பள்ளி கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை யை 08-08-2025 அன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
கார்ப்பரேட்-காவிப் பாசிச பேய் நாட்டையே பிடித்தாட்டும் இக்காலச் சூழலில், மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் “மாநிலக் கல்விக் கொள்கை”-யை வரவேற்போம்! வாழ்த்துவோம்!
மாநில கல்விக் கொள்கை அடிப்படை மாற்றத்தை நோக்கியுள்ளதா?
பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கை தற்போதுள்ள கல்வி கட்டமைப்புப் பிரச்சினைகளுக்கு ‘சர்வரோக நிவாரணி’ என்று கூறிட முடியாதுதான். அதற்கான காரணங்களை பின் பத்திகளில் குறிப்பிடலாம்.
ஆனாலும் ஒப்பீட்டளவில் வரவேற்கதக்க சில அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, பதினொன்றாம் வகுப்பு(+1)க்கு இனி அரசு வாரியத் தேர்வு இல்லை என்ற அறிவிப்பு ஏழை எளிய நடுத்தர மாணவ மாணவியருக்கு ஒரு ‘வரப்பிரசாதம்’ என்று சொல்லலாம். மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளது போல 10, 11, 12… இப்படி வரிசையாக மூன்று ஆண்டுகளும் மாணவ-மாணவியர்கள் ஒரே பரபரப்பான – மன அழுத்தத்திற்கு உள்ளாகக் கூடிய சூழலில் அரசுத் தேர்வுகளை எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இடையில் ஒரு வருடம் ‘மூச்சு’ வாங்கிக் கொள்வதற்கான சூழலை உருவாக்கித் தந்தமைக்கு அரசினைப் பாராட்டலாம். இனிமேல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டுமே அரசுத்துறை தேர்வுகள் இருக்கும் என்று அறிவிப்பு தேவையானது.
- மாநிலத்தின் மொழியான தமிழும், தேவையின் அடிப்படையில் ஆங்கிலமும் என்றவாறு இரு மொழிக்கொள்கையே இனித் தொடர்ந்து நீடிக்கும்;
- பிற மாநிலத்தவர் தத்தம் தாய் மொழிகளை கொண்டிருந்தால் அவரவர் தாய்மொழியை கற்க தேவையான வாய்ப்பு வசதிகள் செய்து தரப்படும்;
- ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல், பயிற்சி, குழந்தை நேய கற்றல் சூழல், மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, அறிவியல் அனைத்தும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியைத் தருவதாக பள்ளிக்கல்வி செயல்பாடுகள் இருக்கும்.
- அனைவரையும் பள்ளியில் சேர்த்தல், பள்ளியில் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல், வலுவான நலத்திட்டங்கள் ஆகியவற்றை மறுசீரமைப்பதை கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.
- கலைத்திட்டம், கல்வியியல் சீர்திருத்தம், மொழிக் கொள்கை, பள்ளி கலைத்திட்டம், பாடங்களை மனப்பாடம் செய்வதை குறைப்பது, கலை, விளையாட்டு மற்றும் செயல் திட்டம் அடிப்படையிலான கற்றல் போன்ற பன்முக கற்றல், கற்பித்தல் அணுகுமுறை பின்பற்றப்படும்.
அதே சமயம், மாதிரி பள்ளிகள் (Model Schools), தகைசால் பள்ளிகள் (VETRI) குறித்த அறிவிப்புகள், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனங்கள் குறித்தும், தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையைத் தடுப்பது குறித்தும் கவனம் கொடுக்காமல் சென்றது போன்றவை கல்வி தனியார்மயத்துக்கு ஆதரவான திமுக அரசின் போக்கை காட்டுகிறது. இவை கண்டனத்துக்குரியவை. பரிசீலிக்கப்பட்டு மாற்றப்பட வேண்டியவை.
