நக்சல்பாரி இயக்கம் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது! பிபிசி&ஆர்எஸ்எஸ் கனவு பலிக்காது.
ஏற்கனவே போர்க்குணமிக்க போராட்டங்களால் விழிப்புணர்வும், அமைப்புப் பலமும் கொண்டிருந்த சிலிகுரி வட்ட, குறிப்பாக நக்சல்பாரிப் பகுதி விவசாயிகள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். மழையிலும், வெயிலிலும் ஜோத்திதார்களின் நிலங்களில் உழைத்துக் களைத்தும் கருகியும் போயிருந்த உழவர்களின் முகங்களில் நம்பிக்கை சுடர்விடத் தொடங்கியது.
நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மீட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். வழக்கு மன்றமோ, அரசாங்கமோ தங்களைப் பாதுகாக்காது என்பதை இச்சம்பவம் விவசாயிகளுக்குப் புரியவைத்தது. சிலிகுரி வட்ட விவசாயிகள் மாநாட்டு அழைப்பை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று அவர்கள் முடிவு செய்தனர்.
ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. 15,000 முதல் 20,000 விவசாயிகள் தங்களை முழுநேர ஊழியர்களாகப் பதிவு செய்து கொண்டனர். எல்லா கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டன.
உடனே துவங்கின நடவடிக்கைகள்; பட்டாக்கள், கடன் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும், துப்பாகிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொடும் நிலப்பிரபுக்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. வில்லும் அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர்.
இந்தப் பிராந்தியத்தின் காவல் நிலையங்கள் செயலிழந்தன. விவசாயிகளின் அனுமதியின்றி யாரும் அப்பிராந்தியத்தினுள் நுழையக் கூட முடியாது என்ற நிலைமை மே மாதத்தில் உருவானது.
நிலைமை கட்டுக்கு மீறிச் செல்வதைக் கண்டு அஞ்சிய வருவாய்த்துறை அமைச்சர் அரே கிருஷ்ண கோனார் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சிலிகுரிக்கு விரைந்தார். “நக்சல்பாரியில் நடக்கும் சட்டவிரோதமான நிலப் பறிமுதல்கள் எல்லாம் உடனே நிறுத்தப்படும்” என்றும், “கனு சன்யால், ஜங்கல் சந்தால் போன்ற போலீசால் தேடப்படும் நபர்கள் சரண்டையவும் ஒப்புக் கொண்டுவிட்ட”தாகவும் அறிவித்தார். “இது கடைந்தெடுத்த பொய்” என்று மறுத்தனர்,புரட்சியாளர்கள்.
மே-23, 1967 நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது. தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். ஒரு காவலர் கொல்லப்பட்டவுடன் பின் வாங்கிய போலீசு 25-ம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரு குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரை கொன்றது, விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர், தலைவர்களைக் காட்டிக் கொடுக்குமாறு போலீசு செய்த சித்திரவதைகளால் இம்மியும் பயனில்லை.”போலீசை ஏன் தாக்கினர்கள்?” என்ற கேள்விக்கு விவசாயிகள் பதிலளித்தார்கள்; “நாங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினோம்”.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பை தேற்றுவித்தது. கட்சித் தலைமை இறந்து போனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் ‘மார்க்சிஸ்டு’ கட்சி இரு கூறாகப் பிளவுபடுவதை நீலிக்கண்ணீரால் தடுக்க இயலவில்லை.

“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்” என்ற முழக்கங்களால் கல்கத்தா நகரச் சுவர்களை அதிரவைத்தனர். கல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள்.
போலிகள், மக்கள் விரோதிகளுக்கு மரண அடி
உழைக்கும் மக்களின் அரசியல் மூச்சாய் நக்சல்பாரி!
நக்சல்பாரியோ தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தது. ஜூன் 8 முதல் 10 தேதிகளுக்குள் 80 நிலபறிமுதல்கள், 13 நிலப்பிரபுக்களின் வீடுகளில் கொள்ளை, இரண்டு கொலைகள், ஒரு கடத்தல், ஆயுதம் தாங்கிய குழுக்களின் வரிவசூல் நடவடிக்கைகள், விவசாயிகளின் மக்கள் நீதிமன்றம்…. என புள்ளி விவரங்களைக் காட்டி அலறியது போலீசு.
