இந்தியா மதசார்பற்ற நாடு என்றும் இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் பாஜகவின் ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் என்ற ஒன்று இருப்பதே ஆச்சரியமானது தான். இங்கு சிறுபான்மை மதத்தினரை ஒழித்துக் கட்டி இந்துராஷ்டிரம் அமைக்க கங்கணம் கட்டி செயல்பட்டு வரும் பாசிச பாஜக, இந்திய ஒன்றியம் மதச்சார்பற்ற நாடு என்பதை மாற்றி இந்து நாடாக அறிவிப்பதற்கான வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் கிரண் ரிஜிஜூவின் கருத்தை கேட்டால் இந்தியாவே சிரிக்கும். ஒரு திருடனோ அல்லது கொலை குற்றவாளியோ எப்படி தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டானோ அதுபோலவே உள்ளது கிரண் ரிஜிஜூவின் பேச்சு.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து ‘இந்து தேசத்தை’ மீட்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. 2021 டிசம்பர் மாதம் நரேந்திர மோடி காசி விசுவநாதர் ஆலயத்தை திறந்து வைத்து ‘ஹர் ஹர் மகாதேவ்’ என்று கோஷமிட்டார். காவி உடை அணிந்து முனிவர் போல ருத்ராட்சக் கொட்டைகளை அணிந்து கொண்டு காலபைரவரின் கோயிலுக்குள் சென்றதை அத்துணை தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்தன. ‘ஔரங்கசீப் வரும் போதெல்லாம் சிவாஜியின் எழுச்சி இருக்கும்’ என்று அந்த இடத்தில் மோடி பேசியது ஒரு மதச்சார்பற்ற நாட்டின் தலைவர் என்பதை விட இந்து மத தலைவராகவே மோடியை பார்க்க முடிந்தது.

இந்தியா பாஜகவின் ஆட்சியில் ஒருபோதும் மதச்சார்பற்ற நாடாக இருந்தது இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி அண்டை நாடுகளில் இருந்து குடியேறியவர்களை இந்து, சீக்கியர், பௌத்தர்களாக இருந்தால் குடியுரிமை உண்டு என்றும் ஆனால் இஸ்லாமியர்களாக இருந்தால் குடியுரிமை கிடையாது என்றும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டது பாசிச பாஜக.
என்.ஆர்.சியின் கீழ் அசாமில் 19 லட்சம் இஸ்லாமியர்கள் இந்தியர்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் வங்காளிகள் என்று அவர்கள் வெளியேற்றப்படுவது நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒற்றை காரணத்தால் குடியுரிமை வழங்க முடியாது என்கிறது ஆளும் பாஜக அரசு
மாட்டுக்கறிக்காக மாட்டிற்காக பசு காவலர்கள் என்ற பெயரில் சங்பரிவார் குண்டர்களால் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
உத்தரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மதவெறியர்களால் ஏவப்படும் புல்டோசர்கள் இஸ்லாமியர்கள் வாழ்க்கையை நாசம் செய்து கொண்டிருக்கிறது. சங்பரிவார் கும்பல் நேரடியாகவே, இங்கு வாழ முடியவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு போ என மிரட்டுவதும் நடக்கிறது.
கடவுளின் பெயரால் நடத்தப்படும் ஊர்வலங்களில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது கல்லெறிவதும், கலவரம் ஏற்படுத்துவதும் என சங்பரிவார் எடுபுடிகளின் அராஜகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முகலாயர்களின் பெயர்களை தாங்கி நிற்கும் ஊர்களின், நகரங்களின் பெயர்கள் 2014க்கு பிறகு ஒவ்வொன்றாக மாற்றப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களின் துணையுடன் மசூதிகள் கைப்பற்றப்படுகின்றன.
படிக்க:
♦ அத்வானிக்கு பாரத ரத்னா: கவலைக்கிடமான நிலையில் ‘மதசார்பற்ற’ இந்தியா!
♦ பாபர் மசூதி இடிப்பு கடப்பாரையுடன் தொடங்கவில்லை!
ஆனால் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒன்றும் அறியாதவர் போல் இதற்கு நேர் மாறாக நாங்கள் உத்தமர்கள் என பேசுகிறார். “இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். இந்தியாவில் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் எனவே நாங்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகவும் கூறும் சிறுபான்மையினர் ஒருவரை கூட நான் பார்க்கவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆதரவு பெற்ற இடதுசாரிகள் இந்தியாவில் சிறுபான்மையினர் சித்திரவதை செய்யப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் விடாத பிரச்சாரம் செய்து வருகிறது. இது போன்ற ஒரு கதையை கட்டமைப்பது நாட்டுக்கு உதவாது என்று கூறியவர் “இந்துக்கள் பாகிஸ்தானிலோ, வங்கதேசத்திலோ இருந்தால் அங்கு நிலைமை என்னாவது என தேசிய வெறியை தூண்டுமாறு பேசி உள்ளார். பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இந்துக்கள் இருப்பது தெரியாதா? அங்கும் ஆர்எஸ்எஸ் போன்ற மதவெறி அமைப்புகள் இருந்தால் சிறுபான்மை இன மக்களுக்கு ஆபத்துதான்.
கிரண் ரிஜிஜூவின் கூற்றை பாஜகவினரே ஏற்றுக்கொள்ளாத போது நாம் ஏற்றுக் கொள்வோமா? சமீபத்தில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்து பௌத்தம் சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் பட்டியல் சாதி சான்றிதழ் பெற்றிருந்தால் அவை ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார். அதுபோல சான்றிதழ் பெற்று அதன் மூலம் அரசு வேலைகளோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயங்களை பெற்றிருந்தால் அனைத்தும் செல்லாததாகும் என்றும் பணம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி உத்தம வேஷம் போட முயல்கிறார் பட்னாவிஸ்.
இப்படி வெளிப்படையாக சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் பாசிச பாஜகவை நாங்கள் மதச்சார்பற்ற அரசு தான் சிறுபான்மையினருக்கு எதிராக எதிரானவர்கள் இல்லை என கதை அளந்து வருகிறார் கிரண் ரிஜிஜூ. ஆனால் இந்து கொடுங்கோன்மை ஒற்றையாட்சியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் பாசிச கும்பலை மக்கள் நம்ப தயாராக இல்லை.
- நந்தன்






