தலைமைப் பாத்திரம் வகிக்கத் தகுதியான ஒரே தலைவர் ஸ்டாலின் தான் என ஏற்றுக் கொண்டிருந்ததையும், அதனை லெனின் சகோதரி மரீயா ஆசான் ஸ்டாலினின் தனித்தன்மையை போற்றிப் புகழ்ந்தாலும் “நான் எப்பொழுதும் லெனினது மாணவனே” என்று ஆசான் ஸ்டாலின் இறுதிக்காலம் வரை பிரகடணப் படுத்திக் கொண்டி ருந்ததையும், அண்ணனுக்கு(லெனின்)ப் பிறகு நாட்டை வழிநடத்திச் செல்லும் ஆற்றலர் ஸ்டாலின் ஒருவரே என வெளிப்படையாகவே அறிவித்திருந்ததும்…
ஈங்கு குறிப்பிடத்தகுந்த முக்கிய அம்சமாகும்.(ஏப்ரல் 22 லெனின் குறித்தான பிறந்தநாள் கட்டுரையில்கூட “ஸ்டாலின் பற்றிய பொய்கள்”- “படிக்க:” பகுதியில் அது மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எப்படியோ தமக்கு 53 வயது 9 மாதங்கள் மட்டுமே கடந்து கொண்டிருந்த சூழலில் 1924 ஜனவரி 21-ல் உலகப் பாட்டாளி மக்களை எல்லாம் கண்ணீர் சிந்தி உருக்குழைய விட்டுவிட்டு ஆசான் லெனின் மறைவுற்றார். அவரது மறைவு குறித்து உலகம் முழுமைக்கும் உள்ள பாட்டாளி மக்கள் மட்டுமல்ல; முதலாளித்துவ ‘அறிஞர் பெருமக்கள் கூட’ அவரது மேதமைத்தன்மையை வெகுவாகப் புகழ்ந்துரைக்கவும், அவரது இறப்பு எத்தகைய ஈடு செய்ய இயலாத இழப்பு என்பதனையும் தவறாமல் வெளிப்படுத்தினர்.
எப்படி பரிணாம வளர்ச்சி தத்துவம் பின்னோக்கிச் செல்லும்?
இப்பொழுது கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள – சிலர் எழுப்புகின்ற அய்யப்பாடுகளைப் பொருத்திப் பாருங்கள்.
லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்கம் 1917 பிப்ரவரி 5 முதலாளித்துவப் புரட்சியில் ஜார் மன்னனை வீழ்த்தியதிலும் சரி; 1917 நவம்பர் 7 சோசலிசப் புரட்சியை நிகழ்த்தியதில் தலைமைப் பாத்திரம் வகித்ததிலும் சரி; ஆசான் லெனின், கம்யூனிசத் தத்துவப் படைப்பாளிகள் – தியாக சீலர்கள் மார்க்ஸ் எங்கெல்ஸின் மகத்தான சீடன் என்பதை சகல விதங்களிலும் – சகல துறைகளிலும் மெய்ப்பித்துக் காண்பித்தார்தான்! அத்தத்துவங்களும் – சமூக மாற்றங்களும் அறுதிப் பெரும்பான்மையான தொழிலாளர்கள்- விவசாயிகள்-நடுத்தர வர்க்கத்தினற்கானது தான்! இதுதான் நிஜம்!

ஆனால், அத்தகையதொரு முன்னோக்கிய விஞ்ஞான சோசலிசப் புரட்சி நடந்தேறிய உடனேயே எதிர்முகாமில் உள்ள முதலாளித்துவ சக்திகள், அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய முதலாளித்துவமாக உருவெடுத்துவிட்ட – லாபவெறி பிடித்த கொடூரமான கொலைகார சக்திகள் முற்றிலுமாக ஒழிந்து படாது. காலை வாரி விடுவதற்குச் ‘சமயம்’ பார்த்துக் கொண்டே தான் இருக்கும். அதன் முதல் வகை ஏற்பாடு தான் ருஷ்ய சோசலிசப் புரட்சி நடந்த 9 1/2 மாதங்களுக்குள்ளாகவே ஆசான் லெனின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையானதாகும் என்பதையும், இத்துயர நிகழ்வே சில ஆண்டுகளில் படிப்படியான நோய்வாய்ப்படுதலுக்கு உள்ளாகி அவர் மரணத்தை தழுவுவதற்கு இட்டுச் செல்வதற்குமான காரணங்களாக அமைந்தன என்பதனையும் நாம் உணர வேண்டும்.
