
வாஷிங்டனின் ரெட்மெண்டில் உள்ள மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் அந்நிறுவனத்தின் 50வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் மைக்ரோசாப்டின் பங்கை பாலஸ்தீனிய ஆதரவாளர் அம்பலப்படுத்தியதால் அவர் வெளியேற்றப்பட்டதும் அந்நிறுவனத்தின் ஊழியராக இருப்பதால் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவமும் தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
மைக்ரோசாப்ட் AI தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா சுலைமான், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முஸ்தபா சுலைமான் புதிய தயாரிப்புகள் குறித்தும் நிறுவனத்தின் எதிர்காலம் பற்றியும் பேசிக்கொண்டிருந்த பொழுது “MUSTAFA SHAME ON YOU” என்று உரத்த குரலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் இப்திகால் அபுசாத் என்ற ஊழியர் முழங்கிக் கொண்டே மேடையை நோக்கி முன்னேறினார்.
இதனை சற்றும் எதிர்பாராத சிஇஓ சுலைமான் தனது பேச்சை நிறுத்தினார். “நீங்கள் செயற்கை நுண்ணறிவை நன்மைக்காக பயன்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால் மைக்ரோசாப்ட் இஸ்ரேலிய ராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆயுதங்களை இஸ்ரேலுக்கு விற்கிறது. இதன் துணையால் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் 50,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எங்கள் பிராந்தியத்தில் நடந்த இனப்படுகொலைக்கு மைக்ரோசாப்ட் முக்கிய பங்காற்றி உள்ளது என்றார்.
“உங்கள் போராட்டத்திற்கு நன்றி நீங்கள் சொல்வதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார் சுலைமான். தொடர்ந்து பேசி அபுசாத் சுலைமான் மற்றும் அனைத்து மைக்ரோசாப்ட் நிர்வாகிகளின் கைகளிலும் இரத்தக்கரை படிந்துள்ளது என்றார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக கெஃபியே ஸ்கார்பையும் (keffiyeh scarf) மேடையில் வீசி எறிந்தார். பாதுகாவலர்கள் அவரை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றினர்.
இந்த போராட்டத்தின் காரணமாக இரு ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இவரை தொடர்ந்து மற்றொரு மைக்ரோசாப்ட் ஊழியரான வாணியா அகர்வால் கேட்ஸ், பார்மர் மற்றும் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர் மேடையில் கொண்டாட்டத்தில் இருந்தபோது அவரும் குறிக்கிட்டு தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.
படிக்க:
♦ களவாடப்பட்ட காஸாவின் வாரிசுகள் ! பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் !
♦ பாலஸ்தீனம்-காசா வுக்கு எதிரான இஸ்ரேலின் போர்: உலகிற்கு உணர்த்தும் உண்மைகள்!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் நடத்திய விசாரணையில் காசா மற்றும் லெபனானில் நடந்த போர்களின்போது குண்டு வீசுவதற்கான இலக்குகளை தேர்ந்தெடுக்க இஸ்ரேலிய இராணுவத் திட்டத்தின் ஒரு பகுதியாக மைக்ரோசாப்ட் மற்றும் OPEN AIஆகியவற்றின் AI மாதிரிகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிய வந்தது.
இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் காசா பகுதியில் குண்டு வீசுவதற்கான இலக்கை தேர்ந்தெடுக்க குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகமாக இருக்கும் இடத்தை AI தொழில் நுட்ப மூலம் எளிதாக கண்டடையலாம். மைக்ரோசாப்ட் ஊழியர் இப்திகால் அபுசாத் கூறுவது போல் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையின் அங்கமாக AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வருடத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கக்கூடிய இப்திஹால் மற்றும் வானியா அகர்வால் போன்றவர்கள் அநீதிக்கு எதிராக தங்களது பொருளாதார வாழ்வை பற்றி கணக்கில் கொள்ளாமல் உறுதியாக தங்கள் கருத்தை வெளியிட்டது பாராட்டுக்குரியது என்பது சுருக்கி விடாமல் நமக்கெல்லாம் முன்மாதிரியாக உள்ளார்கள் என்பதே முக்கியமானது.
மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் துணையோடு இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை அம்பலம் ஆகியுள்ளது. உலக நிதியாதிக்க கும்பல் உலகை சூறையாட தனது மேலாதிக்கத்தை நிறுவ உலகம் பல்வேறு தேசிய இனங்களுக்கிடையே பகைமையை உருவாக்குவதும், தேசிய மற்றும் இனவெறி பிடித்த பாசிச அரசுகளை பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டு அமைதியை கெடுப்பதும், போர்களை நடத்துவதும் நடந்துக் கொண்டிருக்கிறது. இதே கும்பல் தான் உழைக்கும் வர்க்கத்தின் மீது கட்டற்ற உழைப்பு சுரண்டலையும் நிகழ்த்துகிறது.இதனை முறியடிக்க வேண்டியது நம்முன் உள்ள கடமை. இதற்கு மைக்ரோசாப்ட் ஊழியரின் போராட்ட உணர்வை வரித்துக் கொள்வோம்.
- நந்தன்