கல்விக் கொள்கை வகுப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது
இந்திய நாடு நான்கு வர்ணம் 4000 சாதி என்று சாதிய ஏற்றத்தாழ்வுகளால், குறுக்கும் நெடுக்குமாக வெட்டிப் பிளக்கப்பட்டு கிடந்த நில உடமை உற்பத்தி நிலவிய காலகட்டத்தில் பிரிட்டிஷாரின் கல்வி முறை ஏதோ ஒரு சிறு ஒளிக் கீற்றை உருவாக்கியது என்பது உண்மைதான்.
சமூகம் முதலாளி- தொழிலாளி; ஏழை- பணக்காரன் என இரு வேறு வர்க்கங்களாகப் பிளவு பட்டுக் கிடக்கக்கூடிய சூழலில் – சமூக ரீதியாக அவன் ’உயர்ந்த’ சாதி; இவன் ’தாழ்ந்த’ சாதி என்றாகவும் பிளவு பட்டுக் கிடக்கக்கூடிய அவலமான நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் கல்வி முறையில் தேவையான முக்கிய மாற்றங்களையும் உள்ளடக்கிய பாடத்திட்டங்களைப் பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.
படிக்க:
♦ மாநிலப் பள்ளிக் கல்விக் கொள்கை வெளியீடு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (SPCSS-TN) அறிக்கை
♦ சேதுபந்த வித்வான் யோஜனா: அரசு உயர் கல்வி நிறுவனங்களை காவி மயமாக்கி வரும் பாசிச பாஜக!
நாட்டில் அதிகப் பெரும்பான்மையினராக வாழும் பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட- பழங்குடியின – உழைக்கும் பாட்டாளி மக்களுக்கான பொது அறிவு சிந்தனைகளை ஊட்டக்கூடிய அளவிலான கல்வி முறையை நிலைநாட்டுவதே சமத்துவமான கல்விக்கு வித்திட முடியும்.
இப்பொழுது பயிலும் மாணவ மாணவியர்க்கு, இக்கல்வி முறை எதனை ஊட்டுகிறது?
ஒவ்வொரு ஆண்டும் மே ஜூன் மாதங்களில் வெளியாகும் தேர்வு முடிவுகளை யொட்டி, 10-ம் வகுப்பில் 12-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்களிடம் ஊடகவியலாளர்கள் பேட்டிகள் எடுப்பதையும், அப்பிள்ளைகளின் பதில்களையும் அறிந்து தான் இருக்கிறோம்.
யாரைக் கேட்டாலும், ‘நான் ஐஏஎஸ் ஆக வேண்டும், நான் ஐபிஸ் ஆக வேண்டும், நான் டாக்டராக வேண்டும், நான் மிகப்பெரிய கட்டிடக்கலை நிபுநராக உருவாக வேண்டும், நான் இன்ஜினியர் ஆக வேண்டும்…’ இப்படிப்பட்ட சிந்தனை ஓட்டத்தில் தான் மாணவ மாணவியர்கள் பதில் தரும் வகையில் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.
எவரும் சமூகத்தில் ஏன் ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன; ஏன் மக்கள் இன்றும் கையேந்தும் நிலையில் வாழக்கூடிய சமூக எதார்த்தம் நிலவுகிறது; இலவச திட்டங்களை மாபெரும் திட்டங்களாக உள்வாங்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கான மனநிலை மக்களுக்கு ஏன் ஏற்படுகிறது: சுரண்டலற்ற அனைவருக்குமான சமத்துவ நல்வாழ்வை எப்படி அமைக்கப் போகிறோம்; அதற்கான விஞ்ஞானபூர்வமான பார்வை எது; என்ற கற்றறிவு இல்லாமையால் தான் மேற்கண்டவாறு மாணவ மாணவியர்கள் பேட்டி அளிக்கிறார்கள். மாறாக சமூகத்தில் நிலவும் இத்தகைய போக்கை மாற்றுவதற்கு ‘நான் எனது வாழ்க்கையை பொது வாழ்வில் ஈடுபடுவதன் மூலம் மேற்கண்ட கொடுமைகள் இல்லாதொழிக்க என்னால் இயன்றவரை பாடுபடுவேன்’ என்ற கண்ணோட்டத்தில் ஒருவரிடம் இருந்தும் பதில் வருவதில்லை என்ற எதார்த்த உண்மையை நாம் உணர்தல் வேண்டும். ஆனால் இந்த வர்க்க சார்பு அரசமைப்பில் இவ்வளவு ஆழமான கண்ணோட்டத்திலான பாட திட்டங்களை கொண்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் நம் கொள்ள முடியாது.