ஆக, வர்க்க பேதம் – கடும் முரண்பாடுகளை உள்ளடக்கியதாக எந்த சமூகத்தில் நிலவினாலும் – குறிப்பானதொரு நாட்டில் மார்சிய-லெனினிய அடிப்படையில் சோசலிசப் புரட்சியை – அல்லது மாவோ வகுத்தளித்தபடி புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுத்தாலும், எதிரிகள் சுவடு தெரியாமல் முற்றாக அழித்தொழிக்கப்படும் காலம் வரை வர்க்கப் போராட்டம் என்னவோ நீடித்துக் கொண்டுதான் இருக்கும். அதாவது வர்க்கங்கள் இருக்கும் வரை வர்க்கப் போராட்டம் தொடரவே செய்யும். கம்யூனிசம் என்னும் உயர்ந்த லட்சிய வடிவத்தை அடையும் வரை பாட்டாளி வர்க்கத்திற்கு ஓய்வு என்பது இருக்க முடியாது.
அப்படியானால் இந்தக் கூர்மையான போராட்ட யுத்தத்தில் ஏற்றத்தாழ்வுகள் – வளர்ச்சிப் போக்கில் உயர்வு – தாழ்வு இருந்தே தீரும். லெனின் குறிப்பட்டதைப்போல ‘ஓரடி முன்னே; ஈரடி பின்னே’ என்ற தன்மையில் தான் படிப்பினைகளிலிருந்து முன்னோக்கிச் செல்ல முடியும். இப்படிப்பட்ட பின்னடைவுகள் ஏற்படுவதற்கான சூழல்கள் உருவாகியே தீரும் என்பதனை லெனின் வாழ்ந்த காலத்திலேயே வெளிப்படுத்தினார். அதற்காக எதிரிகளும், துரோகிகளும் ‘வர்ணிப்பது’ போல மார்க்சிய-லெனினியம் தோற்றுப் போய்விட்டதாகவோ – காலாவதியாகிவிட்டதாகவோ கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதே இங்கே முக்கிய அம்சம் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும்.
ஆசான் லெனின் மறைவும் – ஆசான் ஸ்டாலின் பொறுப்பேற்றலும்
லெனின் மறைவிற்குப் பின் ருஷ்ய நாடும், போல்ஷ்விக்(கம்யூனிஸ்ட்) கட்சியும் பல்வேறு கோணங்களில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த தருணத்தில் லெனினது மாணாக்கனும், சிறந்த தத்துவ ஆசானாக பரிணமித்தவருமான
ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

லெனின் விரும்பிய வகையில் மார்க்சிய- லெனினிய கொள்கை கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில், உலகிலேயே சோசலிசத் தத்துவத்திற்கு ஈடிணை வேறு எதுவும் இல்லை என்பதனை உலக முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய முகாம்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கான ஐந்தாண்டுத் திட்டங்களைப் போட்டு மீண்டும் மீண்டும் சோசலிசக் கட்டமைப்பை வளர்த்தெடுத்தார்; பாதுகாத்தார்! சோசலிசப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய ஆசான் லெனின் புரட்சிக்குப் பின் மிகக் குறுகிய காலத்திலேயே மறைவுற்றதால் ருஷ்யக் கட்டுமானத்தை போற்றிப் பாதுகாப்பதிலும், மேலும் வளர்ச்சி அடையச் செய்வதிலும் பங்களிப்பு செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டு மரணத்தைத் தழுவினார். ஆனாலும் லெனின் மறைந்து 30 ஆண்டுகாலம் வாழ்ந்த ஸ்டாலின் சோசலிச சோவியத் ரஷ்யாவை கட்டுக்கோப்பாக பாதுகாத்தே வந்தார்.