நக்சல்பாரியில் ‘தீவிரவாதி’களின் நடவடிக்கை காரணமாக சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி. சவாண் (இவ்வறிவிப்பின் மூலம் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயே இருக்கும் தீவிரவாதிகளைத் தனியே பிரித்து அடையாளம் காட்டினார் சவாண்). அரே கிருஷ்ண கோனார், வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பாசனத்துறை அமைச்சர் விஸ்வநாத் முகர்ஜி மற்றும் சிலர் அடங்கிய அமைச்சர்கள் குழு ‘தீவிரவாதி’ களை நல்வழிப்படுத்த நக்சல்பாரிக்கு விரைந்தது; சென்ற வேகத்தில் தோல்வி கண்டு திரும்பியது.
ஜூன் இறுதியில் மார்க்சிஸ்டு கட்சித் தலைமை நக்சல்பாரி புரட்சியாளர்களை வெளிப்படையாகத் தாக்கத் தொடங்கியது மார்க்சிஸ்டு கட்சியிலிருந்த புரட்சிகர அணிகளும் கல்லூரி மாணவர்களும் “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” ஒன்றைக் கட்டி ஜூன் 27-ம் தேதி சட்டசபையின் முன் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். மார்க்சிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சுசிதல் ராய் சவுத்ரி உள்ளிட்ட 19 பேர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
“சீறிவரும் இந்தியப் புரட்சிச் சிறுத்தையின் முன் பாதம்” என்று நக்சல்பாரி எழுச்சியை தனது ஜூன் 28-ம் தேதி ஒலிபரப்பில் வருனித்த பீகிங் வானொலி, மார்க்சிஸ்டுக்களின் ஜக்கிய முன்னணி சர்க்காரை “மக்களை ஏய்க்கும் எதிர்ப்புரட்சியாளர்களின் கருவி” எனச் சாடியது.
ஜூலை 12-ம் தேதி மிருக பலத்துடன் மீண்டும் நக்சல்பாரிகள் மீது படையெடுத்தது போலீசு. ஜங்கள் சந்தாலும் முன்னணிபோராட்ட போராட்ட வீர்ர்கள் பலரும் கைது செய்ய்பட்டனர்.
படிக்க:
♦ நக்சல்பாரி இயக்கம் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது! பிபிசி&ஆர்எஸ்எஸ் கனவு பலிக்காது.
♦ மக்கள்திரள் பாதையில் தஞ்சை மண்ணில் மணம் பரப்பும் நக்சல்பாரி வித்துக்கள்
மார்க்சிஸ்டு கட்சியின் வங்காளி வார இதழான தேஷ் – ஹிதாஷியின் ஆசிரியராக இருந்த சுசிதல்ராய் சவுத்ரி கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து அதில் எழுதி வந்தார். வெளியேற்றப்பட்ட பின் பத்திரிகை அலுவலகத்தை கைப்பற்ற மார்க்சிஸ்ட் குண்டர்கள் முயன்ற போது மோதல் வெடித்தது.
சுசிதல்ராய் சவுத்ரி ‘தேசப்ரதி’ என்ற வங்காள நாளேட்டையும் பின்னர் ‘லிபரேசன்’ ஆங்கில இதழையும் தொடங்கினார். இரண்டு இதழ்களும் ‘மார்க்சிஸ்டு’களைச் சித்தாந்தாந்த ரீதியாகத் தோலுரிக்கத் தொடங்கின. சீனத்தின் மக்கள் தினசரியும், பீகிங் வானொலியும் தொடர்ச்சியாக ‘மார்க்சிஸ்டு’களின் திருத்தல் வாதத்தை அம்பலப்படுத்தினர். வங்காளத்தின் வடமுனையில் பற்றிய தீ நாடெங்கும் ‘மார்கசிஸ்டு’கட்சியைச் சுட்டெரிக்க தொடங்கியது.
மார்க்சிஸ்டு கட்சித் தலைமையும் நாற்காலிப் புரட்சிக்கு எதிராக நக்சல்பாரியில் கலக்க் கொடி உயர்ந்தது ஏதோ தற்செயலாக நடந்து விட்ட சம்பவமல்ல. மார்க்சிஸ்டு கட்சிக்குள் இருந்த முன்னணியாளர்கள் சாரு மஜும்தார், கனு சண்யால், சசிதல் ராய் போன்ற தோழர்களின் தலைமையின் திருத்தல்வாதத்தை எதிர்த்து போராடி, புரட்சிகர நிலைப்பாடுகளை முன்வைத்து, அணிகளில் பலரை வளர்த்தெடுத்ததுதான் காரணம்.