அது ஒரு சமூக மாற்றத்தின் மூலமே நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எதார்த்தத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அதே நேர்வில்… ‘பகுத்தறிவு’ பாட ஆசிரியர் உருவாக்குக!
இப்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மாநிலக் கல்விக் கொள்கையில், கட்டாயமாக ‘பகுத்தறிவு பாட ஆசிரியர்’ என்ற புதியதொரு பாடப்பிரிவின் கீழ், முதல் வகுப்பு முதல் பட்டயப் படிப்பு வரை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படல் வேண்டும்.
குறிப்பாக ஆன்மீக நம்பிக்கை உள்ள மக்களிடம் நாம் பலவந்தமாக எதிர்க் கருத்துக்களைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவை மக்களின் நம்பிக்கையின் பாற்பட்டது. அதே நேர்வில் பக்தியின் பெயராலே,
தீ மிதித்தல்;
வேல் குத்துதல்;
முதுகில் கொக்கி மாட்டி தேர் இழுத்தல்;
தம்மை வருத்திக் கொள்ளும் அளவிற்கான பறவைக் காவடி எடுத்தல்;
சாமியாடுதல்
பார்ப்பனர்கள் பக்தியின் பெயரில் விழா எடுத்து மிக நீண்ட பந்தி விரிப்பில் அமர்ந்து சாப்பிட்டு முடித்தபின், அவர்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலைகளில் உருண்டு புரள்வதன் மூலமாக சொர்க்கத்தை அடையலாம் என்ற இழிவான செயல்களை பக்தியின் பெயரால் இதே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள், பல பகுதிகளில் மேற்கொள்கின்ற அவலத்தை தடுத்து நிறுத்த மாணவர்களுக்கு உரிய அறிவைப் புகட்டல் வேண்டும்…
இவை போன்ற இன்ன பிற மூடநம்பிக்கைகள் சார்ந்த ஆன்மீகத்தை தவறு என சுட்டிக் காண்பிக்கும் வகையில் விஞ்ஞான ரீதியான உண்மையைப் புகட்டல் வேண்டும். அதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு சிலர் எதிர்த்தாலும் அதை முறியடிக்க வேண்டும்.

இப்படி தம்மை வருத்திக்கொண்டு பக்தியை வெளிப்படுத்துவோர் யாரெனில் பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட- பழங்குடியின- சூத்திர-பஞ்சம மக்கள் தான் மேற்கொள்கிறார்கள். இந்து மதத்தின் ‘மூலவர்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் இப்படிப்பட்ட பக்தி மார்க்கத்தை எள்ளின் முனையளவும் மேற்கொள்வதில்லையே ஏன்? என்ற கண்ணோட்டத்தையும், இந்த சட்ட வரம்பிற்கு உட்பட்டு எந்தெந்த வகைகளில் புகட்ட முடியுமோ அப்படி மாணவப் பிஞ்சு உள்ளங்களிலேயே புகட்டிடல் வளர்க்க வேண்டும்.
ஏன் இந்தக் கொடூர சாதிய வேறுபாடு? ஆதிக்க சாதி வெறி?
