ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் புதிய மக்கள்தொகை மேலாண்மைக் கொள்கையானது, உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுவதற்கும், முதலாளித்துவத் தேவைகளுக்காக மலிவான உழைப்புச் சக்தியை உருவாக்குவதற்குமான ஒரு கருவியாகவேத் தெரிகிறது.

சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ள ஆந்திர அரசு ‘போஷணா – சிக்ஷா – சுரக்ஷா’ (Poshana – Shiksha – Suraksha) என்ற கொள்கையின் மூலம் “3வது குழந்தைக்கு ₹30,000, 4வது குழந்தைக்கு ₹40,000” ஊக்கத்தொகை திட்டம் குறித்து பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. இந்த திட்டம் பிறப்பு விகிதம் குறைவதை சமாளிக்க உருவாக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. ஆனால் அது அரை உண்மை. ஆபத்தானதும் கூட.

இதன் பாதிப்பு அன்றாடம் உழைக்கும் மக்களுக்குத்தான். பெரும்பாலும் குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்பதை ஆணே தீர்மானிக்கிறான். ஏற்கனவே வறுமையில் இருக்கும் குடும்பங்கள் அரசு கொடுக்கக்கூடிய இந்த ஊக்கத் தொகையை பெறுவதற்காகவே நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும். இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு வறுமையின் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளுக்கு ஏற்படும். கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பிரச்சனைகள் என பெரிய சுகாதாரபாதிப்பை ஏற்படுத்தும். அதற்கேற்ப சுகாதார கட்டமைப்பு ஆந்திர அரசிடம் இல்லை.

ஒருமுறை வழங்கப்படும் ₹30,000 அல்லது ₹40,000 உதவித்தொகை, குழந்தையை 18–20 ஆண்டுகள் வளர்க்க வேண்டிய உண்மையான செலவுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்று பல பொருளாதார ஆய்வுகள் கூறுகின்றன. கல்வி, மருத்துவ செலவு‌, உணவு, வீட்டு வாடகை, வேலைவாய்ப்பு பாதுகாப்பின்மை இவை அனைத்தும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் அதிக குழந்தைகள் பெற்றால் நீண்டகால கடன் மற்றும் வறுமைச் சுழற்சியில் சிக்க வாய்ப்பு உள்ளது.

உழைப்புச் சுரண்டலும் மூலதனக் குவிப்பும்!

ஆந்திர அரசின் இந்த அறிவிப்பு, குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சரி செய்வதற்காக அல்ல; மாறாக, எதிர்காலத்தில் முதலாளித்துவ உற்பத்திக்குத் தேவையான ‘உழைப்புப் பட்டாளத்தை’ (Labour Force) தடையின்றி உருவாக்குவதற்கே ஆகும்.

“குழந்தைகளே நமது செல்வம்” என்று முதல்வர் கூறுவது, உண்மையில் அவர்களை எதிர்காலத் தொழிற்சாலைகளுக்கான உழைப்புச் சக்தியாகவும், மூலதனக் குவிப்புக்கான கருவியாகவும் அரசு பார்க்கிறது என்பதையேக் காட்டுகிறது. உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை குறைந்தால் பொருளாதார வளர்ச்சி (அதாவது முதலாளிகளின் லாபம்) பாதிக்கப்படும் என்ற கவலையே இந்த ‘மக்கள்தொகை அக்கறைக்கு’ பின்னால் உள்ளது.

இந்தியாவை முதலாளித்துவத்தின் சுரண்டல் மையமாக மாற்றுவதற்கு நாட்டின் இயற்கை கனிம வளங்களை கொள்ளையிடுவதற்கு அவர்களுக்கு தேவையான அதாவது முதலாளித்துவத்திற்கு தேவையான மலிவான உழைப்பு சக்தி தேவைப்படுகிறது. அதற்காகவே சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பை, நாம் இந்த அறிவிப்புடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