லெனின் மறைவுக்குப் பிறகு உருவாகிய புதிய சூழலுக்கு ஏற்ற பல்வேறு நூல்களை எழுதினார் ஸ்டாலின். ‘தேசிய இனப் பிரச்சனை’ பற்றி அவர் எழுதிய நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தருணத்தில் தான் இரண்டாம் உலகப் போரும் வெடித்தது. ‘அப்போரில் ரஷ்யாவை ஜெர்மனியின் சர்வாதிகாரி பாசிச ஹிட்லர் கைப்பற்றுவான்’ என உலக நாடுகள் பல எதிர்பார்த்திருந்த நிலையில் தமது ‘செஞ்சேனை’க்குத் தலைமையேற்று ஓட ஓட விரட்டி அடித்து எதிர் முகாமை மண்ணோடு மண்ணாகச் செய்தார் ஸ்டாலின். அதில் வெற்றி பெறுவதற்குக் கூட அவரே குறிப்பிட்டது போல மார்க்சிய- லெனினிய பேராயுதத்தை தான் மூலதனமாகக் கொண்டியங்கியதாகக் கூறினார்.
லெனின் உயிரோடிருக்கையில் மத்திய கமிட்டி வற்புறுத்தி அவரது 50-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்திட முன்மொழிந்த போது அதற்கு லெனின் இசையவில்லை. இறுதியில் கடும் வற்புறுத்தலுக்கிணங்க நிகழ்வில் பங்கேற்றபொழுது பலரும் லெனினைப் பற்றி புகழ்ந்து தள்ளிய ‘விதங்கள்’ அவரை நெஞ்சடைக்கச் செய்து விட்டது; அருவருப்பாகக் கருதினார். ‘இனி எக்காலத்திலும் இப்படிப்பட்ட நிகழ்வை ஏற்பாடு செய்யாதீர்கள்; தனிநபர் துதி பாடலை முற்றாக நிராகரிங்கள்’ என ஆணையிட்டார்.
படிக்க:
♦ மார்க்ஸ் லெனின்: உண்மை அறிவோம்! வினையாற்றுவோம்!!
♦ உண்மையறிவோம் லெனின்- ஸ்டாலின் குரூப்ஸ்கயா
ஸ்டாலின் எப்பொழுதுமே லெனினைப் போன்று சுயபுராணம் பாடுவதை முகஸ்துதிக்கு உள்ளாகுவதை என்றும் விரும்பியவர் அல்ல. லெனினின் மாணவர் அல்லவா அவர். ஸ்டாலின் ஒரு முறை இப்படிச் சொன்னார்: “எந்த ஒரு சூழ்நிலையிலும் தனி ஒரு மனிதனின் கையில் அதிகாரம் குவிந்து இருப்பதை நமது தொழிலாளர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். நம்மிடம் இருந்த மாபெரும் அதிகாரங்கள் பெற்றிருந்த பிரமுகர்கள் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் நம்பிக்கையை இழக்கும் போது அவர்கள் ஒன்றும் இல்லாமல் போய் விட்டார்கள்” என்றார்.
ஆனால் எதிர்த்துருவ முகாமினரை விடவும், கட்சிக்கு உள்ளேயே இருந்த சில எதிர்ப் புரட்சி வாதிகள்- குறிப்பாக ட்ராட்ஸ்கியவாதிகள் ஸ்டாலினைப் பற்றி மிகக் கேடான முறையில் பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட – நாட்டை சீர்குலைத்திட – நாட்டை மீண்டும் முதலாளித்துவப் பாதைக்கு கவிழ்த்து விட முதலாளித்துவ – ஏகாதிபத்தியவாதிகளுடன் பிணைந்து வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தார்கள். ஸ்டாலின் உயிருடன் இருக்கும் பொழுதே இரண்டாம் உலகப்போரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் மாண்டு போய்விட்டதாக கட்டுக்கதையை பரப்பினார்கள். அதற்கு ஸ்டாலின் தான் காரணம் என்றார்கள். ‘அக்காலக் கட்டத்தில் இருந்த மொத்த ராணுவ அதிகாரிகளே ஒன்றரை லட்சத்திற்கும் உள்ளான எண்ணிக்கையில்தான் இருந்தார்கள்; மூன்று லட்சம் ராணுவ வீரர்கள் எப்படி மாண்டிருக்க முடியும் என்பதை மேதாவிகள்தான் விளக்க வேண்டும்’
என்றார் ஸ்டாலின். அனைத்துவிதப் பொய்களையும் தமது தனித்துவ செயற்பாடுகளால் முறியடித்தார் ஸ்டாலின். தான் இருக்கும் வரை மகத்தான ருஷ்ய சோசலிச பூமியை எவனாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாகவே பாதுகாத்தார்; மென்மேலும் வளர்த்தெடுத்தார்.
