கர்நாடக மாநிலத்தின் கலவரங்களுக்கு யார் பொறுப்பு?


ந்தியாவின் மென்பொருள் நகரமாக பெங்களூர் விளங்குகிறது. அதன் தாக்கம் கர்நாடக மாநிலத்தின் பல நகரங்களில் வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் பல முதலீட்டாளர்கள், பல்வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து வாழும் இருப்பிடமாக இருக்கிறது.

ஆனால், இன்று இது கேள்விக்குறியாக மாறிவிட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் குறைந்தது 30 முறைகளாவது பெங்களூர், மைசூர், தவன்கரேயில் உள்ள குவெம்பு பல்கலைக்கழகங்களுக்குத் தேர்வாளர், பேராசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் குழு உறுப்பினர் என்ற முறையில் பயணங்கள் மேற்கொண்டுள்ளேன்.

கர்நாடக மண்ணில் பன்முகத் தன்மைகளைப் போற்றும் தகைமையைக் கண்டு வியந்து போயிருக்கிறேன். அங்கேயும் வட்டல் நாகராஜிக்கள் உண்டு. ஆனால் மக்கள் இவர்‌ போன்றவர்களை மதித்தது இல்லை.

ஆனால் இன்றோ கர்நாடக அரசே வட்டல் நாகராஜின் வடிவமாக மாறிவிட்டதோ என்ற‌ ஐயமும் அச்சமும் எழுகிறது அல்லவா!

மாணவர்களைத் தூண்டுவது யார்?
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைப்பது யார்?
முதல்வரைத் தலையாட்டி பொம்மை ஆக்கியது யார்?

கர்நாடகத்தின் கல்வி ஆளுமைகள் தங்களின் மதச்சார்பற்ற பண்பால்
மாநிலத்தைக் கல்வியில் உயர்த்தினர். பொருளாதாரத் துறையில் பணியாற்றிய பல ஆளுமைகளை நன்கறிவேன். அவர்கள் பின்பற்றிய தகைமைகளை, சால்புகளைக் கண்டிருக்கிறேன்.

பேராசிரியர். வெங்கட கிரி கவுடா,
பேராசிரியர். திம்மைய்யா,
பேராசிரியர். நஞ்சுண்டப்பா ,
பேராசிரியர். அப்துல் அஜுஸ் ,
பேராசிரியர். ரங்கசாமி,
குவெம்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் . வீரபத்திரப்பா ஆகியோரை நன்கறிவேன். பேராசிரியர்.வீரபத்திரப்பா முனைவர் பட்ட நேர்முகத் தேர்வுக்குத் தேர்வாளராகச்சென்றுள்ளேன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை சொற்பொழிவுகளுக்குப் பேராசிரியர் வீரப்பத்திரப்பாவைத் தவிர்த்து மற்ற பேராசிரியர்கள் அனைவரும் நான் அழைத்துக் கலந்து கொண்டு, அரிய ஆய்வுரைகளை ஆற்றியுள்ளனர்.

1991 ஆம் ஆண்டு நாடாளுமன்ற‌த் தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் முன்னாள் முதல்வர் குண்டுராவைப் பேராசிரியர் வெங்கடகிரி கவுடா பெங்களூர் தென் பகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோற்கடித்தார். இது தான் பாஜக முதல் வெற்றியாகும். இது தான் முதல் வழுக்கலாகும்.

வெங்கடகிரி கௌடா

பேராசிரியர் . வெங்கட‌கிரி கவுடா இலண்டன் பல்கலைக்கழகத்தில்
பணவியல் பொருளாதாரம் ‌பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
இவரின் செல்வாக்கை நன்கு பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்றது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவரிடம் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்த ஒரு பெண் பேராசிரியரின் நேர் ‌முகத் தேர்விற்கு அழைத்திருந்தார்.
நேர்முகத் தேர்வு முடிந்தவுடன் அவரது இல்லத்திற்கு மதிய உணவிற்கு அழைத்தார்.
அவரது வீட்டில் தேவாரப்பாடல் ஒலிப்பது கேட்டு வியந்து போனேன்.நாகநாதன், எனது மனைவி தமிழ்ப் பெண் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன் என்றார்.
திராவிடர் இயக்கம் தான் கர்நாடக அரசியலுக்கு உந்துதல் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

இப்படி முற்போக்கான பல கருத்துக்களைப் பின்பற்றும் நீங்கள் எப்படி மத அரசியலை முன்னெடுக்கும் கட்சியில் தொடரமுடியும் என்றேன். உள்ளே போன பின் தான் உண்மை தோற்றம் தெரிகிறது என்றார். அப்போது பாஜக வில் இணைந்தது தவறு எனக் கூறினார்.