அண்மையில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் “கீழடி அகழாராய்வு” மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகள் தமிழ்நாட்டின் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகத்தை உலகிற்கு பறைசாற்றுகிறது. அக்காலக் கட்டத்தில் சனாதனமோ, சாதிய வேறுபாடுகளோ இருந்ததாக சான்றுகள் இல்லை. அன்றைய காலகட்டத்தில் உச்சபட்ச நாகரீகம் படைத்தவர்களாகத்தான் தமிழர் நாகரீகம் இருந்துள்ளது என்பதை உணர முடிகிறது. இதனை ஆயிரம் பக்க அளவிற்கு அறிக்கையாக வடித்துக் கொடுத்த அகழாராய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மட்டுமல்ல; அதனை பல்வேறு வெளிநாட்டு அகழாராய்வு நிபுணர்களும் மெய்ப்பித்திருக்கிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு அந்த அறிக்கையை ஏற்று வெளியிட மறுக்கிறது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி போல கிடப்பிலேயே போட்டு விட்டது.
காரணம் இது சனாதனம் சார்ந்த – மனுஸ்மிருதி – பகவத் கீதை – ஆர்எஸ்எஸ் – பார்ப்பனீய- இந்துத்துவக் ‘கோட்பாடுகளுக்கு’ எதிரானதாகவும், தாம் வட புலத்தில் கட்டமைத்துள்ள ‘சரஸ்வதி நதி நாகரீகம்’ என்பதற்கு முந்தைய வரலாற்று நாகரீகமாக தமிழ்நாட்டு நாகரீகம் முன் சென்று விடுகிறதே; பார்ப்பனீயக் கலாச்சாரம் பின் தள்ளப்படுகிறதே என்ற ஆர்எஸ்எஸ்-ன் கொள்கைகளுக்கு மாறானதாக இருப்பதாலேயே, கீழடி அகழாராய்வு பேருண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது ஒன்றிய RSS – இந்துத்துவ – பார்ப்பனீய அரசு.
இந்நிலையில் இப்படிப்பட்ட உண்மைகளை எல்லாம் கூட இந்த சட்ட வரம்பிற்கு உட்பட்டு, எந்த அளவிற்கு பாடப் புத்தகங்களில் நுழைக்க முடியுமோ அந்த அளவிற்கு இந்த அரசு நுழைக்க வேண்டும் என்பது நமது பேரவா.
இந்த ஆரியப் பார்ப்பனீய கட்டமைப்பால் உருவாக்கப்பட்ட நான்கு வர்ணம், 4000 சாதி, தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்றெல்லாம் வகுக்கப் பட்டிருந்த இழிவான சூழ்நிலையில் ஐயா வைகுண்டர், தந்தை பெரியார், கேரளத்து பெரியவர் நாராயண குரு மற்றும் இடதுசாரி இயக்கங்கள், பெரியாரிய- அம்பேத்காரிய இயக்கங்கள் இவற்றின் உழைப்பால் சிறிதளவு மாற்றங்களை உருவாக்கி இருக்கிறோம் என்பது மறுப்பதற்கு இல்லை.
ஆனாலும் இந்த 2025-லும் ஆணவப் படுகொலைகள் நடக்கின்றனவே, ஏன்? உயர்நிலைப்பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் சாதியின் பெயரால் மோதி கொள்கிறார்களே, கத்தியாலும் அரிவாளாலும் வெட்டிக் கொள்கிறார்களே, அது ஏன்? அப்படிப்பட்ட அளவில் பிஞ்சு உள்ளத்திலேயே நஞ்சை விதைத்து அதாவது மாணவப் பருவத்திலேயே – இளைய பருவத்திலேயே-சாதிய உணர்வுகள் தழைத்தோங்கி இருப்பதை இன்னும் எத்தனை காலம்தான் அனுமதிக்கப் போகிறோம்? இவற்றுக்கு எல்லாம் அடிப்படை சனாதன பார்ப்பனீயம் என்றாலும் கூட அதனை உள்வாங்கிக் கொண்ட ஆதிக்க சாதி வெறி கூட்டம் தம்மளவிலும், தமது வாரிசுகள் மனதிலும் ஆதிக்க சாதி வெறியை ஊட்டி வளர்க்கிறார்கள். அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு பகுத்தறிவு சார்ந்த கல்வி முறையை ஏற்படுத்திக் கொடுத்தால் ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியும்.

