Escaype Live – வெப் சீரிஸ் (2022) ஒரு பார்வை

சிலர் ஆபாசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு உயிரையும் விடுகிறார்கள். இதற்கெல்லாம் எந்தவித சென்சாரும் இல்லை.

2

Escaype Live – வெப் சீரிஸ் (2022) ஒரு பார்வை

டிக் டாக் போலவே சீன நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் போனில் இயங்கும் ஒரு எஸ்கேப் ஆப்பை இந்தியாவில் துவங்குகிறார்கள். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும், தனிநபர்களின் திறன்களை வெளி உலகுக்கு காட்டி அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்குகிறோம் என பந்தாவாக அறிவிக்கிறார்கள். இதில் வருமானம் எப்படி என்றால், காணொளியை ரசிப்பவர்கள் பணம் அனுப்பினால், அந்த நிறுவனம் டயமண்டாக மாற்றித்தரும். ஒரு டயமண்டின் மதிப்பு ரூ. 10 என்றால், அதில் 5 ரூ நிறுவனத்திற்கு. 5ரூ அந்த காணொளியை உருவாக்கியவருக்கு போய் சேரும் என்கிறார்கள். காணொளிக்கென்று சில விதிகள் உண்டு. மீறுபவர்களை தடை செய்வோம் என்கிறார்கள்.

பல லட்சம் பேர் வந்து அந்த ’ஆப்’பில் பதிகிறார்கள். ஆடுவது, பாடுவது, ஓடுவது என சகலமும் செய்கிறார்கள். ஆப்பில் முன்னணியில் இருக்கும் சிலரின் கதையை விவரிக்கிறார்கள்.

ஒரு இளைஞன் தூங்குகிற தன் நண்பனின் பனியனுக்குள் உயிரோடு ஒரு நண்டை விடுகிறான். அவன் பயந்து அலறுவதை லைவ்வாக பதிவு செய்கிறான். டயமண்ட்களுக்காக எந்தவித கிறுக்குத்தனமும் செய்ய தயாராக இருக்கிறான். அவன் பெற்றோர் யாரென்றோ, பின்னணியோ தெரியவில்லை. இடையே சொல்லும் பொழுது அதிர்ந்து போகிறோம்.

இன்னொரு இளைஞன் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறான். அப்பா லாண்ட்ரி நடத்துகிறார். செல்போனிலேயே அதிக கவனம் இருந்ததால், வேலையில் தவறிழைக்கிறான். வேலையை இழக்கிறான். அவன் வாழும் ஏழ்மை குடியிருப்பு பகுதியிலிருந்து ’தப்பிக்க’ நினைக்கிறான். குறைந்த நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட தொலைவை மிக வேகமாக ஜம்ப் செய்து தொடுவது அவனின் தனித்திறமை.

இன்னொரு இளம்பெண் சீன வகை உணவுகளை பரிமாறும் உணவகத்தில் பணிபுரிகிறாள். அவள் குடும்பத்தில் மூத்தவள். ஆகையால் அவளுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. வெளிநாட்டில் வேலை செய்வதற்கான ஏற்பாட்டை செய்துவருகிறாள். இரவானால், ’ஆப்’பில் பேசிக்கொண்டே பல மேலாடைகளை அணிந்துகொண்டு, ஒவ்வொன்றாக கழட்டுகிறாள்.

இன்னொருவன் ஒரு நல்ல பதவியில் வங்கியில் வேலை செய்கிறான். அவனின் அப்பா மிக கண்டிப்பானவர். உடலளவில் ஆணாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதில் இருந்து தன்னை பெண்ணாக உணர்ந்தவன். ஆணாக பகலில் வங்கிப் பணி செய்கிறவன் இரவானால், பெண் உடைகளை அணிந்துகொண்டு ’ஆப்’பில் பாடுகிறான்.