பிறகு நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோரைப் பெரிதும் பாராட்டினார்.
பாஜக கட்சியில் இருந்து விலகினார்.

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் என்.ஆர்.ஷெட்டி துணை வேந்தராக
இருக்கும் போது பேராசிரியர் பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
நான் அழைக்கப்பட்டிருந்தேன். மதுரையைச் சேர்ந்த முனைவர்.வீராசாமி
ஏற்கனவே இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

பேராசிரியர் பதவிக்கு வீராசாமியைத் தேர்ந்தெடுப்பதற்கு நீங்கள் உங்கள்
கர்நாடக நண்பர்களிடம் பேச வேண்டும் என்றார் துணைவேந்தர் என்.ஆர்.ஷெட்டி.
ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும். திரு.வீராசாமி திறன் மிக்க ஆசிரியர்.
அவரும் சுழற்சி முறையில் பொருளாதாரத் துறையில் தலைவராக வேண்டும் என்றார்.
அதன்படியே முனைவர். வீராசாமி பொருளாதாரத் துறையில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுத் துறைத் தலைவராகவும் ஆனார்.

இது போன்ற பல தகைமையாளர்கள் உயர் கல்வித் துறையில் பணியாற்றி,
உயர்த்திப் பிடித்த‌ மாண்புகள் கீழே தள்ளப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் பன்முகத் தன்மைகள் அரசியல் காரணங்களுக்காகச் சீரழிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியிருந்து வெளியேறியவர்கள், பதவி கிடைக்காதவர்கள் தான் பாஜகவின் அரசியல் மூலதனம்.

மதவெறி அரசியல் கர்நாடக மாநிலத்தில் நுழைந்தது.

முற்போக்குக் கருத்துகளைப் பேசுகிற சிந்தனையாளர்களை கோட்சே கும்பல் கோட்சே வழியில் கொலை செய்யவும் தயங்கவில்லை. பேராசிரியர் கல்புர்கி 2015 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனைகளை வலியுறுத்திய ஆய்வாளர்.பெரும் கல்வியாளர். கர்நாடக மொழிப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர். கன்னட மொழியில் பேரறிஞர்.
சாகித்திய அகாடமி உட்படப் பல விருதுகளைப் பெற்ற பெரும் ஆளுமை.

அடுத்ததாக ஊடகவியலாளர், சமூக செயற்பாட்டாளர் திருமதி கெளரி லங்கேஷ் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5 ஆம் நாளில் படுகொலை செய்யப்பட்டார்.
மதவாத அரசியல் பாசிசத்தின் வடிவம் எனக் கட்டுரைகள் தீட்டினார். கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்.

கௌரி லங்கேஷ்

இன்று வரை இந்தப் படுகொலைகளைச் செய்தவர்களுக்கு உரியத் தண்டனை
வழங்கப்படவில்லை. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்க முற்படும் கொடிய மிருக வடிவில் மாணவர்களுக்கிடையில் மதவெறி அரசியலை முன் நிறுத்துகிறது சங்பரிவார அமைப்புக்கள்.

பொருளாதாரம் என்றும் இல்லாத அளவிற்குச் சீரழிந்து செயலிழந்து வருகிறது.
கோவிட் பெரும் தொற்று இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை.
சமூக ஒற்றுமையை அழித்து விட்டால் இந்தியாவின் கல்வி வளர்ச்சி நிரந்தமாகக் கேள்விக்குறியாக மாறிவிடும்.

பிரதமர் மோடி காங்கிரசைக் கலைக்கச் சொன்னார் காந்தி என்கிறார்.
ஆனால் காந்தியைச் சுட்டது யார்?

குஜராத் கலவரத்தின் போது முதல்வர் மோடியே ராஜதர்மத்தைப் பின்பற்றுங்கள் என்றாரே அன்றைய ‌பிரதமர் வாஜ்பாய். இன்றோ கர்நாடக மாநிலம் குஜராத் வழியில் கலவர‌ப் பகுதியாக மாறி‌ வருகிறது.
இப்போதாவது மோடியே கர்நாடக மாநிலத்தில் ராஜ தர்மத்தைக் கடைப்பிடிக்கச் சொல்வீர்களா?

பேராசிரியர் மு. நாகநாதன்

முகநூல் பகிர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here