ஸ்டாலின் மறைவும் ருஷ்யா, சமூக ஏகாதிபத்தியமாக மாறுதலடைவதும்!
‘அண்ணன் எப்போது காலியாவான்; திண்ணை எப்போது கிட்டும்’ – என்று காத்திருந்த கண்கொத்திப் பாம்புகள் துரோகி ‘நிகிதா குருச்சேவ்’ தலைமையில் ஒன்று திரண்டார்கள். இவ்வளவுக்கும் இத்துரோகி ஸ்டாலின் வாழ்ந்த காலம் மட்டும் மற்ற எவரையும் விட – ஸ்டாலின் வெறுத்தொதுக்கிய – தனிப் புகழ்ச்சி பாடுவதில்
மிக முன்னணியில் இருந்தவன். மூட்டை மூட்டையாக ஸ்டாலினுக்கு எதிராக பொய்களை அவிழ்த்து கொட்டினார்கள். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் மொழிபெயர்ப்பு செய்து வானளாவக் கொண்டாடிய “20-வது காங்கிரசில் குருச்சேவின் ‘ரகசிய உரை’ ” நாடு சமூக ஏகாதிபத்தியமாக சீரழிவதற்கு வித்திட்டது. கோயபல் ஸையும் விஞ்சிய கட்டுக்கடங்காத பொய்க்கதைகளை ஸ்டாலினுக்கெதிராக அவிழ்த்து விடுவதில் கிஞ்சிற்றும் வெட்கப்படவில்லை துரோகி குருச்சேவ்.
‘ஸ்டாலின்…தனி நபர் துதி பாடலில் கண்ணும் கருத்துமாகவே இருந்தார்;
கட்சிக்குள் கட்சி கட்டினார்; பல்லாயிரக்கணக்கான கட்சியினரைக் கொன்றொழித்தார்; லெனினால் பலமுறை கண்டிக்கப்பட்டார்; தலைமைத்துவம் இல்லாத பிடிவாதக்கார முரட்டு மனிதர் என லெனின் பலமுறை ஸ்டாலினைக் கண்டித்தார்; குரூப்ஸ் கயாவுக்கும்-ஸ்டாலினுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கான உண்மைகளை முற்றிலுமாக மூடி மறைத்து ஸ்டாலின் மீது பொய்யான கடும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்; லெனின் என்றுமே கூறாத “அமைதி வழியிலான மாற்றம்; சமாதான வாழ்வே சகவாழ்வு” என்ற லெனினின் – காலத்திற்கேற்ற பாதையை முற்றாக நிராகரித்தார் ஸ்டாலின்..” இவ்வாறு துரோகி குருச்சேவ் பெரும் புத்தமகமாக போடும் அளவிற்கான ‘இரகசிய உரை’ என்ற பொய்யுரையை வெட்கமின்றிப் பரப்பினார்.
படிக்க:
♦ நவம்பர் – 7, 2023: 106-வது ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!
♦ ஆசான் ஸ்டாலின் 73வது நினைவு நாளில் உலகை அச்சுறுத்தி வரும் பாசிஸ்டுகளை வீழ்த்த உறுதியேற்போம்!