இன்னொரு பத்து வயது சிறுமி பின்தங்கிய ஒரு கிராமத்தில் இருக்கிறாள். பெரிய பெண் போல நடனமாடி பதிகிறாள். அவள் சிறுமி என சிலர் நினைப்பதை பெரிய குறையாக எடுத்துக்கொண்டு, விரைவில் பெரியவளாகிவிட வேண்டும் என ஆசைப்படுகிறாள்.

இந்த சூழ்நிலையில் அந்த நிறுவனனம் தன்னுடைய ’ஆப்’பை பிரபலப்படுத்த ஒரு போட்டி அறிவிக்கிறது. காலம் 30 நாட்கள். பரிசுப் பணம் மூன்று கோடி. 30 நாட்களில் பார்வையாளர்களிடமிருந்து அதிக டயமண்ட்களை யார் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள் என அறிவிப்போம் என்கிறார்கள். இடையிடையே முன்னணியில் இருக்கும் சிலரை தேர்ந்தெடுத்து ஒருவருக்கு ஒருவர் லைவ்வாக போட்டியிட வைக்கிறார்கள். அந்த நிறுவனம் இந்தப் போட்டியை அது உருவாக்கிய போட்டி விதிமுறைகளையே காற்றில் பறக்கவிட்டு, சில தகிடுதத்தங்கள் செய்து தங்களது நிறுவனத்தின் நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றுகிறது.

ஏற்கனவே சில பல சிக்கல்களில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்த போட்டியில் ஜெயிக்கவேண்டும், பணத்தை வென்றுவிடவேண்டும் என்ற வெறியில் கள் குடித்த குரங்காகிவிடுகிறார்கள். அவர்களுடன் இருக்கும் உறவுகள், நண்பர்கள் இந்த பணத்திற்காக அவர்களை ஏத்திவிடுகிறார்கள். நாட்கள் நெருங்க நெருங்க பல்வேறு விளைவுகளை உருவாக்கி கொண்டே செல்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

உலகத்தை செல்போனுக்கு முன், பின் என இரண்டாக பிரித்துவிடலாம். உலகம் செல்போன் மயமாகிவிட்டது. செல்போனை பேசுவதற்கு பயன்படுத்துவதைவிட அலாரம் வைத்து எழ, நமது தினசரி திட்டங்களை குறித்து வைக்க, பிடித்த தொடர்கள், படங்கள் பார்க்க, மாத பில்கள் செலுத்த, உணவுக்கு, பயணத்திற்கு ஏற்பாடு செய்ய, சமூகவலைத்தளங்களில் மணிக்கணக்கில் உலாவ, பாட்டு கேட்க என செல்போன் காலை துவங்கி இரவு வரை நமது தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது.

செல்லில் பேட்டரி இல்லாமல் போய்விட்டால் ஒரு குடிகாரனைப் போல பதட்டம் அடைகிறோம். ஆப்பிள் செல்போனை அறிமுகப்படுத்திய பேசிய ஸ்டீவ் ஜாப்ஸ் செல்போனை ஒரு ”மந்திரப்பொருள்” என்றார். ஆரம்பத்தில் சிக்மன்ட் பிராய்டு உட்பட சில அறிவாளிகள் கொக்கையினையும் ”மந்திரப்பொருள்” என்றே அழைத்திருக்கிறார்கள் என்கிறார் மருத்துவர் சிவபாலன்.

முன்பெல்லாம், பெருநகர ரயில்களில், பொது இடங்களில் மக்கள் வேடிக்கைப் பார்த்தப்படி பயணிப்பார்கள். சிலர் புத்தகம் படிப்பார்கள். சிலர் பக்கத்தில் உள்ளவர்களிடம் நாட்டு நடப்புகளை பேசிவருவார்கள். இப்பொழுது அப்படியில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியான உலகங்களில் செல்போனில் சஞ்சரிக்கிறார்கள். இதற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் தப்பவில்லை. வீட்டிலும் குடும்ப உறுப்பினர்கள் கையில் செல்போனை வைத்துக்கொண்டு தனித்தனியாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். சமூக தொடர்புகளிலும் குடும்ப உறவுகளிலும் செல்போன் நம்மை தனிமைப்படுத்துகிறது இது எவ்வளவு பெரிய ஆபத்து.

