டந்த மே மாதம் 4-ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வில் 24 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். அதன் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில் அவசர அவசரமாக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அதேநாளில் ஜூன் 4-ஆம் தேதியே வெளியிடப்பட்டன. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றிய பரபரப்பான சூழலில் அமுங்கிக்கிடந்த முறைகேடுகள் பின்னர் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின. இந்த ஆண்டில் நடைபெற்ற NEET தேர்வில் ஒரே கோச்சிங் சென்டரில் படித்த 7 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் அதாவது 720/720 பெற்றதாக முடிவுகள் வெளிவந்தன.

எதிர்மறை மதிப்பெண்கள் (negative marks) உள்ள NEET தேர்வில் முழு மதிப்பெண்களுக்கு சாத்தியமே இல்லாத நிலையில் 7 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்ததாக வெளிவந்த தேர்வு முடிவுகள் NEET தேர்வில் இந்தாண்டு நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு “ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக” சந்தி சிரித்தன.  இது நாடுமுழுவதும் NEET தேர்வு எழுதிய மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து NEET தேர்வையே ரத்து செய்யவேண்டும் என்று போராடும் மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.  NEET தேர்வு நடைபெற்ற சில இடங்களில் ஏற்பட்ட காலதாமதத்துக்காக சுமார் 1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் காரணமாக அவ்வாறு நிழந்திருக்கலாம் என்று தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency) உச்சநீதிமன்றத்தில் சமாளித்திருக்கிறது. முதன் முதலாக தமிழ்நாட்டில் எழுந்த NEET தேர்வுக்கு எதிரான குரல் தற்போது நாடுமுழுவதும் பரவிவருகிறது. இதில் என்ன காமெடி என்றால் NEET தேர்வைக் கொண்டுவந்து அதற்கு இன்றுவரையில் முட்டுக்கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்.-சின் மாணவர் பிரிவான ஏபிவிபி-யும் NEET-க்கு எதிராகப் போராடுவதுதான். அதுமட்டுமல்ல சாய் தீபக் என்ற சூப்பர் சங்கி வழக்கறிஞரும் NEET-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாதாடுவதுதான்.

ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவது, பணம் வாங்கிக்கொண்டு மதிப்பெண் போடுவது, தேர்வு எழுதவரும் மாணவ, மாணவிகளை உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்துவது என்று NEET தேர்வு குறித்து பல முறைகேடுகள் சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியான பின்னும் கோச்சிங் என்ற பெயரில் 5750 கோடிகள் புழங்கும்  NEET தேர்வு என்ற ஒரு வணிகத்தில் புனிதத்தைக் கண்டுபிடித்துள்ள உச்சநீதிமன்றம்  கருணை மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டும் மறுதேர்வு எழுதவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆள்மாறாட்டம்  செய்து தேர்வு எழுதியது, வினாத்தாள் கசிந்து பலர் முழு மதிப்பெண்கள் பெற்றது குறித்து எதையும் பேசாமல் மௌனமாகிவிட்டது.

மக்களுக்கு சேவை செய்யும் புனிதப்பணி என்று போற்றப்படும் மருத்துவத்துறைக்கு மட்டுமல்ல மருத்துவராகவேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் மாணவர்களுக்கும், போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை கிடைக்காமல் வாடும் மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதிஇது. மிக முக்கியமாக, உண்மையாகவே சேவை மனப்பான்மையுடன் படிக்க வந்த பல மாணவர்களின் உயிரைக் குடித்த பின்னும் கோச்சிங் சென்டர்கள் வாழ  வழி செய்து கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

படிக்க:

மருத்துவர் கனவை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வு!
நீட் என்றாலே தரம் தான், மெரிட் தான், ஜீரோ தான்!

படிக்க விருப்பமும், சேவை உள்ளமுமே  மருத்துவம் படிக்கத் தேவையான தகுதிகள். அனைவருக்கும் கல்வி வழங்குவதை இலக்காகக் கொண்டிருப்பதாகத் தம்பட்டம் அடிக்கும் பாசிச பா.ஜ.க. பணம் படைத்தவர்கள் மட்டும் மருத்துவர்கள் ஆகலாம் என்று மாற்றியுள்ளது. இதனை மாணவர்கள், பெற்றோர்களுடன் சேர்ந்து மக்கள் அனைவரும் முறியடிக்க வேண்டும். மருத்துவ சுற்றுலா செய்யும் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் தேவை அதிகமாக உள்ளது . அது மட்டுமன்றி பல பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் இன்றி முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை அரசாங்கம் எடுத்து மருத்துவக்கல்லூரிகளாக மாற்றலாம். அவை அரசு மருத்தவமனைகளோடு இணைக்கப்படும்போது மக்கள் சிறந்த சேவை பெறுவதோடு வருங்காலத்தில் மிகச் சிறந்த மருத்துவர்களையும் நாம் பெற முடியும். மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை விடாப்பிடியாகப் போராடினால் வெற்றி நமதே. NEET தேர்வினால் உயிரிழந்த அனிதா மற்றும் பிற மாணவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவே!

ஆனந்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here