வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் தனது நாட்டு கடற்படையின் நீர்மூழ்கி ரகசியங்களை இஸ்ரேலுக்காக வேவு பார்த்ததாக 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இவர்கள் அனைவரும் நம் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். தற்போது கத்தாரில் உள்ள அல்தாரா நிறுவனத்தில் பணியாற்றி கடந்த 2022 ஆகஸ்டில் சிறைக்கு சென்றுள்ளார்கள்.
தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை வெறிகொண்டு நடத்தி வரும் சூழலில், அரபு நாடுகள் இஸ்ரேலை கண்டித்து ஹமாசை ஆதரித்து பேசி வரும் சர்வதேச அரசியல் சூழலில், இந்த உளவு விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.
ஹீரோவா – வில்லனா?
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான கமாண்டர் பூர்ணேந்து திவாரி நம் நாட்டின் உயரிய விருதை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது அதாவது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கும் பிரவாசி பாரதிய சம்மான் என்ற விருதை கடந்த 2019 ஆம் ஆண்டில் வாங்கியுள்ளார். இவர் இந்தியாவின் “கௌரவத்தை” அந்நிய மண்ணில் உயர்த்தியுள்ளார் என்றே மோடி அரசால் இந்த விருது தரப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நமது நாட்டின் முன்னாள் கடற்படை ஊழியர்கள் & கமாண்டர்களான 8 பேர் மீதான மரண தண்டனை குறித்து அதிர்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளது. உண்மையில் நாம் அதிர்ச்சி அடைய வேண்டுமா? அல்லது வெட்கி தலைகுனிய வேண்டுமா? அதையும் பரிசீலிப்போம்.
ஓய்வு பெற்றவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்?
இந்திய ராணுவத்தில் விமானப்படை, கடற்படை என எதில் வேலை செய்திருந்தாலும், அவர்களில் சிலர் ஓய்வு பெற்ற பின், நம் நாட்டிலேயே தங்கி இருக்க விரும்புவதில்லை. உயர் அதிகாரிகளாக இருந்துள்ள இவர்களுக்கு போதிய பென்ஷன் தரப்பட்டாலும், சாதாரண குடி மக்களை காட்டிலும் அதிகப்படியான சலுகைகள் தரப்பட்டாலும், இவர்கள் அதில் திருப்தி அடைவதில்லை.
எனவே, பிற நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்குச் செல்கின்றனர். இப்படி வேலை தேடி செல்பவர்கள் உயர் அதிகாரிகள் மட்டும்தான் என்று பார்க்கக் கூடாது. சாதாரண சிப்பாயாக இருந்தவர்களும் கூட அமெரிக்கா உள்ளிட்ட ராணுவத்திற்கு ஒப்பந்த வேலை செய்வதற்காக வளைகுடா, ஆப்கன் போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.
சிப்பாயாக பணியாற்றி ஓய்வு பெற்றபின் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்குள்ள படைகளுக்கான உதவி வேலைகளை, எடுபுடி வேலைகளை, டிரைவர், முடித்திருத்துபவர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட வேலைகளை செய்து சம்பாதிக்கின்றனர் தான். இப்படி சம்பாதிக்க போய் அமெரிக்கா முன் நின்று நடத்திய இரண்டு வளைகுடா போர்கள் மற்றும் ஆப்கன் போர்க்களத்தில் குண்டு வீச்சுக்கிடையில் சிக்கி பரிதாபமாக உயிரை விட்டவர்களும் உண்டு தான்.
ஆனால் அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்று செல்பவர்கள் இப்படி உடல் உழைப்பில் ஈடுபடுவது இரண்டாம் பட்சமானது. இவர்களின் வேறு சில தகுதி, திறமைக்காகவே வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.
அதிகாரிகளாக செல்பவர்கள் தனது பயிற்சி அனுபவம், திறமை ஆகியவற்றுக்கு ஏற்ப முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள். தனது உடல் உழைப்பைக் காட்டிலும் தனது மூளை உழைப்பிற்காக வருவாயை பெறுகின்றனர். அத்தகைய மூளை உழைப்பு என்பது, தான் வேலைதேடி நுழைந்திருக்கும் நாட்டிற்கு உண்மையானதாகவும் இருக்கலாம்; அல்லது அந்த நாட்டிற்கு துரோகம் இழைப்பதாகவும் இருக்கலாம்.
அதாவது இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக ஒரு வெளிநாட்டவர் நியமிக்கப்பட்டால், அவர் தனது முந்தைய அனுபவம் திறமைகளை கொண்டு இந்திய அணியின் வெற்றிக்காக நேர்மையாகவும் உழைக்கலாம்; அல்லது தான் விரும்பும் ஏதாவது ஒரு நாட்டுக்காக இந்திய அணியை உளவு பார்த்து, நமது ஆட்ட முறைகளை, நுட்பங்களை, வியூகங்களை பிற நாட்டு கிரிக்கெட் அணிக்கு காட்டிக் கொடுத்து துரோகமிழைக்கவும் செய்யலாம்.
நாட்டுப்பற்றாளர்கள் துரோகிகளாவது எப்படி?