ஆசான் ஸ்டாலினின் சில உரைகளை -கருத்துப் பதிவுகளை – நேர்காணலில் அவரது பதில்களை நெடியதாக இருந்தாலும் சிலவற்றை நாம் அசை போட வேண்டும். நிகழ்வொன்றில் ஸ்டாலினை தோழர்கள் பாராட்டிப் புகழும் பொழுது ஸ்டாலின் இப்படித்தான் பதில் கூறினார். “தோழர்களே, நான் கட்டாயம் எனது முழு மனசாட்சியோடு இதைக் கூறியாக வேண்டும். இங்கு என்னை பற்றி கூறப்பட்ட மட்டுமீறிய புகழ்ச்சிகளில் பாதி அளவுக்குக் கூட நான் தகுதி பெற்றவன் அல்ல; அக்டோபர் புரட்சியின் கதாநாயகனாக, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக, கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவராக, பழங்கதை குதிரை வீரனாக, இன்னும் பிற விதமாக நான் தோன்றுவதாகக் கூறப்படுகிறேன். தோழர்களே, இது அபத்தம்; முழுவதும் தேவையற்ற மிகைப்படுத்தல். ஒரு புரட்சியாளன் இறந்து போகும்போது அவனது கல்லறையில் வழக்கமாக கூறப்படும் வகையைச் சார்ந்தது இது. ஆனால் இறந்து போகும் எண்ணம் எனக்கு இல்லை. நான் இன்றும், எப்போதும் திப்பிலிஸ் புகைவண்டித் தொழிற்சாலையின் முற்போக்கான தொழிலாளர்களின் மாணவர்களில் ஒருவன் தான்… மேலும் ஸ்டாலின் யார்? ஸ்டாலின் ஒரு சிறிய ஆள்…”
“… உங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உழைக்கும் வர்க்கத்தின் மகத்தான கட்சிக்கு நான் சமர்ப்பிக்கிறேன். அதுதான் என்னை தாங்கிப் பிடித்து தனது வடிவத்திலும், தோற்றத்திலும் என்னை உருவாக்கியது. மேலும் இவ்வாறு அவற்றை சமர்ப்பிப்பதன் மூலம் நமது புகழ்பெற்ற லெனினியக் கட்சியின் கணக்கில் வரவு வைக்கிறேன். நான் உங்களுக்கு எனது போல்ஷ்விக் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்…”
“ஸ்டாலினின் தனிப்பட்ட முன்முயற்சிகளின் விளைவு தான் ‘வெற்றியுடன் டஸ்ஸி’
(Dizzy with success) என்ற கட்டுரை என சிலர் இங்கு நினைக்கிறார்கள். இது முட்டாள்தனமானது. இது போன்ற விஷயத்தில் எவரொருவர் ஆனாலும், அவர் எப்படிப்பட்டவரானாலும் தனிப்பட்ட முன்முயற்சி என்பது முறையானதல்ல; நமக்கு ஒரு மத்திய குழு உள்ளது”
“நீங்கள் உங்களை எனக்கு அர்ப்பணிப்பது பற்றி பேசுகிறீர்கள். ஒருவேளை இது தற்செயலான சொற்றொடராக இருக்கலாம்… அவ்வாறில்லையானால், நீங்கள் இவ்வாறு மனிதர்களுக்கு ‘அர்ப்பணிப்பு’ செய்யும் கொள்கையை கைவிட்டு விடுங்கள் என ஆலோசனை வழங்குகிறேன். அது போல்ஷ்விக் வழிமுறை அல்ல. பாட்டாளி வர்க்கத்துக்கு, அதன் கட்சிக்கு, அதன் அரசுக்கு, அர்ப்பணிப்போடு இருங்கள். அதுதான் நல்லது; பயனுள்ளது. ஆனால் இதை பலவீனமான சிந்தனை உள்ள அறிவு ஜீவிகள், மனிதர்களுக்கு அர்ப்பணிக்கும் பயனற்ற அலங்கார துணிவோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்” (தோழர் ஷட்னோவ்ஸ்கிக்கு எழுதிய கடிதத்தில்)
“என்னை பொருத்தவரை நான் லெனினின் ஒரு மாணவன் மட்டுமே. மேலும் எனது வாழ்வின் நோக்கமே அவருக்குத் தகுதியான மாணவனாக இறுதி
வரை இருப்பதே …” (லெனின் உயிரோடு இருந்த போதும் சரி; மறைந்த பிறகும் சரி; இதுதான் ஸ்டாலின் நிலைப்பாடு)
“ராயின்ஸ்: உங்களை சந்திப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதை நான் மாபெரும் பெருமையாகக் கருதுகிறேன்.
