பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வருகின்ற நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசின் இண்டியா கூட்டணியும், பாஜகவின் தேசிய முற்போக்கு கூட்டணியும் தீவிரமாக இறங்கியுள்ளன. இரு கூட்டணி கட்சி தலைவர்களும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இண்டியா கூட்டணி, பீகாரில் நிலவும் அதிக வேலையின்மை விகிதம் மற்றும் அதன் விளைவாக இளைஞர்கள் வேலைக்காக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுத்தல், அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல், வாக்குத் திருட்டு என ஆளும் கட்சியின் குறைகளை மட்டுமே பிரதானமாக சொல்லி தெளிவான திட்டமின்றி தனது பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது. மறுபுறம், பாஜக கூட்டணி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு சதித்தனங்களை செய்து வருவதுடன், வழக்கமான விஷமப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, தேர்தலுக்கு முன்னர் ஒவ்வொரு பெண்களுக்கும் ரூபாய் 10,000 வழங்குவது, தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து தங்களுக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என இஸ்லாமியர் மற்றும் பெண்களின் என லட்சக்கணக்கானவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, கார்ப்பரேட்டுகளின் பண பலத்தையும் – சங்பரிவார படை பலத்தையும் இறக்குவது, ஒன்றிய அரசின் அரசு துறை முழுவதையும் பயன்படுத்துவது என செயல்பட்டு இறுதியாக, தனது பிரம்மாஸ்திரமான இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது.
பாசிச பாஜகவின் ’நமக் ஹராம்’ எனும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம்!
கலவரத்திற்கான திட்டம்!
சில நாட்களுக்கு முன் பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்,”முஸ்லிம்கள் அனைத்து மத்திய திட்டங்களின் நன்மைகளையும் பெறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு வாக்களிப்பதில்லை. அத்தகையவர்கள் துரோகிகள் (நமக் ஹராம்) என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த துரோகிகளின் (நமக் ஹராம்) வாக்குகள் நமக்கு தேவையில்லை” என இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
1973 ஆம் ஆண்டில் நமக் ஹராம் (துரோகிகள் அல்லது நன்றி கெட்டவர்கள்) என்ற வார்த்தை மக்களிடையே பேசும் பொருளாக இருந்தது. இதற்கு அப்போது வெளியான நமக் ஹராம் எனும் பெயரில் வெளியான திரைப்படமே காரணம். மும்பை மில் தொழிலாளர்கள் உரிமை கேட்டு கடுமையான போராட்டத்தில் ஈடுபடும் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தேசிய அளவில் பல விருதுகளை வாங்கியதால் மக்களிடம் பேசும் பொருளாக இருந்தது. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் நமக் ஹராம் (துரோகிகள் அல்லது நன்றி கெட்டவர்கள்) எனும் வார்த்தையை தூசு தட்டி, இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை உமிழப் பயன்படுத்தி மீண்டும் பேசும் பொருளாக்கியுள்ளது பாசிச பாஜக.
பீகாரின் வைசாலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா, “ஊடுருவல்காரர்களின் (முஸ்லிம்கள்) வாக்குகளைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க சதி செய்கின்றன எதிர்கட்சிகள்” என சொந்த நாட்டு மக்களான முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என வெறுப்பு பேச்சை கக்கியுள்ளார்.
பாஜகவின் அதிகாரப்பூர்வ X தளத்தில் (டிவிட்டர் பக்கத்தில்) காங்கிரஸ் மற்றும் RJDயின் ‘ஊடுருவல் எக்ஸ்பிரஸ்’ – இப்போது பீகார் நோக்கிச் செல்கிறது என்ற பெயரில் கிராஃபிக்ஸ் வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோவில் காங்கிரஸ் கொடி கட்டிய பஸ்ஸில், ‘ஊடுருவுபவர்கள்’ என்று முத்திரைக் குத்தப்பட்ட முஸ்லிம்கள் பீகார் மாநிலத்திற்குள் வருவது போன்று தயாரிக்கப்பட்டு பரப்பப்பட்டது. கடும் விமர்சனம் எழுந்த பிறகு தேர்தல் ஆணையத்தின் மூலம் இந்த வீடியோ முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பீகாரின் ககாரியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,” ஊடுருவல்காரர்கள் பீகாரில் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி பேரணிகளை நடத்துகிறார். நான் அவருக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் ஊடுருவல்காரர்களை உங்களால் காப்பாற்ற முடியாது. அவர்களை வெளியேற்றியே தீருவோம்” என பகிரங்கமாக மிரட்டியுள்ளார். ஏற்கனவே 2026 ஆம் ஆண்டுக்குள் மாவோயிஸ்டுகளை ஒழித்து கட்டுவோம் என பகிரங்கமாக பேசி அதற்கான வேலையை நடத்தி வரும் அமித்ஷா தற்போது இஸ்லாமியர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவோம் எனக் கூறுவதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.
