இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக சரிந்து கொண்டுள்ளது என்று முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே கூச்சலிட துவங்கியுள்ளனர். இந்தியாவின் பொருளாதாரம் எந்த விதமான சிக்கலும் இன்றி நேர்க்கோட்டு பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் என்னதான் சண்டமாருதம் செய்துக் கொண்டு இருந்தாலும், அதற்கு நேர் மாறாக பொருளாதாரம் வீழ்ச்சியை அடைந்து வருகிறது.
இந்த வீழ்ச்சியை சரி செய்வதற்கு எந்த பொருளாதாரத் திட்டங்களும் கையில் இல்லாத நிலையில், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் திணிக்கப்பட்ட மறுகாலனியாக்க அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் தான் பாசிச பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகளாக தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பொருளாதார ரீதியிலான தோல்வியை மக்கள் தலையில் சுமத்துவதற்கு கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தை ஏவி வருகிறது ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பல்.
இவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் போதெல்லாம் இந்திய மக்களின் கைகளில் சேமிப்பாக உள்ள சுமார் 40,000 டன் தங்கம் தான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் கண்களில் தொடர்ந்து உறுத்தலை உருவாக்கியுள்ளது. ஆர்எஸ்எஸ்-ன் கொள்கை பிதாமகர்களில் ஒருவரான திருவாளர் ஆடிட்டர் குருமூர்த்தி தொடர்ந்து இந்த தங்கக் கையிருப்பு பற்றி பல்வேறு காலகட்டங்களில் திருவாய் மலர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் கையில் அதாவது மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் கையில் 11 லட்சம் கோடி பொறுமானமுள்ள 880.52 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பாக உள்ளது. நமக்கு வெளிப்படையாக அறிவிக்காமலேயே இந்தியாவின் தங்க கையிருப்பானது 2025-26 காலகட்டத்தில் 168.00 மெட்ரிக் டன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதன் அடுத்தகட்ட பாய்ச்சலாக 1200 கோடி டாலர் மதிப்புள்ள தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா விளங்குகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மைதான். இந்தியாவின் எண்ணெய் தேவையில் 88 சதவீதம் இறக்குமதி மூலமே சரி கட்டப்படுகிறது. கடந்த ஆறுமாத காலமாக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தொடர்ச்சியான போர் உலகப் பொருளாதாரத்தை மிகப்பெரும் நெருக்கடிக்கு தள்ளி உள்ளது.
இதற்கு இணையாகவே ஈரானின் பொருளாதாரம் இரண்டாவது உலகப் போரில் இருந்த காலகட்டத்தில் இருந்த பின்தங்கிய நிலையை விட மேலும் பின்னடைந்துள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாகவும் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியாக தடை விதிக்கப்பட்டு உள்நாட்டில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாலும் தொடர்ந்து இந்த பாதிப்புகளை தான் தாங்கிக் கொள்ள முடியாது என்ற நிலையில் ஹர்மோஸ் நீரிணை மூலமாக கப்பல் போக்குவரத்து நடப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து தனது பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றும் ஆகியவற்றுடன் இந்தியாவின் உள்நாட்டு நாணய மதிப்பின் வீழ்ச்சியும் இணைந்து இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகப்பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
நாம் ஏற்றுமதி செய்யும் தொகையை விட இறக்குமதி செய்யும் தொகை அதிகரிக்கும் போது ஒன்றிய அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ள அந்நியச் செலாவணி தொகை செலவிடப்படுகிறது என்பதால் அது வீழ்ச்சியடைகிறது என்று எளிமையாகச் சொல்லலாம்.
படிக்க:
♦ தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்வது ஏன்? இதற்கும் பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு?
♦ மதங்களின் தோல்வியும், அறிவியல் வெற்றியும்!
இந்த நிலையில் இந்தியாவின் அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை குறைப்பதற்காகவும், சரிந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல், இந்தியாவின் சேமிப்பான ரிசர்வ் வங்கி கையிருப்பு தொகைக்கு ஈடான தங்கத்தை ரகசியமாக விற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
“தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட போதிலும், ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு குறைந்துள்ளது ஆச்சரியத்தையும், கேள்வியையும் எழுப்பியுள்ளது என்பதனையும், பொதுவாக வரி உயர்ந்தபடும்போது ரிசர்வ் வங்கியின் கைவசம் உள்ள தங்கம் மற்றும் அது சார்ந்த டாலர் சொத்துக்களின் மதிப்பு உயர்ந்திருக்க வேண்டும்; ஆனால் அந்த இருப்பு குறைந்துள்ளது; எனவே மத்திய வங்கி தங்கத்தை விற்பனை செய்திருக்க வாய்ப்புள்ளது” என்பதை இந்திய பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தா முன் வைத்துள்ளார்.