ஸ்டாலின்: இதில் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் மிகைப்படுத்துகிறீர்கள்.
ராபின்ஸ்: எனக்கு மிக அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்தியது ரஷ்யா முழுவதிலும் நான் கண்ட ‘லெனின்-ஸ்டாலின்’ ‘லெனின்-ஸ்டாலின்’ ‘லெனின்-ஸ்டாலின்’ என இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட பெயர்கள் தான்.
ஸ்டாலின்: அதுவும் கூட ஒரு மிகைப்படுத்தலே. லெனினோடு என்னை எவ்வாறு ஒப்பிடப்பட முடியும்?
ஸ்டாலினின் ‘குழந்தை பருவக் கதைகள்’ என்பது வெளியிடப்படுவதை நான் உறுதியாக எதிர்க்கிறேன்.
இப்புத்தகம் உண்மை நிகழ்வுகளைப் பெருமளவுக்கு, கற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு திருத்தல்களையும், மிகைப்படுத்தல்களையும், தகுதியற்ற புகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது…
இந்தப் புத்தகத்தில் சோவியத் குழந்தைகளின் (பொதுவாக மக்களின்) மனங்களில் தலைவர்களை வழிபடும் உணர்வை ஏற்படுத்தும் நோக்கங்கள் உள்ளன, இது ஆபத்தானதும் தீங்கு விளைவிக்கக் கூடியதுமாகும்.
கதாநாயகர்கள் மற்றும் “கூட்டம்” என்ற கோட்பாடு ஒருபோதும் போல்ஷ்விக்குகளுடையது அல்ல. சமூகப் புரட்சியாளர்களின் கொள்கை…
நான் இந்த புத்தகத்தை எரித்து விடலாம் என்று கருதுகிறேன்.
(ஸ்டாலினை பற்றிய ‘குழந்தைப் பருவ கதைகள்’ வெளியீடு குறித்து ஸ்டாலின் கருத்து)
“ஸ்டாலினின் பெருமை” கூறும் காட்டுக் கூச்சல்களால் காதுகள் வலிக்கின்றன. இது படிப்பதற்கு வெட்கப்படச் செய்கிறது”
டிமிட்ரோவ் நாட்குறிப்பிலிருந்து..
டிமிட்ரோவ்: (ஸ்டாலினை மிகவும் பொருந்து திராட்சை மது அருந்தி பாராட்டும் விதத்தில் இந்த வார்த்தைகளோடு முடியும் வகையில் முன்மொழிகிறார்) ஸ்டாலினை இணைக்காமல் லெனினைப் பற்றிய பேச்சு எதுவும் இல்லை
ஸ்டாலின்: தோழர் டிமிட்ரோவை மிகவும் மதிக்கிறேன். நாம் நண்பர்கள்; நண்பர்களாகவே இருப்போம். ஆனால் நான் கட்டாயம் அவரோடு ஒத்துப் போக முடியாது. அவர் தன்னை இங்கு மார்க்சியம் அல்லாத வழியில் வெளிப்படுத்தியுள்ளார். வெற்றிக்கான காரணமாக எது தேவை என்றால் சரியான சூழ்நிலை; அதன்பின் எப்போதும் தலைவர்கள் காணப்படுவார்கள்.
டிமிட்ரோவ்: இது ஒரு கூட்டு வேலை. தோழர் மானுயில்ஸ்கியைத் தலைமை ஆசிரியராகக் கொண்டது.
ஸ்டாலின்: (குறிப்பாக ஸ்டாலினைப் புகழ்ந்து வேண்டுகோள் விடுக்கும் பகுதி பற்றி)
“நமது ஸ்டாலின் நீடூழி வாழ்க!”
“ஸ்டாலின் என்றால் சமாதானம்”
“ஸ்டாலின் என்றால் கம்யூனிசம்”
“ஸ்டாலின் தான் நமது வெற்றி!”
மானுயிஸ்கி ஒரு தேரை. (நிலத்திலும், நீரிலும் வாழும்) அவர் ஒரு டிராட்ஸ்கியர்! டிராட்ஸ்கிய குண்டர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் போது அமைதியாக இருந்ததற்காக, பேசாமல் இருந்ததற்காக நாம் அவரை விமர்சனம் செய்தோம்! இப்போது அவர் தேரையாகத் துவங்கியிருக்கிறார்.