பீகார் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 17.7% பேர், அதாவது சுமார் 02.3 கோடி பேர் உள்ளனர். அங்குள்ள 243 தொகுதிகளில் கிட்டத்தட்ட 70 தொகுதிகளில் முஸ்லீம் மக்களின் செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது. இதனை குறைக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கும் வேலையில் ஈடுபட்டும் அது முழுமை அடையாததால், ஊடுருவல்காரர்கள், துரோகிகள் என முத்திரை குத்தி வாக்கு வங்கிக்கு கூட முஸ்லிம் வாக்கு தேவையில்லை என்ற வெறுப்பின் உச்சத்திற்கு சென்று விட்டது. இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் ஊடுருவல்காரர்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்கள் என கலவரங்களை உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது. இதற்காகவே, ஒன்றிய அமைச்சர்கள் முதல் பாஜக தொண்டர்கள் வரை அனைவரும் சொந்த நாட்டு மக்களை துரோகிகள், ஊடுருவல்காரர்கள் என ’இந்து மக்களிடையே’ வெறுப்புப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து வருகின்றனர்.
புஸ்வானமாகிய இந்து பக்தி பிரச்சாரம்! இனவெறியை கையிலெடுத்து பாஜக!
முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையில்லை என்பதால் இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்கு பக்தியை, இந்து மத உணர்வையும் தூண்டும் விதமாக பிரச்சாரங்களை தொடங்கியது பாசிச பாஜக. பீகாரின் தேர்தல் வாக்குறுதியில் ராமர் மனைவி சீதா தேவியின் பிறந்த இடத்தில் உலக தரம் வாய்ந்த ஆன்மிகத் தலம் அமைக்கப்படும் என அறிவித்து கோயில் கட்டும் அரசியலை தொடங்கியது. ஆனால் வேலையின்மை, வறுமையால் பெரும் அவதிக்குள்ளான பிகார் மக்களிடம் சீதா கோயில் கட்டும் பிரச்சாரம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மறுபுறம், பீகார் உள்ளிட்ட கிழக்குப் பகுதி மாநிலங்களில் சத் பூஜை எனும் நீர் நிலைகளில் சூரியனை வணங்கும் பண்டிகை இந்த ஆண்டு பீகாரில் சிறப்பாக கொண்டாட முடிவெடுத்து செயல் படுத்தியது. பிரதமர் மோடியை சத் பூஜை செய்ய வைத்து பீகார் மக்களின் வாக்குகளை பெற நினைத்தது பாஜக. யமுனை நதி நீர் மாசு படிந்து உள்ளதால் மோடி பூஜை செய்வதற்க்கென டில்லி அருகில் 17 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கொண்டு போலியான குளம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை பெறவே போலி யமுனை குளத்தில் நடத்த இருந்த பூஜையை எவ்வித அறிவிப்பும் இன்றி கைவிட்டது பாஜக.
படிக்க:
♦ பீகார் தேர்தல்: அதற்குள் தேர்தல் திருட்டு! என்ன செய்யப் போகிறோம்?
♦ பீகார் சிறப்பு தீவிர திருத்தமும், தேர்தல் புறக்கணிப்பு அரசியலும்!
ஆனால் அப்பாவி மக்கள் மாசு படிந்த யமுனை ஆற்றங்கரையில் பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்கிய இந்த பண்டிகை கொண்டாட்டத்தில் நீர்நிலைகளில் மூழ்கி 100க்கும் மேற்பட்ட பீகார் மக்கள் உயிரிழந்துள்ள கொடுமையும் நடந்துள்ளது. இது பீகார் மக்களிடம் சோகத்தையும் அரசின் மீது வெறுப்பையும் உருவாக்கியுள்ளது. இதனால் பாஜகவின் பக்தி பிரச்சாரம் புஸ்வானமாகிவிட்டது.
