தென்கொரியாவின் நகர்ப்புற பகுதியில் ஒரு தையற்காரராக தனித்து வாழ்கிறார். தான் வாழும் பகுதியில் பொது ஒழுங்கை குடியிருப்புவாசிகளோ, சிறு வியாபாரிகள் என யார் மீறினாலும் உரிமையுடன் கண்டிக்கிறார். குறைகளை சரிசெய்ய அரசுக்கு ஆதாரத்துடன் புகார் மனுக்கள் கொடுக்கிறார். சரி செய்யவில்லை என்றால் அதிகாரிகளின் சட்டையைப் பிடித்து கேட்கிறார். இருபது ஆண்டுகளில் எட்டாயிரம் மனுக்கள். அவரின் தலையைப் பார்த்தாலே மாவட்ட நிர்வாக ஊழியர்கள் அலறுகிறார்கள்.

பகுதியில் வளர்ச்சி நடவடிக்கைகள், அதில் லஞ்சம் என அதிகார வர்க்கம் கல்லா கட்டப் பார்க்கிறது. அவர் தொடர்ந்து தரும் புகார்கள் அவர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. வேறு குறுக்கு வழிகளை கையாள்கிறார்கள்.

அந்த அம்மாவிற்கு இங்கிலீஷ் பேசவேண்டும் என ஆசை இருக்கிறது. அவரின் தம்பியை சின்ன வயதிலேயே அமெரிக்காவிற்கு தத்து எடுத்துப் போனதால், தம்பிக்கு கொரியன் புரியாது. இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. இந்த சமயத்தில் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் இங்கிலீஷ் பேச தெரிந்த ஒரு இளைஞர் வேலைக்கு புதிதாக சேர்கிறார்.

i can speak
படக் காட்சி

அவரை தனக்கு இங்கிலீஷ் கற்றுக் கொடுக்க கேட்கிறார். அவரே மறுக்கிறார். பின்பு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இங்கிலீஷ் கற்றுக்கொடுக்க முன்வருகிறார்.

படம் என்ன நொண்டுகிறதே என நாம் நினைக்கும் பொழுது, இங்கிலீஷ் கற்றுக்கொள்வதின் பின்னணிக்கு வேறு ஒரு உணர்வுப்பூர்வமான காரணம் சொல்லி நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள்.

வரலாற்றில் மனித குலத்துக்கு பெரும் சேதம் விளைவித்தவை முதல் உலகப்போரும், இரண்டாம் உலகப் போரும்!

ஏகாதிபத்தியங்கள் தங்களது சந்தைக்காகவும், நாடுகளைப் பிடித்து கொள்ளையடிப்பதற்காகவும் போட்ட சண்டைகள் தான் இரண்டு உலகப்போர்களும்!

இதில் ஏகாதிபத்திய இராணுவங்கள் செய்த மனித உரிமை மீறல்கள் சொல்லி மாளாதவை.

இதில் ஜப்பான் இராணுவம் செய்த செயல்கள் இன்னும் கொடூரம். தான் ஆக்கிரமித்த சீனா, கொரியா, தைவான், வியட்னாம் என சில நாடுகளில் பள்ளிப் படித்த பெண் பிள்ளைகளை தங்களின் பாலியல் இச்சைக்கு பலியாக்கினார்கள். அதைத் தொடர்ந்து செய்தார்கள். Comfort women என வக்கிரமாய் பெயரிட்டு அழைத்தார்கள்.

இதில் பாதிக்கப்பட்ட பல பெண் பிள்ளைகள் மன உளைச்சலினால் தற்கொலை செய்தார்கள். மனநலம் பாதித்தார்கள். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ஏகாதிபத்தியம் தோற்றுப்போனது.

அதற்கு பிறகு பாதிக்கப்பட்ட அவர்கள் எஞ்சியிருந்த தங்கள் வாழ்நாள் முழுவதும் உலக நாடுகளிடம் தங்களுக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஜப்பான் நாடு இன்றைக்கு வரைக்கும் தங்கள் இராணுவம் இப்படி ஒரு செயலை செய்யவில்லை என அடம்பிடிக்கிறார்கள். மன்னிப்பு கேட்கவும் மறுக்கிறார்கள்.

ஏகாதிபத்தியங்கள் அப்படித்தான். தனியுடைமையின் வளர்ந்த வடிவம் தான் ஏகாதிபத்தியம்.

ஏகாதிபத்தியமும், முதலாளித்துவ நாடுகளும் வரலாற்றில் நீடிக்கும் வரை சுரண்டலையும் ஒழிக்க முடியாது. அவர்களின் அடியாட்படைகளான இராணுவத்தையும், போலீசையும் ஒழிக்க முடியாது.

பெரும்பாலான மக்களுக்கான அரசு மலர்ந்தால் மட்டுமே, இராணுவத்தையும், போலீசையும் கலைத்து அதன் அடிப்படை மக்கள் விரோத தன்மையை ஒழித்து மக்கள் படையாக மாற்ற முடியும்.

அதை நோக்கி மனித குல நலனுக்காக சிந்திப்பவர்கள் சிந்திக்கவேண்டும். செயலாற்றவேண்டும்.

வரலாற்றில் நடந்த அநீதிக்கு நியாயம் கேட்கும் ஒரு தாயாக அருமையாக நடித்திருக்கிறார். இறுதி காட்சியின் பொது விசாரணை பொழுது தனது கோரமான வயிறை காண்பிக்கும் பொழுது, மொத்த அரங்குமே தலை குனியும்.

Kim Hyeon-Seok அருமையாக இயக்கியிருக்கிறார். அருமையான படம். பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here