இதில் சந்தேகத்துக்குரிய ஏதோ ஒன்று இருக்கிறது.
அவர் “பிராவ்தா”-வில் எழுதிய ‘ஸ்டாலினும் உலக கம்யூனிஸ்ட் இயக்கமும்’ கட்டுரை தீங்கு விளைவிப்பதும், ஆத்திரமூட்டுவதுமாகும். ‘மார்க்ஸ்-ஏங்கல்ஸ்-லெனின்- ஸ்டாலின்’ பதாகையின் கீழ் வேண்டுகோள் என்பதை அனுமதிக்கவே முடியாது. அது, ‘மார்க்ஸ்- ஏங்கல்ஸ் – லெனின்’ என்றுதான் இருக்க வேண்டும்”-என வலியுறுத்தினார் ஸ்டாலின்.
ஸ்டாலின் 1934 டிசம்பரில் தனது 55-ஆம் பிறந்தநாளை ஒட்டி அவரைப் பற்றிய கண்காட்சி ஒன்றை நடத்த அனுமதி மறுத்தார்.
… அவரது 55-ஆம் பிறந்தநாளுக்கு அர்ப்பணிக்கும் வகையில் ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்த முன்மொழியும் அனைத்து ஒன்றிய பழைய போல்ஷ்விக்குகளின் சங்கம் எழுதிய கடிதத்தின் மீது அவர் கீழ்க்கண்ட தீர்மானத்தை எழுதினார்: ‘இத்தகைய நடவடிக்கைகள் தனிநபர் வழிபாட்டுக்கு வழி வகுத்து அதை பலப்படுத்தும் என்பதால் அது தீங்கு விளைவிப்பது; மற்றும் அது நமது கட்சி உணர்வுக்கும் ஏற்புடையதல்ல என்பதால் நான் அதை எதிர்க்கிறேன்’… இப்படித்தான் இருந்துள்ளது ஸ்டாலினின் தொடர்ச்சியான நிலைப்பாடுகள்.
தன்னைப் பற்றி ‘Vozhd’ (தலைவர்) என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக நாடக ஆசிரியர் அஃபினோ ஜெனோவ்-ஐ ஸ்டாலின் விமர்சித்தார்.
ஏ.என்.அஃபினோ ஜெனோவ் எழுதிய ‘பொய்’ (THE LIE) என்ற நாடகத்தின் கையெழுத்துப் பிரதியை 1933-ல் படித்தபின் ஸ்டாலின் அந்த நாடக ஆசிரியருக்கு தனது திருத்தங்களுடன் கூடிய குறிப்புகள் கொண்ட ஒரு கடிதத்தை எழுதினார்:
“தயவுசெய்து பாருங்கள். நீங்கள் ‘தலைவர்’ என்று சொல்லிக்கொண்டே செல்வது உதவாது. இது மோசமானது. இதைச் சொல்ல நீங்கள் என்னை அனுமதித்தால், இது ‘இழிவானது’. இது ஒரு தலைவரைப் பற்றிய பிரச்சனை அல்ல; கூட்டுத் தலைமை பற்றியது. கட்சியின் மத்திய குழுவை பற்றியது.
…இது சுருக்கம் தான். இந்த நாடகத்தைப் பற்றி ஸ்டாலின் மிக விரிவாகவே விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
… உண்மை நிலைமைகள் இவ்வாறு விரிவடைந்து கிடக்க, தற்புகழ்ச்சி துளியுமற்ற – போல்ஷ்விக் கட்சியின் கூட்டுத்துவ தலைமையில் மட்டுமே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த ஆசான் ஸ்டாலின் மறைந்த அடுத்த கனமே ஏற்கனவே எதிர்ப் புரட்சியாளர்களாக உருவெடுத்துவிட்ட நிகிதா குருச்சேவ் கும்பல்,
ஸ்டாலினைப் பற்றிய பொய்களையும் அவதூறுகளையும் மூட்டை மூட்டையாக ‘இரகசிய உரை’ என்ற பெயரில் அவிழ்த்துக் கொட்டினார்.