கத்தார் நாட்டுக்கான நீர் மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கு பொறுப்பேற்றுள்ள கத்தார் கட்டுமான நிறுவனமானது இத்தாலிய நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து வேலைகள் செய்து வந்துள்ளது.
கூடுதலாக, தமக்குத் தேவையான பயிற்சி மற்றும் சேவைகளை வழங்க நியமிக்கப்பட்ட அல் தாரா நிறுவனத்தின் சார்பில் வந்தவர்களான இந்திய கடற்படையில் பணியாற்றிய அனுபவம் உள்ள அதிகாரிகள் தமது நாட்டு நீர்மூழ்கி கப்பல் கட்டுமான ரகசியங்களை திரட்டி தனது பகை நாடான இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளனர் என்கிறது கத்தார்.
இது உண்மையாகவே இருந்தால் இஸ்ரேல் தனது விசுவாசிகளாக கத்தாரில் வேவு பார்த்தவர்களுக்கு உதவ ஒருபோதும் முன் வராது. திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல் இதில் தொடர்புடைய அனைவரும் நாக்கை கடித்துக் கொண்டுதான் இருந்தாக வேண்டும்.
ஒரு நாட்டிற்கு வேலை தேடி செல்பவர்கள் நேரடியாக அந்த நாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து தனது திறமையை, தனது உழைப்பை, வாங்கும் சம்பளத்திற்கான நேர்மையான பங்களிப்பை செலுத்தியிருந்தால் அது இந்தியாவிற்கு பெருமையை சேர்க்கும். அந்த நாடும் நம்முடன் நட்பாகும்.இப்படி வேறு குற்றசாட்டின் கீழ் கைதானால் அது நம் நாட்டிற்கு எத்தகைய மதிப்பை தரக்கூடும்?
நமது முன்னாள் கடற்படை அதிகாரிகள் இப்படி செயல்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இஸ்ரேலுக்காக கத்தாரில் உளவு வேலை பார்த்து மாட்டியிருக்கிறார்கள் என்றால் நமது நாட்டில் மட்டும் விசுவாசிகளாகத்தான் வேலை செய்திருப்பார்களா என்ற சந்தேகத்தையும் இது எழுப்புகிறது.
இதையும் படியுங்கள்:
தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் எட்டு பேரும் நமது நாட்டுக்கு விசுவாசமாகவும் இல்லை; தான் பணிபுரிய போன கத்தார் நாட்டுக்கும் விசுவாசமாக இல்லை; மூன்றாவதாக இஸ்ரேல் என்ற நாட்டுக்குத்தான் விசுவாசிகளாக – உளவாளிகளாக இருந்துள்ளனர் என்ற இந்த புகாரை எப்படி நாம் எடுத்துக் கொள்வது?
உளவு வேலை தவறானதா?
எந்த ஒரு நாடும் தனக்கு பகையாக உள்ள அல்லது தனக்குப் பகையாக மாற வாய்ப்புள்ள நாடுகளை வேவு பார்க்கவே செய்யும். அப்படிப்பட்ட உளவு வேலைக்காக செல்பவர்கள் தனது நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து தமது எதிரி நாடுகளுக்குள் ஊடுருவி வேலை செய்கின்றனர். இது மதிக்கத்தக்கது தான். ஆனால் வெறும் கூலிக்காக மற்றொரு நாட்டிற்காக உளவு வேலை பார்த்து கைதாகி மரணத்தை எதிர்நோக்கி உள்ள இவர்களை தியாகிகள் என்றா கொண்டாட முடியும்?
நம் இளைஞர்களுக்கு நாட்டை பாதுகாக்கும் முப்படைகளில் வேலைக்கு செல்வதை கௌரவத்திற்கு உரியதாகவே பார்க்க கற்றுத் தரப்படுகிறது. ஒருவேளை நமது வீரர்கள் பணியில் உயிரை விட்டாலோ சண்டைகளில் வீர மரணம் அடைந்தாலோ அரசு மரியாதையுடன் அடக்கத்தையும் செய்கிறோம்.
ஆனால் அதிகாரிகளாக இருப்பவர்கள் நாட்டுப் பற்றோடுதான் வேலை செய்கிறார்களா? – செய்துள்ளார்களா? என்பதை இத்தகைய கைது, மரண தண்டனை தீர்ப்புகள் மறுபரிசீலனை செய்ய தூண்டுகின்றன.
மோடி அரசு, வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்புத் துறையை சார்ந்த முன்னாள் அதிகாரிகள் எந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதற்காக விருது தருகிறது? எந்த நாட்டின் கௌரவத்தை உயர்த்தி உள்ளார்கள் என்பதற்காக பிரவாசி பாரதிய சம்மான் போன்ற உயரிய விருதை வாரி வழங்கியுள்ளது? என்பதையும் சேர்த்தே நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
கத்தாரில் கயிற்றில் தொங்கப்போவது உளவாளிகளின் உடல்கள் மட்டுமல்ல; இந்திய அரசு தந்த உயரிய விருதும்தான்.
- இளமாறன்.