எனவே ‘சாதி ஒழிப்பு” மற்றும் ‘சாதி மறுப்பு’ தொடர்பான பாடத்திட்டங்களை, ‘சாதி மறுப்பு திருமணங்களை நியாயப்படுத்தலை’ பகுத்தறிவுப் பாட நூலில் இணைக்க வேண்டும். அது இன்றைய காலத்தின் கட்டாயம் கூட.
அனைவரும் இந்துக்கள் தான் எனில் கோவில்களில் அனைத்து சாதியினரும் அச்சராகுவதில் உள்ள நியாயத்தை பாட நூல்களில் நுழைக்க வேண்டும்.
பாஜக ஆளுகின்ற வட மாநிலங்களில் பள்ளி குழந்தைகளுக்கு வருகைப் பதிவேடு எடுக்கையில், மாணவர்கள் கூறுகின்ற ‘எஸ் சார்'(Yes Sir) (உள்ளேன் ஐயா) என்பதை அகற்றிவிட்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல வைத்திருக்கிறார்கள். பல்வேறு விதமான வரலாற்று உண்மைகளை எல்லாம், விஞ்ஞான உண்மைகளை எல்லாம் அகற்றிவிட்டு மூடநம்பிக்கைகள் சார்ந்த-சனாதன கொள்கைகள் சார்ந்த, பட்டவர்த்தனமாக ஆர்எஸ்எஸ் கொள்கைகள் பாடங்களில் திணிக்கப்பட்டு இந்த 2025 விஞ்ஞானக் காலத்தில்கூட மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. நஞ்சு ஊட்டப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு எதிரான சிந்தனைகள் ஊட்டி வளர்க்கப்படுகின்றன; சாதிய வேறுபாடுகள் நியாயமெனக் கற்பிக்கப்படுகின்றன.
அவ்வாறு இருக்கும் பொழுது தமிழ்நாட்டில் ‘இது திராவிட மண்; திராவிட மாடல் அரசு’ என்று கூறிக் கொள்கின்ற பொழுது, அந்த அடிப்படையில் மேற்கண்ட குறைந்தபட்ச விஞ்ஞான ரீதியான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் எந்தத் தடையும் இல்லை. இவற்றை அரசு உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள கல்விக் கொள்கையில் இவற்றையும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
கல்வியில் எப்படி வெள்ளையன் மெக்காலே கல்வி முறையை புகுத்திச் சென்றானோ, அதேபோல நிர்வாக நடைமுறைகளிலும் ‘டாடன்-ஹாம்’சிஸ்டமே இன்று வரை நீடிக்கிறது.
அது இந்த நாட்டு உழைக்கும் மக்களை பெரிதும் வதைக்கிறது. 1970-களின் மத்திய காலத்திற்குப் பின் வந்த ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தில் வந்த காட்சிகளைப் போல் தான், இன்றும் அனைத்து துறை நிர்வாகங்களிலும் வெள்ளையனின் ‘டாடன்-ஹாம்’ சிஸ்டம் நடைமுறையில் நீடித்து மக்களை அலைக்கழித்து வாட்டி வதைக்கின்ற நிலைமைகள் நீடிக்கின்றன. இவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
’சுதந்திரம்’ பெற்று விட்டதாக கூறப்படும் இந்த 78 ஆண்டுகளில் வகுக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்ட கல்விக் கொள்கைகளில் அறிவியல் மனப்பான்மை தழைத்தோங்கிடவில்லை. தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கை அமலான பின் கல்வி சேவை பட்டியலில் இருந்து வணிக பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன் விளைவுகளாக, தனியார்மய கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல் அதிகரித்தது, அரசு கல்விக்கான நிதியை வெட்டிச் சுருக்கியது, சிறிது சிறிதாக ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழல் எட்டாக்கனியாக மாற்றப்பட்டது. இந்த அவல நிலையை மாற்றிட ஒரு புதிய கல்வியை இந்திய மக்களும் கல்வியாளர்களும் எதிர்பார்த்தனர். அதற்கு நேர்மாறாக, அடைந்த முன்னேற்றங்களையும் பின்னுக்குத் தள்ளும் விதமாக மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது.