இந்து பக்தி பிரச்சாரம் தோல்வியை சந்தித்ததால் பிரதமர் மூலம் இன வெறி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது பாசிச பாஜக. பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மோடி, ”கர்நாடகா- தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்களை அவதூறு செய்கின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது” என பேசியுள்ளார். அதாவது, பாஜக ஆட்சி செய்யாத பிற மாநிலங்களில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற இன உணர்வை தூண்டும் விதமாக பேசியுள்ளார். இதனை பிற மாநிலத் தலைவர்கள் கண்டித்தாலும் பீகார் மக்களிடம் இன உணர்வை உருவாக்கி உள்ளது. இதனை அறுவடை செய்யும் விதமாக எதிர்க்கட்சிகளை,”தக் பந்தன்” (மோசடி கூட்டணி) என்று கடுமையாக விமர்சித்துள்ளார் மோடி.
மேலும், பீகாரில்”ஜங்கிள் ராஜ்” (காட்டு ராஜ்ஜியம்) திரும்புவதற்கு அவர்கள் விரும்புவதாகவும், துப்பாக்கி முனையில் மக்களை அச்சுறுத்துவதாகவும் பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறது பாசிச பாஜக. இதற்கு எதிராக வினையாற்ற வேண்டிய இண்டியா கூட்டணி வெறும் தேர்தல் பிரச்சாரம் என்ற வகையில் சுருங்கி நின்று விடுகிறது.
பீகார் மக்களின் நிலையும்!வேட்பாளர் தகுதியும்!
எதிர் கட்சிகளின் மாற்று இல்லாத நிலையும்!
10 ஆண்டுகால நிதிஷ்குமார் ஆட்சியில் வேலையின்மை, வறுமை, கடும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளால் பீகார் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இதனை மறைக்க பாஜக கூட்டணி 01 கோடி பேருக்கு வேலை, பெண்கள் வங்கி கணக்கில் ரூபாய் 10,000, இலவச மின்சாரம் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது.
ஓவைசி மற்றும் பிரசாந்த் கிஷோர் கட்சிகளால் இந்த தேர்தலில் முஸ்லீம் வாக்குகளை பிரிக்க செய்வார்கள். இது மறைமுகமாக பாஜக கூட்டணிக்கே நன்மை தரும். பீகாரின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் முஸ்லிம்கள் செல்வாக்கு செலுத்தினாலும், அந்த வாக்குகள் பிரிவது பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்பதே நிதர்சனமான உண்மை. சாதி அடிப்படையிலான வாக்குப்பிரிவினையும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் 32% பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வேட்பு மனுவில் அறிவித்துள்ளனர். இதில் 27% பேர் கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். அதிலும், குறிப்பாக, இண்டியா கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் 60% வேட்பாளர்களும், பாஜக கூட்டணியில் உள்ள பாஜகவின் 56% வேட்பாளர்களும், நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த 38% வேட்பாளர்கள் கடுமையான குற்றச்சாட்டு வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் இண்டியா கூட்டணி பழைய முறையிலேயே தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால்தான் கிரிமினல் குற்றவாளிகளே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வெற்றி பெற்றாலும் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. மாறாக,பாசிச பயங்கரவாத ஆட்சிக்கு பதிலாக அரசு அடக்குமுறை ஆட்சியாகவே அந்த ஆட்சி அமையும்.
மக்கள் நலன் சார்ந்த அரசு அமைய வேண்டும் எனில்,மாநில பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பொருளாதார மாற்று திட்டங்கள் என்பதை தாண்டி பாஜக முன் தள்ளும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் சமூக நல கண்ணோட்டத்தில் மாற்றை உருவாக்க வேண்டும். இதனை தற்போது நிலவும் தேர்தல் முறையில் மட்டும் செய்ய முடியாது.
கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி மற்றும் மக்கள் முன்னணி கட்டியமைத்து அதன் மூலம் அமைக்கப்படும் ஜனநாயக கூட்டரசு மட்டுமே செய்யும். இதற்கான வேலைகளை முன்னெடுப்பதே பீகார் மட்டுமல்ல பிற மாநில மக்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.
- லூர்துசாமி
புதிய ஜனநாயகம் (நவம்பர் 2025 இதழ்)