சமூகமயமாக்கப்படாத வீட்டுவேலைச் சுமை

இந்தக் கொள்கை பெண்களைக் குழந்தை பெற்றுத் தரும் இயந்திரங்களாக மாற்றுவதுடன், அவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறது. மறு உற்பத்தி உழைப்பு (Reproductive Labour): ஒரு குழந்தையை வளர்ப்பதில் உள்ள பெரும் உடல் மற்றும் மன உழைப்பை அரசு பெண்களின் தோள்களில் ஏற்றிவிடுகிறது. பெண்கள் ஆண்களை விட ஒரு நாளைக்குச் சராசரியாக 3.5 மணி நேரம் கூடுதலாக ஊதியமில்லாத வீட்டுவேலைகளில் ஈடுபடுகின்றனர். முதலாளித்துவ சந்தையில் குழந்தை பெற்ற பிறகு பெண்களின் ஊதியம் கடுமையாகக் குறைக்கப்படுகிறது; இது ஒரு வர்க்கப் பாகுபாடாகும்.

படிக்க:

 மோடி வாஷிங்மெஷினில் ஊழல்கறை நீக்கப்பட்ட புதிய உருப்படி சந்திரபாபு நாயுடு!

 விலைவாசி ஏறுகிறது! ஆனால் சம்பளம்?

குழந்தைகள் பராமரிப்புக்காக (Childcare) அரசு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 0.1% மட்டுமே ஒதுக்குகிறது. அங்கன்வாடி மற்றும் காப்பக வசதிகளைச் சீரமைக்காமல், சொற்பப் பணத்தைக் காட்டி ஏழை மக்களை அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத் தூண்டுவது, உழைக்கும் வர்க்கத்துப் பெண்களை மேலும் வறுமைப் பிடிக்குள் தள்ளும் செயலாகும். இது அரசின் பொறுப்பற்றத்தன்மையை காட்டுகிறது.

மலிவான உழைப்பும் அடிமைத்தனமும்

கூடுதல் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ₹30,000 அல்லது ₹40,000 என்பது இன்றைய கல்விச் செலவு மற்றும் மருத்துவச் செலவுகளுடன் ஒப்பிடும்போது ஒரு துரும்பிற்குச் சமம். இது ஏழை மக்களைக் கடன்பொறிக்குள் தள்ளி, அவர்களை மலிவான உழைப்பாளர்களாக மாற்றும். ஏற்கனவே தமிழ்நாட்டின் திருவள்ளூர் போன்ற இடங்களில், ஒடிசாவைச் சேர்ந்த 39 தொழிலாளர்கள் (குழந்தைகள் உட்பட) செங்கல் சூளைகளில் வெறும் ₹65 தினக்கூலிக்கு அடிமைகளாக வேலை வாங்கியது போன்ற சுரண்டல் முறையே இக்கொள்கையின் இறுதி இலக்காக இருக்கும். ஆந்திராவை சேர்ந்த குழந்தை வெறும் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட அவலத்தை மக்கள் அதிகாரம் இணையதளத்தில் ஏற்கனவே எழுதி இருக்கிறோம்.

ஜப்பான், தென் கொரியா, சீனா போன்ற நாடுகளும் இதேபோன்ற பிறப்பு ஊக்கத்தொகை திட்டங்களை முயன்றுள்ளன. மலிவு வீடுகள், அரசு பள்ளி தரம், குழந்தை பராமரிப்பு மையங்கள், வேலை பாதுகாப்பு, பெண்களுக்கு ஆதரவு இவை இல்லாமல் பிறப்பு விகிதம் அதிகரிப்பது கடினம் என்பதையே அந்நாட்டின் அனுபவங்கள் காட்டுகின்றன. ஆகையால் வெளிநாடுகளுடன் சந்திரபாபு நாயுடுவின் அறிவிப்பை ஒப்பிடுவது தவறானது.

இந்த அறிவிப்பு கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பைத் தனியார்மயமாக்கி விட்டு, வெறும் ‘ஊக்கத்தொகை’ என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் முதலாளித்துவத் தந்திரமாகும்.

அனைவருக்கும் இலவசக் கல்வி மற்றும் மருத்துவம். சமூகமயமாக்கப்பட்ட குழந்தை பராமரிப்பு மையங்கள். பெண்களுக்குச் சமமான ஊதியம் மற்றும் மகப்பேறு பாதுகாப்பு, இவை வழங்கப்படாத வரை, இக்கொள்கை உழைக்கும் வர்க்கத்துப் பெண்களையும் குழந்தைகளையும் முதலாளித்துவத்தின் பலிபீடங்களாகவே மாற்றும்.

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here