மார்க்சிஸ்டு தலைமையின் நாடாளுமன்ற சமரச சரண்டைவுப் பாதையைக் கைவிட்டு புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் 1965-ம் ஆண்டு முதலே வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் சிறு சிறு அமைப்பு இயக்கங்களையும் கட்டி அமைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிபாசு, பிரமோத் தாஸ் குப்தா ஆகிய திருத்தல் வாத துரோகிகள் புரட்சியாளர்களை வெளியேற்றியும், குறிப்பாக தோழர் சாரு மஜும்தாரை பைத்தியக்காரன், போலீசு உளவாளி என்றும் வசைபாடினர். ஆனால் இந்த அவதூறுகளால் நக்சல்பாரி எழுச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
நக்சல்பாரி எழுச்சியும் ஆதரவாளர்களை குறுங்குழுவாதிகள், வறட்சிவாதிகள், சாகசவாதிகள் என்பதாக மட்டுமல்ல, சி.ஐ.ஏ. உளவாளிகள் என்றெல்லாம் இடதுசாரி கட்சிகள் அவதூறு செய்தன. ஆனால் அக்கட்சிகளுக்குள் வெடிக்கத் துவங்கிய கலகத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1967-ம் ஆண்டு “மார்க்சிஸ்டு” கட்சி தலைமை மதுரையில் மத்தியக் கமிட்டியைக் கூட்டி நக்சல்பாரி எழுச்சியை கொச்சைப்படுத்தி, முழுக்க முழுக்க திருத்தல்வாதிகள் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டது.
இதைத் தொடர்ந்து காசுமீர், உத்திரப்பிரதேசம், ஆந்திரா ஆகியவற்றில் பெரும்பான்மையான மாநில கமிட்டிகளை வெளியேறின. “கட்சித் தலைமைக்கெதிராக கலகக் கொடி உயர்த்துங்கள்” என்ற அறைகூவல் எதிரொலித்தது. பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, பீகார், ஓரிசா எனப் பல மாநிலங்களிலும் புரட்சியாளர்கள் கலகம் செய்து போலி மார்க்கசிஸ்டு கட்சியை விட்டு வெளியேறினர்.
ஜூன் மாதத்தில் தோற்றுவிக்கப்பட்ட “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” பல்வேறு மாவோயிசக் குழுக்களின் பாலமாகச் செயல்பட்டது. நவம்பர் மாதத்தில் அக்குழு கூட்டிய அனைத்திந்திய மாநாட்டில் “அனைத்திந்திய புரட்சியாளர் ஒருங்கிணைப்புக் கமிட்டி” என்றொரு அமைப்பை ஏற்படுத்துவது என முடிவு செய்தது; கீழ்க்கண்ட அறைகூவலையும் விடுத்தது.
“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழி நடத்துவதும் நம் கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்று படவேண்டும்.
மார்க்சியம்-லெனினியம் – மா சே துங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும். மதுரையில் வெளிப்பட்ட இறுதியான, தீர்மானகரமான துரோகத்திற்குப் பின் இனியும் தாமதிக்கவியலாது.”
தனது முதல் பிரகடனத்தில் ஒருங்கிணைப்புக் கமிட்டி நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்திருந்த விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் ‘லிபரேஷன்’ என்ற ஆங்கில பத்திரிகை கொண்டு வரப்பட்டது.
படிக்க:
♦ மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற அறிவிப்பை எப்படி பார்ப்பது?
♦ மாவோயிஸ்டுகள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்: உண்மை நோக்கம் என்ன?
இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலை புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.
நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று பிறப்பெடுத்தது.
நக்சல்பாரி பகுதியைப் பொருத்தவரை, அங்கு எழுந்த அந்தப் பேரெழுச்சியை போலி மார்க்சிஸ்டுகளின் தலைமையிலான ஜக்கிய முன்னணி ஏவிய போலீசுத் தாக்குதலால் அப்போதைக்கு ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய நாடு பழைய இந்திய நாடாக ஒருபோதும் நீடிக்க முடியவில்லை.