இந்த சமூக சூழ்நிலையில் தான் சின்ன நிறுவனங்கள் துவங்கி கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை டிக் டாக், மியூக்கலி, சிங்கரி போன்ற வகை, வகையான லட்சகணக்கான ஆப்களை மக்களிடம் களமிறக்கி இருக்கிறார்கள்.. சமூக வலைத்தளங்கள் தங்களுக்கான பார்வையாளர்களை விதவிதமாய் ஈர்க்கிறார்கள். விலகி வேறு வேலைகளில் ஈடுபட்டாலும், நோட்டிபிகேஷன்ஸ் வழியாக மீண்டும் வா! வா! என உள்ளே இழுத்துக்கொள்கிறார்கள். கோடிகளில் அவர்கள் கொழிக்கிறார்கள். அவர்கள் அள்ளுகிறார்கள். பங்கேற்பாளர்களுக்கு கொஞ்சூண்டு கிள்ளிக்கொடுக்கிறார்கள்.

இதன் அபாயமறியாமல் மக்களும் விட்டில் பூச்சிகளைப் போல அவர்களின் வலையில் வீழ்கிறார்கள். ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். லைக்குகள் வரவில்லை என அழுகிறார்கள். விதம் விதமாக கவர முயல்கிறார்கள். சிலர் ஆபாசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு உயிரையும் விடுகிறார்கள். இதற்கெல்லாம் எந்தவித சென்சாரும் இல்லை.

சமூக வலைத்தளங்களில் உள்ள ஆபத்துகளை ஏற்கனவே சில படங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இந்த வெப் சீரீசும் அம்பலப்படுத்துகிறது. மக்களின் நேரத்தை வீணடிக்கிறார்கள். ஆற்றலை சிதறடிக்கிறார்கள் என்பதை விட, ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியான மனிதர்களாக்குகிறார்கள் என்பது தான் மிக சிக்கலானது. சிதறி ஓடும் பொழுது வேட்டையாடுவது எளிது தானே! பெரும்பாலான மக்களை கடுமையாக பாதிக்கும் விசயங்களுக்கு கூட அமைதி நிலவும் பொழுது பயமாகத்தான் இருக்கிறது. நாட்டை கார்ப்பரேட்டுகளும், ஆட்சியில் இருக்கும் இந்துத்துவ பயங்கரவாதிகளும் ஆபத்தான பாதையில் இழுத்துக்கொண்டு செல்கிறார்கள். திட்டமிட்டே கலவரங்களை உருவாக்குகிறார்கள். அதன் வழியே தன் செல்வாக்கை பலப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களின் உண்மை முகம் அறிந்து எதிர்த்து மீட்க போராடாமல் அவர்கள் வலையிலேயே நாம் சிக்கி இருப்பது எவ்வளவு பெரிய பேராபத்து என்பதை சிந்தியுங்கள்.

சமூக வலைத்தளங்கள் மக்களின் சிந்தனையை, வாழ்க்கைப் பற்றிய மதிப்பீடுகளை எப்படி பாதிக்கிறது என ஃபிங்கர்டிப் (Fingertip) என வெப் சீரிஸ் சமீபத்தில் வந்தது. இந்த வெப் சீரிஸ்சும் அருமையாக எடுத்திருக்கிறார்கள். தமிழிலும் டப் செய்து இருக்கிறார்கள். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இப்பொழுது வெளியாகியிருக்கிறது. இந்த முதல் சீசன் 9 அத்தியாயங்களை கொண்டது. நடிகர் சித்தார்த், மெகந்தி சர்க்கஸ் படத்தில் வரும் நாயகி ஸ்வேதா என பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பாருங்கள்.

  • சாக்ரடீஸ்

 

 

 

 

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here