இந்தச் செய்திகள் அச்சு ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும், டிஜிட்டல் ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெறவில்லை. ஒரு ஓரமாக ப்ளூம்பெர்க் மூத்த பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தா இவ்வாறு தெரிவித்துள்ளதாக போகிற போக்கில் தகவலை தெரிவித்து விட்டு பாசிச மோடியின் ஊடக சர்வாதிகாரத்தின் முன் மண்டியிட்டு கிடக்கின்றனர் பனமூட்டைகளின் பிடியில் உள்ள முதலாளித்துவ சந்தைப் பத்திரிகைகள்.
ஏற்கனவே, 1991ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகக் குறைந்த நிலைக்குச் சென்றது. அப்போது, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வெறும் 1.2 பில்லியன் டாலராகக் குறைந்தது. இது வெறும் இரண்டு வார கால இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, 47 டன் (47,000 கிலோ) தங்கத்தை இங்கிலாந்து வங்கிக்கு (Bank of England) விமானம் மூலம் அனுப்பிவைத்தது. இதைப் பிணையாக வைத்து சுமார் 400 மில்லியன் டாலர் கடன் பெறப்பட்டது. இது, இரண்டு தவணைகளாக வைக்கப்பட்டு கடன் பெறப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்குத் தெரியாமல் செய்த இந்த சதிச்செயல் அம்பலமானதால் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக காங்கிரசு மாட்டியது. இதனை அம்பலப்படுத்தி எமது தோழமை அமைப்பான ம.க.இ.க அப்போதே, “45 டன் தங்கத்தை அனுப்பி வட்டிக்கு வட்டி பாதி கட்டுறான்” என பாடி அதன் உண்மை முகத்தை தோலுரித்தது. காங்கிரசு ஆட்சியை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பாசிச பாஜக கும்பலானது சரிந்து வரும் இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு ஏற்கனவே ஆண்ட காங்கிரசுக் கட்சியின் வழியிலேயே இறங்கியுள்ளது.
தமிழகத்தின் அக்மார்க் பார்ப்பனக் கும்பலின் ஊடகமான தினமலர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏன் அதிகரிக்கிறது என்பது பற்றிய விவாதத்தை திசை திருப்புவதற்காக தற்போது நடந்து வரும் அமெரிக்க ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது என்றும், அதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என்றும் புள்ளி விவரங்களை கொடுத்து பொது மக்களின் வாயடைக்க முயற்சிக்கிறது.
வியட்நாமில் 47 சதவீதமும், கனடாவில் 32 சதவீதமும், சீனாவில் 28 சதவீதமும் பாகிஸ்தானில் 51 சதவீதமும், அமெரிக்காவில் 31 சதவீதமும் இந்த விலை உயர்வு அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டின் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் இந்த நட்டத்தை தாங்கிக் கொண்டிருப்பதாகவும் அதனால்தான் குடிமக்களுக்கு பிரச்சனை இல்லை என்ற தோரணையில் எழுதுகிறது தினமலர் பார்ப்பனக் கும்பல்.
இந்தியாவின் எண்ணெய் தேவை 88 சதவீதம் இறக்குமதியை சார்ந்து இருப்பதால் தொடர்ந்து விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என்பது மட்டுமின்றி, இந்த விலை உயர்வு மக்கள் தலையில் சுமத்தப்படுவது மட்டுமின்றி, அதனை வாங்குவதற்கு தேவையான அன்னிய செலாவணி தொடர்ந்து குறைந்து கொண்டு வரும் சூழலில், மக்களின் கையிருப்பு அதாவது நாட்டின் பொதுக் கையிருப்பு தொகை தங்கமாக உள்ளதை சூறையாடுவதற்கும், அதை எடுத்து விற்றுத் தள்ளுவதற்கும் தயாராகி வருகின்றனர். மற்றொருபுறம் கோவில்களில் உள்ள தங்கங்கள் பத்திரமாக மாற்றப்படும் என்று செய்திகளை கசிய விட்டு மக்களின் எதிர்ப்புணர்வை ஆழம் பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த வகையில் நாட்டின் பொருளாதாரத்தை அழிவுப் பாதையில் கொண்டு சென்றுள்ள தேசத்துரோக கும்பலான பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாத சக்தியாகவும், நாசகார சக்தியாகவும் உருவெடுத்துள்ளது என்பதை பெரும்பான்மை மக்களிடம் கொண்டு செல்வதும், அவர்களின் வர்க்க உணர்வை தூண்டிவிடுவதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதுதான் அவசரக் கடமையாக மாறியுள்ளது.
◾மருது பாண்டியன்.