அதனால் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் உட்பட முதலாளித்துவ நாடுகள் அனைத்தும் நிகிதா குருச்சேவின் ‘இரகசிய உரை’யை உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் வெளியிட்டு சோசலிசத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தை தொய்வின்றிப் பரப்பினர். நிகிதா குருச்சேவின் வாழ்க்கை வரலாற்றையே புத்தகங்களாக எழுதிப் புளகாங்கிதம் அடைந்தனர்.
ருஷ்யாவின் தலைகீழ் மாற்றத்திற்கு இதுவே காரணம்!
சோசலிசப் புரட்சிக்குப் பின்பு 30-08-1918-ல் ஆசான் லெனின் எதிர்ப் புரட்சிக்காரியால் துப்பாக்கியால் சுடப்பட்டு வீழ்த்தப்பட்ட காலம் முதல் ஆசான் ஸ்டாலின் மறைவிற்குப் பின்னர் 1956-ல் 20-வது கட்சி காங்கிரஸ் என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டி ‘நிகிதா குருச்சேவ்’ ஆற்றிய ‘இரகசிய உரை’ (அவற்றை தொகுதி தொகுதியாக படிக்க வேண்டி உள்ளது)- என்ற புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டிம காலம் வரையிலான ஒட்டுமொத்த நிகழ்ச்சிப் போக்குகளையும் மார்க்சிய- லெனினிய அடிப்படையில் தொகுத்துப் பார்ப்போருக்கு சோசலிச ரஷ்யா ஏன் முன்னோக்கி நகராமல் பின்னோக்கி நகர்ந்து முதலாளித்துவ நாடாக- சமூக ஏகாதிபத்திய நாடாக – வர்க்கப் போராட்டம் – புரட்சிகர செயலுத்திகளுக்கு மாற்றாக ‘அமைதி வழியிலான மாற்றம்; சமாதான வாழ்வே சகவாழ்வு!’ என்ற பேடிமைத்தனமான முழக்கங்களை முன் வைத்தமைக்கான காரணங்களின் உண்மைத்தன்மைதனை எளிதாக வந்தடைய முடியும்.
எனவே, புரட்சிகள் நடந்த பல்வேறு நாடுகளில் மார்க்சிய- லெனினிய-மாவோ சிந்தனை கோட்பாடுகள் என்னவோ பின்னடைவைத் தற்காலிகமாகச் சந்தித்துள்ளன என்பதென்னவோ உண்மையே.
ஆனால், அமைதி வழியிலான மாற்றம் அல்லது நல்லுறவு என்று பீற்றிக்கொள்ளும் கயவாளிகள் நாட்டின் செல்வங்களை கொள்ளையிடும் நோக்கில் நாட்டுக்கு நாடு போர் தொடுப்பதும், முதலாளித்துவ – ஏகாதிபத்தியக் கொள்கைகளில் ஊன்றி நின்று மக்களை பல்லாயிரக்கணக்கில் ஈவிறக்கமின்றிக் கொன்றொழிப்பதிலும், செல்வாதாரங்களைச் சூறையாடுவதிலும் வெட்கமின்றி முனைந்து நின்று காரியமாற்றுகின்றன.
இவற்றுக்கு நாட்டு எல்கை, தேசியம், இனம், மொழி, மதம், சாதி என்ற ‘சாதனங்களை’க் கருவிகளாகப் பயன்படுத்தி உழைக்கும் மக்களை உண்மை தெரியா வண்ணம் பிளவு படுத்துகின்றனர்.
எனவேதான், இன்று உலகம் இருக்கும் சூழலில் மார்க்சிய- லெனினியத்தின் தேவை முன்னிலும் அவசர-அவசியமாக தேவையாகிறது. மார்க்சியம் என்பது வறட்டு கோட்பாடல்ல; அது செயலுக்கான வழிகாட்டி என்பதனை மேலும் நெஞ்சில் ஏந்தி புரட்சிகர நடவடிக்கைகளில் உன்னத நோக்கத்தோடு – ஆசான்கள் காட்டிய தியாக உணர்வுகளோடு பயணிப்போம் வாரீர்!
- எழில்மாறன்