RSS – பாஜக கும்பலின் ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ –எவ்வளவு கேடுகெட்டது?
1986ல் நடைமுறையில் இருந்து ‘தேசியக் கல்விக் கொள்கை’யை மாற்ற வேண்டும் என்று 2014 மக்களவைத் தேர்தல் காலத்திலேயே, தாய் அமைப்பான RSS-ன் தூண்டுதலில்
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் புதிய கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வலை விரித்துவிட்டது.
திட்டமிட்ட மோசடிகளின் மூலம் 2014-ல் பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றதும், 2015-ல் முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் கடைந்தெடுத்த பிற்போக்காளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியனின் கீழ் ஒரு புதிய கல்வி குழுவிற்கான ஆலோசனைக் கமிட்டியை அமைத்து செயல் படவைத்தது ஒன்றிய அரசு.
அதனைத் தொடர்ந்து 2017-ல் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் குழு, 2019-ல் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. 2019 முடிவில் இறுதியாக்கப்பட்டு, ‘தேசிய கல்விக் கொள்கை-2020’ (NEP 2020) என்பது 2020 ஜூலை 29-ல் ஒன்றிய அமைச்சரவையால் ஒப்புதல் அளித்தது.
இந்தப் படு பிற்போக்கான மோசடி கல்விக் கொள்கைக்கு 5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள், 6000 தொகுதிகள், 6000 நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், 670 மாவட்டங்கள்— ஆகியவற்றில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பரிந்துரைகளைப் பெற்று ஆய்ந்தறிந்து, இந்தத் ‘தேசிய கல்விக் கொள்கை-2020’ உருப்பெற்றதாக ஒன்றிய அரசு ‘ஒளிவட்டம்’ சூட்டிக்கொண்டு மத்தளம் கொட்டியது.
தேசிய கல்விக் கொள்கையின் கேடான அம்சங்கள் என்னென்ன?
- கட்டாய இந்தி மொழி திணிப்பு; அதன் மூலம் சனாதன பார்ப்பனீய சமஸ்கிருதத் திணிப்பு;மும்மொழிக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்துதல்.
- அனைத்து பட்டய மற்றும் தொழில்நுட்ப கல்வியில் இணைய 12-ம் வகுப்பு (மற்றும் தொடர்ச்சியான பட்டய படிப்புகள் முடித்த பின்) மதிப்பெண் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யாமல், நீட், மியூட், க்யூட், டெட், டிஆர்பி… என எண்ணற்ற தேர்வு முறைகளை தடை இன்றி நாடு முழுவதும் அமல்படுத்துதல்.
- கல்வி நிறுவனங்களை வகைபிரித்து கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்ப்பது, பன்னாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இந்திய கல்விச் ‘சந்தையை’ திறந்து விடுவது.
- விஸ்வகர்மா யோஜனா… என வாயில் நுழையாத – என்னவென்றே எளிதில் புரிந்து கொள்ள முடியாத பற்பல புதிய வார்த்தைகளில் கல்வி முறையை பார்ப்பன சமஸ்கிருத ‘பாஷை’களில் புகுத்துவது; (இவை வேறு ஒன்றும் இல்லை; ஒரு நூறு இருநூறு ஆண்டு காலங்களுக்கு முன்னால் எப்படி அப்பன் தொழிலை தன் பிள்ளை செய்ய வேண்டும் என்று எந்த சனாதனம் கற்பித்து வைத்திருந்ததோ அதை இப்பொழுது புதிய முகமூடி அணிந்து நிறைவேற்றத் துடிக்கிறார்கள்; அதற்கு லோன் தருகிறார்களாம்; கோவையில் மண்டபத்தை பூட்டி வைத்துக் கொண்டு இந்தக் கேவலத்தை பெரும் சாதனைகளாக வாய்கிழிய பெருமை பேசினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட சங்கிகள்)….