அதைத் தொடர்ந்து வந்த சங்கிலித் தொடரான விளைவுகளும் எதிர்விளைவுகளும் அடங்கிய நிகழ்வுகள் அரசியல்களத்தை மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் சமூக, பண்பாட்டு சூழலையே குலுக்கி எடுத்துவிட்டது. ஆண்டாண்டு காலமாய் அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும் இலக்காகி இருக்கும் கூலி ஏழை உழவர்களின் உலகை – அதாவது இந்திய நாட்டின் இருள் சூழ்ந்த மூலைமுடுக்குகளுக்கெல்லாம் வெவ்வேறு பகுதிகளில் நாட்டுப்புற ஏழை எளிய மக்கள் நடத்திய அடுத்தடுத்த ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் ஒளிபெறச் செய்தன.
சிறீகாகுளம், தெலுங்கானா, பஞ்சாப், உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு,அசாம், காசுமீர் என்று குறுக்கு நெடுக்காக நாடெங்கிலும் விவசாயிகளின் வர்க்கப் போர் காட்டுத் தீயாய்ப் பற்றிப் படர்ந்தது. வெட்டியெறியப்பட்ட நிலப்பிரபுக்களின் தலைகள் மட்டுமே கிராமங்களில் தங்கின. வெட்டப்படாத தலைகளோ நகரங்களை நோக்கி ஓடின.
‘வேலை நிறுத்தம் என்றால் கதவடைப்பு’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை முற்றுகையிடும் தொழிலாளர்களைக் கண்டு நிர்வாகம் அஞ்சி நடுநடுங்கியது. நக்சல்பாரித் தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க “கெரோ” போராட்டங்கள் பரவின.
நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.
1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் _ லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் உச்சநிலையை எட்டியது. ஆந்திராவின் 15 மாவட்டங்களில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்ட உழவர்கள், குறிப்பாக ஆதிவாசிகிரிஜனங்கள் 300-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை அழித்தொழித்தனர் அல்லது கிராமங்களை விட்டுத் துரத்தியடித்தனர். அதன்மூலம் கிராம்ப் புறங்களில் மாற்று அரசியல் அதிகாரமாகத் தங்களை நிறுவிக் கொள்ளமுயன்றனர். இதே முறையில் இரகசிய கொரில்லா குழுக்களைக் கட்டி நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப் ஒரிசா, தமிழ்நாடு, கேரளாவில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர். இதுகண்டு எழுச்சியுற்ற வங்காள இளைஞர்கள் கல்கத்தா நகரில் கல்வி நிறுவனங்களையும், பிற்போக்குப் பண்பாட்டு சின்னங்களாக கருதி சீர்திருத்தவாதிகளின் சிலைகளையும் தாக்கினர். போலீசு நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதும், சிறைகளைத் தகர்த்துக் கொண்டு வெளியேறுவதும்கூட நிகழ்ந்தன.
ஆனால் போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக துணை இராணுவமும் போலீசுப் படையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு-வயல்வெளிகளிலும், கல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டுதுளைத்த நக்சல்பாரிகளின் பிணங்களை விசிறியடித்து பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.
1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர்மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் ஒருவழக்கமாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது 20 துப்பாக்கிச் சூடுகள் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை ஆட்சிக் காலத்திலும் இதே நிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்தரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.
ஆனால், இவை எதுவும் நக்சல்பாரி இயக்கத்தை இந்த மண்ணில் இருந்து முற்றாகத் துடைத்தெறிந்து விடவில்லை. தெலுங்கானா – தண்டகாரண்யாவிலும், பீகாரிலும் ஆயுதப்போராட்டமாகவும், தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கத்தில் போர்க்குணமிக்க மக்கள் திரள் போராட்டமாகவும் நக்சல்பாரி இயக்கம் தொடர்ந்து வளர்ந்து பரவுகிறது. அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகள் நக்சல்பாரி இயக்கத்தால் துண்டிவிடப்படும் மக்களின் எழுச்சிக் குரலையோ, அதுகாட்டிய ஆயதப் போராட்டப் பாதையையோ ஒருபோதும் அடக்கி விடமுடியாது. எங்கெல்லாம் நக்சல்பாரியின் குரல் ஒலிக்கும். அது வெட்ட வெட்டத் துளிர்க்கும்,வளரும். அது நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், அடர்ந்த காடுகளில் எல்லாம் எதிரோலித்துக் கொண்டே இருக்கும்.
(நக்சல்பாரி எழுச்சிநாள் முப்பதாம் ஆண்டையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளால் 1997, மே மாதம் வெளியிடப்பட்ட வெளியீடு.)
- புதிய ஜனநாயகம்