இதுபோல எண்ணற்ற உழைக்கும் மக்களுக்கு எதிரான கல்வி முறையை இந்த பாசிச பாஜக மோடி அரசு தேசிய அளவில் திணித்து வருகிறது.
(அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உட்பட பல மாநிலங்கள் இக்கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தத்தம் சட்டமன்றங்களிலேயே மசோதாக்களை நிறைவேற்றி விட்டன. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அண்மையில் தமிழ்நாடு கல்விக் கொள்கை எது என்பதனை இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர், கல்வி அமைச்சர் பங்கேற்று அறிவித்த சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பெரும் விழாவில் தெளிவாக தெரிவித்து விட்டார்கள். இதற்காக வாழ்த்துவோம்!)
- ஆனால், இப்படிப்பட்ட ஒன்றிய அரசின் தேசியக் கல்வி முறையின் மூலம் இனி 3, 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் அனைத்திற்கும் ஒன்றிய தேசிய கல்விக் கொள்கைகளின்படி அரசு தேர்வுகள் நடத்தி அதன் மூலம் தேர்ச்சி அளிக்க வேண்டுமாம்;
இதன் மூலம் ஆரம்பப் பள்ளி காலத்திலேயே மாணவர்கள் இடை நிற்றல் பல லட்சக்கணக்கில் அமையும். மேலும் அப்பன் தொழிலையே பிள்ளைகள் செய்ய வேண்டும் என்ற பழங்கால கொடுமைகளுக்கு ஆளாக்கி ‘லோன் தருகிறேன்; ஓடு அந்தத் தொழிலுக்கு’- என்கிறது மோடி அரசு.
செருப்பு கடை வைத்துக் கொள்; தையல் கடை வைத்துக் கொள்; நவீன முறையில் துணி துவைக்கும் தொழிலை கற்றுக் கொள்; முடி திருத்தகம் தொழிலை செய்து கொள்; ஏர்ப் பிடித்து உழு, தச்சு, பட்டறை வேலைகளை செய்…. இதுபோன்ற எண்ணற்ற உழைக்கும் தொழில்களை பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட- பழங்குடியின – சூத்திர- பஞ்சம மக்கள் தலையில் கட்டுவார்களாம்; அதற்கு இவர்கள் லோன் தருவார்களாம்? எவ்வளவு செப்படி வித்தை என்பதைக் கண்ணுருங்கள்? எவ்வளவு பெரிய ஆபத்து?
இந்த ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால், அறுதிப் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட- பழங்குடியின- சூத்திர பஞ்ச மக்கள் கல்வி அறிவற்ற பாமரர்களாய் மீண்டும் பழைய காலத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதும், பஞ்சைப் பாராரிகளாய் ஆளாக்கப்படுவதும், நோய்வாய்ப்பட்டு செத்து மடிவதும், நடந்தே தீரும்.
ஆர்எஸ்எஸ் பார்ப்பன கொள்கைகளை நிலைநாட்டத் துடிக்கும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ வீழ்த்துவோம்!
அதற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் கல்விக்கொள்கையின் மீதான விமர்சனங்களைச் சுட்டிக்காட்டி மாற்றிடப் போராடுவோம்.
கல்வியில் கார்ப்பரேட்-காவிமயத்தை ஒழித்து அனைவருக்கும் தரமான, அறிவியல்பூர்வமான கல்வி கிடைக்கும்வரை போராட்டத்தைத் தொடர்ந்திடுவோம்!
- எழில்மாறன்







தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை முதலில் நாம் வரவேற்கலாம் அதில் எவ்வகை மாற்றங்கள் அறிவியல் பூர்வமாக வேண்டும் என்பதை இக்கட்டுரை விரிவாக விளக்கமாக பல்வேறு தரவுகளோடு தீர்வுகளையும் முன்வைத்து கொண்டு வந்திருக்கிறது இதனை தமிழக அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.